அடியார்க்கு நல்ல பெருமாள்
கி. வா.ஜகந்நாதன்
2
இந்தச் செய்தியை அவர் முருகனைப் பார்த்துச் சொல்கிறார். ‘அவன் எப்படிப் பட்டவன்? அவன் பெருமை என்ன என்பதை அடுத்த அடிகளில் சொல்கிறார்.
முது கூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டூடு டுடுடுடு டுண்டுடுண்டு டிண்டிண் டெனக்கொட்டி ஆடவெஞ்சூர்க்கொன்ற ராவுத்தனே!
பேய்களின் உவகை
முருகன் சூரபன்மனைக் கொன்றவன். கந்தபுராணத்திலுள்ள பலவகையான காட்சிகளில் எம்பெருமான் செய்த வீரத் திரு விளையாடல்களைப் பார்க்கிறோம். அருணகிரிநாதப் பெருமானின் திருப்புகழிலும் மற்ற நூல்களிலும் கந்தபுராணத்தில் காணாத பலவகையான கற்பனைக் காட்சிகளைக் காணலாம். இங்கே பழைய பேய்க் கூட்டங்கள் போர்க்களத்தில் வந்து ஆடுகின்றன. அதற்குக் காரணம் எம்பெருமான் சூரபன்மனைக் கொன்றிருக்கிறான். சூரன் தனியாக வந்து இறைவனை எதிர்க்கவில்லை. கணக்கற்ற அசுரர்களையும் படைகளையும் திரட்டிக் கொண்டு வந்து முருகனை எதிர்த்தான். அந்தப் போர்க்களம் மிகப் பெரியது. போர் நடந்த காலம் பதினெட்டு ஆண்டுகள் என்று சொல்வார்கள். எத்தனையோ அசுரர்கள் இறந்தார்கள். போர்க் களத்தில் இறந்து கிடக்கும் பிணத்தை உண்ணுவது பேய்களின் வழக்கம். பல காலமாகப் பசித்திருக்கும் பேய்களுக்குப் போர்க் களத்தில் விருந்து கிடைக்கிறது. அந்தப் பேய்கள் எல்லாம் பல காலமாகக் காத்திருக்கின்றன என்பதைக் காட்டுவதற்கு,
முது கூளித் திரள்
என்று சொன்னர். உடம்பு தளர்ந்து போய் தம்முடைய முதுமைப் பருவத்தைப் புலப்படுத்திக் கொண்டு இருக்கின்றன அவை. இப்போது போர்க்களத்தில் நல்ல விருந்தை உண்டு ஆடுகின்றன. நன்றாகச் சாப்பிட்டவர்களுக்கு ஆனந்தம் உண்டாகும். விருந்து உண்ட பிற்பாடு நடனம் ஆடுவது நாகரிகச் செயல்.
இங்கே பேய்களுக்கு நன்றாக உண்ட ஆனந்தக் களிப்பினால் ஆடவேண்டுமென்ற ஆசை தோன்றுகிறது. போர்க்களத்தில் முரசுகள் அங்கங்கே கிடக்கின்றன. பேய்கள் அவற்றை எடுத்துக் கொட்டுகின்றன.
அநுகரண ஒலி
அருணகிரிநாதப் பெருமானுக்கு அநுகரண சத்தங்களைப் பாட்டுக்கு நடுவில் வைத்துச் சொல்வது ஒரு வழக்கம். அவருடைய திருப்புகழைப் பார்த்தால் எத்தனையோ வகையான அநுகரண ஒலிகளைச் சந்தத்தில் அமைத்திருப்பது தெரியும். அந்த முறையைக் கந்தர் அலங்காரத்திலும் காணலாம்.
முது கூளித் திரள் – முதிய பேய்க் கூட்டங்கள். அவை முரசுகள் கொட்டிக்கொண்டு ஆடுகின்றன. அந்த முரசுகளை அவை எப்படி முழக்குகின்றன என்பதை ஒலிக் குறிப்போடு பாட்டில் வைத்திருக்கிறார்.
