அன்பின் உருவம்
பெரிய கூட்டம். இறைவனுடைய திருமுன் அவனுடைய ஆரருளைப் பெறவேண்டுமென்ற ஆசையாலே கூடிய கூட்டம் அது. எல்லோரும் சிவ சின்னங்களை அணிந்திருக்கிறார்கள். நெற்றியிலே திருநீறு; உடம்பெல்லாம் திருநீறு. கழுத்திலும் தலையிலும் உருத்திராட்ச மாலை. கைகளைத் தலைமேல் வைத்துக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். சிவபெருமானுடைய திருநாமங்களை உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். போற்றி, போற்றி என்று வணங்குகிறார்கள்; சய சய என்று வாழ்த்துகிறார்கள்.
இந்தக் கூட்டத்தோடு சேராமல் இரண்டுபேர் தனியே நிற்கிறார்கள். அவர்கள், கூட்டத்தில் உள்ள சிவநேசச் செல்வர்களைக் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
“ஆ! எவ்வளவு பெரியவர்கள்! இவர்களிடத்தில் உள்ள சிவ பக்தியை என்னவென்று சொல்வது!”என்று ஒருவர் வியந்து பேசினார். அந்த இருவரில் அவர் இளைஞர்; மற்றவர் முதியவர்.
இளைஞர் கூறியதைக் கேட்டு முதியவர் முறுவல் பூத்தார்; “நீ எப்படி அறிந்தாய்?”என்றார்.
“அவர்களுடைய கோலமும் கையைத் தலைமேல் குவித்திருக்கும் நிலையும் இறைவனை வாழ்த்துகின்ற வாழ்த்தும் அவர்களுடைய அன்பை வெளிப்படுத்துகின்றனவே! அவர்களைப் பார்த்தாலே அன்பின் உருவங்களாகக் காட்சி அளிக்கிறார்களே!”
“அன்புக்கு உருவம் உண்டா? அது குணம் அல்லவா?””ஆனாலும்…”இளைஞர் பேச வகை தெரியாமல் விழித்தார்.
முதியவர் மறுபடியும் புன்னகை பூத்தார். “ஆம், அன்பு குணந்தான்; அது காட்சிப் பொருள் அன்று; கருத்துப் பொருள். அதைக் கண்ணால் காண முடியாது. இவர்களுடைய வேடமும் செயலும் பேச்சும் அன்பை நினைப்பூட்டுகின்றன. அதனால் இவர்களை அன்பர்கள் என்று எண்ணுகிறாய்.”
“அது உண்மைதான். அன்புக்கு இவர்கள் செயல்கள் அடையாளங்களாக இருக்கின்றன.”
“இத்தனை பேரும் உண்மையான அன்பர்கள் என்று சொல்ல முடியாது. அன்பைப் புலப்படுத்தும் அடையாளங்கள் உண்டு. ஆனால் அடையாளங்கள் இயற்கையாக அமைவன சில; செயற்கையான உள்ளவை சில.”
“எனக்குத் தெளிவுபடவில்லை” என்றார் இளைஞர்.
“அதோ அங்கே மூலையில் தூணோடு ஒட்டியபடி இருக்கும் அன்பரைப் பார். பக்கத்திலே சென்றாகிலும் பார்த்து விட்டு வா. உடம்பைக் கவனி. கையைத் தலையின் மேல் குவித்திருப்பதைக் கண்டு வந்துவிடாதே. அவர் உடம்பின் மேலுள்ள மயிர்க் கால்களைக் கவனித்து விட்டுவா”என்று முதியவர் சொன்னார்.
