அடியார்க்கு நல்ல பெருமாள்
கி. வா.ஜகந்நாதன்
நாளும் கோளும்
சோதிடம் சொல்பவர்கள் நாளையும் கோளையும் பார்க்கிறார்கள். ‘நாளும் கோளும்’ என்று சேர்த்துச் சொல்வது ஒரு மரபு. நாள் என்பது இருபத்தேழு நட்சத்திரங்களைக் குறிக்கும். மற்ற நட்சத்திரங்களுக்கு மீன் என்று பெயர். கோள் என்பது கிரகம். இருபத்தேழு நட்சத்திரங்களும் பன்னிரண்டு ராசிகளில் அடங்கும். ஒன்பது கிரகங்கள் இந்தப் பன்னிரண்டு ராசிகளில் சஞ்சாரம் செய்கின்றன. அப்படிச் செய்வதனால் அந்த அந்த நட்சத்திரங்கள் அந்த அந்தக் காலங்களில் உரியவர்களுக்குச் சிலவகையான பலன்களை உண்டாக்கும் என்று கூறுகிறார்கள். கிரகங்கள் ராசிகளில் சஞ்சாரம் செய்வதைக் கிரக சாரம் என்று சொல்வார்கள். ஒருவருக்கு ஏதேனும் துன்பம் வந்தால், “என்னுடைய கிரகசாரம்” என்று சொல்வதை இக்காலத்தில் கேட்கிறோம்.
நாம் செய்த பண்டை வினையின் பயனாக இந்தப் பிறவியில் இன்ப துன்பங்கள் விளைகின்றன. நம்முடைய பழைய வினைக்கு ஏற்ப நாளும் கோளும் அமைகின்றன என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. அதனாலே தமக்கு வருகிற இன்ப துன்பங்களை முன்கூட்டியே நாளைக் கொண்டும் கோளைக் கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்று மக்கள் நம்புகிறார்கள்.
கடவுள் நம்பிக்கையும் சோதிடமும்
இறைவனிடத்தில் நம்பிக்கை உடையவன் சோதிடம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. “நவக்கிரகங்களின் போக்கை முன்னால் தெரிந்து கொண்டால் அவற்றால் நமக்கு வருகின்ற துன்பத்தைப் போக்கிக் கொள்ளக் கிரக சாந்தி செய்யலாம். அதனால் துன்பம் குறையாதா?” என்று சிலர் நினைக்கிறார்கள். போலீஸ்காரனுக்குப் பயந்து அவனிடம் போய்ப் பேசுவதைக் காட்டிலும் போலீஸ்காரர்களை ஆட்டி வைக்கிற அதிகாரியிடத்தில் நட்பாக இருந்தால் கவலைப்பட வேண்டியதில்லை. கிரகங்களுக்குச் சாந்தி பண்ணுவதைவிடக் கிரகங்களுக்கு எல்லாம் தலைவனாக இருக்கிற பெருமானையே சரணாகதி அடைந்துவிட்டால் அந்தக் கிரகங்களால் நமக்கு என்ன தொல்லை விளையும்? இன்ன கிரகத்திற்கு இன்னபடி சாந்தி செய்ய வேண்டுமென்பதை நூலிலிருந்து நன்கு அறிந்து நமக்கு யாராவது சொல்ல வேண்டும். நூலில் நுட்பமாகச் சொல்லியிருக்கிறபடி நடந்தால் நமக்கு ஒருகால் கிரகத்தினால் விளையும் துன்பங்கள் குறையலாம். ஆனால் அவ்வளவு நுட்பமாகக் கணித்துச் சொல்பவர்கள் மிகவும் அரியர். எல்லாவற்றுக்கும் பரிகாரமாக இறைவனுடைய துணை நமக்கு இருக்குமானால் எந்தக் கிரகம் எப்படி வந்தாலும் அதனால் விளையும் துன்பம் நமக்குக் குறைந்துவிடும்.
என் செயும்?
