அம்மானைப் பாட்டு

இப்பொழுது மணிவாசக நாயகியின் காதலைப் பார்க்கலாம்.

மாணிக்கவாசகப் பெருமான் எம்பெருமானிடம் அளவற்ற காதல் கொண்டவர். அவருடைய பக்தி, அழகிய காதலன் ஒருவனிடம் பருவம் வந்த மடமங்கை ஒருத்தி கொண்ட காதலைப் போன்றது. இவ்வாறு பக்தி செய்வதைச் சன்மார்க்கம் என்று சொல்லுவார்கள்.

இறைவனை வழிபடுகின்ற நெறிகள் நான்கு. அவை தாசமார்க்கம், சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என்பன. எசமானனிடம் ஊழியன் பணிவாக நின்று ஏவல் செய்து அன்புடன் கடமை ஆற்றுவது போல நிற்பது தாச மார்க்கம், அல்லது அடிமை நெறி. தந்தையினிடம் அன்புடைய பிள்ளை அன்பு வைப்பது போல அமைவது சற்புத்திர மார்க்கம், அல்லது சேய் நெறி. நட்புடைய தோழனிடம் அன்பு கொள்வது போன்றது சகமார்க்கம், அல்லது தோழமை நெறி. காதலன் காதலியிடையே உள்ள உறவு முறையைப் போல அன்பு செய்வது சன்மார்க்கம், அல்லது காதல் நெறி. மாணிக்கவாசகர் பிறப்பால் ஆடவராக இருந்தாலும் பாவனையினால் தம்மை ஆண்டவனுடைய காதலியாக்கிக் கொண்டு அன்பு செய்து சன்மார்க்க நெறியிலே நின்றவர்.

இறைவன் மாணிக்கவாசகரைத் திருப்பெருந்துறையில் ஆட்கொண்டான். அத் தலம் இப்போது ஆவுடையார் கோயில் என்று வழங்குகிறது. மணிவாசகப் பெருமான் திருவவதாரம் செய்தது திருவாதவூர். அது நல்ல தலம், அவர் பலகாலம் பாண்டியனுக்கு அமைச்சராக இருந்து வாழ்ந்த இடம் மதுரை. அது பாண்டியநாட்டுத் தலங்களுக்குள் மிகச் சிறந்தது. இறைவன் அவரை அவர் பிறந்த தலத்திலே ஆட்கொண்டிருக்கலாம்; அல்லது உத்தியோகம் செய்த மாபெருந் தலமாகிய மதுரையிலே ஆட்கொண்டிருக்கலாம். மதுரைக்கு அருகிலும் பல தலங்கள் உண்டு. அவ்விடங்களிலும் மாணிக்கவாசகருக்கு அருள் செய்திருக்கலாம். அவ்வாறெல்லாம் செய்யாமல் மதுரைக்கும் வாதவூருக்கும் நெடுந்தூரத்தில் இருக்கும் திருப் பெருந்துறைக்கு வரச்செய்து ஆட்கொண்டான். அப்படிச் செய்ததில் ஒரு பொருத்தம் இருக்கிறது.

ஆண்டவனுக்குப் பல திரு நாமங்கள் உண்டு. ஒவ்வொரு திருநாமமும் எம்பெருமானுடைய குணச்சிறப்பால் அமைந்தது. ஒவ்வொன்றும் ஒவ்வோர் இயல்பைச் சிறப்பாகச் சுட்டி நிற்பது. ஒவ்வொரு தலத்திலும் இறைவன் சிறப்பாக ஒரு திரு நாமம் விளங்க எழுந்தருளியிருக்கிறான். திருப்பெருந்துறையில் ஆத்மநாதன் என்ற திருநாமத்தோடு விளங்குகிறான்.

மாணிக்கவாசகர் நாயகியின் நிலையில் நின்றார். மணமாகாத கன்னிப்பெண்ணாகிய இந்த மணிவாசக நாயகியை இறைவனாகிய நாயகன் ஆட்கொண்டருள வேண்டும். ஆடவன் ஒருவன் திருமணம் செய்துகொள்ளும் போது அதற்கென்று தனியே கோலம் புனைந்து வருவான். அவன் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு செயல்களை ஆற்றுபவன். அவற்றிற்கு ஏற்றபடி அவ்வப்போது வெவ்வேறு கோலங்களைக் கொள்பவன். வேட்டை ஆடும் கோலத்தில் இருக்கும்போது வேட்டை ஆடுவான். ஆட்சி புரியும்போது திருமுடி தரித்துச் செங்கோல் ஏந்தியிருப்பான். மணம் புரியும்போது மணவாளக் கோலம் பூண்டு மணையில் இருப்பான். இறைவனுடைய கோலங்கள் பல. அவனுடைய பெயர் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோலத்தை நினைப்பூட்டுகிறது. ஆத்மநாதன் என்பது மணவாளக் கோலத்தை நினைக்கச் செய்கிறது எப்படி என்று பார்க்கலாம்.

