கரந்து நில்லாக் கள்வன்

அவர் ஒரு சிவ பக்தர். பேராசையுள்ள சிவ பக்தர். உலகத்துப் பொருள்களிலே பேராசை இல்லை. தமக்கு மேன்மேலும் அன்பு வளர வேண்டும் என்னும் பேராசை உடையவர். அவருடைய அன்பு நிலையைக் கண்டாலே, ”இப்படி இருப்பவர்கள் உலகத்தில் யார்!” என்று நமக்கு வியப்பு உண்டாகும். ஆனால் அவரோ, “நான் என்ன அன்பு செய்துவிட்டேன்! நான் இன்னமும் செய்யுமாறெல்லாம் செய்யவில்லையே! இறைவன் அந்த நிலையில் என்னை வைத்தருள வில்லையே!”என்று மனம் நைந்து சாம்புவார்.

காலையில் எழுந்து எங்கே மலர்ச் செடிகள் உண்டென்று நாடிச் தேடிச் செல்வார். சிவபெருமானுடைய தலங்கள் எங்கு உண்டோ அங்கெல்லாம் அவரைப் பார்க்கலாம். பல வகையான மலர்களைப் பறிப்பார். பறித்துக் கோதுநீக்கி ஆய்வார். என்ன என்ன மலர்கள் இறைவனுக்கு உரியன என்று சாத்திரங்களை ஆராய்வார்; புராணங்களை ஆராய்வார்; அன்பர்களைக் கேட்பார். இப்படிப் பலவாறாக ஆய்ந்த மலர்களையெல்லாம் தொகுத்து இறைவனுக்கு அருச்சனை செய்ய முற்படுவார்.

ஒரு நாள் இரண்டு நாள் செய்கிற காரியம் அன்று இது. எப்பொழுதும் இதுவேதான் அவருக்கு வேலை. ‘இறைவனுடைய இந்தத் தலத்துக்கு இன்று போக வேண்டும்; இன்ன இன்ன மலர்களையெல்லாம் கொண்டு போக வேண்டும்; இத்தனை அருச்சனை செய்ய வேண்டும்’என்று அவர் எப்பொழுதும் நினைத்துக்கொண்டே இருப்பார்; நினைத்த படியே செய்வார்.

பரந்துபல் ஆய்மலர் இட்டு.

இது ஒரு நாளும் முட்டுப்படாமல் நடந்து கொண்டே வருகிறது. இறைவனுடைய அடியிலே அருச்சனை செய்து அதனை வணங்குவதே அவர் வேலை.

முட்டாது அடியே இறைஞ்சி.

ஒரு நாள் அவரை ஒருவர் கண்டார். “ஐயா, நீர் எப்போதும் இவ்வளவு பரபரப்போடு மலர்களையெல்லாம் குவித்து ஒருநாள் கூடத் தடை இல்லாமல் ஆண்டவனுடைய திருவடிக்கு அருச்சனை செய்து விழுந்து விழுந்து வணங்குகிறீரே; உம்முடைய வாழ்க்கை எப்படி நடக்கிறது? நீர் எப்படிச் சம்பாதிக்கறீர்? உமக்கு யார் பொருள் கொடுக்கிறார்?” என்று கேட்டார். அந்த அடியவர் பேச ஆரம்பித்தார்.

“பொருள் ஈட்டுவதைச் சொல்கிறீர்களா? யாரைக் கேட்டால் நமக்கு வேண்டிய பொருள் கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்?”என்று திரும்பிக் கேட்டார்.

“ஏன்? எத்தனையோ செல்வர்கள் இருக்கிறார்கள். நாம் செய்கிற வேலையை வாங்கிக்கொண்டு கூலி கொடுக்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடத்திலே சென்று வேலை செய்து வேண்டியவற்றைப் பெறலாமே!”என்றார் நண்பர்.

அதைக் கேட்ட பக்தர் சற்றுப் புன்னகை பூத்தார். “நான் சோம்பேறி. எனக்குப் பிறருடைய உள்ளம் விரும்பும்படியாக வேலை செய்ய முடியாது. என்ன செய்வது?”என்றார்.

”அப்படியானால் அன்புடையவர்களிடத்திலே போய் எனக்கு இது வேண்டும் என்று கேட்கலாமே!”என்று நண்பர் சொன்னார்.

