அடியார்க்கு நல்ல பெருமாள்
கி. வா.ஜகந்நாதன்
2
இத்தகைய மனத்திண்மை வரவேண்டுமானால் மனத்தை உலகியற் புயலுக்கு இடமாக்காமல் முருகப் பெருமானுடைய திருக்கோலத்தை நினைக்கின்ற இடமாக, அவன் எழுந்தருளி இருக்கும் சிங்காதனமாக ஆக்க வேண்டும். மனத்திலே அடிக்கடி நினைத்துப் பார்த்துப் பழகினால் அந்தத் தியானம் முறுகும்; பார்க்கும் இடங்களில் எல்லாம் அவன் தோற்றம் தோன்றும். இத்தகைய சிறந்த நிலை வந்தவர்களுக்கு வினையினால் வரு கின்ற துன்பம் தெரியாமல் மரத்துப் போய்விடும்.
பரிகாரம்
குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
இதில் மூன்று பகுதிகள் உள்ளன. தாளும் தாளைச் சேர்ந்த அணிகளும் ஒரு பகுதி. சண்முகம் ஒரு பகுதி. தோளும் அதைச் சார்ந்த கடம்பும் ஒரு பகுதி. பிரபஞ்சச் சேற்றிலே அமிழ்ந்து கிடக்கும் ஆருயிர்களுக்குப் பற்றுக் கோடாக இருப்பது தாள். அந்தத் திருவடியில் அவன் சிலம்பும், சதங்கையும், தண்டையும் அணிந்திருக்கிறான். ஏதேனும் ஒன்றை மாத்திரம் அணியவில்லை. அந்தத் திருவடி அருள் செய்யப் புறப்பட்டு வருகிற கோலத்தை முன்கூட்டியே ஒலியினால் அடியார்கள் அறிந்து இன்புற வேண்டும் என்று அவற்றை எல்லாம் அணிந்திருக்கின்றான். திருவடியைக் காண்பதற்கு முன்னாலே அதில் அணிந்திருக்கும் சிலம்பு, சதங்கை, தண்டை ஆகியவற்றின் ஒலியைக் கேட்டே பக்தர்களுக்கு அவன் திருவடி நினைப்பு உண்டாகி விடுகிறது.
“தாளும், முகமும், தோளும் எனக்கு முன் வந்து தோன்றிடின் நாள் முதலாயின என்ன செய்யும்?” என்று கேட்கிறார் அருண் கிரியார். துன்பத்தைத் தருகின்ற பொருள்கள் நாள், கோள், வினை, கூற்று என்பன. இந்த நான்கில் முதல் மூன்றும் வாழ்க்கை நிகழும் போது வருவன. நான்காவதாகிய கூற்று வாழ்க்கை மாயும்போது வருவது.
குமரேசரின் இரண்டு தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும் வாழும் காலத்தில் நமக்கு முன்னே வந்து தோன்றும் நிலை வந்தால் நாள் நம்மை ஒன்றும் செய்யாது.
நாள் என் செய்யும் ?……. …குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும்…..
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!
எம்பெருமானின் ஆறு முகத்தை நினைத்தால் வினை ஒன்றும் செய்யாது. நமக்குத் தீய வினைகளால் விளையும் துன்பத்தை எம்பெருமானுடைய ஆறுமுகங்களும் நீக்கிவிடும்.
வினைதான் என் செயும்?…….. குமரேசர் ..
சண்முகமும்
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!
அடுத்தபடி நமக்குத் துன்பத்தைத் தருவன கோள்கள். அவனுடைய பன்னிரு தோளும் அவற்றில் அணிந்துள்ள கடம்ப மாலையும் நம் முன்னே வந்து தோன்றினால் அந்தக் கோள் களினால் வரும் துன்பம் போய்விடும்.
கோள் என்செயும்
குமரேசர்…
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!
எல்லாத் துன்பங்களுக்கும் தலையாய துன்பமாக வாழ்வின் முடிவில் கூற்றுவன் வரும்போது அந்தத் துன்பத்தைப் போக்கு வதற்கு வழி என்ன? அப்போது குமரேசரின் தாளும்,தோளும், சண்முகமும் முன்னே வந்து தோன்றும். அவனுடைய திருக் கோலம் முழுவதும் தோன்றினால் கூற்றுவனால் வருகிற துன்பம் இல்லையாகும்.
கொடுங் கூற்றென் செயும்கும ரேசர்இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்து தோன்றிடினே?
எப்படித் தியானிப்பது?
