இரண்டு வழிகள்
இரண்டு சாலைகள் பிரிகிற இடத்தில் ஒரு மனிதன் நின்று கொண்டிருந்தான். எந்த வழியாகப் போகவேண்டு மென்பதைச் சற்று யோசித்தான். இரண்டு வழியிலும் இந்தச் சாலை இன்ன இன்ன இடத்திற்குச் செல்லுவது என்ற குறிப்பு இருந்தது. ஒரு சாலையில் ‘ஆமாறு’என்று போட்டிருந்தது. மற்றொரு சாலையில் ‘சாமாறு’என்று போட்டிருந்தது.
ஆதல், சாதல் என்ற இரண்டும் ஒன்றுக்கொன்று நேர் விரோதம். மனிதன் மேலும் வளர்ச்சி பெறுவதை ஆக்கம் என்று சொல்வார்கள். இறந்து போவது சாவு என்பது நமக்குத் தெரியும் மனிதன் நாள் ஆக ஆகத் தான் வளர்ந்து வருவதாகவே நினைக்கிறான். ஆனால் உண்மையை நோக்கினால் அவன் சாவை நோக்கிப் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறான். ‘இருபது ஆண்டுகள் ஆயின. அதற்கு ஏற்ற வளர்ச்சி அவனுக்கு ஏற்பட்டிருக்கிறது’என்று சொல்வதைக் காட்டிலும், ‘மரணம் என்ற முடிவிடத்தைக் குறுகுவதற்கு இருபது ஆண்டு கடந்துவிட்டான்; அந்த மரணத்துக்கும் அவனுக்கும் இடையில் இருபது ஆண்டுத் தூரம் குறைந்துவிட்டது’என்றுதான் கொள்ள வேண்டும்.
நாம் புறப்பட்ட இடத்தைப் பற்றி எண்ணுவதைக் காட்டி லும் போய்ச் சேர வேண்டிய இடத்தைப்பற்றி நினைப்பதுதான் அறிவுடைமைக்கு அழகு. போய்ச் சேருகிற இடம் இன்ன தென்று நமக்கு முதலில் தெரிந்துவிட வேண்டும். நம்முடைய உள்ளத்தில் நல்ல இடத்திற்குப் போவோம் என்று நினைத்துக் கொண்டால் போதாது; அதற்குரிய முயற்சியும் செய்ய வேண்டும்.
இரண்டு சாலைகளும் சந்திக்கின்ற இடத்தில் நிற்கின்ற பிரயாணி ஆக்கத்திற்குரிய வழியில் செல்லுவானேயன்றி மரணத்துக்குரிய வழியில் செல்லமாட்டான். சாதலைக் காட்டிலும் ஆதல்தான் மனிதனுக்கு விருப்பம். “உனக்கு மரணமில்லாப் பெருவாழ்வைத் தருகிறேன்; இந்த மருந்தைச் சாப்பிடு; மரணம் வராது” என்று சொன்னால் அதைச் சாப்பிடுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். தேவர்கள்கூட மரணம் இல்லாத வாழ்வு பெறுவதற்காகத்தான் அமுதத்தை உண்டார்கள். நாமும் அமுதம் கிடைக்குமானால் உண்ணுவதற்குச் சித்தமாக இருக்கிறோம். ஆனால் அந்த அமுதம் கிடைக்கும் இடம் இன்னது என்றுதான் தெரியவில்லை. அது எளிதிலே கிடைத்தால் நாம் உண்ணுவோம். முயற்சி இல்லாமலே கிடைத்தால் ஊக்கத்துடன் உண்ணுவோம்.
