அடியார்க்கு நல்ல பெருமாள்
கி. வா.ஜகந்நாதன்

உயிருக்கு உயிர்

உடம்பில் உறுப்புக்கள் எல்லாம் சேர்ந்திருந்தால் அது பயன் உடையதாகும் என்று சொல்ல முடியாது. அந்த உறுப்புக்கள் எல்லாம் கட்டுப்பட்டு, ஒற்றுமையாக ஒரு காரியத்தைச் செய்யும் படி செய்யும் உயிர் அந்த உடம்பில் இருக்க வேண்டும். உயிர் இல்லாத உடம்பிலும் உறுப்புக்கள் இருக்கின்றன; ஆனால் அவற்றால் பயன் இல்லை. உறுப்புக்களை இயக்க உடம்பில் உயிர் இருக்க வேண்டும். அதுபோலவே, உயிர் இயங்குவதற்கும், உயிருக்கு உயிராக ஒன்று இருக்க வேண்டும் அல்லவா? அதைத் தான் பரமாத்மா, கடவுள் என்று சொல்கிறார்கள். கடவுள் என்ற புள்ளியை மையமாகக் கொண்டு விரிகின்ற சமுதாய வட்டத்தில் எல்லா உயிர்களும் உள்ளன. எல்லா உயிர்களையும் அடக்கும் வட்டத்தின் மையப் புள்ளியாகிய ஆண்டவனை நோக்கிச் செல் கின்ற உயிர்கள் வேறுபாடு அற்று ஓர் இடத்தில் வந்து நிற்கும்.

சூழ்நிலையும் கோயிலும்

இப்படி எல்லா உயிர்களுக்கும் மையமாக இருக்கிற ஆண்ட வனைப் புராணங்கள், சிவலோகவாசி என்றும், வைகுண்டவாசி என்றும் உரைக்கின்றன. நமக்கு எட்டாத இடங்கள் அவை. அவ்விடங்களில் மட்டும் இருக்கிறான் என்று சொல்வதில்லை. அவன் எங்கும் இருக்கிறான் என்றும் சொல்கின்றன.

நமக்குச் சிவலோகத்தில் அவன் இருப்பதும் தெரியாது; எங்கும் பரந்திருப்பதும் தெரியாது. ஆயினும் அவன் நினைவு வரவேண்டும் என்பதற்காகக் கோயிலை அமைத்திருக்கிறார்கள். கோயிலிலே தான் அவனை நினைக்க வேண்டும் என்பது இல்லை. மடைப்பள்ளி என்றால் உணவு நினைவு வருகிறது. மடைப்பள்ளி அல்லாத இடங்களில் உணவு நினைவு வருவதில்லையா? படிப்பு அறைக்குள் நுழைகிறவன் அங்கே படுத்துத் தூங்க முடியாதா? முடியும். இருந்தாலும் படிப்பு அறைக்குள் படிப்பதற்கு வேண்டிய புத்தகம், விளக்கு, மேஜை, நாற்காலி முதலிய எல்லா வசதிகளும் இருப்பதாலும் அவ்வறைக்குள் பெரும்பாலான நேரம் படிப்பி லேயே கழிவதாலும் அவ்வறைக்குப் படிப்பறை எனப் பெயர் வைத்தார்கள். அவ்வறையிலுள்ள சூழ்நிலையே நம்மைப் படிக்கத் தூண்டுகிறது. கோயில்கள் அத்தகையவை. கோயில்களில் யாரும் அக்கிரமங்கள் செய்வதில்லை என்று சொல்ல இயலாது. கோயிலுக்குப் போகின்ற பெரும்பாலனவர்களுக்கு அங்கே ஆண்டவனை நினைக்கத்தக்க சூழ்நிலை இருக்கிறது. ஆலயத்திற்கு போகும் போதே அகண்ட வியாபியாய் இருக்கும் இறைவனுடைய நினைப்பு உண்டாகிறது.

உள்ளும் புறம்பும்

துன்பத்தில் தவிப்பவனுக்கு, துன்பத்தில் ஆழ்ந்த வேறு ஒருவன் எப்படி உதவி செய்ய முடியும்? சிறையில் அடை பட்டிருக்கிறவனை, அவனைப் போலவே சிறையில் அடை பட்டிருக்கிற வேறு ஒருவன் எப்படி விடுதலை செய்ய முடியும்? சிறையில் அடைபடாது தனித்து வெளியில் இருக்கும் ஒருவன் தான் பூட்டைத் திறந்து வெளிவிட முடியும். பிரபஞ்சச் சேற்றுக்குள் அகப்பட்டிருக்கும் உயிர்களைக் காப்பாற்ற, பிரபஞ்சச் சேற்றுக்குள்ளேயே கிடக்கும் மற்றோர் உயிரால் முடியாது.

