அடியார்க்கு நல்ல பெருமாள்
கி. வா.ஜகந்நாதன்
மறவா நிலை
இறைவனை நோக்கி, “நான் மாதரார் காமக் கலவிக் கள்ளை மொண்டு உண்டு மயங்கினாலும் உன் வேலாயுதத்தை மறக்க மாட்டேன்” என்று சொல்கிறார்.
கண்டுஉண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை மொண்டுஉண்டு அயர்கினும் வேல்மறவேன்.
பெண்களைப் பற்றிச் சொல்லும்போது அவர்களுடைய சொல்லின் தன்மையை முதலில் பேசுகிறார். அவர்கள் கற்கண்டை உண்டு அதைச் சொல்லாகவே வெளியிடுவாரைப் போல பேசுகிறார்கள்.
கண்டுஉண்ட சொல்லியர்.
அந்தச் சொல்லைக் கேட்டுக் காம உணர்ச்சி உண்டாகிறது. அதனாலே மயங்கி அவர்களை அணைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் மிக மென்மையான உருவத்தை உடையவர்கள்.
மெல்லியர்.
அவர்களிடத்தில் விளைகின்ற கலவிக் கள்ளை மொண்டு உண்டு மயங்கி நிற்கிறார்கள் காமிகள். கள்ளைத் தன்னுடைய விருப்பப் படியே எந்த வரையறையும் இல்லாமல் மொண்டு உண்டால் அயர்வுதான் வரும். வரையறையாக உண்டால் அயர்வு ஓரளவு நிற்கும். இங்கே தம்முடைய மனப்படியே கலவிக் கள்ளை மொண்டு உண்டு அயர்ந்தாலும், எல்லாவற்றையும் மறந்தாலும், ஒன்றை மாத்திரம் மறக்கவில்லை என்று அருணகிரியார் சொல் கிறார். இந்த நிலை சாமானிய மக்களுக்கு வருவது இல்லை.
இதற்குப் பல காலமாகப் பழக்கம் செய்திருக்க வேண்டும். இதைப்பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்கலாம்.
எப்போதும் நினைத்தல்
மனிதன் எதில் பற்றுக் கொண்டு வாழ்ந்திருந்தாலும் அந்தப் பற்றுக்கு மூல காரணமாக இருப்பது அவனுடைய பழக்க வழக்கங்கள். ஏதேனும் ஒரு பொருளிடத்தில் அதிகப் பற்று இருக்குமானால் அதைப் பற்றிப் பேசியும், அதைப்பற்றி நினைந் தும், அது சம்பந்தமாகவே காரியங்களைச் செய்தும் வருவான்.
அருணகிரிநாதப் பெருமான் எப்பொழுதும் இறைவனைப் பற்றிப் பேசியும், இறைவனையே தியானம் செய்தும், இறைவனோடு சம்பந்தப்பட்ட காரியங்களைச் செய்தும் வாழ்ந்தவர். இந்த நிலையால் எப்பொழுதுமே இறைவனை மறக்காமல் இருக்கும் உணர்ச்சி அவருக்குக் கிடைத்தது.
மறப்பதும் நினைப்பதும் மனத்தினுடைய செயல்கள். இறை வனை வழிபடுவதும் துதிப்பதும் மற்றக் கரணங்களின் செயல்கள். எப்போதும் அவனை நினைத்துக் கொண்டிருப் பதற்குப் பழக்கம் வேண்டும். பழக்கத்தால் அது கை கூடும்.
அருணகிரியார், “நான் சிற்றின்பத்தை நுகரும் போதும் வேலை மறக்கமாட்டேன்” என்று சொன்னாலும் நம் போன்றவர்களுக்கு ஓர் அரிய உண்மையை அதன் வாயிலாகச் சொல்லித் தருகிறார். எம்பெருமானுடைய திருவடிகளை, அவனுடைய வேலாயுதத்தை, நெஞ்சிலே நினைக்க வேண்டும். உலகத்தில் வாழும்போது பல பல இன்னல்கள் அதைக் குலைக்க வரும். ஆனாலும் திருப்பித் திருப்பி அவனுடைய திருவுருவ நினைவு நமக்கு வரவேண்டும். அப்படி வந்து பழகினால் எந்தச் சமயத்திலும் அவனுடைய நினைப்பு நமக்கு உண்டாகும். எந்த விதமான செயல்களைச் செய்தாலும், மனம் இயங்கும் வரைக்கும் அந்த மனத்தில் இறைவனுடைய வேலை நினைக்கலாம்.
