அடியார்க்கு நல்ல பெருமாள்
கி. வா.ஜகந்நாதன்
வறுமையின் கொடுமை
மிடியின் இயல்பு கொடியது. எல்லா இன்ப நலங்களையும், வள வாழ்வையும் குலைக்கின்ற பாவி அல்லவா அது?
“வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா!
அடிஅந்தம்இலா அயில்வேல் அரசே!
மிடிஎன் றுஒருபா விவெளிப் படினே“
என்று அருணகிரியார் அநுபூதியில் சொல்கிறார். “இன்மை என ஒரு பாவி” என்று கூறிய வள்ளுவரைப் போலவே அவருக்கும் கோபம் கொப்புளிக்கிறது; ‘மிடி என்று ஒரு பாவி” என்று சொல்கிறார்.
உய்யும் வழி
அந்தப் பாவியின் கையில் அகப்பட்டு விசனம் அடையாமல் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? இறைவனை நம்பவேண்டும். அவனை நம்பி வழிபடுபவர்கள் யாரும் மிடியால் விசனப்பட மாட்டார்கள். இறைவனை நம்பினால் நற்குணங்கள் தாமே வந்து சேரும். யாரைக் கண்டாலும் கோபித்து அருவருக் கின்ற நிலை மாறி அன்போடு நெருங்கிப் பழகும் சுமுகமான குணம் உண்டாகும். உலகத்திலுள்ள மக்கள் எல்லாரிடத்திலும் அன்பு பாலிக்க வேண்டுமானால், ஆருயிர்களுக்கு மூலகாரணமாக இருக்கும் ஆண்டவனிடத்தில் அன்பு பாலிக்க வேண்டும். அவனிடத்தில் அன்பு பாலித்தால் எல்லோரிடமும் அன்புடன் நடந்துகொள்ளும் நற்பண்புகள் உண்டாகிவிடும். ஆண்டவனிடத்தில் தாயிடம் வைப்பது போல அன்பு செய்து நம்பிக்கை கொள்ள வேண்டு மானால் ஆண்டவனுக்கு நாம் குழந்தை என்ற பாவம் வரவேண்டும். குழந்தைப் பண்புகள் வளரக் குழந்தைக் கடவுளைத்தானே வணங்க வேண்டும்? குழந்தைக் கடவுளை வணங்குபவருக்கு உண்டாகும் பயன்கள் இந்த இரண்டும்.
முடியாப் பிறவிக் கடலில்
புகார்; முழுதும் கெடுக்கும்
மிடியால் படியில் விதனப்படார்.
“குழந்தைக் கடவுளை நம்புகிறவர்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு வசப்பட மாட்டார்கள். முடிவில்லாத பிறவிக் கடலுக்குள் புகமாட்டார்கள். அவர்களுக்குப் பிறவி இல்லாத முக்தி கிடைக்கும். அது கிடக்கட்டும். மண்ணிலும் அவர்கள் நன்றாக வாழலாம். அவனை நம்புகிறவர்கள் மானம், குலம், கல்வி முதலிய எல்லாவற்றையும் கெடுக்கின்ற வறுமையில் சிக்கி விசனப்பட மாட்டார்கள்” என்று பேசுகிறார் அருணகிரியார். ‘முருகன் திருநாமம் புகல்கின்றவர்கள் பிறவிக் கடலில் புகார், மிடியால் விதனப்படார்’ என்றால் என்ன பொருள்? ‘இன்ப துன்ப மில்லாத முக்தி நிலை அடைவார்கள்; உடம்போடு வையத்தில் வாழும்போது வளவாழ்வு நிரம்பப் பெற்று ஒவ்வொரு நாளும் சுகமாகவே இருப்பார்கள்’ என்பதுதானே? எந்தக் காரியத்தைச் செய்யச் சொன்னாலும் பயன் என்ன என்று கேட்கிற காலம் இது. ஆகவே முடிவாகக் கிடைக்கும் பயனை முன்னாலே சொல்கிறார்.
முடியாப் பிறவிக் கடலில்
புகார்; முழுதும் கெடுக்கும்
மிடியால் படியில் விதனப்
படார்.
திருநாமம் புகல்பவர்
யார் முடியாப் பிறவிக் கடலில் புகமாட்டார்கள்? யார் முழுதும் கெடுக்கும் மிடியால் விதனப்பட மாட்டார்கள்?
அடியார்க்கு நல்ல பெருமாள் திருநாமம் புகல்பவரே!
“சரி சரி, அவன் நாமத்தைப் புகல்பவர் பிறவித் துன்பத்திற்கு உள்ளாக மாட்டார்கள். தரித்திரத்திற்கு ஆளாக மாட்டார்கள் என்று சொல்கிறீரே. அதற்கு ஏதாவது அடையாளம் இருக்கிறதா?” என்று கேட்டால் அருணகிரியார் சொல்கிறார்.