“கேட்கலாம் நான் கேட்கும் பொருளெல்லாம் கொடுக்கிற மனிதன் இந்த உலகத்தில் இருக்கிறானா?”என்று கேட்டார்.

“ஏன் இல்லை?”என்று நண்பர் சொன்னார்.

“மனிதனுக்கு எத்தனை பேராசை என்று உமக்குத் தெரியாதா? யார் நமக்கு ஒரு பொருளைக் கொடுக்கிறாரோ, அவருக்கே பல ஆசை இருக்குமே! தாமே குறைவுடையவர், குறையில்லாதபடி நமக்கு எப்படித் தருவார்?”என்று சொன்னார் அந்தப் பக்தர்.

“ஆண்டவனை வழிபடுகிறீரே; அவன் மாத்திரம் தந்து விடுவானா?”என்று நண்பர் கேட்டார்.

“நிச்சயமாகத் தருவான். நாம் எதைக் கேட்கிறோமோ அவற்றையெல்லாம் தருவான். அந்த நம்பிக்கையோடுதான் எத்தனையோ பேர் ஆண்டவனிடம் அடைக்கலம் புகுகிறார்கள். யார் தன்னிடத்திலே வந்து பூசனை புரிந்து வழிபடுகிறார்களோ அவர்களுக்கு எளியனாகி, அவர்கள் கேட்கின்ற எல்லா வற்றையும் கொடுக்கின்ற பெருவள்ளல் அல்லவா எம் பெருமான்!”என்று மனம் உருக உருகப் பேசினார் அந்தப் பக்தர்.

“எல்லாரும் அப்படிச் சொல்லக் காணோமே. இறைவன் வாழ்க்கையில் சோதனையே உண்டாக்குகிறான் என்றல்லவா பேசுகிறார்கள்?”என்றார் நண்பர்.

‘அது அறியாதவர்கள் கூற்று. இறைவன் எல்லோருக்கும் எல்லாவற்றையும் தந்துவிடமாட்டான். அவன் பெரிய கள்வன். எல்லாருக்கும் மறைந்து நிற்கும் கள்வன். சாத்திரத்தை மாத்திரம் ஓதிக்கொண்டிருக்கிறவர்களுக்கு மறைந்திருப்பான். தோத்திரத்தை வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறவர்களுக்கும் மறைந்திருப்பான். ஆகமத்தை அறிந்தவர்களுக்கு அந்த ஆகமத்திற்குள்ளே இருந்து மறைந்திருப்பான். உண்மையான அன்பு இல்லாதவர்கள் கரடியாகக் கத்தினாலும் வேறு எந்த வகையில் முயற்சி பண்ணினாலும் அவனுடைய திருவருளைப் பெறுவது அரிது. எல்லாருக்கும் கள்வனாக ஒளிந்து நிற்கின்றவன் அவன்.

“அந்தக் கள்வனையும் மயக்கக் கூடியவர்கள் அன்பர்கள். அவர்கள் எதைக் கேட்டாலும் அளிக்கிறவன். இவனை நாம் இடைவிடாமல் மலரால் அருச்சித்து எதைக் கேட்டாலும் கொடுத்துவிடுவான்’என்று அன்பர்கள் அணுகுகிறார்கள்.”

“அப்படி அவர்கள் எண்ணுகிறார்கள் என்பது அவனுக்குத் தெரியுமோ?”

”நன்றாகத் தெரியும். அவர்களுடைய உள்ளத்தில் இருக்கிறவனுக்கு அது தெரியாதா? அங்கே அவன் கரந்து நிற்க மாட்டான். அவர்கள் இரப்பவற்றையும் கரவாமல் தந்தருள்வான்.”

”இறைவனிடம் அன்பு வைக்கிறவர்கள் இப்படி எண்ணலாமா?”

“தாய் பல தின்பண்டங்களைப் பண்ணி வைத்திருக்கிறாள். அவற்றைக் கண்டு குழந்தை ஆசைப்படுகிறது. நாம் செய்தவற்றைத் தின்ன இது ஆசைப்படுகிறதே என்று எந்தத் தாயாவது சினம் அடைவாளோ? அன்பர்கள் வேண்டியவற்றை இறைவன் கொடுக்கிறதில் வியப்பு ஒன்றும் இல்லை. அப்படிக் கொடுக்கின்ற வள்ளலையன்றி வேறு யாரைப்போய் இறைஞ்சுவது?” என்று பக்தர் கூறி முடித்தார்.