தொழுது எழுதல்
“தொழுதெழுவார் வினைவளம் நீறெழ“
என்று திருக்கோவையாரில் வருகிறது. பக்தர்கள் படுக்கையை விட்டு எழும்போதே, இறைவனைத் தொழுகிறார்கள். வள்ளுவர் மனைமாட்சி என்ற அதிகாரத்தில்,
“கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை“
என்கிறார். ”தொழுது கொண்டே எழுந்திருப்பதாவது? எழுந்திருந்த பின்தானே தொழ வேண்டும்?” என்று தோன்றலாம்.
தூங்கும்போது நம்மை மறந்து தூங்குகிறோம். விழிப்பு ஏற்படும்போதே உணர்ச்சி ஏற்படுகிறது. அந்த உணர்ச்சி தோன் றியவுடனே தொழுது கொண்டே எழுந்திருக்கிறார்கள் அன்பர்கள். எழுந்திருப்பதற்கு முன் தோன்றுகிற முதல் உணர்ச்சியிலேயே இறைவனின் நினைவு அவர்களுக்குத் தெளிவாக உண்டாகி விடு கிறது; இறைவனைத் தொழுது கொண்டே எழுந்திருக்கிறார்கள். “தொழுதெழுவாள்” என்பதற்கு உரையெழுதிய பரிமேலழகரும், ‘தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின் தொழுதெழுவாள் என்றார்’ என்கிறார்.
நினைப்பது எளிது
மனம் எப்பொழுதெல்லாம் வேலை செய்கிறதோ அப்பொழு தெல்லாம் இறைவனை நினைக்க வேண்டும். “இன்னும் நான் பல் தேய்க்கவில்லையே! நீராடித் திருநீறு அணியவில்லையே! இப்போது எப்படிக் கடவுளை நினைப்பது?” என்று சிலர் சொல்லலாம். பல் தேய்த்து நீராடா விட்டாலும் மூச்சுவிடுவது இல்லையா? மூச்சுவிடுவதைப் போலவே இறைவனை மனத்தால் நினைக்க வேண்டும்.
திருக்கோயில் செல்லவேண்டுமானால் சுறுசுறுப்பு இருக்க வேண்டும். இறைவனுக்கு அருச்சனை செய்ய வேண்டுமானால் மலர் முதலாயின இருக்க வேண்டும். அவனைப் பாட வேண்டுமானால் இசை வேண்டும்; தொண்டையும் நன்றாக இருக்க வேண்டும். இவற்றுக்கு எல்லாம் வேறு கருவிகளின் துணை அவசியமாக இருக்கிறது. ஆனால் இறைவனை நினைப்பது மிக எளிது. மனம் நினைக்க வேண்டும்.
நாம் உணர்ச்சியுடன் இருக்கும்போதெல்லாம் மனம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த மனத்திற்கு இறைவனது திருக்கோலத்தை நினைப்பதைக் காட்டிலும் அவன் திருக்கரத்திலுள்ள வேலை நினைப்பது மிக எளிது. அந்த நினைவு எந்தச் சமயத்தில் இருக்க வேண்டும், எந்தச் சமயத்தில் இருக்கக் கூடாது என்ற வரையறை இல்லை. “நாம் உடம்பெல்லாம் அழுக்காக நீராடாமல் இருக்கிறோம். அப்போது இறைவனை நினைக்கலாமா?” என்று சிலர் கேட்பது உண்டு. உடம்பில் தூய ஆடை அணிவதற்கு அழுக்கான உடம்பு கூடாது. உண்ணுவதற்கு அழுக்கான வாய் கூடாது. ஆனால் இறைவனை நினைப்பதற்கு உடம்பு எப்படி இருந் தாலும், வாய் எப்படி இருந்தாலும் மனம் தெளிவாக இருந்தால் போதும்.
