அடியார்க்கு நல்ல பெருமாள்
கி. வா.ஜகந்நாதன்
நாளும் கோளும்
1
மனிதன் வாழ்கிறான்; சாகிறான். சாவது மிகப் பெரிய துன்பம். வாழும்போதும் ஒவ்வொரு நாளும் துன்பத்தை அநுபவிக்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள். எத்தனை துன்பத்தை அநுபவித்தாலும் வாழ்க்கையில் சலிப்பு உண்டாவதில்லை. ‘தினந்தோறும் நம் உடம்பில் இருக்கிற நோய்களால் துன்புறு கிறோமே! இந்த நோய்க்கு இடமாக உள்ள உடம்பை ஒழித்து விடலாம்’ என்று யாரும் நினைப்பதும் இல்லை. நாகரிக வசதிகள் வளர்ந்து வருகிற இக்காலத்தில் துன்பத்திற்குக் காரண மாகவுள்ள உடம்பைப் போக்குவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனாலும் இதனைப் போக்க மனம் வருவது இல்லை. காரணம் ; துன்பத்தை அவர்கள் விரும்புகிறார்கள் என்று சொல்ல முடியாது. நாளைக்கு ஒருகால் இந்தத் துன்பம் நீங்கி இன்பம் வருமோ என்ற நம்பிக்கையினால் அவர்கள் வாழ்கிறார்கள்.
நம்பிக்கை
நம்பிக்கைதான் வாழ்க்கைக்கு அடிப்படையானது. நம்பி நம்பி இன்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மனிதனுக்கு முன் முடிவில் கூற்றுவன் வந்து நிற்கிறான். கூற்றுவனால் வருகிற துன்பத்தைக் காட்டிலும் பெரிது வேறு ஒன்றும் இல்லை. இறப்பைக் கண்டு அஞ்சுபவர்கள் பலர். மாணிக்கவாசகப் பெருமான் இறைவன் அருளால் இன்பநலம் பெற்றவர். ஆனாலும் கூற்றுவன் வருங்கால் மனம் எப்படி அஞ்சுமோ என்று அவர் நடுங்குகிறார்.
“இறப்பதனுக் கென்கடவேன்!”
இதற்குக் காரணம் அவர் பலவீனம் அல்ல; தமக்குக் கிடைத்துள்ள இன்பத்தின் மீதுள்ள தீவிரமான பற்றே. இந்த ஆத்மாநுபவம் கூற்றுவன் வருங்கால் தளர்ந்து விடுமோ என்ற பயம் உண்டாகிறது. மிகவும் அருமையான பொருள் ஒன்றைப் பற்றிக் கொண்டவன், காற்று அசைந்தாலும் அது போய்விடுமோ என்று அஞ்சுவான். குழந்தை சற்றே வெளியில் போனாலும் அதற்கு ஏதேனும் ஊறுபாடு உண்டாகுமோ எனத் தாய் அஞ்சுவது, அவளுக்கு அக்குழந்தையிடத்தில் உள்ள பற்றுக்கு அறிகுறி. இதுபோலவே இறைவன் திருவருளைப் பெற்றாலும் கூற்றுவன். வருங்கால் துன்பம் உண்டாகுமோ என்று அஞ்சுவதற்குக் காரணம் தாம் பெற்ற அநுபவத்திலுள்ள பெரும் பற்று.
இன்பமும் துன்பமும்
கூற்றுவனைக் கண்டு துன்பப்படுவது கிடக்கட்டும். ஒவ் வொரு நாளும் மனிதன் படுகிற துன்பங்கள் பல. மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் கலந்தே வருகின்றன. ஆனால் பொதுவாக மனிதர்களைக் கேட்டால் துன்பம் அடைவதாகவே சொல்கிறார்கள். தனியாக இன்பத்தை அனுபவிப்பவர்களும் இல்லை; தனியாகத் துன்பத்தை அநுபவிப்பவர்களும் இல்லை. இன்ப துன்பங்கள் கலந்து கலந்து வருகின்றன.
குழந்தை இறந்துவிட்டது என்று துன்பப்படுகிறார்கள். அதை அடக்கம் செய்துவிட்டு வந்து சாப்பிடுகிறார்கள். சாப்பிடும்போது பசி தீருகிறது. பசி தீருவதும் ஒருவகை இன்பந் தான். குழந்தை இறந்துவிட்ட துன்பத்திற்கு இடையே பசி தீருகிற இன்பம் வரு கிறது. துன்பம் மிகுதியாக இருப்பதனால் பசி தீருகிற இன்பம் மறைந்து விடுகிறது.
