அடியார்க்கு நல்ல பெருமாள்
கி. வா.ஜகந்நாதன்

மதியின் ஆற்றல்

நல்ல பருமனாக இருக்கும் ஒருவனிடம் நூறு பவுண்டு கல்லைத் தூக்கிப் போ என்று சொன்னால், ‘ஐயோ! இதை எப்படி நகர்த்துவது” எனப் பயப்படுவான். மதி உடையவனாக இருந்தால், அக்கல்லைப் புரட்டக்கூட வலிமை இல்லா விட்டாலும், நான்கு பேர்களை அழைத்து வந்து கல்லைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுவான். தானே தூக்குபவனும், பிறரை விட்டுத் தூக்கச் செய்பவனும் ஒரே ஒரு காரியத்தைச் செய்கிறார்கள்; ஏவல் செய்கிறார்கள். ஒருவன் உடலை ஏவுகிறான்; மற்றவன் மதியை ஏவுகிறான். ஒரு பெரிய பாலத்தை ஓர் என்ஜினியர் கட்டினார் என்று சொல்கிறோம். விஷயம் தெரியாதவன், “அவரா கட்டினார்? கொத்தர்கள் அல்லவா கட்டினார்கள்?” என்று நினைப்பான். என்ஜினியர் கட்டினார் என்பதும் உண்மை; கொத்தர்கள் கட்டினார்கள் என்பதும் உண்மை. என்ஜினியர் மதி நுட்பத்தால் ஏவியபடி கொத்தர்கள் நம் உழைப்பால் கட்டினார்கள். இப்படிப் பல கொத்தர்கள் கட்டினாலும் ஒருவன் கட்டினதாகச் சொல்கிறோம். ஒருவன் ஆணைக்குப் பலர் அடங்கி வேலை செய்தார்கள்; அதனால் அப்படிச் சொல்கிறோம்.

அதைப் போலவே உடம்பில் பல உறுப்புக்கள் இருக்கின்றன. நடப்பது கால்; வேலை செய்வது கை; சரி தப்புப் பார்ப்பது கண். இப்படிப் பல உறுப்புக்களும் ஒரு வேலையைச் செய்யும்போது செயல்படுகின்றன. ஆனால் உடம்பிலுள்ள எல்லா உறுப்புக்களையும் இயக்குகின்ற கருவியாக மதி உள்ளது. பல கொத்தர்களிடம் வேலை வாங்குபவராக என்ஜினியர் இருப்பது போல உடம்பிலுள்ள பல உறுப்புக்களிடமும் வேலை வாங்குபவனாக மதி இருக்கிறது.பல கொத்தர்கள் ஒரு பாலத்தைக் கட்டினாலும், பல கொத்தர்களையும் இயக்கிய என்ஜினியர் பாலம் கட்டினார் என்று சொல்வது போல, ஒரு காரியத்தைச் செய்வது உடம்பிலுள்ள பல உறுப்புக்கள் என்றாலும், அந்த உறுப்புக்களை இயக்கிய மதியே அக்காரியத்தைச் செய்வதாகச் சொல்வர்.உடம்பின் பலத்தைச் செயற்படுத்துவது அறிவு. நுட்பமாக இருக்கும் ஒன்று செயல் படும்போது பெரிய காரியத்தைச் செய்துவிடுகிறது. “இதை எப்படி அப்பா செய்தான்!” என்று பலரும் மதிக்கக் கூடிய காரியத்தைச் செய்துவிடுவது அறிவு, ஞானம். ஞானம் இல்லாதவர்கள் ஒரு சிறு காரியத்தைச் செய்வதற்குக்கூட நடுங்குகிறார்கள்.

ஞானமும் அருளும்

ஞானம் எப்படி வருகின்றது? இறைவன் திருவருளால் வருகின்றது. இறைவன் திருவருளால் ஞானம் பெறாதவர்களுக்கு உலகிலுள்ள ஒவ்வொரு பொருளும் எமனாக இருக்கிறது. இறைவன் திருவருட் பலத்தைத் துணையாகக் கொண்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் இல்லாதவன், மதி இல்லாதவன், எதைக் கண் டாலும் நடுங்குகிறான்; அஞ்சி அஞ்சிச் சாகிறான். எல்லாவற்றை யும் கிலிபிடித்த தன் மனத்தால் தீங்காகக் கற்பனை செய்து பார்த்துப் பயப்படுகிறான்.