மனத்தால் இறைவனை நினைப்பதற்கு, உடம்பு என்ன காரியம் செய்து கொண்டிருந்தாலும், வாக்கு வேறு காரியத்தைச் செய்தாலும் தடை இல்லை. உடம்பு மகளிருடைய கலவி இன்பத்தை அடைந்து கொண்டிருக்கும்போது மனம் வடிவேலை நினைக்கலாம். இது சாத்தியமான செயலே.
சுந்தரர் இயல்பு
சுந்தரமூர்த்தி நாயனார் இத்தகைய பழக்கத்தைச் செய்து கொண்டவர்.
“நற்ற வாவுனை நான்ம றக்கினும்
சொல்லு நாநமச்சி வாயவே“
என்று அவர் பாடுகிறார். ஒரு சமயம் அவர் திருவொற்றியூருக்குச் சென்றார். அங்கே சங்கிலி நாச்சியாரை மணந்து கொண்டார். அவருக்கு, ‘நான் இந்த ஊரை விட்டு வெளியில் செல்ல மாட்டேன்’ என்ற உறுதியைச் செய்து கொடுத்திருந்தார். ஆனால் திருவாரூரின் நினைவு வந்தமையினால் திருவொற்றியூரை விட்டுப் புறப்பட்டு விட்டார். சத்தியத்தை மீறிய குற்றத்திற்காக இறைவன் அவருடைய கண் ஒளியை மறைத்தான். அப்போது சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனை நினைத்துக் கதறுகிறார். ‘இறைவனே! நான் உன்னை மறக்கவில்லையே! என் நா உன் நாமத்தை மறக்கவில்லையே! இப்போது நான் குருடனாக இருக்கிறேன். எவ்வளவோ சமயங்களில் தடுக்கி விழுகிறேன். அப்படி வழுக்கி விழும்போது ஐயோ அப்பா என்று அலறுவது இல்லையே! எப்போதும் உன் திருப்பெயரையே சொல்கிறேன். இது எப்போதும் நான் உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதற்கு அடையாளம் அல்லவா?’ என்கிறார்.
“வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லால்
மற்று நான்அறி யேன்மறு மாற்றம்
ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே!”
பழக்கமும் தியானமும்
சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு இருந்த பழக்கம் நமக்கும் இருந்தால் துன்பப் படும் போதும், இன்பம் அடையும் போதும் முருகா முருகா என்று சொல்ல வரும். இந்தப் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக முதிர்ந்துவிட்டால் மனம் இறைவனுடைய தியானத்தில் ஒன்றிவிடும். பல காரியங்களைச் செய்து துன்பப்படும் போதும், இந்திரியங்கள் வாயிலாக இன்பத்தை அடையும் போதும், காம நுகர்ச்சியில் ஈடுபடும் போதும் இறைவனைப் பற்றிய நினைப்பு மாறாது. அருணகிரியார் இத்தகைய அநுபவத்தை இந்தப் பாட்டில் சொல்கிறார்.
இறைவன் படத்தை வைத்துப் பலர் தியானம் செய்கிறார்கள். கோயிலுக்குச் சென்று இறைவன் திருவுருவத்தைக் கண்டு பலர் ஆனந்தம் அடைகிறார்கள். அந்தச் செயல்களால் இறைவனுடைய திருவுருவத்தை மனத்தில் அமைத்துக் கொள்ளப் பார்ப்பது நல்லதுதான். ஆனால் இறைவனுடைய திருக்கோலம் முழுவதும் அப்படியே நம்முடைய நெஞ்சில் நிலைத்து நிற்பது அரிது. அப்படி நின்றாலும் நெடுநேரம் இராது. எளிதில் நினைப்பதற்கு ஒன்று இருந்தால் அது அநுகூலம் அல்லவா? அருணகிரிநாதப் பெருமான் இதில் அத்தகைய எளிய தியானப் பொருளைச் சொல்லித் தருகிறார். ஆண்டவன் கையில் இருக்கிற வேலாயுதத்தை மிக எளிதில் நினைந்து தியானிக்கலாம். அதனால் அருணகிரியார், ”வேல் மறவேன்” என்கிறார்.