உலகில் உள்ள உயிர்களையெல்லாம் பசுக்கள் என்று சொல்வார்கள். அவற்றுக்கெல்லாம் தலைவனாகிய இறைவனைப் பசுபதி என்பர். உயிர்கள் உடம்பு பெற்று வாழ்கின்றன. அந்த உடம்பு ஆண் என்றும் பெண் என்றும் இரண்டு வகையாக அமைந்திருக்கிறது. பெண்களே ஆடும் நாடகத்தில் பெண் ஒருத்தி ஆண் வேஷம் போடுகிறாள்; மிகவும் நன்றாக நடிக்கிறாள். அவள் அணிந்திருக்கும் ஆடை ஆண் அணியும் ஆடை. குரலைக்கூட மாற்றிக் கொண்டு ஆணைப் போலவே பேசுகிறாள். ஆனாலும் அவள் ஆணாக மாறமுடியாது. பெண்ணாக நடித்தாலும் ஆணாக நடித்தாலும் யாவரும் பெண்களே. ஆண் உடை அணிந்தமையால் பெண் ஆணாகி விடமாட்டாள். அந்த நாடகம் கலையும் வரையில் இந்த உண்மை தெரியாது. மேடை நாடகத்தில் உடையினால் பெண் ஆணாகத் தோற்றுவது போலப் பிரபஞ்ச நாடகத்தில் உடம்பினால் ஆண் என்றும் பெண் என்றும் தோற்றம் அமைகிறது. உண்மையில் உயிர்க் கூட்டம் அத்தனையும் பெண்மை உடையவர்களே. உடலால் ஆண் போலவும் பெண் போலவும் இருந்தாலும் உயிரால் பெண்களே. அனைவருக்கும் நாயகனாக இருப்பவன் ஒருவன். அவன் ஒருவன்தான் ஆண் மகன்.

நாம் எல்லாம் புருஷ வேஷம் போட்டுக் கொண்டவர்கள். உண்மையில் இறைவன் ஒருவன்தான் புருஷன். அவனையே புருஷன், புருஷன் என்று வேதம் சொல்கிறது. புருஷ வேஷம் உடம்பால் தரித்துக் கொண்டு நாம் புருஷர் என்று சொல்லிக் கொண்டு நம்மாலேதான் எல்லாம் ஆகின்றன என்று சொல்கிறோம் அல்லவா? உண்மையான அரசன் ஒருவன் இருக்க, வேறு ஒருவன் அவனுடைய முடியையும் மற்ற வற்றையும் புனைந்து கொண்டு நான்தான் அரசன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் அவனை நல்லவன் என்று சொல்லுவோமா? அவனை அதமன் என்று சொல்வோம். அப்படி வேஷம் புனைந்து அதையே மெய்யென்று சாதிக்கும் நாம் அதமர்கள். உண்மையான புருஷனும் உத்தமனுமாக இருப்பவன் இறைவன் ஒருவனே. அதனால் அவனைப் புருஷோத்தமன் என்று சொல்லுகிறார்கள்.

பசுவாகிய பெண்ணுக்குப் பதியாகிய இறைவன் நாயகன். நாடகத்திலும், கதையிலும், ‘பிராண நாயகரே!’என்ற தொடர் அதிகமாக அடிபடுகிறது. யார் பிராணனுக்கு நாயகர் என்று அறியாமல் பேசுகிறது அது. பிராணனாகிய நாயகிக்கு நாயகன் கடவுள். அவன்தான் உண்மையான பிராண நாயகன். பிராணன் அல்லது உயிருக்கு ஆத்மா என்பது ஒரு பெயர். ஆத்மா நாயகி; அதற்கு நாதன் இறைவன். தான் ஆத்மாக்களுக்கெல்லாம் நாதன் என்பதை நினைவூட்டுகிறான் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் ஆத்மநாதப் பெருமான். பசுவாகிய நாயகிக்கு நான் பதி என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். அந்தத் தலம் அவனுடைய மணவாளக் கோலத்தை, பிராண நாயகியை ஆட்கொள்ளும் உரிமையை, புலப்படுத்தும் இடம். ஆதலால் அங்கே மாணிக்கவாசக நாயகிக்குக் கல்யாணம் நடைபெற்றது. இதில் எவ்வளவு பொருத்தம் இருக்கிறது!