அருணகிரிநாதப் பெருமான் வினையாலும் அந்த வினையின் விளைவைத் தருவனவாக நினைக்கின்ற நாளினாலும் கோளி னாலும் வருகின்ற துன்பங்களுக்கு நல்ல பரிகாரம் சொல்கிறார். முருகனுடைய திருவருள் இருந்தால் அவற்றால் அச்சம் கொள்ள வேண்டாம் என்று உறுதி கூறுகிறார். ”முருகப் பெருமான் தன்னுடைய திருக்கோலத்தை எனக்குக் காட்டினால் நாள் என் செயும்? வினை தான் என் செய்யும்? கோள் என் செயும்? கொடும் கூற்றுவன் என் செய்வான்?” என்று கேட்கிறார்.
நாள்என் செயும்வினை தான்என் செயும்எனை நாடிவந்த கோள்என் செயும்கொடுங் கூற்றென் செயும்கும ரேசர்இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
நால்வகைத் துன்பங்கள்
உலகில் பிறந்து வாழ்கிற மக்களுக்கு நாள், கோள், வினை, கொடுங்கூற்று ஆகிய நான்கின் வாயிலாகத் துன்பம் உண்டாகின்றன. முதல் மூன்றும் மனிதன் வாழ்கிற காலத்தில் துன்பத்தை உண்டாக்குகின்றன. வாழ்க்கையின் முடிவில் ஒன்று துன்புறுத்து கிறது. அது கொடுங்கூற்று, நாளும் கோளும் வினையும் கருவி களாக நின்று மனிதனுடைய வாழ்க்கையைப் பலவகையாக உருக்குலைக்கின்றன. வாழ்வு முற்றும்போது உயிரைக் கொண்டு போவதற்கு வருகிறான் கூற்றுவன்.
முதல் மூன்றுக்கும் நாள், கோள், வினை என்று அடைமொழி எதுவும் இன்றிச் சொல்லி, நான்காமவனாகிய கூற்றுவனை, கொடுங்கூற்று என்று சொன்னார் அருணகிரியார். அப்படிச் சொன்னாலும் அந்தக் கொடும் என்ற சொல்லை முதல் மூன்றுக்கும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை இலக்கணக்காரர்கள், ‘இடைநிலைத் தீவகம்” என்பர். கொடும் என்ற சொல் நடுவில் விளக்குப் போல நின்று நாள், வினை, கோள் என்று முன் உள்ளவற்றோடும், கூற்று என்று பின் உள்ளதோடும் இயைகிறது.
நாளிலும் கோளிலும் இருவகை உண்டு. நல்ல நாளும், பொல்லாத நாளும் நல்ல கோளும், பொல்லாத கோளும் உண்டு. அப்படியே வினையிலும் நல்ல வினையும், தீய வினையு ம் உண்டு. நாள் கோள் வினை ஆகியவற்றில் நல்லவற்றால் மனிதனுக்கு இன்பமே விளைகிறது. மனிதன் நல்ல நாளைக் கண்டு அஞ்சுவது இல்லை. நல்ல கோளையும், நல்ல வினையை யும் கண்டும் அஞ்சுவது இல்லை. அவன் கொடிய நாளையும், கொடிய கோளையும், கொடிய வினையையும் கண்டு அஞ்சுகிறான். அதனால் கொடுங்கூற்று என்பதிலுள்ள கொடும் என்பதை மற்ற மூன்றுக்கும் கூட்டுவதே பொருத்தம்.
என்னை நாடிவந்த கோள் என் செயும்?
என்கிறார் அருணகிரியார். எல்லோருக்கும் பொதுவாகக் கிரகம் இருந்தாலும் அதனுடைய சாரம் ஜாதகனின் நாளுக்கு ஏற்றபடி இன்ப துன்பங்களைச் செய்கிறது. அந்தக் கிரகம் அவனை நாடி வந்து பயனைக் கொடுப்பது போலத் தோற்றுகிறது.
