அடியார்க்கு நல்ல பெருமாள்
கி. வா.ஜகந்நாதன்
அவுணரை அழித்தவன்
அகங்கார மமகாரத்தால் தலை தருக்கி நின்று, தம்மைவிட உயர்ந்தவர்கள் இல்லை என்று எண்ணி இறுமாந்து, நல்லவர் களுக்குத் துன்பம் இழைக்கிறவர்களுக்கு அவன் பொல்லாத வனாக இருப்பான். இதை விளக்க ஒரு நிகழ்ச்சியைச் சொன்னால் போதும். சூரபன்மன் முதலிய அசுரர்கள் தம்மைவிட உயர்ந்தவர்கள் இல்லை என்ற செருக்கால் தங்கள் தங்கள் தொழிலை இறைவன் ஆணைவழி நின்று நடத்தி வந்த தேவர்களுக்குச் சொல்லொணாத துன்பங்களை இழைத்தார்கள்.ஓர் அசுரனா? இரண்டு அசுரரா? பெரிய அசுரக்கூட்டம். அக்கூட்டத்தை எம்பெருமான் என்ன செய்தான் தெரியுமா?
அவுணர் குலம் அடங்கப்
பொடிஆக்கிய பெருமாள்.
அவுணர் – அசுரர்கள். அவர்களுடைய குலமே அடங்க அழிந்து போகும்படியாக அவர்களை எல்லாம் பொடி பொடியாகச் சிதைத்த பெருமாள் அவன். அவுணர், உலகத்திற்குத் துன்பத்தைத் தருகின்ற இருட்படைக் கூட்டம். ஞானச் சுடரொளி வீசும் வேலையுடைய பெருமாளிடம் அவர்கள் ஆற்றல் சாயுமா? மாயையின் பிள்ளையாகிய சூரன் ஞானவேல் பட்ட மாத்திரத் தில் அழியாமல் எப்படி இருக்க முடியும்? அவன் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பயலையும் முருகன் விட்டு வைக்கவில்லை; முழுமையும் அழித்துவிட்டான். அவனைத் துணை என்று நாம் நம்பிவிட்டால் உலக மாயையின் வயப்பட்டுத் துன்பப்பட வேண்டாம். முடிவில்லாப் பிறப்பை இனிப் பெற வேண்டாத நிலையை அடையலாம்.
முடிவில்லாப் பிறப்பை ஒழித்து, வைய வாழ்வில் எல்லா விதமான வளத்தையும் அளிக்கின்ற பெருமாளுக்கு மூன்று அடையாளங்களைச் சொன்னார். அவன் வெற்றி வேலை உடைய பெருமாள்; அடியார்க்கு நல்ல பெருமாள்; அவுணர் குலம் அடங்கப் பொடியாக்கிய பெருமாள் என்றார். முருகன் இயல்பாக இருக்கும் நிலை வெற்றி வேலை உடையவனாக இருப்பது. அவன் சிஷ்ட பரிபாலனம் செய்கின்ற நிலை அடியார்க்கு நல்ல பெருமாளாக இருப்பது. அவன் துஷ்ட நிக்கிரகம் பண்ணுகிற நிலை அவுணர் குலம் அடங்கப் பொடியாக்கிய பெருமாளாக இருப்பது.
இறைவன் தன்னுடைய இயல்பான நிலையில் இருந்தபடியே நல்லவர்களுக்கு அருள் செய்கிறான்; அல்லாதவர்களுக்குத் தீங்கு செய்கிறான். அசுரர்களுக்குத் துன்பத்தை விளைவித்து, அடியார் களுக்கு இன்பத்தை அளிக்கிறான்.வெற்றிவேல் பெருமாளின் திருக்கோலத்தைப் பார்க்கும் போதே அவனுடைய கருணை புலனாகிறது; வீரம் தெரிகிறது. அடியார்களுக்கு இன்பத்தை அளிக்கவும் அல்லாதார்களுக்குத் துன்பத்தை விளைவிக்கவும் காரணமாக இருப்பவை அவனது கருணையும் வீரமும். வீரச் செயலாலே துன்பத்தை ஒழித்துக் கருணைச் செயலாலே இன்பத்தை ஆக்குபவன் அவன்.