திருமணம் ஆகிவிட்டது. மணிவாசக நாயகி தன் நாதனைக் கண்டுகொண்டு அவனால் ஆட்கொள்ளப் பெற்றாள். இன்னும் குடித்தனம் வைக்கவில்லை. எப்போதும் அவனையே நினைந்து கொண்டிருக்கிறாள். வேலை செய்தாலும் விளை யாடினாலும் அவன் நினைப்புத்தான்; அவன் பேச்சுத்தான். எப்படியாவது ஒரு சம்பந்தத்தைக் கொண்டு வந்து அவனைப் பற்றி பேசுவாள். புதிதாகக் கல்யாணமான பெண்களுக்கு இது இயல்புதானே?

“இன்று அம்மானை ஆடலாம்; வாருங்கள்”என்று தன் தோழியர்களை அழைக்கிறாள் காதலி. தன் காதலனுடைய பெருமைகளைக் கண்டவர்களோடு பேச நாணமாக இருக்கும். உள்ளம் கலந்து பழகுகிற தோழிகளோடு விரித்து விரித்துச் சொல்லாம்.

அம்மானை விளையாட்டு நடைபெறுகிறது. மூன்று அம்மானைக் காய்களை வைத்துக் கொண்டு மேலே போட்டும் கையால் பிடித்தும் அம்மானையை ஆடுவார்கள். பெரும்பாலும் மூன்று பெண்கள் சேர்ந்து விளையாடும் ஆட்டம் இது. அதனால் மூவர் அம்மானை என்றும் ஒரு பேர் இதற்கு வழங்கும். மணிவாசக நாயகி தன் காதனுடைய பெருமைகளைப் பாடி ஆடுகிறாள். மற்றவர்களும் பாடி ஆடுவார்கள். ஆனால் அவர்களுக்கு ஆட்டந்தான் முக்கியம்; பாட்டு அதற்கு அடுத்தபடியுள்ளது தான். இங்கோ ஆட்டத்தை விடப் பாட்டுத் தான் முக்கியம்.

மணிவாசகர் ஆட்டத்தை வெறும் பாவனையில்தான் ஆடினார். ஆனால் பாட்டை மாத்திரம் உண்மையாகவே பாடிவிட்டார். ஒரு நாடகத்தில் ஒருவன் பலபல செய்கைகளைச் செய்கிறான். அரசனைப் போல வேஷம் போடுகிறான். அருகில் நிற்கும் சேவகனை மிரட்டுகிறான். நடுவில் அவன் கொடுக்கும் பாலைக் குடிக்கிறான். ஆட்டமெல்லாம் முடிந்துவிட்டது. அவன் அரசனுக்குரிய உடைகளைக் கழற்றி விடுகிறான். அவன் நடித்த போது செய்த செயல்கள் யாவும் வெறும் நடிப்பு; உண்மை அல்ல. ஆனால் பால் குடித்ததோ, நடிப்போடு சேர்ந்த ஒன்று; ஆனாலும் அது உண்மையாகவும் ஆகிவிட்டது; அவன் நாடகத்துக்காகக் குடித்தாலும் குடித்த பால் பொய் அன்று. அதுபோல அம்மானை ஆட்டத்தைப் பாவனையிலே நடத்திய மணிவாசகர் அந்தப் பாவனையிலே பாடிய பாட்டு நாமும் பாடும்படி வெளிப்படையாக உருவம் பெற்று விளங்குகிறது.

பெண்கள் மென்மையான இயல்புடையவர்கள். அம்மானையாடும் மெல்லியலார்கள் ஆடும்போது நிகழும் நிகழ்ச்சிகளை முதலில் மணிவாசகர் கற்பனைக் கண்ணால் காணுகிறார். நேரேயும் உலகில் பார்த்தவர் அல்லவா?

அம்மானை ஆடும் பெண்கள் கொடிகள் அசைவது போல அசைகிறவர்கள். கையில் அம்மானைக் காய்களை வைத்து ஆடும்போது முதலில் கைதான் இயங்குகிறது. அம்மானையை மேலே எறிந்து மறுபடியும் வாங்கி மீட்டும் மீட்டும் எறிவதனால் கைகள் மேலும் கீழும் வந்து அசைகின்றன. அந்த அழகிய கைகளில் அணிந்திருக்கின்ற வளைகள் ஒன்றோடு ஒன்று மோதிச் சிலம்புகின்றன. அவர்கள் விளையாடும் இடத்தை அணுகாமல் சற்றுத் தூரத்திலிருந்து கவனித்தாலே அவர்கள் அம்மானை ஆடுவது புலப்படும்; கைகளில் அணிந்துள்ள வளைகளின் ஒலி அதனைப் புலப்படுத்தும். இன்னும் சற்று அணுகி நோக்கினால் அந்தப் பெண்கள் அம்மானை ஆடும்போது அவர்களுடைய மேனி எப்படி யெல்லாம் அசைந்து கொடுக்கிறது என்று தெரியும்.