வீண் அச்சம்

எங்கள் ஆசிரியர் ஒரு கதை சொல்வதுண்டு. ஒரு திண்ணைப் பள்ளிக்கூட வாத்தியார் தம் வீட்டுத் திண்ணையில் பத்துப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வூர்க் கோயில் யானை அவ்வழியே வந்தது. அவர் வீட்டு வாசலுக்கு எதிரே போகும்போது ஒரு மரத்திலிருந்து தேங்காய் தொப்பென்று கீழே விழுந்தது. அந்தத் தேங்காயின் மேல் யானை தன் காலைத் தூக்கி வைத்தது. அவ்வளவுதான்; தேங்காய் அப்படியே மட்டையோடு நசுங்கிப் போய் விட்டது. அதைப் பார்த்த திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர் விம்மி விம்மி அழுதார். “ஏன் ஐயா இப்படி அழுகிறீர்கள்?” என்று ஒரு மாணவன் கேட்டான். “இந்த யானையின் காலில் என் தலை அகப்பட்டுக் கொண்டிருந்தால் இப்படித்தானே சட்டினி ஆகப் போயிருக்கும்?” என்று சொல்லி விட்டு மேலும் அழுதாராம். அவரோ திண்ணையின்மேல் இருந்தார். யானையோ வீதி வழியே போயிற்று. அவர் தலை யானையின் காலில் எப்படி அகப்படும்? ஆனாலும் யானையின் காலில் தம் தலை அகப் பட்டுக்கொண்டால் என்ன ஆகும் என்பதை அவர் மனத்திலே கற்பனை செய்துகொண்டு, இருக்கிற தொல்லை போதாது என்று விலை கொடுத்து வாங்கின மாதிரி அழுதார்.

அவரைப் போலவே நெஞ்சில் பலமில்லாத கோழைகள் பலர் இருக்கிறார்கள். இல்லாத ஒன்றை இருப்பது போலக் கற்பனை செய்துகொண்டு இவர்கள் சாகிறார்கள். நல்லவர்களைப் பொல்லாதவர்கள் என்று எண்ணி அவர்களோடு பழகுவது இல்லை. உலகில் ஒருவன் எப்படி நினைக்கிறானோ அப்படி விளைகிறது. ‘யத் பாவம் தத்பவதி” என்று வடமொழியில் ஒரு வாக்கியம் உண்டு.

கண்ணாடியால் வந்த சண்டை

சீனா தேசத்தில் ஒருவனுக்கு ஓர் அருமையான கண்ணாடி கிடைத்தது. அத்தேசத்தில் அப்போது கண்ணாடி என்பதே இல்லாத காலம். அவன் அதைப் பார்த்தான். அவன் முகம் தெரிந்தது. தன்னுடைய முகந்தான் அதில் தெரிகிறது என்பது அவனுக்குத் தெரியவில்லை. “இதற்குள் ஒரு மனிதன் இருக் கிறானே; இவன்தான் தேவன் போலும்” என்று எண்ணி அந்தக் கண்ணாடியை மிகவும் பத்திரமாகத் தன் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிக்கொண்டான். தினந்தோறும் காலையில் எழுந்திருப்பது, மெள்ள அவ்வறைக்குள் தன் மனைவிக்கும் தெரியாமல் நுழைந்து பெட்டியைத் திறந்து கண்ணாடியைப் பார்ப்பது, மனைவி வந்துவிட்டால் பெட்டியை மூடிக் கொண்டு வந்துவிடுவது இப்படிச் செய்து கொண்டிருந்தான். அவனுடைய செய்கையைக் கண்டு அவன் மனைவிக்கு ஐயம் உண்டாயிற்று. தன் கணவன் பெட்டியில் எதை ஒளித்து வைத்திருக்கிறான், எதற்காக இப்படி ஒளிந்து ஒளிந்து அறைக்குள் போகிறான் என்று அறிய வேண்டு மென்ற அவா அவளுக்கு உண்டாயிற்று.

