இதுபோல் உண்டா?

தில்லை நடராசப் பெருமானிடத்தில் பேரன்பு உடையவன் ஒருவன் ஓர் அழகியை ஒரு பூஞ்சோலையில் கண்டான்; கண்டு காதல் கொண்டான். அவ்விருவரும் தனிமையிலே இருக்கும்போது, அந்தக் காதல் அமைந்தது. காதலினால் பெறும் இன்பத்தைக் கண்டார்கள். இதைக் களவுக் காதல் என்று சொல்வார்கள். மணம் புரிவதற்கு முன்பே இறைவன் திருவருள் கூட்ட, காதலர் ஒருவரை ஒருவர் கண்டு உள்ளம் ஒன்றுவார்கள்.

காதலியைக் காணுந்தோறும் காதலனுக்கு உண்டாகும் வியப்பு அளவுக்கு அடங்காமல் இருக்கிறது. அவளுடைய பேரழகை நினைந்து நினைந்து பூரிப்பு அடைந்தான். அந்த அழகைப் பாராட்டிப் பேசவேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. நல்ல அன்புடையவரை அவருக்கு முன்பே பாராட்டுவது அவ்வளவு உசிதமான காரியம் அன்று. காதலியை நேருக்கு நேராகப் பாராட்டுவது என்றால் நாணமிக்க அவள் கூசுவாள். ஆதலின் அந்தப் புகழை மறைமுகமாகச் சொல்ல ஆரம்பிக்கிறான். அவளைப் பார்த்து, “பெண்னே, நீ பேரழகி”என்று சொல்லவில்லை. அங்கே உள்ள வண்டுகளைப் பார்த்துப் பேசுகிறான்.

பூஞ்சோலை அல்லவா? அந்தச் சோலையில் பறந்து கொண்டு வருகின்றன வண்டுகள். அவற்றைப் பார்த்துப் பேசுகிறான். வண்டுக்கு மலரைப் பற்றிய அறிவு நிரம்ப இருக்கும். எல்லா வகையான மலர்களையும் கண்டு கண்டு, அவற்றின் மணத்தை அறிந்து அவற்றிலுள்ள தேனை நுகர்ந்து இன்புற்றிருக்கும் வழக்கம் உடையது வண்டு.

வண்டுகளைப் பார்த்து, “இவளுடைய இதழைப் போன்ற ஆம்பலை எங்கேயாவது கண்டிக்கிறீர்களா?”என்று கேட்கிறான். இறைவனுடைய அன்பன் ஆகையினால் முதலில் அவனுக்கு இறைவனுடைய நினைவு எழுகிறது. பேரழகியாய் இருக்கிற தன்னுடைய காதலியைக் காணும்பொழுது, அவளுடைய பேரழகை நினைக்கும் பொழுது, எல்லாவற்றிற்கும் மேலான பேரழகனாகிய ஆண்டவனுடைய நினைவும் தோற்றுகின்றது.

அவளுடைய இடையைப் பார்க்கிறான். அந்த இடைக்கு ஓர் உவமை கூற வருகிறான். தம்முடைய அநுபவத்திலிருந்து உவமை சொல்வது மக்களுடைய இயற்கை. ஆண்டவனுடைய திருவடியில் இடையீடு இல்லாமல் அன்பு செய்கிற இந்தத் தலைவன் தன் இயல்புக்கு ஏற்ற வகையில் அந்த இடைக்கு உவமை சொல்ல வருகிறான்.

இடை மெலிந்திருக்கிறது. யார் மெலிவார்கள்? யார் தேம்புவார்கள்? இறைவனுடைய திருவருள் பெற்றவருக்கு வருத்தம் இல்லை; மெலிவு இல்லை. இறைவனுடைய திருவருளைப் பெறாதவருக்கு மெலிவு உண்டு. அவர்களைப் போல அந்த இடை தேம்புகிறதாம்.