இளைஞர் அவ்வாறே அந்தத் தூணருகே சென்றார். மெல்ல அங்கே சற்று நின்று பார்த்தார். அந்தப் பக்தர் கண்ணை மூடிக்கொண்டே, “சிவ சிவ சிவ சிவ சய சய போற்றி போற்றி!”என்று சொல்லிக்கொண்டிருந்தார். இளைஞர் அவர் திருமேனியைப் பார்த்தார். இளைத்து உலர்ந்து என்பு எழுந்து இயங்கும் யாக்கை அது. அதில் மேலாகப் பார்க்கிறவருக்கு ஒரு கவர்ச்சியும் இராது. இளைஞர் கூர்ந்து கவனித்தார். மயிர்க் கால்களையே கவனித்தார். ரோமங்கள் குத்திட்டு நின்றன. சிலீர் சிலீர் என்று அடிக்கடி மயிர்க் கூச்சிடுவதை அவர் கண்டார். அது மாத்திரம் அன்று. அவர் உடம்பில் சிறு நடுக்கமும் உண்டாகியிருந்தது. பக்கத்திலிருந்த வேறு சிலரைக் கண்டார். அவர்கள் கொழு கொழுவென்று பருத்த மேனியுடையவர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்களுடைய மேனியில் இந்தப் புளகம் உண்டாகவில்லை. மெலிவாக இருந்த பக்தர் மெய்தான் அரும்பியது; விதிர் விதிர்த்தது.
இளைஞர் மீட்டும் முதியவரிடம் வந்தார். “நீங்கள் சொன்னபடியே சென்று பார்த்தேன். அவருக்கு அடிக்கடி மயிர்ச்கூச்சு ஏற்படுகிறது; உடம்பு நடுங்குகிறது”என்றார்.
“எல்லோரிடமும் இந்த இரண்டும் இருக்கின்றன என்று நினைக்கிறாயா?”
“இல்லை. அருகில் இருந்த சிலரைப் பார்த்தேன். அவர்களிடம் இந்த வெளியீடுகளைக் காணவில்லை.”
“இப்பொழுது வேற்றுமை தெரிகிறதா? இவ்வளவு கூட்டத்திலும் உண்மையான அன்பர் சிலரே இருக்கிறார்கள் என்ற உண்மை தெரிகிறதா?”
இளைஞர் விடை சொல்லாமல் நின்றார். இன்னும் அவருக்கு முழுத் தெளிவு உண்டாகவில்லை.
“அழகும் அன்பும் உடைய காளை ஒருத்தனிடம் காதல் கொண்ட மங்கை ஒருத்திக்குப் பல வகையான அநுபவங்கள் அந்தக் காதல் உணர்ச்சியினாலே உண்டாகும். தன் காதலனை நினைக்கும் போது உடம்பில் மயிர்க்கூச்செரியும். காதலனைக் காணும்படி நேர்ந்தால் குபீர் குபீர் என்று புளகம் போர்க்கும்; உடம்பில் சிறு சிறு நடுக்கமும் காணும். உடம்பில் உள்ள உறுப்புக்களெல்லாம் முறுக்குத் தளர்ந்து நெகிழ்ந்து போகும். இது காதலின் அடையாளம். காதல் என்பது உள்ளத்தில் இருக்கிற குணம். பக்தியும் அத்தகையதே. அந்தக் குணங்கள் மலரும்போது உணர்ச்சி விஞ்சும். அப்போது உடம்பில் இத்தகைய விளைவுகள் ஏற்படும். இவை முயற்சியின்றித் தாமே வெளியாகின்றன; இவற்றையே மெய்ப்பாடுகள் என்று சொல்வார்கள். கோபம் உள்ளவனுக்குக் கண் சிவப்பது, சோம்பல் உள்ளவனுக்குக் கொட்டாவி வருவது, அச்சம் உள்ளவனுக்கு உடம்பு நடுங்குவது முதலியன வெல்லாம் உணர்ச்சியின் விளைவாக உடம்பிலே தோன்றும் மெய்ப் பாடுகள். இயற்கையாகத் தோன்றும் இந்த மெய்ப் பாடுகளோடு, நினைந்து செய்யும் செயல்களும் சேரும். செயல்களும் பேச்சும் உள்ளத்தில் மலர்ந்துள்ள உணர்ச்சியின் விளைவாக இருக்கும். மெய்ப்பாடுகள் இயற்கையாக அமைபவை; பேச்சும் செயலும் நினைந்து செய்பவை. உண்மையான உணர்ச்சியை இயற்கையான மெய்ப்பாடுகளிலிருந்து கண்டு பிடித்துக் கொள்ளலாம். காதலிக்கு உள்ள அன்பு போன்றதே இறைவனிடம் பக்தனுக்கு உள்ள அன்பும். இரண்டு உணர்ச்சிகளிலும் சில மெய்ப் பாடுகள் பொதுவாக அமையும்.”