சோதிடத்தில் நம்பிக்கை வைக்கக் கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. வானிலுள்ள கிரகங்களை வான சாஸ் திரத்தின் மூலமாகவும் விஞ்ஞானக் கருவிகளின் வாயிலாகவும் தெரிந்தவர்கள் கிரகங்களால் நமக்குப் பலன் உண்டாகின்றன என்பதை நம்புவது இல்லை. நாம் நம்புகிறோம். கிரகங்களால் வாழ்க்கையில் நன்மை தீமைகள் உண்டாகின்றன என்று நினைப் பதற்கே ஒரு வகை நம்பிக்கை வேண்டும். பூமியைப் போல உருண்டையாக இருக்கிற ஏதோ ஒன்றுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று அறிவாளிகள் கேட்பார்கள். அப்படி இல்லாமல் சூரியன் முதலிய கிரகங்களால் நம்முடைய வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் உண்டாகின்றன என்று நம்பியே சோதிடத்தைப் பார்க்கிறோம். அந்த நம்பிக்கையைப் பின்னும் மிகுதியாக்கி, எம்பெருமான் திருவருள் இருந்தால் கிரகத்தினால் விளைகின்ற துன்பங்கள் நமக்கு வாரா என்று நினைத்துக் கொள்ளலாமே! அப்படி நினைப்பதைத்தான் அருணகிரியார் நமக்கு இந்தப் பாட்டில் கற்றுக் கொடுக்கிறார்.
சோதிடமும் உபாசனையும்
சோதிடம் சொல்பவர்களைக் கேட்டாலும் ஓர் உண்மை புலப்படும். சோதிட சாத்திரத்தில் நல்ல அறிவு உடையவர்களாக இருந்தாலும் ஒரு தெய்வத்தை உபாசனை செய்தால்தான் வாக்குப் பலிக்கும் என்று சொல்வார்கள். பெரும்பாலும் சோதிடம் கூறு பவர்கள் முருகன், பராசக்தி, ஆஞ்சநேயர் ஆகியவர்களில் ஒருவரை உபாசனை செய்கின்றவர்களாக இருப்பார்கள். அப்படி ஒரு கடவுளை உபாசனை செய்து அதன் மூலமாக நவக்கிரகங் களைப் பற்றித் தெரிந்து கொள்வாரிடம் சோதிடம் கேட்பதை விட நவக்கிரகங்களை மறந்து இறைவனையே வழிபட்டுச் செம்மாந்து இருக்கலாமே!
காலத்தைக் காட்டுவதற்குக் கடியாரம் இருக்கிறது. கடி யாரத்தின் முகத்தில் இரண்டு முட்கள் இருக்கின்றன. அதுமாதிரி வினை என்ற கடியாரத்தில் கோள் என்ற பெரிய முள்ளும், நாள் என்ற சிறிய முள்ளும் இருக்கின்றன. இறைவன் எல்லாக் காலத்திற்கும் பெரிய அளவு கருவியாகிய சூரியனைப்போல இருக்கிறான். சூரியனைப் பார்த்துத் தக்கபடி காலத்தைத் தெரிந்து கொள்பவர்களுக்கு கடியாரம் தாமதமாகப் போனாலும், விரைவாகப் போனாலும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. கடியாரத்திற்குச் சாவி கொடுக்க வேண்டுமே என்கிற கவலையும் இராது. இறைவனுடைய திருவருளால் நம்முடைய வாழ்வில் நலம் உண்டாகும் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்தால் நாளும் கோளும் நமக்கு ஒன்றும் செய்யா. அவை நமக்கு அனுகூல மாகவே இருக்கும் என்பது பக்தர்கள் கண்ட துணிவு.