டுண்டுண் டுடுடுடு டூடு டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டேனக்
கொட்டி ஆடுகின்றனவாம். ‘இப்படிப் பேய்க் கூட்டங்கள் எல்லாம் பிணங்களை உண்டு, அதனால் இன்பமுற்று முரசுகளைக் கொட்டி ஆடும்படியாகச் சூரனை சங்கரித்த பெருமானே!’ என்று துதிக் கிறார்.
முது கூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டூடு டுடுடுடு டுண்டுண்டு டிண்டிண் டெனக்கொட்டியாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே!
ராவுத்தன்
ராவுத்தன் என்ற சொல் முஸ்லிம்களை நினைப்பூட்டுகிறது. அருணகிரியார் காலத்திற்கு முன்பே இந்த நாட்டுக்கு முஸ்லிம்கள் வந்து விட்டார்கள். பழைய திருப்பெருந்துறைப் புராணத்தில், மாணிக்கவாசகருக்காகக் குதிரை ராவுத்தராக வந்த ஆண்டவனது திருக்கோலத்தை முஸ்லிம்கள் போலவே வருணித்திருக்கிறார் அதைப் பாடிய புலவர்.
பழங்காலத்தில் அரபு நாட்டிலிருந்து இந்த நாட்டுக்குக் குதிரைகள் வருவது வழக்கம். அந்தக் குதிரைகளோடு முஸ்லிம்களும் வந்தார்கள். ராவுத்தன் என்ற சொல்லுக்குக் குதிரை வீரன் என்று பொருள். மாவுத்தன் என்பது யானை வீரனையும், ராவுத்தன் என்பது குதிரை வீரனையும் குறிக்கும் சொற்கள். மேற்கு நாட்டிலிருந்து வந்த முஸ்லிம்கள் பெரும்பாலோர் குதிரைகளைக் கொண்டு வந்தவர்கள். ஆகையால் முஸ்லிம்கள் என்றால் குதிரைக்காரர்கள் என்கிற நினைப்பு இந்த நாட்டவருக்கு உண்டாயிற்று. அதனால் முஸ்லிம்களை ராவுத்தர்கள் என்று அழைக்கலானார்கள். இந்தச் சொல் தமிழ் நாட்டில் அதிகமாக வழங்குகிறது.
எம்பெருமான் மயிலாகிய குதிரைகளை நடத்துகின்றவன். அதனால் அவன் ஒருவகையான குதிரை வீரன். அது கருதியே இப்பாட்டில் ராவுத்தனே என்று விளிக்கிறார். பின்னாலே வருகிற ஒரு பாட்டிலும்,
“தனிமயில் ஏறும் இராவுத்தனே”
என்று பாடுவார்.
குதிரை ராவுத்தர்
ஆத்மநாத சுவாமி எழுந்தருளியிருக்கிற தலம் திருப்பெருந் துறை. அங்கேதான் மாணிக்கவாசகர் உபதேசம் பெற்றார். அந்த ஊர்த் திருக்கோயிலில் ஒரு மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தில் ஒரு தூணில் குதிரைச் சேவகராக எழுந்தருளியிருக்கும் திருக்கோலத்தில் இறைவனுடைய உருவம் இருக்கிறது. அந்த உருவத்திற்கு இப்பொழுதும் பூசை செய்து வருகிறார்கள். அவரைக் குதிரை ராவுத்தர் என்றும், அந்த மண்டபத்தைக் குதிரை ராவுத்தர் மண்டபம் என்றும் வழங்குகிறார்கள். அங்கே மற்றோர் ஆச்சரியச் செயல் நிகழ்கிறது. குதிரை ராவுத்தர் எழுந்தருளியிருக்கும் இடம் மட்டும் வந்து முஸ்லிம்கள் தொழுகிறார்கள். நான் அந்தத் தலத்திற்குச் சென்றிருந்தபோது அங்கே தொழுகை நடத்திக் கொண்டிருந்த ஒரு முஸ்லிமைக் கண்டு பேசினேன்.