அம்மானை ஆடும்போது அம்மானைக் காய்கள் மேலே போகின்றன. அவற்றை நிமிர்ந்து பார்க்கிறார்கள். கையில் விழும்போது கையைப் பார்க்கிறார்கள். இப்படி நிமிர்ந்தும் தாழ்ந்தும் பார்ப்பதால் அவர்கள் காதில் அணிந்த குழைகள் ஆடுகின்றன. அந்தக் காலத்தில் மகளிர் காதில் இறுகக் குழையைப் போட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். கனமுள்ள குழைகளை அணிவதனால் காதுகள் தாழ்ந்திருக்கும். முகம் அசையும்போது குழைகள் ஊசலைப் போல ஆடும். அம்மானை ஆடுகையில் மேலும் கீழும் பார்ப்பதனால் முகம் அசைய, தாழ்ந்த குழைகளும் ஆடுகின்றன.

கையார் வளை சிலம்பக் காதார் குழை ஆட.

இந்த விளையாட்டில் ஊக்கமாக இருக்கும் மகளிருக்கு உண்டாகும் களிப்பை அளவிட முடியுமா? தலையை மேலும் கீழும் ஆட்டுகிறார்கள். களிப்பினால் தலையை அசைக்கிறார்கள். அப்போது அவர்கள் குழல் புரள்கிறது. நெடுங்கூந்தலை உடையவர்கள் அவர்கள். குழலை நீண்ட முடிச்சாக முடிந் திருந்தும் அது புரளுகிறது. உவகை மிகுந்தால் குழல் அவிழ்ந்து புரள்வதும் உண்டு.

அந்தக் கூந்தலிலே மங்கலத்துக்கு அறிகுறியாக மலர்க் கொத்தைச் சூடியிருக்கிறார்கள். அவை அப்போது அந்த மலர்கள்; மணம் நிரம்பித் தேன் பொங்கும் மலர்கள். தலை அசைவதனால் மலர்கள் அசைகின்றன. அவற்றில் உள்ள தேன், கட்டுக்குலைந்து பாய்கிறது. தேன் உள்ள இடத்தில் வரவேற்பு இன்றியே வரக் காத்திருக்கின்றன வண்டுகள். அவை வந்து மொய்க்கின்றன; இன்னிசை முரலுகின்றன.

மையார் குழல் புரளத் தேன் பாய வண்டு ஆர்ப்ப.

”நம்முடைய ஊர்ப் பெண்கள் அம்மானை ஆடும்போது தலையிலிருந்து தேன் பாயுமா? தேன் பாய, அதில் வண்டுகள் பாய்ந்து ரீங்காரம் செய்யுமா! வளை சிலம்புவதும், குனிழ ஆடுவதும், குழல் புரள்வதும் இயற்கையாக இருக்கின்றன. அவற்றிற்குமேல்…?”இப்படி ஒரு கேள்வி எழலாம்.

மணிவாசகப் பெருமான் இங்கே உண்மையாக அம்மானை ஆடவில்லை. தம் உள்ளத்துக்குள்ளே தம்மைப் பெண் ஆக்கிக்கொண்டு, நினைவு எழுகின்ற மனத்தைத் தோழியாக்கிக் கற்பனையினால் ஆடுகின்ற ஆட்டம் இது. அந்தக் கற்பனையில் எவை எவை இனிய பொருள்களோ எவை எவை அழகிய பொருள்களோ அவற்றையெல்லாம் சேர்த்து வைத்துப் பாடுகிறார்.

இயல், இசை, நாடகம் என்னும் மூன்றிலும் நாடகம் மிகுதியான இன்பத்தைத் தருவது. நாடகம் வாழ்க்கையைப் போல இருக்க வேண்டும் என்று நாடக நலம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். வாழ்க்கையைப் போல இருப்பதுதான் நாடகமே ஒழிய வாழ்க்கையே நாடகம் ஆகாது. வாழ்க்கையில் அழகுள்ள பொருள்களும் அழகில்லாத பொருள்களும் இருக்கும். அழகும் இனிமையும் உள்ள பொருள்களை யெல்லாம் ஒருசேரத் தொகுத்துக் காட்டுவதுதான் நாடகம். அழகில்லாதனவும் இனிமையற்றனவுமாகத் தோற்றும் சில பொருள்கள் அழகும் இனிமையும் உள்ளவற்றினால் விளையும் இன்பத்தை மிகுவிக்கவே நாடகங்களில் வரும். நாடக வழக்கு என்று தொல்காப்பியத்தில் ஒரு தொடர் வருகின்றது. அங்கே இளம்பூரணர் என்ற உரையாசிரியர், “நாடக வழக்காவது சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல்”என்று எழுதுகிறார். கற்பனையும் அத்தகையதே. கற்பனையாகச் சொன்ன செய்தி வாழ்க்கைக்குப் புறம்பாகத் தோன்றாது. ஆனால், அப்படியே மனித வாழ்வு அமைவதில்லை.