தியானம்
மனத்திண்மை இல்லாமல் மனம் போனபடி எல்லாம் பொறி களைச் செல்லவிட்டு உலகியல் அநுபவத்தைப் பெறுகின்ற மனிதன், இறைவன் திருவருளைப் பெற வேண்டுமென்று விரும்பினால் பல காலம் முயற்சி செய்ய வேண்டும். இறைவனை நினைந்து உபாசனை பண்ண வேண்டும். மனம் அலைய அலையத் துன்பம் மிகுதியாகின்றது. பொறிகள் சிதறுண்டு செல்வதற்குக் காரணம் மனந்தான். அந்த மனத்தை ஒருமுகமாக நிறுத்துவதற்கு இறைவனுடைய திருக்கோலத் தியானம் அவசியம். முருகப் பெருமானுடைய திருக்கோலத்தை எண்ணி மனத்தை ஒருமுகப் படுத்தி வழிபடும் நிலை உண்டானால் மனத்திற்குத் திண்மை ஏற்படும். அந்தத் திண்மை, வாழ்க்கையில் உண்டாகின்ற துன்பங் களுக்கு அஞ்சாத நிலையை உண்டாக்கும்; நாளுக்கும், கோளுக்கும், வினைக்கும் சிறிதும் தளர்வு அடையாத நிலையை உண்டாக்கும்.
கோள் நல்லன ஆதல்
பாண்டி நாடு சமணர்களால் நிலைகுலைந்திருந்த காலத்தில் அந்த நாட்டை ஆண்ட கூன் பாண்டியன் சமணர் சமயச் சார்பிலே நின்றான்.சமணர்கள் அரசனைக் கைவசப்படுத்தித் தங்கள் சமயத்தின் பெயரால் சைவ சமயத்தினருக்குத் துன்பத்தை உண்டாக்கி வந்தார்கள். கூன் பாண்டியனுடைய மனைவியாகிய மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் ஞானசம்பந்தப் பெருமானைப் பாண்டி நாட்டுக்கு அழைத்து வர வேண்டுமென்று விரும்பினார்கள். திருமறைக்காட்டில் சம்பந்தப் பெருமான் எழுந்தருளியிருந்த போது தூதுவர்களை அனுப்பித் தம்முடைய விருப்பத்தைத் தெரிவித்தார்கள். ஞான சம்பந்தப் பெருமான் புறப்படலாம் என்று கிளம்பிய போது நாளும் கோளும் சரியாக இல்லை. அதனை அறிந்து உடன் இருந்த அப்பர் சுவாமிகள் இப்போது போவது நலம் அன்று என்று சொன்னார். “சமணர்கள் மிகப் பொல்லாதவர்கள். அவர்கள் செய்த வஞ்சனையை நான் அறிவேன். அவர்களிடத்தில் அகப்படக்கூடாது. நாளும் சரியாக இல்லை” என்று அவர் வற்புறுத்தினார். இறைவனுடைய திருவருளைப் பெற்ற ஞானசம்பந்தப் பெருமான் அதற்குச் சிறிதும் அஞ்சவில்லை. “எம்பெருமானுடைய திருவருள் இருக்கும் போது நாள்களும் கோள்களும் நமக்குத் துணை செய்யும். அவற்றால் நமக்கு எத்தகைய துன்பமும் வராது” என்று ஒரு பதிகமே பாடினார். அதற்குக் கோளறு திருப்பதிகம் என்று பெயர்.
“வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறும் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே“
என்று பாடினார். “இறைவன் என்னுடைய உள்ளம் புகுந்த அதனால் எனக்குக் கோளினாலே எந்த விதத் துன்பமும் இல்லை” என்று சொன்னார். இத்தகைய நிலை அடியார்களுக்கு உண்டாகும்.
“சேயவன் புந்தி பனிப்பானு
வெள்ளியொன் செங்கதிரோன்
சேயவன் புந்தி தடுமாற
வேதரும் சேதமின்றே“
என்று கந்தர் அந்தாதியிலும் அருணகிரியார் முருகனை நம்பின வர்களுக்கு நவக்கிரகங்களால் வரும் துன்பம் இல்லை என்று பாடியிருக்கிறார்.