முருகன் பெருமை
வெற்றி வேல்பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள்
அவுணர் குலம் அடங்கப்
பொடியாக்கிய பெருமாள்.
அவன் ஞானமாகிய வேலையே தன் ஆயுதமாக உடையவன். அது தோல்வியே கண்டு அறியாத வேல். எப்போதும் வெற்றியை உடைய வேல். அந்த வெற்றி வேலைத் தன் திருக்கரத்தில் உடைய பெருமாள் அவன்.
வறுமையால் அல்லலுறுகின்றவர்களிடம் ஒரு புலவர் சொன்னார்; ”அப்பா! நீ ஏன் இங்கே அல்லற்படுகிறாய்? பக்கத்து ஊரில் ஒரு வள்ளல் இருக்கிறான். அவன் வீட்டுக்கு எதிரில் காடு கழனிகள் நிறைய இருக்கின்றன. அவன் வீட்டு வாசலில் நெல் கோட்டை இருக்கிறது. வீட்டுக்குள் மூட்டைக் கணக்கில் அரிசி குத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மடைப்பள்ளிக்குள் போனால் எப்போதும் சோறு இருந்துகொண்டே இருக்கும். இப்பொழுது போனால் மடைப்பள்ளிக்குள் இருக்கும் சோறு கிடைக்கும். மாலையில் போனால் சோறு இராதோ எனக் கவலை வேண்டாம். பானையில் இருக்கும் அரிசியை எடுத்து உணவு சமைத்து வைத்திருப்பான். பத்து நாள் கழித்துப் போனால் பானையில் அரிசி காலியாகி யிருக்குமே என அஞ்சாதே. வீதியில் போட்டிருக்கும் சேரிலிருந்து நெல் எடுத்துக் குத்தி அரிசியாக்கிச் சாதம் படைப்பான். இரண்டு மூன்று மாதம் கழித்துப் போனால் சேர் நெல்லும் காலியாகிப் போயிருக்கலாமே எனக் கவலைப்படாதே. அவன் வீட்டுக்கு எதிரே இருக்கும் நிலம் அவனுடையதுதானே? அந்த நிலத்தில் விளைந்த புது நெல் வந்துவிடும். அப்போதும் இல்லையென்னாது உனக்கு உணவு படைப்பான். எப்போது வேண்டுமானாலும் போ அப்பா!” என்றார். அதுபோல அருணகிரியார் இங்கே சொல்கிறார்.
வெற்றிவேற் பெருமாள்
“இறைவன் வெற்றிவேல் பெருமாளாக இருக்கிறான். அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானவேலைத் திருக்கரத்தில் தாங்கிப் பக்தர்கள் வரமாட்டார்களா என்று பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனிடம் நீ போ அப்பா! அவன் இந்தப் பிறவியில் உனக்கு மிகுந்த அல்லல் விளைவிக்கிற தரித்திரத்தை உடனே போக்குவான். அது மாத்திரம் அல்ல. என்றென்றைக்கும் இன்பம் கொடுக்கிற முத்தியையும் வழங்குவான்” என்று தெரிவிக்கிறார். அவனை அடையாளம் கண்டு கொள்ள முடியாதோ எனக் கலங்க வேண்டாம். அவன் வெற்றிவேல் பெருமாள். ஞான சக்தியை வேலாக ஏந்தி இருக்கிற அவன் திருவுருவத்தைப் பார்த்தே அவனை அடையாளம் கண்டு கொள்ளலாம்.”
அடியார்க்கு நல்ல பெருமாள்
“சரி, நீங்கள் சொல்கிறதைப் பார்த்தால் அவன் மிகப் பெரிய வனாக இருப்பானென்று தோன்றுகிறதே. அவனை அடையாளம் கண்டு கொண்டு நான் போனால் அவன் எனக்கு உதவி செய் வானா? எளிதிலே அவனைப் பார்க்க முடியுமா?” என்று சந்தேகப் பிராணி கேட்கிறான். அருணகிரியார் என்ன சொல்கிறார்?
அடியார்க்கு நல்ல பெருமாள்.
அவனைக் காண முடியுமோ என்று அஞ்ச வேண்டாம். அவன் மிகவும் நல்லவன். அடியார்களுக்கு, தன்னை அண்டியவர்களுக்கு, மிகவும் நல்லவன்; அடியார்க்கு நல்ல பெருமாள், அடியார்களைக் காப்பாற்றுவது ஒன்றையே தன் வேலையாகக் கொண்டு வெற்றிவேலைத் தாங்கி நிற்கிறான். செருக்கை ஒழித்து, தலையைத் தாழ்த்தி, அகங்கார மமகாரம் குறைந்து, அவன் திருவடியில் தொழுது அழுது நின்றால் அவர்களுக்கு அவன் மிகவும் நல்ல பெருமாளாக இருப்பான்.