“மற்றவர்களும் இறைவனை நினைந்து கை கூப்புகிறார்கள்; வாழ்த்துகிறார்கள். அவை அன்பின் அடையாளங்கள் அல்லவா?”
“அன்பு காரணமாகக் கைகூப்புவதும் வாழ்த்துவதும் அன்பர்களிடத்திலே நிகழும். ஆனாலும் அன்பு இல்லாமலே இந்த இரண்டையும் செய்ய முடியும். இவை நினைந்து செய்கின்றவை. உண்மையான தாயும் தன் குழந்தையை அணைத்துக் கொள்கிறாள். அதனிடத்தில் உள்ள அணியைக் கவர விரும்புபவளும் அணைத்து முத்தம் கொடுக்கிறாள். இருவருடைய செயல்களும் ஒன்றாகவே தோன்றுகின்றன. ஆயினும் தாயின் செயலே உண்மையான அன்பினால் அமைவது.”
”இந்தக் கூட்டத்தில் இரு வேறு வகையினர் இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்.”
”ஆம். அதை நீயே பார்த்தாயே. கையைத் தலைமேல் வைத்து, போற்றி, சயசய போற்றி என்று மாத்திரம் சொல்பவர்கள் ஒரு சாரார்; மெய் அரும்பி, விதிர் விதிர்த்து, வணங்கிப் போற்றுகிறவர்கள் ஒரு சாரார்.”
“இன்னும் என்ன என்ன வேறுபாடுகள் இருக்கின்றன?”என்று ஆர்வத்தோடு கேட்டார் இளைஞர்.
‘மற்றொரு சோதனை சொல்கிறேன். அதையும் கவனித்து வா. முன்பு அவர்களுடைய மெய்யைக் கவனித்தாய். இப்பொழுது அவர்களுடைய உறுப்புக்களைக் கவனித்து வா.’
“அவர்களுடைய கையையும் தலையையும் கண்டு தானே வந்தேன்?”
“அது போதாது. உடம்பிலே சிறந்த உறுப்புத் தலைதான். ஆனால் அந்தத் தலையிலும் முகத்தில் இருக்கிற கண்களே சிறந்தவை. உலகத்தில் வாழும் மக்களுடைய கண் பார்வையைக் கொண்டே அவர்களுடைய இயல்பைச் சொல்லி விடலாம். இப்போது இவர்களுடைய கண்களை ஆராய்ச்சி செய்.”
“எப்படி ஆராய்ச்சி செய்வது? பெரிய கண், சிறிய கண், கரிய கண், சிவந்த கண் என்று அக் கண்களின் உருவத்தையும் நிறத்தையும் ஆராயச் சொல்கிறீர்களா?”
”இல்லை, இல்லை. கண் என்று சொன்னது தவறு; பார்வை என்று சொல்லியிருக்க வேண்டும். இவர்களுடைய பார்வைகள் எங்கெங்கே பதிந்திருக்கின்றன என்று ஆராய்ந்து பார். இதையும் நுட்பமாக ஆராய ஆராய வேண்டும்” என்று சொல்லியனுப்பினார்.
இளைஞர் சென்றார். இப்போது பார்வைகளை ஆராய்ச்சி செய்யும் வேலையில் ஈடுபட்டார். கூட்டத்தில் ஒருவர் தம்முடைய மார்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். மற்றொருவர் தம் ருத்திராட்ச மாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். வேறு ஒருவர் அருகில் நின்றவனுடைய ஆடையைக் கவனித்துக் கொண்டிருந்தார். பின்னும் ஒருவர் எங்கோ ஒரு மூலையை நோக்கினார். இப்படி வெவ்வேறு இடங்களில் பார்வையைச் செலுத்தினவர்கள் பலர். சிலர் இறைவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த வேறுபாடுகளையெல்லாம் கண்ட இளைஞர் முதியவரிடம் வந்து தாம் கண்டதைச் சொன்னார்.
