அடியார்க்கு நல்ல பெருமாள்
கி. வா.ஜகந்நாதன்

தாயுமானவர் வாக்கு

இதே கருத்தைத் தாயுமானவர் ஒரு பாட்டில் அழகாகச் சொல்கிறார்.

உடலுக்கு இன்பம் தரும் எந்த நிலையில் இருந்தாலும் இறைவன் அருளை மறவாமல் இருக்கவேண்டும் என்று அவர் வேண்டிக் கொள்கிறார்.

கொந்தவிழ் மலர்ச்சோலை நன்னீழல் வைகினும்,
குளிர்தீம் புனல்கை அள்ளிக் கொள்ளுகினும், அந்நீ ரிடைத்திளைத் தாடினும்,
குளிர்சந்த வாடைமடவார் வந்துலவு கின்றதென முன்றிலிடை உலவவே வசதிபெறு போதும், வெள்ளை வட்டமதி பட்டப்பகற்போல நிலவுதர மகிழ்போதும்,
வேலையமுதம் விந்தைபெற அறுசுவையில் வந்ததென அமுதுண்ணும் வேளையிலும், மாலைகந்தம் வெள்ளிலை அடைக்காய் விரும்பிவேண் டியவண்ணம் விளையாடி விழிதுயிலினும் சந்ததமும் நின் அருளை மறவா வரம்தந்து தமியேனை ரட்சைபுரிவாய்!
சர்வபரி பூரண அகண்டதத் துவமான சச்சிதா னந்தசிவமே!”

தாயுமானவர் மகளிருடன் இன்பம் புணர்வதை வெளிப் படையாகச் சொல்லவில்லை. கலவி இன்பத்தை, “நிலவுப் பயன் கொள்ளுதல்” என்று குறிப்பாகச் சொல்வது புலவர் மரபு. இந்தப் பாட்டில், “வெள்ளை வட்டமதி பட்டப் பகற்போல நிலவுதர மகிழ்போதும்” என்பது மகளிர் இன்பத்தையே குறிப்பதாகக் கொள்ள வேண்டும்.

வரதுங்க ராம பாண்டியர் பாடல்

வரதுங்கராமபாண்டியர் என்னும் மன்னர் சிறந்த சிவபக்தர். அவரும் இதே கருத்துடன் திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி என்னும் நூலில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

இருக்கினும் நிற்கும் போதும்
இரவுகண் துயிலும் போதும்
பொருக்கென நடக்கும் போதும்
பொருந்திஊண் துய்க்கும் போதும்
முருக்கிதழ் கனிவா யாரை
முயங்கிநெஞ் சழியும் போதும்
திருக்களா வுடைய நம்பா
சிந்தைஉன் பால் தாமே.”

‘முருக்கிதழ் கனி வாயாரை முயங்கி நெஞ்சழியும் போதும் சிந்தை உன் பாவதாமே’ என்று மகளிர் இன்பத்தை நுகரும் போதும் மனம் இறைவனை நினைக்கும் என்று இவர் சொல்கிறார். ஆதலின் இத்தகைய மனநிலை சாத்தியமானதே என்பதை உணரலாம்.

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர்
காமக் கலவிக்கள்ளை
மொண்டுண் டயர்கினும் வேல்மற
வேன்;முது கூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டூடு
டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக்கொட்டி ஆடவெஞ்
சூர்க்கொன்ற ராவுத்தனே!

[கற்கண்டை உண்டாற் போன்ற இனிய சொல்லை உடையவர்களும் மென்மையை உடையவர்களுமாகிய மகளிர்பால் காம உணர்ச்சியினால் பெறும் கலவியின்பமாகிய கள்ளை எல்லையின்றி மேற்கொண்டு நுகர்ந்து யான் செய்ய வேண்டிய கடமைகளை மறந்தாலும், உன் வேலை மட்டும் மறக்கமாட்டேன்; முதிய பேய்க் கூட்டங்கள் தமக்கு விருந்துணவு கிடைத்த மகிழ்ச்சியினால், டுண்டுண் டுடுடுடு டூடு டுடுடுடு டுண்டு டுண்டு டிண் டிண்டு என்ற ஒலி எழும்படியாக முரசுகளைக் கொட்டிக் கொண்டு கூத்தாடும்படி கொடிய சூரனைப் போர்க்களத்தில் சங்காரம் செய்த, மயிலாகிய குதிரையை நடத்தும் வீரனே!

கண்டு உண்ட சொல் – கண்டைப் போன்ற சொல் என்பதும் பொருந்தும்; உண்ட: உவம உருபு. மெல்லியரால் வரும் காமம். காமத்தின் விளைவாகிய கலவி. கலவி – மகளிரோடு கூடுதல். இங்கே அதனால் வரும் இன்பத்துக்கு ஆயிற்று; ஆகுபெயர். மொண்டு உண்ணுதலாவது வரையறையின்றி மனம்போனபடி நுகர்தல். அயர்கினும் – மறந்தாலும். கூளி – பேய். டுண்டுண் எனவரும் ஒலிக் குறிப்பால் கொட்டியது முரசம் என்று கொள்க. சூர் – சூரனை. ராவுத்தன் – குதிரை வீரன்]