அடியார்க்கு நல்ல பெருமாள்
கி. வா.ஜகந்நாதன்
ஞான கலையும் மையல் வலையும்
1
மனிதனுடைய வாழ்நாளில் இன்பம் துன்பம் ஆகிய இரண்டும் மாறி மாறி வருகின்றன. தங்களுக்கே ஆண்டவன் மிகுதியான துன்பங்களை தருகிறான் என்றும், மற்றவர்களுக்கு இத்தகைய துன்பங்கள் உண்டாவது இல்லை என்றும் பலர் நினைக்கிறார்கள். இறைவனுக்கு அப்படிப் பட்சபாதம் இல்லை. அவரவர்கள் செய்த கன்மத்திற்கு ஏற்றபடியே இன்ப துன்பங்களை அவன் கொடுக்கிறானேயன்றி, அவர்கள் அநுபவிக்க வேண்டாதவற்றைக் கொடுக்கவில்லை. சிலர் அதிகமான துன்பங்களை அநுபவிக்கிற வரைப் போல வேதனைப்படுவார்கள்; ஆராய்ந்து பார்த்தால் அது மிகவும் சிறிய துன்பமாக இருக்கும். சன்னி பிறந்தவன் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க, ஜலதோஷம் பிடித்தவன் படுகிற வேதனை மிக அதிகமென்று தோன்றும்.
துன்பத்தின் அளவு
பெரும்பாலும் செல்வம் நிரம்பியவர்கள் சிறிய துன்பம் வந்தாலும் பெரிதாகக் கத்துகிறார்கள். ஒரு வேளை காபி சரியான நேரத்தில் கிடைக்காவிட்டால் அவர்கள் அலறுகின்ற அலறல் மிகுதியாக இருக்கும். பத்து நாளாக உண்ண ஒன்றும் கிடைக்கா மல் பசியால் துவண்டும் “நான் துன்பப்படுகிறேனே!” என்று அரற்றாதவனும் இருக்கிறான். இந்த இரண்டு வகையான மக்க ளுக்கும் பொதுவானவை உடம்பு, மனம் ஆகியவை. ஆனால் ஒரு வகையினர் சிறிய துன்பத்தையும் பெரிதுபடுத்தி வேதனைப் படுவதற்கும், மற்றவர்கள் பெரிய துன்பங்களையும் சிறிய துன்பமாகக்கூடப் பாராமல் இருப்பதற்கும் காரணமாக இருப்பது அவர் மனந்தான். துன்பமானாலும் சரி, இன்பமானாலும் சரி நாம் நுகர்கின்ற பொருளில் இல்லை. நுகர்ந்து, அதை உணர்கின்ற மனத்தில் இருக்கிறது. எதைத் துன்பம் என்று நினைக்கிறோமோ அது வருமே என்று, வருவதற்கு முன்னாலும் மனம் துன்பப்படுகிறது. வந்து அநுபவித்த பிறகும், “ஐயோ வந்ததே!” என்று துன்பப்படுகிறது. ஆகவே துன்பத்தினால் உண்மையில் வேதனைப்படுகிற காலம் ஒன்று என்றால், துன்பம் வராததற்கு முன்பே துன்பம் வருமே என எண்ணி வேதனைப்படுகிற காலம் ஒன்றும், வந்த பிற்பாடு வந்ததே என்று வேதனைப்படுகிற காலம் ஒன்றுமாகக் கோழைகளுக்கு வளர்கிறது. “துன்பம் எப்படியும் வரத்தான் வரும். இந்த உலகத்தில் பிறந்துவிட்டமையால் அத்துன்பங்களுக்கு எப்போதும் ஆயத்தமாக இருப்போம்” என்று யார் இருப்பார்கள்?
விதியும் மதியும்
”ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழ துஞற்று பவர்“
என்று வள்ளுவர் சொன்னார்.