துன்பம் மிகுதியாக இருப்பதனால் மனித வாழ்க்கையே துன்பம் தருவது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இந்த வாழ்வில் எப்போதும் இன்பமாக உள்ள நிலை ஒன்றைப் பெறலாம் என்று அப்பர் சுவாமிகள் முதலிய பெரியவர்கள் சொல்கிறார்கள். இறைவன் திருவருளைப் பெற்றால் சுகத்திற்கும் துக்கத்திற்கும் அப்பாலுள்ள, இருளுக்கும் ஒளிக்கும் அப்பா லுள்ள, நினைப்பு மறப்புக்கு அப்பாலுள்ள ஒருவகை இன்பம் உண்டாகும். அந்த இன்பம் இந்திரிய நுகர்ச்சிக்கு அப்பாற் பட்டது.
நாம் நினைக்கிற இன்பங்கள் எல்லாம் ஐந்து இந்திரியங்களின் வாயிலாக வருகின்றவை. ஐந்து பொறிகளின் வாயிலாக மனத்தில் இன்ப துன்பங்கள் சாருகின்றன. நாம் பெறுகின்ற துன்பங்களுக்கு அளவு கருவி ஐந்து இந்திரியங்கள். இறைவன் திருவருளால் கிடைக்கிற இன்பம் பொறி புலன்களுக்கு அப்பால் இருப்பதனால் அந்த இன்பத்தை நமக்குத் தெரிந்த அளவைகளால் அளக்க முடியாது.
வாழ்க்கையில் இன்பம் கிடைக்கும்போது நாம் பல நல்ல காரியங்கள் செய்ததனால் கிடைத்தது என்று தருக்குகிறோம். துன்பம் வந்தால் அதற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்க்கிறோம். பெரும்பாலும் பிறரைக் காரணமாகச் சொல்லத் துணிகிறோம். இந்த இரண்டு வகையான நினைவுகளும் கூடா வென்று கருதியே, எல்லாம் ஊழ்வினையால் நிகழ்கின்றன என்று சொன்னார்கள் பெரியோர்கள். உண்மையும் அதுதான்.
ஊழ்வினை
ஒருவன் நம்மைத் தன் கையால் அடிக்கிறான். நம்மை அடிப்பது கை என்றா சொல்கிறோம்? அவன் அடித்தான் என்று சொல்கிறோம். அவன் தன் கையைக் கருவியாகக் கொண்டு அடிக்கிறான். அவன் கை அடிப்பதை மாத்திரம் தெரிந்து கொண்டு அந்தக் கையைக் கொண்டவனைத் தெரியாமல் இருப்பது அறியாமை. அவன் கை அடிக்கவில்லை, அவனே கையாகிய கருவியால் அடிக்கிறான் என்று தெரிந்து கொள்வது போலவே, அவனைக் கருவியாகக் கொண்டு நம்மை அடிப்பது வேறு ஒன்று என்று உணரவேண்டும். அதுதான் நாம் பண்டு செய்த தீவினை.
பகுத்தறிவு உடையவர்கள் என்று சொல்லிக் கொள்கிற நமக்கு நாய்க்கு இருக்கும் அறிவுகூட இல்லை. நாய் ஓடும்போது ஒருவன் கல்லை எடுத்து அடிக்கிறான். கல் நாயின்மேல் பட்டு அதற்குத் துன்பத்தை விளைக்கிறது. அதற்காக நாய் கல்லைக் கடிக்கப் போவதில்லை. கல்லை வீசி எறிந்தவனைப் போய்க் கடிக்கிறது. அந்த அறிவு நமக்கு இல்லையே! அரிவாள் கருவி.
அதை உபயோகிப்பவன் கர்த்தா. “எய்தவன் இருக்க அம்பின் மேல் நோகலாமா?” என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறோம். அரிவாளாகிய கருவியைக் கொண்டவன் வெட்டினால் அவனைத் தான் கோபித்துக் கொள்ள வேண்டும். அவனைக் கருவியாகக் கொண்டு வெட்டச் செய்கிற வேறு ஒன்று இருக்கிறது. அதுதான் பண்டை வினை. அதனையே விதி என்றும், ஊழ்வினை என்றும் பெரியவர்கள் சொன்னார்கள்.
கடமையும் விதியும்
பெரியவர்கள் விதி என்று சொன்னதற்கும் நாம் இப்போது விதி என்று சொல்வதற்கும் எத்தனையோ வேறுபாடு உண்டு. முயற்சி எதுவும் இன்றிச் சோம்பலில் மூழ்கி எதையும் விதியின் தலையில் போட்டுவிட்டுத் தப்பப் பார்க்கிறோம் நாம். நன்மை ஏற்படும்போது யாரும் விதி என்று சொல்வது இல்லை. நமக்கு லாபம் கிடைத்தது; ‘என் தலை விதி” என்று சொல்வது இல்லை. தீமை ஏற்படும்போது, ”ஐயோ! இது என் தலைவிதி! என்று நொந்து கொள்கிறோம்; அல்லது அந்தப் பழியைப் பிறன் தலையில் சுமத்தி விடுகிறோம்.