பரந்துபல் ஆய்மலர் இட்டுமுட்
டாதுஅடி யேஇறைஞ்சி
இரந்தஎல் லாம்எமக் கேபெற
லாம்எனும் அன்பர் உள்ளம்
கரந்துநில் லாக்கள்வனே!

[பல இடங்களுக்குச் சென்று ஆராய்ந்து எடுத்த பல மலர்களை அருச்சித்து இடையீடு இன்றித் தன் திருவடியை வணங்கி இரந்த எல்லாவற்றையும் நமக்கென்று பெற்றுக்கொள்ளலாம் என்று எண்ணும் அன்பர்களின் உள்ளத்தில் மறைந்து நில்லாத கள்வனே!

பரந்து-பல இடங்களிற் சென்று; பரபரப்புடன் என்றும் சொல்லலாம். ஆய்மலர்-ஆராய்ந்த மலர்கள். முட்டாது-இடையீடு இன்றி. இறைஞ்சி- வணங்கி. கரந்து-மறைந்து.]

அன்பர்களிடத்தில் இத்தனை அன்புடையவனாக இருக்கின்ற ஆண்டவனைப் பணியாமல், வாழ்த்தாமல், அவனை நினைந்து உருகாமல், வீணாக யார் யாரையோ நம்புவதில் பயன் என்ன? அவனுடைய திருவடிக் கண்ணே உண்மையான அன்பு இடையீடில்லாமல் இருந்தால் நமக்கு எதனாலும் குறைவே உண்டாகாது. அந்த அன்பைத்தான் நாம் அவனிடத்திலே யாசிக்க வேண்டும். ‘எனக்கு அது வேண்டும். இது வேண்டும்’என்று கேட்பதற்கு முன்னாலே, “எனக்கு உன்னுடைய அன்பு வேண்டும்”என்று யாசித்தால், அதன் பிறகு இறைவன் வேண்டியவற்றையெல்லாம் தருவான். இறைவனுடைய அன்பர் கூட்டத்துக்குள்ளே ஒருவனாக அமர்ந்துவிட்டால் பிறகு எது கேட்டாலும் தருவான்.

கேட்பதற்கு எல்லாருக்கும் தெரியும். உலகிலுள்ள மக்கள் எல்லோரும் எத்தனையோ பொருள்கள் வேண்டுமென்று இறைவனைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் கேட்பதற்கு முன்னாலே ஒன்று செய்ய வேண்டும். அவன்பால் அன்புடையவராக வேண்டும். அப்படியானால்தான் அவனைக் கேட்கும் உரிமை கிடைக்கும். ஆனால் அவர்களுடைய உள்ளத்தில் வெறும் ஆசை இருக்கிறதே அன்றி அன்பு இல்லை.

இறைவனுடைய திருவடியில் முறுகிய அன்பு தோன்றிவிட்டால் அப்புறம் கேட்பன எல்லாம் பலிக்கும். வண்டியிலே ஏறின பிறகுதான், “ஒரு மணி நேரம் போனோம்; பத்து மைல் கடந்துவிட்டோம்”என்று சொல்ல முடியும். வண்டியில் ஏறாமல் கீழே நின்றுகொண்டு ஒரு மணி கழித்துப் பார்த்தால், “அடடா! இருக்கிற இடத்திலேயே இருக்கிறோமே”என்றுதான் சொல்லும்படி இருக்கும். இறைவனுடைய அன்பு வண்டியில் ஏறின பிற்பாடுதான் நாம் எது கேட்டாலும் கிடைக்குமே அன்றி அதற்கு முன்னால் கேட்பன எல்லாம் கிடையா.

இதில் மற்றோர் அதிசயம்: வண்டியிலே ஏறின பிறகு அவன் கேட்கிற கேள்வியே வேறு விதமாகப் போய்விடும்; அவனுடைய ஆசையே மாறிவிடும். உலகில் இருக்கின்ற மக்கள் எல்லாவற்றையும் கேட்பார்கள். அவர்கள் உள்ளம் ஆசை நிரம்பியது. அன்பர்களோ எல்லாவற்றையும் கேட்பதில்லை. பெரும்பாலும் தங்களுடைய வாழ்க்கைக்கு வேண்டியவை இவை என்று எண்ணிக் கவலையடைவதோ கேட்பதோ இல்லை. “இறைவனே நமக்கு வேண்டியவற்றைத் தருவானே. குறிப்பறிந்து தருகின்ற கொடையாளியாகிய அவனிடத்தில் இன்னது வேண்டும் என்று சொல்வது பைத்தியக் காரத்தனம்”என்றுதான் நினைப்பார்கள்.