இந்தப் பாட்டில் முருகப் பெருமானை எப்படித் தியானிப் பது என்பதை அருணகிரியார் சொல்கிறார். இத்தகைய பாடல்களைக் கேட்பதன் பயனே அதுதான். தியானம் நிலை பெற வேண்டு மானால் அந்தப் பெருமானுடைய திருவுருவத்தைத் தாரணை செய்து கொள்ள வேண்டும். ஆறுமுகப் பெருமானுடைய திருவுருவத்தை மனத்திலே இருத்திக் கொள்வதற்காகவே திருவடியில் இருந்து மெல்ல மெல்ல அவனுடைய திருவுருவத்தை வருணித்துச் சொல்கிறார் அருணகிரியார். குருக்கள் தீபாராதனை காட்டுவது போல அமைந்திருக்கிறது பாட்டு. இந்தப் பாட்டைச் சொல்லும் போதே முருகப்பெருமானின் திருவுருவம் நம் மனக்கண்முன் வரவேண்டும். இறைவனைத் திருக்கோயிலில் கண்டு, அவனது தாளையும் தோளையும் சண்முகத்தையும் கண்ணாரத் தரிசித்து, பாட்டையும் பாடிப் பழக வேண்டும். பின்பு இறைவனுடைய திருக்கோயிலை விட்டு வீட்டுக்கு வந்து அமைதியாக இருந்து பாட்டை மெல்லப் பாடினால் கோயிலில் கண்ட திருவுருவம் நினைவுக்கு வரும். வராவிட்டால் மறுபடியும் பார்த்து அமைத்துக் கொள்ள வேண்டும்.
பெயரும் பொருளும்
ஒருகால் கண்ட பொருளைப் பிற்காலத்தில் அதனுடைய பேரைச் சொல்லும் போது மனிதர்களுக்கு நினைக்க முடிகிறது. இது மனத்தினுடைய இயல்பு. சொல்லைக் கொண்டே பொருளைத் தெரிந்து கொள்வது வழக்கம். இறைவனுடைய திருநாம மாகிய சொல் அவனுடைய திருக்கோலமாகிய பொருளைக் காட்டும். அதற்காகத்தான் எம்பெருமான் பலபல வடிவங் களையும், திருநாமங்களையும் கொண்டிருக்கிறான். கண்ணாலே காணுகின்ற பொருளைக் காணாத காலத்தில், கருத்தினாலே காண்பதற்குத் தூண்டு கோலாக இருப்பது அதனுடைய பெயர். அவனுடைய திருநாமங்களும் துதிகளும் அப்படியே இருக்கின்றன. அவனுடைய துதிகளைச் சொல்லிக் கொண்டு தன் கண்முன் இருக்கிற உருவை உள்ளக் கண்ணில் காண்பதற்குச் சற்றே பழக்கம் செய்ய வேண்டும். அப்பழக்கம் முறுகினால் கனவிலும் அவன் திருக்கோலத்தைக் காணலாம். இது மனத்தில் உண்டான பழக்கத்தைச் சார்ந்தது.
குழந்தையையும்,மனைவியையும், வெளி மனிதர்களையும் கனவில் காண்பதற்கு நமக்குத் தகுதி இருக்கிறது. ஆனால் இறைவனைக் காண்பதற்கு அத்தகைய தகுதி உண்டாவதில்லை. யாரேனும் மிகவும் அன்பு உடையவர்கள் இறந்து போனால் அவர்களுடைய ஞாபகமாகவே இருக்கிறோம். அதனுடைய பயனாக நம்முடைய நனவிலும், கனவிலும் அவர்களுடைய உருவம் அடிக்கடி தோன்றுகிறது. இதற்குக் காரணம் அவர்களுக்கு நம்மிடத்திலுள்ள அன்பு என்று சொல்வார்கள். உண்மை யான காரணம் நமக்கு அவர்களிடத்தில் உள்ள அன்புதான். அந்த அன்பு எவ்வளவுக்கெவ்வளவு உரமாக இருக்கிறதோ அவ்வளவுக் கவ்வளவு அவர்களுடைய உருவம் நம்முடைய கனவில் வந்து நிற்கும். இது மனிதன் தன்னுடைய அநுபவத்தில் காண்பது.