கூம்பலங் கைத்தலத்து அன்பர்என்பு
ஊடுரு கக்குனிக்கும்
பாம்புஅலங் காரப் பரன்தில்லை
அம்பலம் பாடலரின்
தேம்பலஞ் சிற்றிடை


என்று இடையைச் சொல்கின்றான்.

அன்பர்களுக்கு எல்லாம் இன்பம் உண்டாகும்படியாக நடராசப்பெருமான் நடனம் ஆடுகிறான். அவனைக் கண்ட மாத்திரத்தில் அன்பர்களுடைய கைகள் சூரியனைக் கண்ட தாமரை மலர்களைப் போலக் குவிக்கின்றன. மனமோ விரிகிறது. பக்தி உணர்ச்சி மிக மிக, இறைவனுடைய தரிசனத்தைக் காணக்காண உள்ளம் நெகிழ்கிறது. நெகிழ்ந்து நெகிழ்ந்து இறைவனுடைய பேரழகிலே அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

அவர்களுடைய எலும்பு எல்லாம் நெகிழ்கின்றன. அப்பொழுது பேரானந்தத்தை அனுபவிக்கிறார்கள்.

தன்னைத் தரிசிக்கிறவர்கள் என்பையும் உருக்கும்படி ஆடுகிற எம்பெருமான் பேரழகன். ஆயினும் மற்றவர்களிடத் தில் காண முடியாத ஒரு புதுமை அவனிடத்தில் இருக்கிறது. எந்தப் பொருள் பிறருக்கு அச்சத்தை உண்டாக்குமோ, அதனை அவன் ஆபரணமாக அணிந்திருக்கிறான். நஞ்சுடைய நாகத்தை மக்கள் கண்டால் அஞ்சுவார்கள்; அதனிடம் உள்ள மாணிக்கத்தை மாத்திரம் தனியே கொடுத்தால் அணிவார்கள். இறைவனோ நஞ்சோடு கலந்த நாகத்தையே பூணாக அணிந்து கொண்டிருக்கிறான். அவன் பாம்பலங்காரப் பரன். கூம்பல் அம் கைத்தலத்தையுடைய அன்பருடைய எலும்பு எல்லாம் உள்ளே உருகும்படியாக நடனம் செய்கிறவன் ஆண்டவன்; அவன் தில்லையம்பலத்திலே ஆடிக்கொண்டிருக்கிறான்.

அந்த ஆம்பலத்தில் அவனைக் கண்டு, அவனுடைய ஆட்டத்திலே இன்பத்தை அடைந்து அவனைப் பற்றிப் பாடாமல் இருக்கிறார்களே, அவர்கள் எதற்காக வாழ்கிறார்கள்? அவர்கள் வாக்கு பெற்றதனால் பயன் என்ன? அந்த வாக்குக்குச் சோறு கிடைக்குமா?

பாடாத வாய்களுக்குச் சாப்பாடு கிடையாது; அதனால் அவர்கள் உடம்பு தேம்புவார்கள்; உள்ளமும் தேம்புவார்கள். மக்களிடத்தில் யாசகம் செய்து செய்து, தங்களுடைய வாழ்வைப் போக்குவதையே தொழிலாகக் கொண்டிருப்பதனால், அவர்களுக்குக் கணந்தோறும் இனி எப்படி வாழ்வோம் என்ற வாட்டம் இருக்கும்.

இறைவனைப் பாடாத வாயுடையார், இறைவனைக் கருகாத நெஞ்சு உடையார் வாழ்க்கையில் மிகமிகத் தேம்பி வருந்துவார்கள். அவர்கள் வருந்துவது போல் காதலியினுடைய இடை மெலிந்திருக்கிறதாம். இடையின் மெலிவுக்கு ஆண்டவன் அன்பைப் பெறாதவர்களின் மெலிவை உதாரணமாகச் சொல்கிறான். காதலியினுடைய இடையைச் சுட்டிக் காட்ட ஆரம்பிக்கிறான். ஆனால் அவனுடைய நினைவு இடையைப் பற்றியது மாத்திரம் அல்ல; இறைவனையும் பற்றியது.