ஒருகால் அவர்கள் ஏதேனும் கேட்டுவிட்டால் அது மிகச் சிறியதாகத்தான் இருக்கும். எல்லா ஐசுவரியங்களையும் தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தந்து காப்பாற்றுகின்ற பேரருளாளனாகிய ஆண்டவன் பக்தர்கள் கேட்கின்ற சிறிய பொருளைத் தராமலா போவான்?

“இரந்த எல்லாம் கொடுக்கிறான்”என்று சொன்னால், ”கேளாததைக் கேட்பார்கள். இறைவனாலே கொடுக்க முடியாததைக் கேட்பார்கள். அப்போது என்ன செய்வது?”என்று நினைக்கக் கூடாது. எது கேட்டாலும் இறைவன் தருவான். ஆனாலும் தங்களுக்கு நன்மை தராத பொருளை அவர்கள் கேட்கவே மாட்டார்கள். கேட்பதே மிக அருமையாக இருக்கும்.

ஆசைப்படுவதற்கு முன்னாலே அன்பு செய்ய வேண்டும். அன்பு செய்த பிறகு, எதைக் கேட்டாலும் தருவான். இடையீடில்லாத அன்பு யாருக்கு இருக்கிறதோ அவர்கள் எப்பொழுது எதைக் கேட்டாலும் தருவான். சில காலம் அன்பு வைத்துச் சில காலம் மறந்திருந்தால் அன்பு வைத்த காலத்தில்தான் கேட்ட பொருள் கிடைக்கும். எப்பொழுது கேட்டாலும் எது கேட்டாலும் கிடைக்க வேண்டுமானால் எல்லாச் சமயத்திலும் ஆண்டவனிடத்திலே அன்பு இருக்க வேண்டும். அன்பு இடையீடில்லாததாக இருந்தால் இரந்த வெல்லாம் நமக்குக் கிடைக்கும்.

நின் வார்கழற்கு அன்பு எனக்கு
நிரந்தர மாய் அரு ளாய்

என்று கேட்கிறார் மாணிக்கவாசகர். இந்த அன்பைக் கேட்பதற்குக் காரணம், இரந்தவெல்லாம் எமக்கே பெறலாம் என்ற நோக்கம் அன்று. அந்த நோக்கம் தவறு. இறைவனிடத்திலே அன்பு செய்வது இறைவனுடைய திருவருள் கிடைக்க வேண்டும் என்ற ஒன்றுக்குத்தான். ஏதேனும் வேண்டுமானால் கேட்கலாம்; கிடைக்கும். அது நடுவிலே வந்த செய்தி. இறைவனிடத்தில் அன்பு உடையவனாக இருப்பதே ஒரு பெரிய இன்பம்.

இடையீடில்லாத அன்பு எதற்காக வேண்டும்? இறைவனைத் தொழுவதற்காகத்தான். அதை மாணிக்கவாசகர் சொல்லுகிறார்.

நின் கழற்கு அன்பு எனக்கு
நிரந்தர மாய் அரு ளாய்நின்னை
ஏத்த முழுவதுமே.

‘என்னுடைய வாழ்நாள் முழுவதும் உன்னைப் பூரணமாக ஏத்துவதற்காக அன்பு வேண்டும். பிறிதொன்றை ஏத்தாமல் நின் திருவடிகளையே ஏத்துவதற்காக எனக்கு அன்பு வேண்டும். அது நிரந்தரமாக இருக்க வேண்டும்’என்று வேண்டிக்கொள்கிறார்.

பரந்துபல் ஆய்மலர் இட்டுமுட்
டாதுஅடி யேஇறைஞ்சி
இரந்தஎல் லாம்எமக் கேபெற
லாம்எனும் அன்பர்உள்ளம்
கரந்துநில் லாக்கள்வ னேநின்றன்
வார்கழற்கு அன்பு எனக்கு
நிரந்தர மாய்அரு ளாய், நின்னை
ஏத்த முழுவதுமே.

(வார்கழற்கு-நீண்ட திருவடிகளுக்கு. நிரந்தரமாய்-இடையீடு இன்றி. முழுவதும்-வாழ்நாள் முழுவதும்.)