உண்மையில், மரணத்தை வெல்வதற்குரிய வழி ஏதாவது உண்டா, இல்லையா? உண்டு. அது தெரியாமல் இருப்பதனால் சாகும் ஆற்றில் நாம் செல்லுகிறோம். ஆதல் என்ற முடிவுக்குக் கொண்டு போய்ச் சேர்கின்ற வழி வேறு இருக்கிறது. உலகத்தில் உள்ள மக்களில் பெரும்பாலோர் சாதல் என்ற இடத்திற்குத்தான் போய்க்கொண்டிருக்கிறார்கள்; மிக விரைவாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள். எத்தனைக்கு எத்தனை அவர்களுக்கு ஆற்றலும் அறிவும் இருக்கின்றனவோ அத்தனைக்கு அத்தனை அவர்கள் மிக விரைவாக மரணத்தை நோக்கிச் செல்லுகிறார்கள். அவர்களுடைய சதுரப்பாடெல்லாம், சாமாற்றைச் சார்வதற்கே, மரணத்தை அடைவதற்கே அமைகின்றன.
சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே.
(சதுராலே-சாமர்த்தியத்தால், சார்வான்-அடைய.)
ஆமாறு அல்லது ஆதல் என்ற இடத்துக்குச் செல்லுகின்ற வழியிலே அற்புதமான பூஞ்சோலைகளெல்லாம் இருக்கின்றன. அந்த வழியிலே போவதற்குரிய முயற்சியை நாம் செய்ய வேண்டும். நம்முடைய சமுதாயம் அதற்கு நேர் எதிர்ப் பாதையில்தான் செல்லுகின்றது. அதனால் ஆதல் என்ற லட்சியத்தை நோக்கிச் செல்லுகிற பாதையில் அதிகக் கூட்டம் இருப்பதில்லை. எங்கே அதிகக் கூட்டமோ அதுதான் நல்லது என்ற நினைப்பு நமக்கு உண்டாகி இருக்கிறது. ஜனநாயக, காலத்தில் அந்த நம்பிக்கை மிக அதிகமாகப் போய்விட்டது. நல்லதா, அல்லாததா என்று பார்ப்பதைக் காட்டிலும், எத்தனை பேர் போகிறார்கள் என்று பார்க்கிற நினைவுதான் இந்தக் காலத்தில் நமக்குத் தோன்றிக்கொண்டிருக்கிறது.
உண்மை எப்பொழுதும் உண்மையாகத்தான் இருக்கும். ஆயிரம் பேர் சேர்ந்து உண்மை அல்ல என்று சொல்வதற்காக உண்மை பொய்யாகாது. அப்படித்தான் ஆக்க வழி அல்லது ஆதலைச் சார்கின்ற வழியானது என்றைக்கும் நன்மையைத்தான் பயக்கும். அந்த வழியிலே நடக்கிறவர்கள் மிகச் சிலராகவே இருக்கலாம். ஆனாலும் ஆக்கம் ஆக்கந்தான்; அதைச் சார்வதற் குரிய வழி நன்மையைப் பயப்பதுதான். சொல்லகிறவர்கள் சிலர் என்று அதைக் குறைவாக நினைக்கக் கூடாது. மாணிக்கவாசகரைப் போன்ற சிலர்தாம், “இது ஆகின்ற வழி”என்று சொல்லுகிறார்கள். இனி, ஆகின்ற வழி எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
ஆமாறு என்பது இன்னது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆக்க நெறி அல்லது நாம் வளர்ச்சி பெற்றுப் பரிபூரணத்தை அடையும் நெறி எதுவோ அதுதான் ஆம் ஆறு. முன்னாலே உள்ள வரையறையின்படி, அநுபவிக்க வேண்டிய துன்பங்களை இப்பொழுது நுகர்ந்து கொண்டிருக்கிறோம். ‘மறுபடியும் அடுத்த பிறவி எடுத்து இதைப் போன்ற துன்பத்தையே அநுபவிப்போம். அதற்கு ஏற்ற வகையில் நாம் வாழ்கிறோம்’என்றால், அது ஆம் ஆறு ஆகாது. உலகில் நாம் வரும்பொழுது பிராரப்தம் என்ற வினை மூட்டையைக் கட்டிக்கொண்டு வருகிறோம். நம்முடைய