வாழ்க்கையில் இனிமையாக இருப்பவற்றைத் தொகுத்துச் சொல்வது கற்பனைக் கவிஞர்களுக்கு உள்ள சிறப்பு. நாம் இனிமை காணாத பொருள்களிலும் இனிமையைக் கண்டு உணர்த்தும் ஆற்றல் அவர்களிடம் இருக்கிறது.

மணிவாசகர் சிறந்த கவிஞர். அவர் அழகுப் பிழம்பான பெருமானைப் பாடும் பாட்டில் அழகிய காட்சியை நிறுவிக் காட்டுகிறார்.

உலகத்தில் உள்ள அழகற்ற பொருள்களை நம்மால் மாற்ற முடியாது. ஆனால் கற்பனையால் நம்முடைய உள்ளத்திலே படைக்கும் பொருள்களை யெல்லாம் அழகழகாகப் படைக்கலாம்; நம்முடைய விருப்பத்துக்கேற்ற வண்ணம் இனிமையாகப் படைத்துக் கொள்ளலாம். அப்படிப் படைத்துக் கொள்வதற்கும் ஒரு பண்பு வேண்டும். அழகற்ற பொருள் களைக் கண்டு கண்டு அந்த வாசனையினாலே, திடீரென்று கற்பனை செய்யப் புகுந்தால் அழகற்ற பொருள்களே நமக்கு முன் வந்து நிற்கும். நம் கண்ணை மூடிக்கொண்டால் இருட்டுத் தானே தெரிகிறது? இன்பமும் அழகும் அமைதியும் உள்ளவற்றையே நினைத்துப்பார்க்கப் பயிற்சி வேண்டும்; தெம்பு வேண்டும். அது நமக்கு இருப்பதில்லை. கவிஞர்களுக்கும் கலைஞர்களுக்கும் பக்தர்களுக்கும் அந்தத் தெம்பு இருக்கிறது.

மணிவாசகர் அந்த தெம்பு உடையவர். கற்பனையிலே அழகிய பொருள்களைக் காணும் ஆற்றல் பெற்றவர். அகக் கண் மூலம் கடவுளையே காணும் திறமுடையவர். அவர் கற்பனையில் அம்மானை ஆடுகிறார். அழகான பொருள்களை யெல்லாம் தொகுத்து வைத்து ஆடுகிறார். அழகிய தோழிகளை உட்கார வைக்கிறார். அவர்கள் தம் கைநிறைய வளைகளை அணிந்து காதில் குழை பூண்டு விளங்குகிறார்கள். குழலில் மலர்கள் மணக்கின்றன. அவை வாடிய மலர்கள் அல்ல; தேனைச் சொரியும் பூக்கள். தேன் அவற்றிலிருந்து ஊற ஊற வண்டுகள் அவற்றில் வந்து மொய்க்கின்றன. தேனை உண்டு பாடுகின்றன. அழகான கற்பனை அல்லவா? பிற்பனையில் பொருத்தமும் அழகும் இருந்தால்தான் நம் மனத்துக்குள் சுவை உண்டாகும். அப்படிச் செய்வதுதான் சிறந்த கவிதை.

மணிவாசகப் பெருமான் உலகில் மகளிர் ஆடும் விளையாட்டை மாத்திரம் நினைக்கவில்லை. எம்பெருமானை நினைத்துப் பிறகே இந்த விளையாட்டை நினைத்தார். அம்மானை விளையாட்டை ஆடுவதற்கே காரணம் எம் பெருமான் பெருமையைப் பாடுவதற்குத்தானே? தோழிமார்கள் கையில் உள்ள வளை சிலம்பவும் காதிலே உள்ள குழைகள் ஆடவும் மையார் குழல் புரளவும் தேன் பாயவும் அதில் வண்டுகள் மொய்ப்பவும் அம்மானை ஆடுகிறார்கள் வண்டின் ரீங்காரச் சுருதி போட்டாகி விட்டது. இனிப்பாடவேண்டியது தானே?

இதுவரைக்கும் அவர்களுடைய புற அழகு தெரிந்தது. மணிவாசக நாயகியோடு இருந்து விளையாடும் தோழிமார்கள் புற அழகு மட்டுமா உடையவர்கள்? மணிவாசக நாயகி எப்படி இருக்கிறாள்? கையார் வளையும் காதார் குழையும் மையார் குழலும் உடையவள்தான். அவற்றால் மட்டும் பெருமை வந்துவிடாது. எம்பெருமானிடம் உள்ள காதலிலே ஊறிக் கிடக்கும் உள்ளத்தை உடையவள் அவள். மற்றத் தோழிகளும் அப்படியே உள்ளவர்கள். அது எவ்வாறு புலப்படுகிறது? அவர்கள் உள்ளத்தில் உண்டாகும் காதல் உணர்ச்சி அவர்கள் பாடும் பாட்டிலே புலனாகிறது.