“முன்பு மெய்ப்பாடுகளாகிய இயற்கை விளைவும், கை கூப்பி வாழ்த்துவதாகிய செயற்கை விளைவும் ஒருங்கே ஒருவரிடம் இருப்பதைக் கண்டாய். அப்படிச் சிலர் இந்தக் கூட்டத்தில் இருக்கக்கூடும். இப்போது அவர்களுடைய பார்வையிலிருந்து இரு வேறு வகையினர் இங்கே இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டாய்.”
“உண்மை. இறைவனைப் பார்க்கிறவர்கள் ஒரு சாரார்; மற்றவற்றைப் பார்க்கிறவர்கள் ஒரு சாரார்.'”
“அப்படிச் சொல்லக்கூடாது. எல்லோரும் இறைவனைப் பார்ப்பார்கள். ஆனால் இறைவனை மாத்திரம் பார்த்துக் கொண்டே இருப்பவர்கள், இறைவனையும் மற்றப் பொருள் களையும் பார்ப்பவர்கள் என்று இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். இறைவனைப் பார்ப்பவர்களிலும் இரு வேறு வகையினர் உண்டு.”
“அது என்ன வகை?”
“அதற்கும் ஓர் ஆராய்ச்சி நடத்த வேண்டும்”என்று சொல்லி முதியவர் சிரித்தார்.
”உண்மையைக் காண எத்தனை ஆராய்ச்சி நடத்தினாலும் நடத்த வேண்டியதுதானே? சொல்லுங்கள். செய்கிறேன்.”
”கண் பார்வையைப் பார்த்து வந்து சொன்னாய். இறைவனுடைய கோலத்தைக் காண்பவர்களை இன்னும் கூர்ந்து கவனித்து வா. இறைவன் கோலத்தில் எந்த எந்தப் பகுதியைப் பார்க்கிறார்கள் என்பதைக் கூர்ந்து அறிந்து வா. தூணருகில் நிற்கும் அன்பர் கண்ணைத் திறந்தால் எங்கே பார்க்கிறார் என்பதை நுட்பமாகப் பார்த்துத் தெரிந்துகொண்டு வா.”
இளைஞர், கூட்டத்தினரை அணுகினார்; நுட்பமாக ஆராய்ந்தார். இறைவன் வாகனத்தைக் கவனிப்பாரும், இறைவன் மேனியை மேலும் கீழும் உற்று நோக்குவாரும், இறைவன் திருமுக மண்டலத்தைப் பார்ப்பவரும், அவனுடைய திருவடிகளையே காண்பவருமாக அன்பர்கள் இருந்தைக் கண்டார். தூணருகில் மெய் அரும்பி விதிர் விதிர்த்து நின்ற வரைக் குறுகினார். நல்ல வேளையாக அவர் கண் இப்போது மலர்ந்திருந்தது. அந்தக் கண் பார்வையைக் கவனித்தார். அது எம்பெருமானுடைய திருவடியிலே பதிந்திருந்தது. சில கணங்கள் அந்தப் பார்வை அப்படியே நின்றது. உடனே குபுக்கென்று அந்தக் கண்களிலிருந்து நீர் ததும்பியது. அன்பர் இப்போது தாரை தாரையாகக் கண்ணீர்விடத் தொடங்கினார்.
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து
உன்விரை ஆர்கழற்கு என்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி.
(விதிர்விதிர்த்து நடுங்கி. விரை ஆர் கழற்கு – மணம் பொருந்திய திருவடியைக் கண்டு அதன்பொருட்டு.)
அந்த மெய்யன்பருடைய நிலையைக் கண்டு இளைஞர் உருகிப் போனார். முதியவரிடம் ஓடி வந்தார். “நீங்கள் சொல்வது உண்மை. கண் காட்டி விட்டது உண்மை அன்பை” என்று வியப்பினால் கூவினார்.
“என்ன கண்டாய்?”என்று கேட்டார் முதியவர்.
“கண்டறியாதன கண்டேன். இறைவனையே காணும் கூட்டத்தினரிலும் வேறுபாடு கண்டேன். அவனுடைய பல்வேறு அழகுகளைக் கண்டு அவர்கள் இன்புறுகிறார்கள். அந்த மெய்யன்பரோ இறைவனுடைய திருவடியையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார்.”