இது போலவே எம்பெருமானுடைய திருக்கோலத்தைக் கண்ணாலே கண்டு, மீதூர்ந்த காதலினால் நெஞ்சத்தில் வைத்துத் தியானம் பண்ணிப் பழகினால் கண்ணாலே காணாத காலத்தும் அக்கோலத்தோடு நினைவில் வந்து நிற்பான்; கனவிலும் வந்து நிற்பான். அவன் திருவுருவத்தைக் காணும் பேறு நமக்குக் கிடைக்கும். பழகப் பழக நெஞ்சிலே தோன்றும் உருவமே கண் முன்னாலும் தோன்றும். அந்தத் தோற்றத்தை உருவெளித் தோற்றம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். காதல் மிகுந்தவர்களுக்குத் தம்முடைய காதலுக்கு உரியவர்களை உருவெளியாகக் காணுகின்ற நிலை வரும் என்று இலக்கியங்களில் காண்கிறோம். இராமாயணத்தில் இப்படி ஒரு காட்சி வருகிறது.
உருவெளித் தோற்றம்
சூர்ப்பனகை இராமனைக் கண்டு ஆசை கொள்கிறாள். அவனை அணுகியபோது லட்சுமணனால் ஒறுக்கப் பெற்றுத் திரும்புகிறாள். இராவணனிடம் வந்து தன் மூக்கை இழந்ததற்குக் காரணம் கூறுகிறாள். பேரழகியாகிய சீதையைத் தூக்கிக் கொண்டு வந்து இராவணனுக்கு இன்பம் தரும் பொருளாக ஆக்க முயன்றதாகவும், அப்போது லட்சுமணன் தன்னை இந்தக் கோலம் செய்ததாகவும் கூறுகிறாள். சீதையைச் சூர்ப்பனகை பலபடியாக வருணிக்கக் கேட்ட இராவணனுக்கு அப்பெரு மாட்டியிடம் ஆசை உண்டாகிறது. அவளுடைய உருவத்தை அவன் கற்பனை செய்து கொள்கிறான். காம மிகுதியால் அவன் மிகவும் துன்பப் படுகிறான். அப்போது அவனுக்கு உருவெளித் தோற்றமாக ஒரு பெண்ணின் உருவம் தோன்றுகிறது. சீதையை அவன் முன்பு பார்த்தது இல்லை. ஆனாலும் முன்னால் தோற்றுகின்ற பெண்ணின் உருவம் மிக அழகாக இருக்கிறது. அதை அவன் கண்டபோது அவள்தான் சீதையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள உடனே சூர்ப்பனகையை அழைத்து வரச் சொல்கிறான். சீதை சீதை என்று எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தமையினால் அவனுக்குப் பார்க்கும் இடம் எங்கும் சீதையாகத் தோன்றும் நிலை வந்து விட்டது.
ராவணன் ஏவலின்படி சூர்ப்பனகை அங்கே வந்தாள். அவளோ இராமனிடத்தில் தீரா விருப்பம் கொண்டவள். அவள் இராவணனை அணுகியபோது, ”இதோ பார்: இவள்தானா நீ சொன்ன சீதை?” என்று அவன் கேட்கிறான்.
“பொய்ந்நின்ற நெஞ்சிற் கொடியாள் புகுந்தாளை நோக்கி
நெய்ந்நின்ற கூர்வாளவன் நேருற நோக்கி நங்காய் மைந்நின்ற
வாட்கண் மயில்நின்றென வந்தென் முன்னர் இந்நின்றவ
ளாங்கொ லியம்பிய சீதை என்றான்.”
சூர்ப்பனகைக்கு எப்போதும் இராமனுடைய நினைவாகவே இருக்கிறது. இராவணனுக்குச் சீதையிடத்தில் உள்ள ஆசை எத்தனை வலியதோ, அத்தனை வலியது சூர்ப்பனகைக்கு இராமன் பால் உள்ள ஆசை. இராவணன் தான் கண்ட உருவெளித் தோற்றத்தைக் காட்டி, “இவள்தானே சீதை?” என்று கேட்டபோது சூர்ப்பனகை பார்க்கிறாள். அவளுக்கு அங்கே சீதை தோன்றவில்லை; இராமன் தான் தோன்றுகிறான். உடனே அவள் வியப்பு மீதூர்ந்து, “இவன்தான் அந்த வல்வில் இராமன்” என்கிறாள்.
‘செந்தா மரைக்கண்ணொடுஞ் செங்கனி வாயி னோடும்
சந்தார் தடந்தோளொடுந் தாழ்தடக் கைக ளோடும்
அந்தா ரகலத்தொடு மஞ்சனக் குன்ற மென்ன வந்தா னிவனாகுமவ் வல்வில் இராம னென்றாள்.’
வெறும் காமிகளுக்கே மனக்கண்ணிலும் புறத்திலும் அவர்கள் நினைத்த உருவம் தோற்றுமானால், இறைவன்பால் எல்லை இல்லா அன்பு கொண்ட பக்தர்களுக்குத் தோற்றுவதற்குத் தடை என்ன? மனம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். பக்தி உணர்ச்சி மிக்கவர்கள் இறைவனுடைய தியானத்தினால் அவன் திருக்கோலத்தை நினைத்த இடம் எல்லாம் காண்பதற்குரிய நிலையை அடைவார்கள்.