பெண்கள் விளையாடும்போது அவர்களை அறியாமலே பாட்டு வரும்; அவர்கள் உள்ளத்தில் உள்ள உணர்ச்சிகளெல்லாம் திரண்டு பாட்டாக வரும். கட்டு ஏதும் இல்லாமல் மனம் உல்லாசமாகக் கற்பனை வானத்திலே திரிய விளையாடும் விளையாட்டு ஆதலால் கருத்து அவிழ்ந்து பாட்டாக மலர்கிறது. இந்தப் பெண்களுக்கோ இறைவனுடைய நினைவையன்றி வேறு ஒன்றும் இல்லை. அதனால் அவர்கள் பாடும் பாட்டு வேறு எதைப் பற்றியும் இருக்க நியாயம் இல்லை. இறைவனைப் பற்றியே பாடுகிறார்கள்.

இறைவனுடைய திருமேனிக் கோலத்தைப் பாடுகிறார்கள். அவன் பேரழகன். செம்மேனி எம்மான்; செய்யான். அதன்மேல் தூய வெண்ணீற்றை அணிந்திருக்கிறான்.

செய்யானை வெண்ணீறு அணிந்தானை.

அழகனாக மாத்திரம் இருந்தால் பெண்களுக்கு ஒருவனிடம் காதல் பிறக்காது. அவன் ஆண்மையுடையவனாக, வீரனாக, வெற்றி மிடுக்கு உடையவனாக இருக்க வேண்டும். இறைவன் பேராண்மை உடையவன். அவனை வெல்வார் யாரும் இல்லை. தன்னுடைய ஆற்றலாலும் பிறவற்றாலும் எல்லாரினும் சிறந்து நிற்கிறவன் அவன். அவனை ஒத்தவர் யாரும் இல்லை. தனக்கு உவமையில்லாத தலைவன் அவன். அவன் ஒருவன்தான் தலைவன்; ஏக சக்கராதிபதி. அகில புவனத்தில் உள்ளவர்களும் அவனுக்கு அடங்கினவர்கள். அங்கங்கே சில சில கூட்டங்களுக்குத் தலைவர்களாக இருந்து ஆணை செலுத்துகிறவர்கள் யாவரும் அவன் வைத்த ஆட்கள். தம்மிடம் ஏவல் புரிபவர்களை நோக்கும்பொழுது அவர்கள் தலைவர்கள். ஆனால் இறைவனை நோக்கும்போது அவர்கள் அடிமைகளே. தலைவர் என்று அதிகாரத்தை மேற்கொண்ட எல்லோருமே இறைவனுக்கு அடங்கினவர்கள்; இறைவனைக் கையெடுத்துக் கும்பிடுகிறவர்கள். இறைவனோ தனக்கு மேல் யாரும் இல்லாத சர்வ சுதந்தரன். அவனுக்கு எல்லோரும் ஆட்கள்; அவன் யாருக்கும் ஆள் அல்ல. மற்றவர்கள் யாவரும் அவன் திருமுன்னர்க் கையைச் சேர்த்துக் கும்பிடும் நிலையில் உள்ளவர்கள். அவன் யாரையும் கும்பிட வேண்டியதில்லை. அவன் கைகள் கும்பிடுபோட்டே அறியாதன; சேர்ந்து அறியாக் கைகள்.

செய்யானை வெண்ணீறு அணிந்தானைச் சேர்ந்தறியாக்
கையானை.

எல்லோருடைய கைகளையும் குவிக்கப் பண்ணித் தன் கைகளை மாத்திரம் மலர்த்தி வைத்திருக்கின்ற பெருமான் அவன். வருவார் யாவரும் தன் முன்னே நின்று இரந்து, ‘எனக்கு என்று ஒரு செயல் இல்லை’என்று கை இரண்டையும் குவித்துக் கும்பிட, ஆண்டவன் நான் தருகிறேன், தருகிறேன் என்று இரண்டு கையையும் மலர்த்திக் காட்டுகிறான். ஒரு கையாலே திருவடியைக் காட்டி ஒரு கையாலே அஞ்சல் என்று காட்டுகிறான். அந்தக் கைகள் குவிவதே இல்லை.