பலர் விதி பெரிதா,மதி பெரிதா என்று சந்தேகப்படுகிறார்கள். “விதியை மாற்ற யாராலும் முடியாது” என்ற ஒரு சாரார் சொல்ல, மற்றொரு சாரார், “இல்லை; விதியை மதியால் வென்றுவிடலாம்” என்று சொல்கிறார்கள். இந்த இரண்டில் எது உண்மை?
விதியை மதி வெல்லுமே யன்றிக் கொல்லாது. விதியைக் கொல்வது வேறு; வெல்வது வேறு. கொல்வதாவது அடியோடு அழித்துவிடுவது. விதியை அடியோடு அழித்து ஒதுக்க யாராலும் முடியாது.விதி என்பது பிராரப்தம். பிராரப்தத்தை யாராலும் கொல்ல முடியாது; ஆனால் தெளிந்த அறிவு இருந்தால் வென்று விடலாம்.
வினையும் விளைவும்
நாம் செய்கிற பாவ புண்ணியம் வேறு; அநுபவிக்கின்ற இன்ப துன்பம் வேறு. இப்பொழுது நுகரும் அநுபவம் முந்திய பிறவி யில் நாம் செய்த வினையின் பயன். இப்பொழுது செய்கின்ற பாவ புண்ணியச் செயல்கள் அடுத்த பிறவியின் அநுபவங்களுக்கு வித்தாகின்றன.
முன்னை வினைகள் காரணமாக அநுபவிக்கின்ற போகங்கள் இன்பமாகவும், துன்பமாகவும் அமைகின்றன. முன்னை வினை இல்லாமல் பிறவி வராது. இந்தப் பிறவி வந்த பிறகு முன்னை வினைகள் அநுபவமாக இப்பிறவியில் முளைக்காமல் இரா. அவை கப்பும் கிளையுமாகப் படர்ந்து தழைக்காமல் இருக்கச் செய்யலாமேயொழிய முளைக்காமல் இருக்கச் செய்ய முடியாது. மதி இருக்குமானால், முளைக்கின்ற முன்னை வினைகளின் வேகத்தைக் குறைத்துவிடலாம்.
எவ்வளவுதான் மதி உடையவன் ஆனாலும் வீசுகின்ற ஊதல் காற்றையும், பனியையும் அழிக்க முடியாது. ஆனால் கம்பளி உடை அணிந்து கொண்டு அவற்றின் கடுமையைக் குறைத்துக் கொள்ளலாம்.
இதைத்தான் வள்ளுவர் சொல்கிறார். உப்பக்கம் என்பது பின் பக்கம். முன் பிறவியில் செய்த கன்மங்களுக்கு ஏற்ப அமைந்த விதியை அநுபவித்து, அதனால் பெருந்துன்பம் அடையாமல் அதனை முதுகு காட்டச் செய்து வெல்பவர்கள் மனத்திண்மை உடையவர் கள். அவர்களுக்கும் ஊழின் வழியேதான் வாழ்க்கை இருக்கும்; இன்ப துன்ப விளைவுகள் உண்டாகும். ஆனால் அவர்களுக்கு அவை அதிகமாக உறைப்பதில்லை. கம்பளிச் சட்டை போட்டுக் கொள்கிற மாதிரி அவர்கள் இறைவன் திருவருளைப் பக்க பலமாகப் பிடித்திருக்கிறார்கள். அந்தத் திருவருட் பலம் மதியினால் கிடைக்கும். மதி படைத்தவன் தனக்கு வரும் துன்பங்களை மிகச் சுருங்கிய அளவில் காண்கிறான்.
புலி கொல்வதைவிடக் கிலி கொல்வது மிகுதி என்று சொல் வார்கள். புலி கொல்வதற்கும் அஞ்சாமல் இருப்பவர்கள் வீரர்கள். “புலி கொன்றுவிடுமே! கொன்றுவிடுமே!” என்று கிலியினால் செத்துக் கொண்டிருப்பவர்கள் கோழைகள். சிறிய கல்லும் கோழைக்குப் பெரிய மலை போல இருக்கும். பெரிய மலைகளும் வீரர்களுக்குச் சிறிய கற்களாகத் தோற்றும்.