எங்கே நினைப்பினும்
“எங்கே நினைப்பினும் அங்கே வந்து என்முன் எதிர் நிற்பனே” என்று பிறிதோர் இடத்தில் அருணகிரியார் பேசுகிறார். தேவி பக்தர் ஆகிய அபிராமிபட்டர்,
”பார்க்கும் திசைதொறும் பாசாங் குசமும் பனிச்சிறைவண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும்என் அல்லலெல்லாம் தீர்க்கும் திரிபுரை யாள்திரு மேனியும் சிற்றிடையும் வார்க்குங் குமமுலை யும்முலை மேல்முத்து மாலையுமே”
தோன்றும் என்று பாடுகிறார்.
குமரேசன் நம்முடைய கவனத்தை ஈர்க்கும் சிலம்பு முதலியவற்றை அணிந்த தாள் உடையவனாக இருக்கிறான், அவற்றை நினைந்து நாளுக்கு அஞ்சாமல் பக்தர்கள் இருக்க வேண்டுமென்பதற்காக. ஆறு முகத் திருக்கோலம் கொள்கிறான், வினைக்கு அஞ்சாமல் இருக்க. பன்னிரு தோளும் கடம்பும் உடையவனாக விளங்குகிறான், கோளுக்கு அஞ்சாமல் இருக்க. தோளும், முகமும், தாளும் ஒருசேர விளங்கும் கோலம் கொண்டு வருகிறான் கொடும் கூற்றுவனுக்கு அஞ்சாமல் இருக்க.
நாள்என் செயும்வினை தான்என் செயும்எனை
நாடிவந்த கோள்என் செயும்கொடுங் கூற்றென்
செயும்கும ரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும்
தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும்
எனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
இருபத்தேழு
இந்தப் பாட்டில் எனக்கு நயம் ஒன்று தோன்றுகிறது. இருபத்தேழு நட்சத்திரங்களில் எல்லா மனிதர்களும் பிறக்கிறார்கள். நட்சத்திரத்தைத் தெரிந்து கொண்டே கிரகங்களின் சஞ்சாரத்தை அறிந்து நல்லதையும், தீயதையும் சொல்வார்கள் சோதிடர்கள். இந்தப் பாட்டில் இருபத்தேழு பொருள்களைச் சொல்லியிருக் கிறார் அருணகிரியார், இரண்டு தாள், இரண்டு சிலம்பு, இரண்டு சதங்கை, இரண்டு தண்டை ஆகத் தாளுடன் சேர்ந்த பொருள் எட்டு. முகம் ஆறு. தோள்கள் பன்னிரண்டு. கடம்ப மாலை ஒன்று. ஆக இந்த இருபத்தேழு பொருள்களை நினைப்பாருக்கு இருபத் தேழு நட்சத்திரங்களால் வரும் தீங்கும், அவற்றினுடைய தொடர்பால் கிரகங்கள் விளைக்கும் தீமையும், அவற்றைக் கருவியாகக் கொண்டு வினையால் நேரும் விளைவும் அச்சத்தைத் தாரா. வினையைக் கொன்றுவிடலாம் என்று சொல்லவில்லை. இறை வனைத் தியானிப்பவர்களுக்கு வினையை வென்றுவிடும் நிலை உண்டாக்கும்
நாள்என் செயும்,வினை தான்என் செயும்,
எனை நாடிவந்த கோள்என் செயும்,கொடுங்
கூற்றென் செயும்,கும ரேசர்இரு தாளும் சிலம்பும் சதங்கையும்
தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும்
எனக்குமுன் னேவந்து தோன்றிடினே?
[குமரேசருடைய இரண்டு திருவடிகளும் அவற்றில் புனைந்த சிலம்பும் சதங்கையும் தண்டையும், ஆறுமுகங்களும், தோள்களும், அவற்றில் அணிந்த கடம்பமலர் மாலையும் எனக்கு முன்னே வந்து தோன்றினால், கொடிய நாள் என்னை என்ன செய்யும்? தீய வினைதான் என்ன செய்யும்? என்னை நாடி வந்த கொடிய கிரகம் என்ன செய்யும்? கொடுமையான கூற்றுவன் என்ன செய்வான்?
தோன்றிடின் என் செயும் என்க. கோள் – கிரகம். கூற்று – யமன்.]
முற்றும்.
★ ★ ★