அம்மானைப் பாட்டுப் பாடும் பெண்கள் மணிவாசக நாயகியோடு சேர்ந்து பாடுகிறார்கள். அந்தப் பாட்டில் தங்கள் ஆருயிர்த தலைவனைப் பற்றிப் பாடுகிறார்கள். அவன் அழகன், ஆற்றலுள்ள தலைவன் என்று சொன்னார்கள். அவன் எங்கே இருக்கிறான்? அதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா?

“அவன் எல்லா இடங்களுக்கும் சொந்தக்காரன். அவனை எல்லா இடங்களிலும் காணலாம்.”

“நான் கண்டதில்லையே! நான் பார்க்கும் இடங்களி லெல்லாம்கூட அவன் இருக்கிறானா?”

“இருக்கிறான். ஆனால் எல்லா இடங்களிலும் அவனை எளிதில் காணமுடியாது.”

“எங்கும் அவன் இருக்கிறான் என்றால் அவனை ஏன் காணமுடியாது?”

“காற்று எங்கும் இருந்தாலும் அதைக் காண முடிகிறதா? அது அசையாமல் இருந்தால் உணரக்கூட முடிகிறதில்லையே!”

“அப்படியானால் அவன் எங்கும் இருக்கிறான் என்பது உண்மையாகுமா?”

“நமக்குத் தெரியாவிட்டால் இல்லையென்று சொல்லலாமா? அவன் எங்கும் இருப்பதை உணர்பவர்கள் இருக் கிறார்கள். அவனை ஓரிடத்திலும் காணாதவர்களும் இருக் கிறார்கள். அத்தகையவர்களுக்கு அவன் இருந்தும் இல்லாத வனாக இருக்கிறான். ஆனால் அவன் மெய்யான பொருள். அன்பர்களுக்குச் சத்தியப் பொருளாக இருக்கிறான். அன்பு இல்லாதவர்களுக்கு அவன் இருப்பது தெரிவதில்லை.”

பூமிக்கு அடியில் எங்கும் நீர் இருக்கிறது. ஆனால் வெட்டிப் பார்த்தவர்களுக்கே அது புலனாகிறது. மணலில் இரும்புப் பொடி கலந்திருக்கிறது. வெறுங்கட்டையை மணலில் இட்டால் இரும்புப் பொடி ஒட்டாது. காந்தத்தை விட்டால் இரும்புப் பொடி ஒட்டிக்கொள்கிறது. அப்படியே இறைவன் எங்கும் செறிந்த மெய்யனாக இருந்தாலும் அன்பென்னும் காந்தம் இருந்தால் அவனைக் கண்டு கொள்ள முடியும்.

தமக்கு வெளிப்படையாகத் தோற்றாத கள்வனாக இருப்பதால் அவனை இல்லையென்று சொல்கிறார்கள் சிலர். மெய்யன் என்றால் பொய்யன் என்று மறுக்கிறார்கள். உள்ளத் தில் அன்பு இல்லாத தம்முடைய பொய்ம்மையை உணராமல் இறைவனிடம் பொய்ம்மையை ஏற்றுகிறார்கள். வேகமான ரெயிலில் செல்லும்போது தரையும் மரமும் ஓடுவதைப் போலத் தோன்றுகின்றன. குழந்தைகள் அதைப் பார்த்து, “மரங்கள் ஓடுகின்றன; வண்டி நிற்கிறது”என்று சொல்வார்கள். ஆண்டவனுடைய அருள்பெறாமல் குழந்தையைப் போல அறியாமையை உடையவர்கள், தாம் பொய்ம்மையோடு இருப்பதை அறியாமல் இறைவனைப் பொய் என்று சொல்லுகிறார்கள். சொல்லத் தைரியம் இல்லாதவர்கள், மனசுக்குள் உண்டோ இல்லையோ என்ற ஐயத்தோடு இருக்கிறார்கள்.

கடவுளை மெய்யனென்று உணர்கிறவர்கள், அல்லாதவர்கள் என்று உலகில் உள்ளவர்களை இரண்டு வகுப்பாகப் பிரிக்கலாம். அவனிடம் அன்புள்ளவர்கள் மெய்யனென்று உணர்கிறார்கள். அன்பர் அல்லாதார் மெய்யன் அல்லன் என்று எண்ணுகிறார்கள். அவர்களுக்கு அவன் அல்லாதான்.