ஆதலால், “நம்மைக் காப்பாற்றும் ஆண்டவன் நம்மிலும் அப்பாற்பட்டு இருக்கிறான். இந்த பிரபஞ்ச எல்லையைக் கடந்தவனாக இருக்கிறான்” எனச் சொன்னார்கள், நம் பெரியோர்கள். அப்பாற்பட்ட நிலையில் இருக்கும். ஆண்டவனைப் பக்தி பண்ணி அன்பு செய்து, பக்தி முறுகிய நிலையில் உலகிலுள்ள எல்லாப் பொருளையும் ஆண்டவனாகவே கண்டார்கள். தங்களுக்குள்ளேயே அந்தர்யாமியாய் இருக்கும் நிலையையும் உணர்ந்தார்கள்.

நமக்குள் இறைவன் இருக்கிறான் என்றாலும், நமக்கு அதில் நம்பிக்கை இல்லை. இறைவன் நமக்குப் புறம்பாக இருக்கிறான் என்றால், ”இருக்கலாம்” என்ற நம்பிக்கை ஓரளவு வருகிறது. கைலையங்கிரியில் இறைவன் இருக்கிறான் என்றனர் பெரியோர். அவன் சர்வ வியாபியாய் இருக்கிறான், அந்தர்யாமியாய் இருக் கிறான் என்றும் கூறினார்கள்.

“எல்லாப் பொருளினூடும் அவன் இருக்கிறான். அவனுள் எல்லாப் பொருளும் அடங்கியிருக்கின்றன” என்றால் அது எப்படி என்ற ஐயம் உண்டாகிறது.

இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய.”

இது நற்றிணையின் கடவுள் வாழ்த்தில் வருகிறது. உலகிலுள்ள பலபல உருவங்களினூடே இறைவன் உறைந்து, “இயன்ற எல்லாம் பயின்று’ நிற்கிறான். இந்த நிலையை அந்தர்யாமித்துவம் என்பர். அதுமாத்திரம் அல்ல;

அகத்து அடக்கி.”

அவற்றை எல்லாம் அவன் தனக்குள் அடக்கியிருக்கிறானாம். அந்த நிலை சர்வ வியாபக நிலை. இந்த இரண்டு நிலையும் எப்படி ஒருவனிடத்தில் அமையும்?

ஒரு பெண் குடத்தைக் குளத்திற்குள் போடுகிறாள். குடம் முழுவதும் நீர் நிரம்புகிறது. குடம் நீருக்குள் இருப்பதனால் குடத்திற்குள்ளும் நீர் இருக்கிறது; அந்த நீர் குடத்தைத் தனக்குள்ளே அடக்கியும் இருக்கிறது. இறைவனும் அவ்வாறே இயன்ற எல்லாவற்றிலும் பயின்று உறைகிறான்; எல்லாவற்றையும் தன் அகத்தே அடக்கியும் வைத்திருக்கிறான்.

எம்பெருமானைச் சிவலோகத்தில் இருக்கும் நிலையிலும், வையம் முழுவதும் வியாபித்து இருக்கிற நிலையிலும், தன் அகத்தே உறையும் நிலையிலும் ஞானிகள் கண்டு ஆனந்தப் பட்டார்கள்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யான்எனதென் றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே!”

என்று பொருள் அத்தனையும் இறைவனாகவே பார்த்தனர்.

நாம் ஒரு பொருளைப் பார்க்கிறோம். அதைப் பொருளாகவே பார்க்கிறோமே யொழிய இறைவனாகப் பார்க்கும் ஆற்றல் நமக்கும் இல்லை. நமக்குள்ளேயே அந்தர்யாமியாய் இருக்கும் இறைவனைப் பார்க்கும் ஆற்றலும் நமக்கு இல்லை. இறைவனைப் பார்ப்பது இருக்கட்டும். நம் உடம்புக்குள்ளே ஏதாவது நோய் வந்தால் அதைப் பார்க்கக்கூடிய ஆற்றலும் நமக்கு இல்லை. உள்ளத்துக்குள்ளே உள்ள கருத்தைக் காட்ட அமெரிக்காவில் கருவி கண்டுபிடித்திருக்கிறார்களாம். அங்கே உறையும் இறைவனைக் காண ஏதேனும் கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும். ஆனால் அது விஞ்ஞானத்தினால் முடியாது; மெய்ஞ்ஞானத்தால் தான் முடியும்.