பிறகு அவளுடைய அழகில் ஒன்றை எடுத்துக் காட்டுகிறான். அவன் நுகர்ந்த இன்பத்தில் ஒன்று அவளுடைய இதழ் ஊறலைச் சுவைத்தது. அந்த இதழின் மணத்தை அவன் நெருங்கி உணர்ந்தான். நெருங்காதவர்களுக்கு அவளுடைய வாய் ஆம்பலைப் போலத் தோற்றும்; ஆம்பலின் வண்ணம் மாத்திரம் தோற்றும்; ஆனால் ஆம்பலின் மணம் தோற்றாது.

இங்கே அவன் நெருங்கிக் காதலின்பத்தைத் துய்த்தவன். ஆகையினால், அவளுடைய இதழின் மணம் தெரிகிறது. அந்த மணத்தை வேறு எங்கும் காணமுடியாது என்று அவன் உறுதியாக நினைக்கிறான். “சேய்மையிலிருந்து கண்டால் இவள் இதழ் ஆம்பலைப் போலத் தோன்றுகிறது. ஆனால் இதன் பெருமை ஆம்பலுக்கு வருமா? ஆம்பலின் மணம் எதற்கு ஆயிற்று? இவள் இதழின் மணம் எந்த ஆம்பலுக்கு வரும்?”என்று எண்ணுகிறான்.

வண்டுகளைப் பார்த்துக் கேட்கிறான்; “இவளுடைய கனிச் சுவை பொருந்திய வாய் இருக்கிறதே, இதைப் போலக் கமழ்கின்ற ஆம்பற் பூவை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?”இதழைப் போன்றது என்றால் அதன் புறந்தோற்றத்துக்கு உவமை தேடுவதாக எண்ணலாமென்று, இதழின் மனம் உள்ள பூ உண்டா என்று கேட்கிறான்.

தீங்கனி வாய்கமழும்
ஆம்பலம் போதுளவோ? அளிகாள்!

வண்டுகளுக்கு எல்லாவகையான மலர்களும் தெரியும். அவைகளின் மணமும் அந்த வண்டுகளுக்கு நன்றாகத் தெரியும். மணத்தைத் தேறும் திறத்தில் சிறந்திருக்கும் வண்டுகளாதலின், அவற்றைப் பார்த்துக் கேட்கிறான். ஏதேனும் ஒரு வண்டைக் கேட்டால் அந்த வண்டு, “எனக்குத் தெரியாது”என்று சொல்லிவிடலாம். வண்டுக்கூட்டம் முழுவதையுமே கண்டு கேட்டு விடலாமே என்று கேட்கிறான்.

அவை என்ன சொல்லப் போகின்றன? இங்கே உள்ள வண்டுகள் என்ன, உலகிலுள்ள வண்டுகளையெல்லாம் கூட்டி வைத்தும் கேட்கலாம். அவை சொல்லும் விடையைப்பற்றி அவனுக்கு ஐயமே இல்லை. “இப்படி மணங்கமழும் ஆம்பல் ஒன்றையும் பார்க்கவில்லை” என்றுதான் அவை சொல்லும். இதைப் போன்ற தோற்றமுள்ள ஆம்பல் பூ இருக்கலாம். ஆனால் இந்த இதழின் மணம் வீசுகின்ற இதழையுடைய ஒரு மலர் உலகத்திலே இல்லை என்பது அவனுடைய முடிபு. ஆதலினால், அவன் கேட்ட கேள்விக்கு விடையும் குறிப்பாகப் புலப்படுகிறது. “தீங்கனி வாய் கமழும் ஆம்பலம் போது உலகத்தில் யாண்டும் இல்லை”என்பதுதான் அவன் குறிப்பு. அப்படிச் சொல்லாமல், உளவோ என்று வண்டுகளைக் கேட்கிறமாதிரி கேட்கிறான். அவனுக்குக் கேள்வி கேட்பதில் நினைவு இல்லை; உபமானம் இல்லாத மணம் பொருதிய வாய் என்று சொல்ல வேண்டும் என்பதுதான் அவனுடைய நோக்கம்.