கணக்கில் பெரிய வினைக் குவியல் ஒன்று இருக்கிறது. அதற்குச் சஞ்சிதம் என்று பெயர். அதிலிருந்து ஒரு பகுதியை இந்த வாழ்க்கையில் கரைத்து விடுவதற்காகக் கொண்டு வருகிறோம். அதற்குத்தான் பிராரப்தம் என்று பெயர். ஆனால் நாம் கையிலே கொண்டு வந்ததைக் கரைத்து விடுவதோடு நின்றுவிடுவதில்லை. புதிய மூட்டையையும் சேர்த்துக்கொண்டு போகின்றோம். இந்தப் பிறவியிலே நாமாகச் சேர்த்துக்கொள்ளுகிற வினை மூட்டை அது; அதற்கு ஆகாமியம் என்று பெயர். இப்படி வினைகள் மூன்று விதம்; நம்முடைய கணக்கிலே பலகாலமாகச் சேர்ந்து வருகின்ற மூட்டையாகிய சஞ்சிதம் ஒன்று; இந்தப் பிறவியிலே அநுபவிப்பதற்காக வரையறை செய்யப்பெற்ற பிராரப்தம் ஒன்று; இந்தப் பிறவியிலே புதிதாக ஏற்றுக்கொள்கிற வினையாகிய ஆகாமியம் ஒன்று; ஆக மூன்று. இந்த மூன்றில் பிராரப்தத்தைக் கரைத்துவிட்டு இறைவனுடைய திருவடியாகிய லட்சியத்தை நினைந்து வாழ்கிற வாழ்வுதான் ஆக்க வாழ்வு. எது நிரதிசய ஆனந்தத்துக்கு அழைத்துச் செல்லுமோ, எந்த நெறியில் சென்றால் துன்பங்களுக்கு அப்பால் உள்ள ஆனந்த நிலையை அடையலாமோ, அந் நெறிதான் ஆக்க நெறி.
அந்த நெறி இன்னதென்று பெரியோர்களெல்லாம் சாத்திரங்களிலும் தோத்திரங்களிலும் காட்டியிருக்கிறார்கள். சாத்திரங்களில் காட்டியவையெல்லாம் சட்டத்தால் சொல்லப் பெறுபவை போன்றன. தோத்திரங்களாகிய தேவாரம் முதலியவற்றிலே சொன்னவை தங்களுடைய வாழ்க்கையிலே பெரியவர்கள் அநுபவித்துக் காட்டிய நெறிகள். திருவாசகத்தில் மாணிக்கவாசகர் ஆக்க வழியைக் காட்டுகிறார். ”நான் ஆக்கவழியிலே போகவில்லையே!”என்று புலம்புகிறார். உண்மையிலே அவர் ஆக்க வழியிலே செல்லுகிறவர். ஆனாலும் அவருடைய அன்பு அப்படிப் புலம்பச் செய்கிறது. அவர் புலம்புவதனாலே ஆக்க வழி இன்னது என்பது நமக்குப் புலப்படுகிறது.
ஆமாறுஉன் திருவடிக்கே அகம்குழையேன்
என்று தொடங்குகிறார். ஆக்க வழிப் பயணத்தில் அடிப் படையான நிலை, உள்ளம் குழைவது. ஆக்கவழியிலே அடி எடுத்து வைப்பவனுக்கு முதல் பக்குவம் உள்ளம் குழைதல். அப்படிக் குழைவதற்கு மூல காரணம் அன்பு. அன்பினாலே உருகவேண்டும். ஆக்கவழி அல்லாத சாதல் வழியிலே செல்லு கிறவர்களுக்கோ மனம் கல்லாக இருக்கின்றது. தம்முடைய நலத்தையே நினைக்கின்ற வன்மை, பிறருடைய நன்மைகளைக் கண்டால் பொறாமைப்படும் வன்மை, உலகில் உள்ள பொருள் களையெல்லாம் நாம் ஆளவேண்டும் என்ற ஆசையினாலே உண்டான வன்மை – இப்படிப் படலம் படலமாக அழுத்திக் கொண்டிருக்கின்ற தீய இயல்புகளால் மனம் கல்லாகிப் பாறையாகி வன்மையாக இருக்கிறது. அத்தகைய மனம் நெகிழ்ந்து கொடுக்க வேண்டும். அந்த நெகிழ்ச்சி உண்டாக அன்பு என்ற சூடு ஏறவேண்டும். உலகில் உள்ள உயிர்களிடத்தி லெல்லாம் அன்பு பரவினால் அப்பொழுது நெஞ்சு நெகிழும். ஆசை, லோபம், பொறாமை முதலிய இறுகல் தன்மை யெல்லாம் மாறிவிடும்.