மனிதன் துன்பம் அடைவது இயற்கை. அதை அடைவதற்குக் காரணமாக வேறு ஒருவனைச் சுட்டிக் காட்டிக்கொண்டு போனால் போகப் போக அவன் வாழ்க்கையே கசப்பாக முடியும். மனிதர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்வதாக முடியும். ஒரு சமூகமும் மற்றொரு சமூகமும், ஒரு நாடும் மற்றொரு நாடும் சண்டை போட்டுக் கொள்வதாக விளைந்து, கடைசியில் உலகம் முழுவதும் போர்க்களம் ஆகிவிடும். அதற்குப் போக்கு என்ன? ‘நம்மை அவனா அடித்தான்? அவனைக் கருவியாகக் கொண்டு நம் விதி அல்லவா அவனை அடிக்கத் தூண்டிற்று? நம்முடைய விதி கர்த்தா. அவன் கருவி’ என்னும் மனோபாவம் வந்தால் அவன்மேல் கோபம் வராது. நமக்குத் துன்பம் வரும்போதும் நன்மை வரும்போதும் விதியால் ஏற்ட்டவை என்று நினைக்கச் சொல்லிக் கொடுத்தார்கள் நம் நாட்டுப் பெரியவர்கள். கடமையைச் செய்யாமல் விதியைக் காரணமாகச் சொல்கிறவன் சமுதாயத்துக் கும் இறைவனுக்கும் துரோகம் செய்கிறவன் ஆகிறான். அவன் தான் அடைந்த துன்பத்திற்குக் காரணமென்று பிறரிடம் வெறுப்புக் கொள்ளாமல், தன்னுடைய விதியினால் ஏற்பட்டது என்று நினைந்தால், இனி நல்ல காரியங்களைச் செய்ய முயல்வான் நல்ல எண்ணத்துடன்தான் பெரியவர்கள் விதி என்ற உண்மையைத் தெரிவித்தார்கள்.
சோதிடம் கேட்டல்
முந்திய பிறவியின் பயனாகவே நல்லதும் தீயதும் உண்டா கின்றன என்பதை உணர்பவர்கள், பின்னால் என்ன நேரிடும் என்பதை உணர இயலாது. அதைத் தெரிந்து கொள்ள வேண்டு மென்ற ஆசை உந்த மரத்தடியிலோ, பாலத்தடியிலோ உட்கார்ந்திருக்கும் சோதிடனிடம் போகிறார்கள். மூடியிருக்கும் எதிர்காலப் புத்தகத்தைத் திறந்து பார்க்க வேண்டுமென்ற ஆவல் தூண்டச் சோதிடம் கேட்கிறார்கள். நன்மையோ, தீமையோ முந்திய ஊழ்வினையினால் விளையும் எனக் கருதி இறைவன் திருவருளைப் பெற முயலவேண்டும். இறைவன் திருவருள் பலம் இருந்தால் விதியினால் உண்டாகின்ற துன்பத்தின் உறைப்பு நமக்கு இராது. அப்படி இல்லாமல், இனி என்ன நடக்கும் என்று சோதிடம் பார்த்துத் துன்பமாக இருந்தால் முன்னால் இருந்தே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இன்பமாக இருந்தால் கர்வப்படுகிறோம். பின்னாலே இன்பம் வரும்போது அதன் இனிமை குறைந்து விடுகிறது.
சோதிடத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்றை அஸ்ட்ரானமி (Astronomy) என்றும், மற்றொன்றை அஸ்ட்ராலஜி (Astrology) என்றும் சொல்வார்கள். காலத்தைக் காண்பதற்குரிய பகுதி வான சாஸ்திரம். வாழ்க்கையில் உண்டாகின்ற இன்ப துன்பங்களைச் சொல்வது சோதிடம். கடமையிலிருந்து சிறிதளவும் வழுவாத மக்கள் இன்ன இன்ன காரியங்களை இன்ன இன்ன காலங்களில் செய்ய வேண்டுமென்று வரையறுத்திருந்தார்கள். அந்தக் கால நியதியைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக வான நூலாகிய சோதிடத்தை எழுதி வைத்தார்கள். வேதத்திற்கு அங்கங்கள் ஆறு. சோதிடம் வேதத்தின் கண் என்பார்கள்.
வேதத்தில் விதித்த கர்மாக்களை நன்கு செய்வதற்குரிய காலத்தைத் தெரிந்து கொள்வதற்குப் பஞ்சாங்கத்தைக் கணித்தார்கள்.
காலக் கணக்கைத் தெரிந்து கொண்டு காரியங்களை வழுவாமல் செய்த மக்கள் மிகுதியாக இருந்தபோது காலத்தை நிர்ணயிக்கும் பஞ்சாங்கத்துக்கு மதிப்பு இருந்தது. வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டு மென்ற ஆசை பிற்காலத்தில் வளர ஆரம்பித்தது.