“நீங்கள் பயிலுகின்ற அகன்ற மருத நிலத்திலே எத்தனையோ ஆம்பல் மலர்கள் பூத்துக் கிடக்கின்றனவே! அந்த ஆம்பல் மலர்களுக்குள்ளே இவளுடைய வாய் போன்ற நறுமணத்தை உடைய ஆம்பல் எங்கேயாவது இருக்கிறதா? நீங்கள் கண்டீர்களா?”என்று கேட்கிறான்.

தேம்பலஞ் சிற்றிடை ஈங்குஇவள்
தீங்கனி வாய்கமழும்
ஆம்பலம் போதுஉள வோஅளி காள்நும்
அகன்பணையே?

உள்ளத்தில் தலைவியினுடைய காதல் ஓடும்பொழுது இறைவனுடைய அன்பும் உடன் சேர்ந்து திகழ்கிறது. அவளுடைய அழகுக்கு உவமை சொல்லும்போது முதற்கண் இறைவனுடைய நினைவு வருகிறது. பின்னேதான் கேள்வி வருகிறது.

இந்த நிகழ்ச்சி குறிஞ்சி நிலத்தில் நிகழ்வது. மலையும் மலையைச் சார்ந்த இடங்களும் குறிஞ்சி நிலம். மலைச்சாரற் சோலையில் காதலனும் காதலியும் சந்தித்தார்கள். அவளுடைய அழகைப் பாராட்டிச் சொல்லுகிறான் காதலன். சான்றாக வண்டுகளை அழைத்துப் பேசுகிறான். அந்த வண்டுகள் குறிஞ்சி நிலத்து வண்டுகள் அல்ல; மருத நிலத்திலிருந்து வந்தவை. ஆம்பலைப் பற்றிய உண்மை அவற்றிற்குத்தான் தெரியும். ‘மருத நிலத்தில் உள்ள வண்டுகள், இந்தக் குறிஞ்சி நிலத்துக்கு வந்ததைப் போலக் குறிஞ்சி நிலத்து வண்டுகள் மருத நிலத்துக்குப் போய் அங்குள்ள ஆம்பல் மலர்களில் மொய்த்து அவற்றின் மணத்தைக் கண்டிருக்குமே; அவற்றைக் கேட்டிருக்கலாமே!’என்றால், இந்தத் தலையன் வாழ்கிறது குறிஞ்சி நிலம். தன் ஊர்காரர்களை அவன் சாட்சி போட்டால் ஒருகால் அவன் தலைமைக்கு அஞ்சியோ, அவனிடம் உள்ள அன்பு காரணமாகவோ அவனுக்கு உவந்தபடி சொல்லி, உண்மையை மறைத்துவிடலாம். அயல் நிலத்து வண்டானால் உண்மையையே உரைக்கும். இந்த நினைவால் மருத நிலத்து வண்டைப் பார்த்துக் கேட்டான்.

இப்படி இன்றி, தன்நிலத்து வண்டை ஒரு தலைவன் கேட்டான். அது அபிமானத்தினால் தனக்கு விருப்பமானதைச் சொல்லிவிடுமோ என்ற எண்ணத்தால், “நீ என்மேல் உள்ள அன்புக்காக என் விருப்பத்துக்கு ஏற்றதைச் சொல்லாமல் நீ அறிந்ததை உள்ளபடியே சொல்”என்று எச்சரிக்கையோடு சொல்ல வேண்டி வந்தது. குறுந்தொகையில் அப்படி ஒரு பாட்டு வருகிறது.

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது கண்டது மொழிமோ.”

இந்த ஐயத்துக்கே இடம் இன்றி இந்தக் காதலன் மருத நிலத்து வண்டுகளையே பார்த்துக் கேட்டுவிட்டான்.