பயணம் போகிறவனுக்குப் போகின்ற வழிக்கு ஏற்றபடி சில ஏற்பாடுகள் செய்துகொள்ள வேண்டியிருக்கும். அந்த அந்த வழியிலே போகிறவர்களிடம் சில பொதுவான செயல்களைக் காணலாம். காட்டு வழியிலே போகிறவர்கள் கையில் ஆயுதங்களுடன் செல்வார்கள். கூட்டமாகப் போவார்கள். நிழலும் நீரும் உள்ள சாலை வழியே போகிறவர்கள் அங்கங்கே தாகத்திற்குத் தண்ணீர் அருந்தி மர நிழலில் தங்கி இளைப்பாறிச் செல்வார்கள். இந்தச் செயல்கள் வழியின் இயல்புக்கு ஏற்ப மாறுபடும்.
ஆகின்ற வழியிலே செல்லுபவர்கள் என்ன என்ன செய்வார்கள்? அவர்கள் இறைவன் திருவடியை நினைந்து உள்ளம் -குழைவார்கள்; அன்பினால் உருகுவார்கள். அகம் குழைவதை அவர்களுடைய கண்களும் முகமும் பேச்சும் காட்டும். அவற்றில் உருக்கம் உண்டாகும். மணற்குன்றுக்கு அடியிலே தண்ணீர் ஓடினால் அந்தக் குன்று மெல்ல மெல்லக் கரைகிறது. அகம் அன்பினால் குழையும்போது உருக்கம் ஏற்படு கிறது. இவை இரண்டும் உள்ளத்திலே தோன்றும் உணர்ச்சியும் அதனால் விளையும் மெய்ப்பாடும் ஆகும். அடுத்தபடியாக விளைகின்ற செயல்கள் சில உண்டு.
நம் அன்புக்கு உரிய குழந்தை, மனைவி ஆகியவர்களிடம் அன்பைப் பல படியாகக் காட்டுகிறோம். அவர்களுக்கு அலங்காரம் செய்து பார்க்கிறோம். நம் விருப்பத்துக்கு உரிய எல்லாப் பொருள்களையும் அலங்காரம் செய்வதில் நமக்குத் திருப்தி உண்டாகிறது. வீட்டை அலங்கரிக்கிறோம்; உடம்புக்கு அலங்காரம் செய்து கொள்கிறோம்; குழந்தைக்கு ஆடையணிகள் புனைகிறோம். இறைவனிடத்தில் அன்பு பூண்டு அகம் குழைந்து உருகும் அன்பர்கள் தம் அன்பைப் பல வழிகளில் காட்டுகிறார்கள். இறைவனுடைய உருவத் திருமேனியைப் பூமாலை புனைந்து வழிபடுகிறார்கள். அவனுடைய பெருமையைப் பலவாறு எடுத்துப் பாராட்டிப் புகழ்கிறார்கள்.