”நீ உண்மையை உணர்ந்துவிட்டாய். அன்பர்கள் இறைவனுடைய பேரழகில் ஈடுபட்டு அதனைக் கண்டு இன்புறுவார்கள். ஆயினும் அவனுடைய திருவடியில்தான் அவர்களுக்கு நாட்டம். அதுதான் அவர்களுக்குப் பற்றுக்கோடு. இறைவனுடைய பெருமையை அவனுடைய உறுப்புகள் யாவும் காட்டுகின்றன. ஆயினும் அப்பெருமானை அடையும் அன்பர்களுக்கு உரிய பற்றுக் கோடாக இருப்பது அவன் திருவடியே. மரத்தின் கிளைகளும் கொம்புகளும் வளார்களும் இலைகளும் பலவாக இருந்தாலும் அதற்கு நீர் வார்க்க வேண்டுமானால் அடியில் உள்ள வேரிலேதான் வார்ப்பார்கள். அன்பர்களும் இறைவன் அடியையே நோக்கியிருப்பார்கள்.”
”நல்ல உவமை சொன்னீர்கள்! அந்தத் திருவடியிலே நாட்டங்கொண்டு அவர்களும் கண்ணீர் விடுகிறார்கள்.”
“இறைவனுடைய திருவடியைப் பற்றிக் கொள்வதனால் அன்பர்களுக்கு அடியார்கள் என்றும், திருவடி சம்பந்திகள் என்றும் பெயர் வந்தன. தோளார், கையார், முகத்தார் என்று சொல்வது வழக்கம் அல்லவே. இறைவன் திருமேனி அழகைக் கண்ணாரப் பருகி இன்புற்றாலும் கடைசியில் அமைதி பெற நாடிப் புகுமிடம் திருவடிதான். உண்மை அன்பர்கள் அத்திருவடியை நோக்கியே கும்பிடுவார்கள். அந்தக் கழற்கே தலைமேற் கைகூப்பி வணக்கம் புரிவார்கள். அந்தக் கழலையே பாராட்டுவார்கள்.”
“அந்த மெய்யன்பர் இறைவன் கழலையே கண்டார். உன் விரையார் கழல் வெல்க என்று வாழ்த்தினார்.”
”ஆம், இறைவன் கழல் நறுமணம் பொருந்தியது. தேவர்களும் அம்பலபல மலர்களால் அருச்சித்துப் போற்றும் அடிகள் அல்லவா? அன்பர்களுடைய மலரின் நறுமணமும் உள்ளத்தின் அன்பு மணமும் சார்ந்து சார்ந்து மணப்பது. அதுவன்றி இயற்கையாகவே ஞானம் மணக்கும் திருவடி அது. அதுவே ஞான மயமானது. ஞான மணமும் மலர் மணமும் வீசம் இறைவன் பூம்பதத்தை விரையார் கழல் என்று சொல்வது மிகவும் பொருத்தமானது.”
“அந்த மெய்யன்பர் கண்ணீர் விடுகிறாரே!”
“விடுகிறார் என்று சொல்லக்கூடாது. அவராக நினைந்து முயன்று விடுவது அன்று அது. மற்றவர்களிடம் அதைக் காண முடியாது. கண்ணீர் தானே ததும்புகிறது. அது இயற்கையான மெய்ப்பாடு. மெய்யிலே புளகமும் நடுக்கமும் இயற்கையாகத் தோன்றியது போலக் கண்ணீரும் இயற்கையான விளைவு; பொய்யன்பர்களிடம் காண முடியாது.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்
என்று வள்ளுவர் சொன்னார். கண்ணால் பார்க்கும் பார்வையில் முயற்சி இருக்கிறது. ஆனால் கண்ணீர் ததும்புவது முயற்சியினால் வருவது அன்று; உண்மையான அன்புணர்ச்சியின் விளைவாகத் தானே உண்டாவது அது. கைகுவிப்பதாகிய செயல் யாவரிடமும் பொதுவாக இருந்தாலும், மெய்யரும் புதலும் விதிர்விதிர்த்தலும் மெய்யன்பரிடமே காண முடியும். கண் பார்வையில் பிறவற்றைப் பாராமல் இறைவனையே நோக்குகிறவர்கள் இறைவன்பால் நோக்கமுடையவர்கள். அவர்களிலும் அவன் கழலைக் காண்பவர்கள் தலையானவர்கள். கழலைக் கண்டு கண்ணீர் விடுகிறவர்கள் மிக மிக உத்தமமானவர்கள்.”