கூம்பலங் கைத்தலத்து அன்பர் என்பு
ஊடுரு கக்குனிக்கும்
பாம்பலங் காரப் பரன் தில்லை
அம்பலம் பாடலரின்
தேம்பலஞ் சிற்றிடை ஈங்கு இவள்
தீங்கனி வாய்கமழும்
ஆம்பலம் போதுஉள வோஅளி
காள், நும் அகன்பணையே?

[வண்டுகளே! குவிதலையுடைய கைகளைப் பெற்ற அன்பர்களின் என்பு உள்ளே உருகும்படியாக நடனம் செய்யும் பாம்பை அணியாகக் கொண்ட பரம்பொருளின் தில்லைச் சிற்றம்பலத்தைப் பாடாதவர்கள் அடையும் வாட்டத்தைப் போன்ற வாட்டத்தையுடைய சிறிய இடையையுடைய இவளது இனிய கனிபோன்ற சுவையைப் பெற்ற வாயைப்போல மணம் வீசும் ஆம்பல் மலர்கள் உங்கள் அகன்ற மருத நிலத்தில் இருக்கின்றனவா?

கூம்பல்-குவிதல். அம்-அழகிய. ஊடு – உள்ளே. குனிக்கும்- ஆடும். பாடலரின் – பாடாதவரைப் போல. தேம்பல்-மெலிதலையுடைய. தேம்பினாலும் அழகுடையதென்று காட்ட, அஞ்சிற்றிடை என்றான். ஈங்கு இவள் – இவள்; இரண்டும் ஒரு சொல்லாக நின்றன. தீங்கனிவாய்-இனிய கனிச்சுவையையுடைய வாய். வாய்போலக் கமழும். போது-இங்கே பூ. அளிகாள்-வண்டுகளே. அகன்பணை-அகன்ற மருதநிலம்.]

திருக்கோவையாரில் 11-ஆம் பாடலாகிய இது ‘நலம் புனைந்து உரைத்தல்’என்னும் துறையமைந்தது. காதலியின் அழகைக் காதலன் பாராட்டிச் சொல்லுதல் என்பது அதன் பொருள்.

“பொங்கிழையைப் புனைநலம் புகழ்ந்து
அங்கதிர் வேலோன் அயர்வு நீங்கியது”

என்பது அந்தத் துறையை விளக்கும் கொளு. ‘அழகு மிக்க அணிகளை அணிந்த காதலியின் பாராட்டுதற்குரிய அழகைப் புகழ்ந்து, அழகிய சுடர் வீசும் வேலையுடையவன் தன் தளர்ச்சி நீங்கி இன்புற்றது’என்பது இதன் பொருள்.

திருக்கோவையாருக்குப் பேராசிரியர் எழுதிய பழைய உரை ஒன்று உண்டு. அதில் கனிவாய் என்பதற்கு, ‘கனிந்த வாய்’என்று உரை எழுதுகிறார். கூம்பலங்கைத் தலம் என்ற தொடரில் அல், அம் என்ற இரண்டு சாரியை என்று கொண்டு, கூம்பு கைத்தலம் என்று வினைத்தொகையாக்கிப் பொருள் கூறுகிறார். வினைத்தொகையில் சாரியை இவ்வாறு சேர்ந்து வருவது இல்லை. ‘புனைநலம் என்றது புனையப்பட்ட இயற்கை நலத்தை’என்பர்.

‘இயற்கையன்பினாலும் அவள் குணங்களால் தோன்றிய செயற்கையன்பினாலும் கடாவப்பட்டு நின்ற தலைமகன் தனது அன்பு மிகுதியை உணர்த்துதல் என்பது’என்று இதற்குரிய துறைப் பொருளை விளக்குவார். அன்பு மிகுதியை அவளுடைய அழகைப் பாராட்டும் வாயிலாகப் புலப்படுத்தினான்.

முற்றும்.

★★★