ஒரு நாள் அவன் வீட்டில் இல்லாதபோது அவ்வறைக்குள் நுழைந்து பெட்டிக்கு மறு சாவி போட்டுத் திறந்து பார்த்தாள். அதற்குள் பளபள வென்று கண்ணாடி இருந்தது. அது கண்ணாடி என்று அவளுக்கும் தெரியவில்லை. சட்டெனக் குனிந்து பார்த்தாள். அவள் முகம் அதில் தெரிந்து. அவளுக்கு அது தன்னுடைய முகம் என்று உணரக்கூடிய அறிவும் இல்லை. ‘நம் கணவன் யாரோ ஒரு பெண்ணை அல்லவா இங்கே நமக்குத் தெரியாமல் ஒளித்து வைத்திருக்கிறான்?’ என்று எண்ணினாள். அவனிடம் அவளுக்கு எல்லையில்லாக் கோபம் வந்துவிட்டது. “ஒன்று என் சக்களத்தி இந்த வீட்டில் இருக்க வேண்டும்; அல்லது நான் இருக்க வேண்டும். இரண்டில் ஒன்று முடிவு செய்து விடுகிறேன்” என்று மிக்க ஆங்காரத்தோடு தன் கணவன் வந்ததும் வராததுமாகச் சண்டைக்குப் போய் விட்டாள்.

அன்றைக்கு அவள் கணவன் தன்னுடன் ஒரு புத்த பிட்சுவையும் அழைத்து வந்திருந்தான். அவர் மிக்க பொறுமையாக, “ஏன் அம்மா இப்படி உன் கணவரிடம் கோபிக்கிறாய்? அவர் என்ன தப்புச் செய்தார்? என்னிடம் சொன்னால் நான் விசாரிக்கிறேன்” என்றார்.

“நீங்களே சொல்லுங்கள். இது நியாயமா? நான் இருக்கும் போது இவர் வேறு ஒரு பெண்ணை இந்த வீட்டில் கொண்டு வந்து வைத்துக் கொள்ளலாமா?” என்று அந்த அம்மாள் கேட்டாள்.

“நிச்சயம் வைத்துக் கொள்ளக் கூடாது. இவர் அப்படிச் செய்யக் கூடியவர் அல்லவே!” என்று கூறிய பிட்சு அவன் பக்கம் திரும்பிப் பார்த்தார்.

”இவளை அன்றி வேறு எந்தப் பெண்ணோடும் நான் பழகியதே இல்லை. நானாவது! வீட்டில் இவளுக்குத் தெரியாமல் ஒரு பெண்ணைக் கொண்டு வைத்துக் கொள்வதாவது!” என்று பரிதாபமாகப் பேசினான் அவன்.

இதைக் கேட்டாளோ இல்லையோ அந்த அம்மாள் முன்னையும் விட அதிகக் கோபம் கொண்டாள்.

“அழைத்துக்கொண்டு வந்து உள்ளே வைத்திருப்பதும் அல்லாமல் பொய்யா சொல்கிறீர்கள்? சுவாமி! நீங்கள் உள்ளே வாருங்கள். நான் காட்டுகிறேன்” என்று அந்தப் புத்த பிட்சுவை உள்ளே அழைத்துக்கொண்டு போய்க் கண்ணாடியுள்ள பெட்டியைக் காட்டினாள்.

பிட்சு அதைத் திறந்து பார்த்தார். கண்ணாடியில் அவர் முகம் தெரிந்தது. அவர் உடனே ஆச்சரியம் மிக்கவராய்க் கூவினார்; ‘”அம்மா! அம்மா! இங்கே பாருங்கள். அந்த அம்மாள் நம் எல்லோருக்கும் இரகசியம் தெரிந்துவிட்டதே என்று எண்ணி வெட்கித் தன் தலையை மொட்டையடித்துக் கொண்டு விட்டாள்” என்றாராம். அவரவர்கள் பார்க்கிற போது வெவ்வேறு முகம் தோற்றியது. அந்தத் தோற்றத்துக்குக் காரணம் கண்ணாடியிலா இருக்கிறது? பார்ப்பவர்களிடம் இருக்கிறது.