அடியார்க்கு நல்ல பெருமாள்
கி. வா.ஜகந்நாதன்
இம்மையும் மறுமையும்
இறைவனிடத்தில் முழு நம்பிக்கை வைத்தால் இந்த உலகத் திலேயே இன்பம் உண்டாகும்; மறு உலகத்திலும் இன்பம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. இதைச் சொல்ல வருகிறார் அருணகிரியார். முருகப் பெருமானிடத்தில் உண்மையான நம்பிக்கை வைத்து, தம்முடைய செயல்களை எல்லாம் ஒழித்து, “கந்தா, முருகா, குமரா, குகா” என்று வெற்றிவேல் பெருமாளின் நாமம் புகல்கிறவர்கள் என்ன என்ன பயன்களை அடைவார்கள் என்று சொல்கிறார்.
முடியாப் பிறவிக் கடலில்
புகார்,முழு தும்கெடுக்கும்
மிடியால் படிவில் விதனப்
படார்,வெற்றி வேற்பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள்
அவுணர் குலம் அடங்கப்
பொடிஆக் கியபெரு மாள்திரு
நாமம் புகல்பவரே.
பிறவி நீங்குதல்
நம்முடைய பிறப்பு, முடியாமல் தொடர்ந்து வருவது. இதற்கு ஆரம்பம் இல்லை; அந்தம் இல்லை. இறைவனை நம்புகிறவர்கள் முடிவு இல்லாத இந்தப் பிறவிக் கடலுக்குள் புக மாட்டார்களாம்.
முடியாப் பிறவிக் கடலில் புகார்.
வைய வாழ்வு
உடம்பு இறந்து போகப்போகிறது. இந்த உடம்பு போய்ப் பின்னாலே பிறவி இல்லாமல் இவ்வுயிரை அவன் ஆண்டுகொள்வது இருக்கட்டும். இறந்த பிறகு அல்லவா அந்தக் கவலை? இறக்கும் காலத்தில் வேண்டுமானால் வேறு பிறவி எடுக்காமல் இருக்க இறைவனை நினைக்கலாம். இப்பொழுது அந்த வான வாழ்வைப் பற்றிக் கவலை இல்லை. வைய வாழ்வைப் பார்ப் போம். அவன் நாமத்தை நினைத்து, வாழ்த்தி, தியானிப்பதால் உடம்பொடு வாழும் காலத்திலே ஏதாவது பயன் உண்டா? இப்படிக் கேட்பவர்கள் அதிகம். அவர்களுக்கு விடை சொல்வதற்கேற்ற வகையில் அடுத்த அடியைச் சொல்கிறார் அருணகிரியார்.
முழுதும் கெடுக்கும்
மிடியால் படியில் விதனப்படார்.
வறுமை நோய்
இன்றைக்குப் பல பல கட்சிகள் உண்டாகிக் கொண்டே இருக்கின்றன. அவர்கள் எல்லோரும் என்ன சொல்கிறார்கள்? “எங்களுக்கு வோட்டுப் போடுங்கள். வறுமை இல்லாமல் நீங்கள் எல்லோரும் வளவாழ்வு வாழ நாங்கள் வழி வகுக்கி றோம்” என்று சொல்கிறார்கள். அதைப்போலவே அருணகிரியாரும், “அப்பா, அவன் நாமத்தைச் சொல்வதனால் இம்மையிலே என்ன பயன் என்றுதானே கேட்கிறாய்? எல்லாவற்றையும் கெடுக்கும் வறுமைக்கு ஆளாகாமல் இருக்கலாம்” என்கிறார்.
மிடி என்பது வறுமை. முழுதும் கெடுக்கும் மிடி என்கிறார். வறுமை வந்தால் போதும்; நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பாராமல் எல்லோரையும் கெடுத்துவிடும்; அழித்துவிடும். வறுமை யினால் கோபம், சண்டை, கொலை, களவு முதலிய எல்லாத் தீமைகளும் மலிகின்றன. அதனால் மிகக் கோபமாக,
“இன்மை எனஒரு பாவி“
என்கிறார் வள்ளுவர். வறுமை வந்துவிட்டால், நம்மிடமுள்ள எல்லாப் பண்புகளும் கெட்டுவிடும்.
”மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம்முயற்சி தாளாண்மை–தேனின்
கவிசந்த சொல்லியர்மேற் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்போம் பறந்து“
என்று ஒளவைப் பிராட்டி சொல்கிறாள். வறுமையால் பசி ஏற்பட, அந்தப் பசியினால் நற்குணங்கள் எல்லாம் கெட்டுப் போய்விடும்.
நோயின் கொடுமை எப்படி இருக்கிறது என்பதை நோயாளியும் உணர்கிறான். அந்த நோய் ஏற்பட்டால் என்ன என்ன கொடுமைகள் விளையும் என்பதை டாக்டரும் அறிவார். நோயாளிக்கு நோயின் கொடுமை தெரிகிறது; அதைப் போக்கும் மருந்து தெரியவில்லை. டாக்டருக்கு நோயின் கொடுமையும் தெரியும்; இன்ன மருந்து சாப்பிடுகிறவர்கள் இந்த நோய்க்கு உள்ளாக மாட்டார்கள் என்றும் அவர் சொல்வார்.
நமக்கு வறுமையின் கொடுமை தெரிகிறது. “ஐயோ! வள வாழ்வு குன்றி நான் துன்புறுகிறேனே!” என வாய் விட்டும் அலறுகிறோம். நோயுற்றவன் நோயைப் போக்கும் மருந்து உட்கொள்ளா மல், தற்கொலை செய்து கொள்வது போல, வறுமையின் கொடு மைக்கு ஆளானவன், முழுதும் கெடுக்கும் மிடியைப் போக்கும் வழி தெரியாமல் தவறான செய்கைகளைச் செய்து பின்னும் துன்புறுகிறான். அருணகிரியார் மருந்து சொல்கிறார்.
இருவகை வாழ்வு
வான வாழ்வைப் பார்த்து நின்றவர்கள் யாரும் வைய வாழ்வை மறக்கவில்லை. உடம்பொடு வாழும் வாழ்க்கையில் நோய் இல்லாமல் வாழ வேண்டுமென்பது போலவே, வறுமை இல்லாமல் வாழவேண்டுமென்றும் விரும்பினார்கள். சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனை நோக்கி எனக்குச் சோறு வேண்டும், நல்ல ஆடை அணிகள் வேண்டும் என்று கேட்டார்; அதோடு மாத்திரம் நிற்கவில்லை. உடம்புக்குப் பூசிக்கொள்ள கஸ்தூரி வேண்டும், புனுகு வேண்டும் எனக் கேட்கிறார்.
“கத்தூரி கமழ்சாந்தம் புழுகினொடு வேண்டும்
கடல் நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.”
அவர் வான வாழ்வை நினைந்து வைய வாழ்வை மறந்தவரா? வைய வாழ்வு வாழத் தெரியாதவரா? இறைவனைப் பார்த்துப் பொன்னையும் பொருளையும் போகத்தையும் புகழையும் கேட்கிறார். இம்மைக்கு மாத்திரமன்றி மறுமைக்கும் மோட்சத்தை வேண்டுகிறார்.
இறைவனை நம்பினால் இந்த உலகத்திலும் வாழலாம், மறுமை வாழ்வும் ஒருங்கே கிடைக்கும் என்று அவர் சொல்கிறார்.
“இம்மை யேதரும் சோறும் கூறையும்;
ஏத்த லாம்;இடர் கெடலுமாம்;
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.”
ஞானப் பாலைக் குடித்த குழந்தையாகிய சம்பந்தர்,
”மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்“
என்கிறார். இந்த மண்ணிலேயும் நல்லவண்ணம் வாழலாம்; ஒவ்வொரு நாளும் சுகமாக வாழலாமாம். இறைவனை நம்புகிறவர்கள் இந்த உலகத்தில் அப்படி வாழலாம். இறைவனை நம்பாதவர்கள் முடியாத பிறவிக் கடலுக்குள் ஆழ்கிறார்கள்; முழுதும் கெடுக்கும் மிடியால் விசனப்படுகிறார்கள்.