மனிதர்கள் எல்லோரும் துன்பம் நீங்கி இன்பம் அடைய வேண்டுமென்று நினைக்கிறார்கள். நோய் நீங்கி, நலம் பெற வேண்டுமென்றால் நோயை நீக்க மருந்து கொடுக்கின்ற டாக்டரே, உடல் நலம் பெருக ‘டானிக்’ கொடுக்கிறார். அதைப் போல் முருகன் தன்னுடைய வீரத்தால் துன்பத்தை நீக்கி, கருணையால் அடியார்களுக்கு இன்பத்தை அளிக்கிறான். இன்பத்தை ஆக்கு வதற்கும், துன்பத்தைப் போக்குவதற்கும் அவன் வெவ் வேறு ஆயுதம் வைத்திருக்கவில்லை. துன்பத்தை நீக்குகின்ற ஞான சக்தியாகிய வேலே இன்பத்தையும் ஆக்குகின்றது. அந்த வேலைக் கையில் தாங்கியிருக்கிற வெற்றிவேற் பெருமாள் அவன்.
நாமம் புகலும் முறை
திருநாமம் புகல்பவர் இந்த இருவகைப் பயனைப் பெறுவார்கள். அவனுக்கு ஒரு நாமந்தான் இருக்கிறதா? பக்தர்கள் தங்கள் தங்களுக்குப் பிடித்தபடியே அழைக்கட்டும் என்று ஆயிரத்துக்கு மேற்பட்ட நாமம் உடையவனாக இருக்கிறான். மூன்றெழுத்து நாமம் வேண்டுமானாலும் இருக்கிறது; ஆறெழுத்து வேண்டுமானாலும் இருக்கிறது. அவன் நாமங்களில் எதை வேண்டுமானாலும் புகன்றால் போதும். அவன் தன்னுடைய அடியார்களுக்கு வீரச் செயலினால் துன்பத்தை நீக்கி, கருணைச் செயலினால் இன்பத்தை அளிப்பான்.
“நான் எத்தனையோ தரம் முருகா முருகா என்று கத்துகிறேன். அவன் அருள் செய்யவில்லையே!” என்று சொல்வோர் நம்மிடையே இருக்கிறார்கள். உள்ளம் கலந்து, கருத்து ஒன்றி உணர்ச்சியோடு சொன்னால் அவன் வருவான். நாடக மேடை யில் நிற்கின்ற ஒருவன்,”அம்மா” என்று அழைத்தால் உண்மை யான அம்மாவா மேடைக்கு வருவாள்? வெறும் வாயால் உலகமாகிய நாடக மேடையில் ஏறியுள்ள நடிகனைப் போல, ‘முருகா முருகா!” என்று அழைத்தால் அவன் வரமாட்டான். உள்ளத்தோடு கலந்து அழைக்க வேண்டும். வாயிலிருந்து வருகிற சொல் நாவோடு மாத்திரம் நிற்காமல் உள்ளத்தோடும் உணர்ச்சி யோடும் கலந்து வரவேண்டும்.
வாயிலிருந்து வரும் சொல் உள்ளத்தில் பொங்கியெழும் உணர்ச்சியின் அறிகுறியாக வந்தால் அதற்குப் பயனுண்டு. பல காலமாகக் காணாமல் இருந்த குழந்தையைக் கண்டவுடன் தாய் எப்படி அழைக்கிறாள், அப்படி முருகனை அழைக்க வேண்டும்; அவன் திருநாமத்தைப் புகல வேண்டும். அதற்கு நிச்சயமாகப் பயன் உண்டு. மறுமையின்பமாகிய பிறவாதபேறும், இம்மை யின்பமாகிய வறுமையில்லா வளவாழ்வும் கிடைக்கும்.
முடியாப் பிறவிக் கடலில்
புகார்;முழு தும்கெடுக்கும்
மிடியால் படியில் விதனப்
படார்;வெற்றி வேற்பெருமாள்,
அடியார்க்கு நல்ல பெருமாள்,
அவுணர் குலம் அடங்கப்
பொடிஆக் கியபெரு மாள் திரு
நாமம் புகல்பவரே!
[வெற்றியைத் தரும் வேலைக் கரத்தில் தாங்கும் பெருமாளும், தன்னைப் பணியும் அடியவர்களுக்கு நன்மையைச் செய்யும் நல்ல பெருமாளும், அசுரர் குலம் முற்றும் அழித்துப் பொடி ஆக்கிய பெருமாளுமாகிய முருகனுடைய திருநாமத்தை விரும்பிச் சொல்கிறவர்கள், என்றும் முடியாமல் தொடர்ந்து வரும் பிறவியாகிய கடலிலே விழமாட்டார்கள். ஒருவரிடம் உள்ள எல்லாவற்றையும் அழியச் செய்யும் வறுமையினால் உலகத்தில் துயரம் அடைய மாட்டார்கள்.
மிடி – வறுமை.படி உலகம்.விதனம் – துயரம். அவுணர் – அசுரர். அடங்க – முழுதும். புகலுதல் – விரும்புதல், சொல்லுதல்; இங்கே, விரும்பிச் சொல்லுதல்.
மறுமை வாழ்வும் இம்மை வாழ்வும் பெறுவர் என்பது கருத்து.]