எளிய முறை
நாம் முருகனைப் பற்றி எத்தனை கேட்டாலும் எத்தனை படித்தாலும் நம்முடைய வாழ்க்கைக்குப் பயன்படும் வகையில் தினமும் சாதனை செய்தே தீரவேண்டும். எந்தக் காரியமும் பழக்கம் இல்லாமல் அநுபவத்தை உண்டாக்காது.இறைவனைப் பற்றிப் பலகாலம் பேசி, பலகாலம் கேட்டு, பலகாலம் படித் திருந்தாலும் அவற்றினால் சிறிதேனும் அநுபவம் இல்லா விட்டால் அத்தனையும் பயன் இல்லை. நாம் தவம் செய்ய முடியாது. இந்திரிய நிக்கிரகம் செய்ய இயலாது. விரதங்கள் அநுசரிப்பதற்கான நிலையும் நம்மிடம் இல்லை. ஆனால் மனம் உள்ள வரை இறைவனைத் தியானிக்க வழி உண்டு.
ஆண்டவன் திருக்கரத்தில் உள்ள வேலை நாள்தோறும் ஐந்து நிமிஷமாவது பார்த்து அதை மனத்தில் நிறுத்தித் தியானம் செய்யலாம். அது முடியாத காரியம் அன்று. இந்தப் பழக்கத்தை நாம் நடைமுறையில் செய்துகொண்டு வரவேண்டும்.
விளக்கை ஏற்றி வைத்து வேலைப் பார்க்க வேண்டும். உடனே கண்ணை மூடிக்கொண்டு அந்த வேலை உள்ளே பார்த்துப் பழகவேண்டும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்து வேலை மனத்தில் நினைக்கப் பழகினால் பின்பு அந்த வேலே சோதிப் பிழம்பாக உள்ளத்தில் நிற்கும். இப்பொழுதெல்லாம் கண்ணை மூடினால் நமக்கு இருட்டுத் தோற்றும். வேலைத் தியானம் பண்ணிப் பண்ணிப் பழகிவிட்டால் மின்கீற்றுப் போல அந்த வேல் உள்ளத்தில் ஒளிவிடும். அந்தப் பழக்கம் முறுகினால் வேலே பெரிய சோதியாக நமக்குத் தோன்றும்.
“வேலே ஒளிப்பிழம்பாக உள்ளத்திலே தோன்றுகிறது. அதனால் என்ன பயன்?” என்ற கேள்வி எழலாம். வேல் மறைந்து ஒளிப் பிழம்பு தோன்றும்போது தன்னை மறக்கிற நிலை வந்துவிடும். கவலை, கடமை, கட்டு என்பன எல்லாம் மறைந்து போகும்; இன்பம் உண்டாகும்.
இப்படிக் கண்ணை மூடிக்கொண்டு ஒளிமயமான தோற்றத்தைப் பார்ப்பதென்பது எளிதான செயல் அல்ல. எப்போதும் புறத் திலும் அகத்திலும் இருட்டு நிரம்பிய வாழ்க்கையில் நாம் போராடு கிறோம். கண்ணை மூடிக்கொண்டு உள் ஒளி நிரம்பப் பார்த் தோமானால் நம்முடைய புலன்கள் அடங்கி இன்பம் உண்டாகும். அப்போது நம்மை மறக்கும் நிலை வரும்.
இத்தகைய சிறந்த இன்பத்தை அடைவதற்கு மிக எளிதான வகையை அருண்கிரிநாத சுவாமி இந்தப் பாட்டில் சொல்லித் தருகிறார்.
‘வடிவேற் பெருமானுடைய திருக்கரத்திலுள்ள வேலை ஒளி மயமான வேலை, தியானம் பண்ண வேண்டும். அதை எந்தச் சமயத்திலும் மறவாமல் இருக்கவேண்டும். ஞானத்திற்கு மாறுபாடான காம நுகர்ச்சியில் ஈடுபடும்போதும் அதை மறவா மல் நினைத்தால் நல்ல இன்பத்தைப் பெறலாம்; பேரின்பத்தை அடையலாம்” என்று உபதேசம் செய்கிறார். உபதேசமாகச் சொல்லாமல், தாம் அப்படி நினைப்பதாக இந்தப் பாட்டில் அருளியிருக்கிறார்.
கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை மொண்டுண்டு அயர்கினும் வேல்மறவேன்.