“மெய்யான அன்பர்கள் மிக அரியரென்று தெரிகிறது.
பொய்யான வேடதாரிகளே பலர் போலும்!”
“வேடதாரிகள் என்று சொல்ல வேண்டாம். பொய்யான வாழ்க்கையிலே மோகம் கொண்டவர்கள் உலகத்தில் மிகுதியாக இருக்கிறார்கள். இறைவனை அணுகும்போதுகூட அந்தப் பொய் அவர்களை விட்டு விலகுவதில்லை. அடியார்களுடைய கூட்டத்தில் கலந்து கைகுவித்து வாயார வாழ்த்தும் பழக்கம் அவர்களிடம் உண்டாக உண்டாக அந்தப் பொய் நிலை மெல்ல மெல்லக் கழலுகின்றது. பொய்யான பற்றும், பொய்ப் பொருளில் மோகமும் முற்றும் ஒழியும் போது இறைவனிடம் முறுகிய அன்பு தலைப்படுகிறது. அதுவரையில் மற்றவர்களைக் கண்டு, அவர்கள் செய்கிற காரியங்களை இவர்களால் செய்ய இயலும். மெய்யன்பர்கள் தலையின்மேல் கை குவிப்பதைக் கண்டு தாமும் கைகுவிப்பார்கள். அவர்கள், ‘போற்றி சய சய போற்றி’என்று வாழ்த்துவதைக் கண்டு தாமும் வாழ்த்துவார்கள். ஆனால் அவர்களுக்கு உண்டாகும் புளகமும் நடுக்கமும் இவர்களுக்கு உண்டாவது இல்லை. கண்ணீர் ததும்புவதில்லை. நாளடைவில் உண்மையன்பர்களோடு சேர்ந்து சேர்ந்து இவர்களுக்கும் அன்பு உதயமாகிறது. காந்தத்தோடு உராயும் இரும்புக்கும் காந்த சக்தி அமைவதுபோல இவர்களுக்கும் அந்த மெய்ப்பாடுகள் சில சமயங்களில் உண்டாகின்றன. இவர்களுடைய உள்ளத்தில் பொய் கரையக் கரைய அந்த மெய்ப்பாடுகள் மிகுதியாகின்றன. நமக்கு இன்னும் இறைவன் திருவருள் கிடைக்கவில்லையே என்ற புழுக்கம் உள்ளே தோன்றுகிறது. நெஞ்சம் வெதும்புகிறார்கள். வேதனையினால் உண்டாகும் இந்தப் புழுக்கத்தினால் உள்ளத்தில் உள்ள மாசு கரைகிறது; தேய்கிறது. பொய் தவிர்ந்து போற்றுகிறார்கள். முன்பு உலகியல் வாழ்வில் இவர்களுடைய கரணங்கள் ஈடுபட்ட முறையே வேறு; இப்போது அன்பர் கூட்டத்திற் கலந்த பிறகு நிகழும் நிகழ்ச்சிகளே வேறு.
“நான் அதை உணர்கிறேன். இவர்களுடைய உள்ளம் வெதும்புகிறது; அதன் பயனாகப் பொய் தவிர்கிறது; இவை மனத்தில் உண்டாகின்றன. இவர்கள் உடம்பு நெகிழ்கிறது; புளகம் அரும்புகிறது; மேனி விதிர்விதிர்கிறது; கண் கழலை நோக்குகிறது; நீரைச் சொரிகிறது; இவை உடம்பில் நிகழும் செயல்கள். ‘இறைவனே போற்றி! உன் திருவடி வெல்க! உன் அருள் வெல்க! போற்றி சயசய போற்றி’என்று வணங்கி வாழ்த்துகிறார்கள்; இவை வாக்கில் நிகழும் செயல்கள். பொய் தவிராத காலத்தில் இவர்கள் உடம்பும் கண்ணும் கையும் தலையும் யார் யாரையோ வணங்கின. என்ன என்னவோ மெய்ப் பாடுகளை உடையனவாக இருந்தன. இவர்கள் நெஞ்சங்கள் எதுஎதற்காகவோ வேதனையுற்றன. இவர்கள் வாய் என்ன என்னவோ பிதற்றின. இப்போது மெய்யன்பு தலைப்படவே பொய்ச் செயலும் பொய்ச் சொல்லும் பொய் எண்ணமும் தவிர்ந்தன. இந்த மாற்றம் எனக்கு நன்றாகப் புலப்படுகிறது.”