முஸ்லிம்களும் முருகனும்
முஸ்லிம்கள் முருகனைத் தொழுகின்ற தலங்கள் சில இருக்கின்றன. பழனியில் முருகப்பெருமானைப் பின் பகுதி வழியாக வந்து முஸ்லிம்கள் வணங்குகிறார்கள். திருப்பரங் குன்றத்தின் அடிவாரத்தில் நாம் தொழும் கந்தப்பெருமான் எழுந்தருளியிருக்கிறார். மலை மேலே முஸ்லிம்கள் தொழும் சிக்கந்தர் எழுந்தருளியிருக்கிறார். சில நண்பர்கள் சிக்கந்தர் என்ற சொல் ஸ்ரீஸ்கந்தர் என்ற சொல்லின் திரிபு என்று சொல்வது உண்டு. கதிர்காமத்தில் இன்றும் முருகப்பெருமான் கோயிலுக்குப் பின்னால் இஸ்லாமியர்கள் வந்து தொழுகிறார்கள்.
இப்படி இஸ்லாமியருக்கும் முருகப்பெருமானுக்கும் தமிழ் வழங்கும் நிலத்தில் ஒரு வகையான தொடர்பு இருப்பதை நாம் உணர்கிறோம். எனக்குத் தெரிந்த சில முஸ்லிம் நண்பர்கள் முருகப் பெருமானை உபாசனை செய்கிறார்கள். திருவையாற்றில் உள்ள முஸ்லிம் கவிஞர் ஒருவர் முருகன் மேல் பல அழகான சந்தக் கவிகளை இயற்றியிருக்கிறார்.
ராவுத்தர் என்ற பட்டம்
ராவுத்தன் என்று முருகப் பெருமானை அருணகிரியார் இங்கே விளித்த வகை இந்த நினைப்புக்களை உண்டாக்கியது. குதிரை வீரர்களாக இருப்பவர்களை ரவுத், ராவுத்தர் என்று கூறுவது மரபு. ராணுவத்தில் குதிரை வீரர்களாக இருந்து ஊழியம் செய்தவர்களுக்கு ரவுத், ராவுத் என்ற பட்டங்களை அரசன் வழங்கியது உண்டு. சில தலங்களில் சிவபெருமானுக்கு ராவுத் தேசுவரர் என்ற திருநாமம் இருப்பதைச் சிலாசாஸனங்கள் மூலமாக உணரலாம்.
முருகப் பெருமான் மயிலாகிய குதிரையின் மேல் ஏறி வந்து போரில் சூரனை அழித்தமையினால் ராவுத்தன் என்ற பட்டப் பெயரைப் பெற்றான்.
“இவுளிமுகி யைப்பொருத ராவுத்த னானவனும்”
என்ற திருவகுப்பிலும் இந்தச் சொல்லை அருணகிரியார் வழங்குகிறார்.
அருணகிரிநாதப் பெருமான் இந்தப் பாட்டில், நம்மைப் போன்று உலக இன்பங்களுள் மூழ்கிக் கிடப்பவர்களுக்கு மிகவும் எளிதான சாதனம் ஒன்றைச் சொல்கிறார். இறைவனைத் தியானம் செய்வதற்கு நமக்கு ஆற்றல் இல்லாவிட்டாலும் அவன் திருக் கரத்திலுள்ள வேலை மெல்ல மெல்லக் கண்டு நெஞ்சில் கொண்டு பலமுறை தியானித்துப் பழக வேண்டும். அந்தத் தியானம் கோயிலுக்குப் போகும்போது மாத்திரம் செய்வது என்பது அல்ல; வீட்டில் இருக்கும் அமைதியான நேரத்தில் செய்வது என்பதும் அல்ல; எல்லாக் காலத்திலும் செய்வதற்கு உரியது. நாம் நம்முடைய மனையாட்டியோடு காம நுகர்ச்சி பெறும் போதும் வேலை மறக்காமல் இருக்கலாம்.
திருப்புகழில்
இத்தகைய நிலையைத் திருப்புகழிலும் உணர்த்துகிறார்.
“முருகுகமழ் மலரமளி மீதினிற்புகுந்து
முகவனச மலர்குவிய மோகமுற்றழிந்து
மொழிபதற வசமழிய ஆசையிற் கவிழ்ந்து
விடுபோதும்
முழுதுணர வுடையமுது மாதவத்துயர்ந்த
பழுதில்மறை பயிலுவஎ னாதரித்துநின்று
முனிவரர்சுரர் தொழுதுருகு பாதபத்ம மென்றும்
மறவேனே.”