இறைவன் தேவர்களுக்கெல்லாம் தலைவன்; மகாதேவன். அவனுடைய பெருமையை நாம் உணர்ந்து அன்பு செய்யும் போது அவன் திறத்தில் இன்னும் என்ன என்ன செய்யலாம் என்று தோன்றிக் கொண்டே இருக்கும். ‘அவன் நடக்கு மிடத்தையெல்லாம் மணி பதித்துத் தளம் போடலாமா? அவன் திருவடித் துகளை உடம்பெல்லாம் பூசிக்கொள்ளலாமா?’என்றெல்லாம் எண்ணங்கள் உதயமாகும். அந்த அன்புக்கு இதுதான் செய்யலாம் என்ற வரையறை இல்லை.
“அவன் கோயிலை அலகிட்டுப் பெருக்கவேண்டும்; மெழுகவேண்டும்”என்று தோன்றும்; தோன்றுவது மாத்திரம் அன்று; அப்படியே செய்வார்கள் பக்தர்கள். இறைவனுடைய திருத்தொண்டுகள் பலவற்றில் அவன் கோயிலைத் தூயதாக வைத்துக்கொள்ளவதும் ஒன்று.
மகாத்மா காந்தியடிகள் வீதிகளைச் சுத்தம் செய்து காட்டினார். தேசத் தோண்டர்கள் தோட்டி வேலையையும் செய்யவேண்டும் என்று செயலிலும் செய்தார். தேச பக்திக்கு இத்தகைய செயல்களெல்லாம் அடையாளங்கள் என்பதைக் காந்தியடிகள் செய்து காட்டினார். தெய்வபக்திக்கு அலகிடுதல், மெழுகிடுதல் என்பனவும் அடையாளங்கள் என்பதைத் திருத் தொண்டர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள். அப்பர் சுவாமிகள் உழவாரத்தொண்டு செய்தார். ஆனந்தத்தால் அன்பர்கள் கூத்தாடுவார்கள். இத்தகைய செயல்கள் இறைவன் அருள் பெற்று மேன்மேலும் ஆக்கம் பெறுவோருக்குரிய அடை யாளங்கள்.
புத்தேளிர்
கோமான்! நின் திருக்கோயில் தூகேன்
மெழுகேன் கூத்தாடேன்.
மாணிக்கவாசகர் ஆகும் ஆற்றில் நிகழும் செயல்கள் இவை என்று சொல்லவில்லை; ஆயினும், ‘ஆகுமாற்றிலே சென்று இன்ன செயல்களை நான் செய்யவில்லையே; சாகுமாறே விரைகிறேனே!’என்று இரங்குகிறார். அவரே இரங்கும்போது மற்றவர்கள் போகும்போக்கு என்ன?
ஆமாறுஉன் திருவடிக்கே
அகங்குழையேன்; அன்புஉருகேன்;
பூமாலை புனைந்துஏத்தேன்;
புகழ்ந்துரையேன்; புத்தேளிர்
கோமான் நின் திருக்கோயில்
தூகேன் மெழுகேன் கூத்தாடேன்;
சாமாறே விரைகின்றேன்.
சதுராலே சார்வானே.
[தேவர்களின் தலைவனே! ஆக்கம்பெறும் வண்ணம் உன்னுடைய திருவடியை எண்ணி அதன் பொருட்டு என் உள்ளம் குழைந்திலேன்; அன்பினால் நான் உருகவில்லை; மலர் மாலைகளைக் கொண்டு உன்னை அலங்காரம் செய்து துதிக்கவில்லை; புகழ்ந்து பாராட்டவில்லை; நின் திருக்கோயிலைப் பெருக்கவில்லை; மெழுகவில்லை; ஆனந்தக்கூத்து ஆடவில்லை; என் அறிவுத் திறத்தால் சென்று சேரும்பொருட்டு மரண வழியிலே வேகமாகச் செல்லுகிறேன்.
புனைந்து – அணிந்து ஏத்தேன்-துதித்திலேன். புத்தேளிர்-தேவர். தூகேன்-பெருக்கவில்லை. சதுர்-சதுரப்பாடு; சாமர்த்தியம். சார்வான்-சாரும் பொருட்டு.]