இளைஞர் முகமலர்ச்சியுடன் பேசினார். புதிய உலகத்தைக் கண்டவரைப் போன்ற வியப்பில் மூழ்கியிருந்தார்.
“இப்போது அந்த மெய்யன்பரைப் போய் மறுபடியும் பார்த்துவிட்டு வா; அவர் என்ன சொல்கிறார்? கேட்டு வந்து சொல்”என்று முதியவர் இளைஞரை அனுப்பினார்.
மூலையில் தூணுக் கருகில் அன்பின் உருவமாக நின்றிருந்த அடியாரைக் குறுகினார் இளைஞர். ‘ஆண்டவனே! பல காலமாக நான் இப்படியே இருக்கிறேனே. நெகிழாமல் நிற்கிறேனே! உடையாய்! என்னைக் கண்டு கொள் அப்பா!”என்று அவர் கூறியதை ஆராய்ச்சியிலே புகுந்த இளைஞர் கேட்டார். கேட்டதை முதியவரிடம் வந்து சொன்னார்.
“மூன்று கரணங்களையும் இறைவன் திறத்திலே ஈடுபடுத்தும் பயிற்சியில், இடையிடையே பொய் வந்து ஈர்க்கும்; அன்பு நெறியில் தளர்ச்சி உண்டாகும். அந்தத் தளர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் மேலும் மேலும் இறைவன்பால் ஈடுபடுவார்கள் மெய்யன்பர்கள். அவரிடத்தில் கண்ட மெய்ப்பாடுகளும் செயல்களும் உரைகளும், அவரிடம் உள்ள நினைவுகளும் அன்புமயமானவை. இந்த நிலை அவரிடம் சிறிதும் நெகிழ வில்லை.”
“ஏன்?”
“பின், என்னைக் கண்டுகொள் அப்பா என்கிறாரே;
‘இறைவன் மீது அவருக்குள்ள பெருங்காதலை அது காட்டுகிறது. அன்பின் வேகத்தால் ஏங்கி நின்று அவர் பேசுகிறார். ‘இறைவன் எத்தனையோ செயல்களைச் செய்கிறான். தன்னை அணுகி வேண்டுவார் வேண்டும் பொருளை அளவறிந்து வழங்குகிறான். ஐந்தொழிலை நடத்துகிறான். அவ்வளவு செயல்களில் ஈடுபட்டிருக்கும் அவனுக்கு இந்த நாயேனைக் காண நேரம் ஏது? மகா ஞானியரும் யோகியரும் அன்பர்களும் அவனுடைய அருளுக்காக ஏங்கி நிற்கும்போது இந்த எளியேன் அவன் கண்ணில் படுவேனா!”என்ற ஏக்க உணர்ச்சியால் அப்படிப் பேசுகிறார். அது அன்பின் அறிகுறி. ‘எத்தனையோ பேர்களைப் பார்த்துப் பல செயல்களைச் செய்யும் நீ எளியேனையும் கண்டு உனக்கு அடியனாகக் கொள்ளவேண்டும் அப்பா!’என்று சொல்கிறார். அவர் அவன் தான் தன்னை உடையவன் என்று கண்டுகொண்டார். அவனுடைய உடைமையே தாம் என்பதையும் கண்டு கொண்டார். உடையவன் தன் உடைமையை மறந்திருக்கலாமா? ‘இதோ உன் உடைமை இங்கே இருக்கிறது. இதைக் கண்டு கொள்’என்று தம் அடிமை நிலையையும் இறைவனுடைய உரிமை நிலையையும் உணர்ந்து பேசுகிற பேச்சு, “உடையாய்! என்னைக் கண்டு கொள்’என்னும் பேச்சு.”