இப்படி இரு கூறுபட்ட உலகத்தில் மூன்றாவது சாட்சி. ஒன்று இல்லையா? இருக்கிறது. அதுதான் வேதம். பகையையும் நட்பையும் மனத்திலே கொண்டு எடைபோடுவது மனிதனுக்கு இயல்பு. “ஆண்டவன் எனக்கு அருள் செய்கிறான்; அவன் எனக்கு மெய்யனாக இருக்கிறான்”என்று அன்பர்கள் சொன்னால் அதை மற்றவர்கள் நம்பாமல் இருக்கலாம். இரண்டு வகையாருக்கும் பொதுவாக என்றைக்கும் மெய்யான சாட்சியாக இருப்பது வேதம். அது தனக்குரிய பொருள் இறைவன் என்று சொல்கிறது; அவன் சத்தியப் பொருள் என்று அறிவுறுத்துகிறது. இதனால் இறைவனுக்கு வேதியன் என்ற திருநாமம் அமைந்திருக்கிறது.

எங்கும் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை.

அன்பர்களுக்கு மாத்திரம் மெய்யனாக இருந்தால் மற்றவர்கள் அவனை எப்படி அறிவது? அவனை அறிந்து கொள்ளாமலே வாழ்வை வீணே கழிக்கும்படி விட்டுவிட்டால் அவன் எல்லோருக்கும் தலைவன் என்ற பெயருக்கு ஏற்றவன் ஆக முடியாதே!

ஆதலின், அவன் மற்றவர்களையும் ஆட்கொள்ள வேண்டி அங்கங்கே திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கிறான்.

“என் காதலன் எங்கும் இருப்பான் என்கிறாயே. அவனை நான் காணும் திட்டமான விலாசம் ஒன்றும் இல்லையா?”

“எல்லாருமே ஒருவாறு கண்டு தம் மரியாதையைக் காட்டச் சில இடங்கள் உண்டு.”

“அவற்றில் ஒன்றைச் சொல்; கேட்கலாம்.”

“அவன் திருவையாறு என்ற இடத்தில் யாவரும் காண எழுந்தருளியிருக்கிறான். அங்கே விருப்பத்தோடு, சாமானிய மக்களையும் ஆட்கொள்ளும் பொருட்டு அமர்ந்திருக்கிறான்.”

ஐயாறு அமர்ந்தானை.

இத்தனை வகையாக எம்பெருமான் பெருமையை விரித்துச் சொல்லி, “இவனைப் பாடி நாம் அம்மானை ஆடுவோம்”என்று மணிவாசக நாயகி பாடுகிறாள்.

கையார் வளைசிலம்பக் காதார் குழைஆட
மையார் குழல்புரளத் தேன்பாய வண்டுஒலிப்பச்
செய்யானை வெண்ணீறு அணிந்தானைச் சேர்ந்தறியாக்
கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை
ஐயாறு அமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய்!

[கையில் உள்ள வளைகள் ஒலிக்க, காதில் உள்ள குழைகள் ஆட, கருமை நிறைந்த கூந்தல் புரள, தேன் பாய, வண்டுகள் ரீங்காரம் செய்ய, செந்நிறம் உடையவனை, வெள்ளிய திருநீற்றை அணிந்தவனை, கும்பிடும் பொருட்டு ஒன்றோடு ஒன்று சேர்ந்தறியாத கைகளை உடையவனை, எவ்விடத்தும் நிறைந்திருப்பவனை, அன்பர்களுக்குச் சத்தியப் பொருளாக இருப்பவனை, அன்பரல்லாதவர் களுக்கு மெய்யன் அல்லாதவனை, வேதப் பொருளாக இருப்பவனை, திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை நாம் பாடுவோம்.

ஆர்-நிறைந்துள்ள. சிலம்ப-ஒலிக்க. குழை-காதணி. மை-கருமை. செய்யானை-சிவப்பு நிறமுடையவனை. “பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும்” என்று அப்பர் சுவாமிகள் பாடுகிறார். செறிந்தானை- பொருந்தியிருந்தவனை; ஓரிடத்திலும் இல்லை என்று சொல்ல இயலாமல் நெருங்கியிருந்தவனை. அல்லாதார்- அன்பர் அல்லாதவர். அல்லாத-மெய்யன் அல்லாத, வேதியனை- வேதப்பொருளாக இருப்பவனை. ஐயாறு-சோழ நாட்டில் காவிரிக் கரையில் உள்ள திருவையாறு என்னும் தலம், இங்கே சுவாமி பெயர் செம்பொற் சோதி, பிரணதார்த்திஹரர் என்பன. பாடுதும்-பாடுவோம்; தோழிமாரைப் பார்த்துச் சொல்வதால் பன்மையாகக் கூறினார். காண்; அசை நிலை. அம்மானாய்; அம்மானை என்பதன் விளி. அம்மானையைப் பார்த்துச் சொல்வது போல அமைந்தது. அம்மானைப் பாட்டு அம்மானை என்றும், அம்மானாய் என்றும் முடிவது மரபு. அம்மானை என்று முடிவதே பெரும்பான்மை.)

இது திருவம்மானை என்ற பகுதியில் உள்ள பாட்டு.