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து
உன்விரை ஆர்கழற்குஎன்
கைதான் தலைவைத்துக் கண்ணீர்
ததும்பி வெதும்பிஉள்ளம்
பொய்தான் தவிர்ந்துஉன்னைப் போற்றி
சயசய போற்றிஎன்னும்
கைதான் நெகிழ விடேன்உடை
யாய்! என்னைக் கண்டுகொள்ளே.
[உடம்பில் புளகம் அரும்பி, நடுங்கி, உன்னுடைய மணம் நிரம்பிய திருவடிக்கு என் தலையின்மேல் கையை வைத்து வணக்கம் புரிந்து, கண்ணீர் ததும்பி, உள்ளம் வேதனையினால் புழுங்கி, பொய்யான பற்றையும் உணர்ச்சிகளையும் நீங்கி, உன்னை வணங்கி, ‘வெல்க வெல்க! போற்றி’என்னும் ஒழுகலாற்றைச் சிறிதும் தளர விடமாட்டேன். உடையவனே! என்னை இவன் நம் அடியான் என்று கண்டு அறிந்து என்னை ஏற்றுக் கொண்டருள்.
மெய் – உடம்பு. தான்: அசை. அரும்பி – புளகம் அரும்பி; மயிர்க்கூச்செறிந்து. விதிர் விதிர்த்து – நடுங்கி. விரை – மணம். கழல் காலில் அணியும் வீர வெண்டயம்; அது இங்கே திருவடிக்கு ஆயிற்று; ஆகு பெயர். கழற்கு கழலின் பொருட்டு. ததும்பி – பொங்கி. வெதும்பி – புழுங்கி; வேதனை அடைந்து. போற்றி – வணங்கி. இரண்டு போற்றிகளையும் அன்பருடைய வார்த்தைகளாக வைத்தும் பொருள் சொல்லலாம். சய – ஜய; வெல்க, கை – ஒழுக்கம். நெகிழ – தளர. கொள் – ஏற்றுக்கொள்.)
மாணிக்கவாசகர் பாடியருளிய திருவாசகத்தில் திருச்சதகம் என்னும் பகுதியில் உள்ள நூறு பாடல்களில் முதற் பாடலாக விளங்குவது இப்பாட்டு. திருச்சதகத்துக்கு முன் சிவ புராணம், கீர்த்தித் திருவகல், திரு வண்டப் பகுதி, போற்றித் திருவகவல் என்ற நான்கு நெடும்பாடல்கள் உள்ளன. போற்றித் திருவகவலை அடுத்து நிற்பது திருச்சதகம். அந்தத் திருவகவல்,
போற்றி போற்றி புராண காரண
போற்றி போற்றி சயசய போற்றி!
என்று முடிகிறது. தொடர்ந்து வரும் திருச்சதகத்தின் முதற் பாட்டாகிய இதில் அதன் கடைசியடியிலுள்ள சொற்கள் வீணையின் ஒலி இழைவது போலக் கேட்கின்றன.
போற்றி சயசய போற்றி என்னும்
கைதான் நெகிழவிடேன்.
மெய் புளகம் போர்ப்ப, நடுக்கம் உண்டாக, கையைத் தலையின்மேல் வைத்து, கண்ணீர் வார, சயசய போற்றி என்று வாழ்த்தி நிற்கும் அன்பருடைய கோலம் இந்தப் பாட்டைப் படிக்கும்போது நமக்குப் புலனாகிறது. இவை கண்ணாற் காணும் காட்சிகள். இவற்றோடு உள்ளம் வெதும்புதலும் பொய் தவிர்த்தலும் தளர்ச்சியின்றி நிற்றலுமாகிய பண்புகளும் கருத்துக் குட் பதிகின்றன. அன்புக்கு உருவம் இல்லை; ஆனாலும் அதன் விளைவுகளையெல்லாம் ஒருங்கே காணும்போது, “இதுதான் அன்பின் உருவம்!”என்று சொல்வதில் தடை என்ன?