அடியார்க்கு நல்ல பெருமாள்
கி. வா.ஜகந்நாதன்
‘வேல் மறவேன்’
1
ஞானம் பெறுவதற்குப் பெரும் தடையாக இருப்பது காமம். இறைவனுடைய திருவருளை அடைவதற்குரிய முயற்சிகளைச் செய்யவொட்டாமல் தடுக்கும் உணர்ச்சிகள் பல உண்டு. அவை எல்லாவற்றிலும் மிக வலிமை உடையது காமம். அது அறிவை மறைத்துவிடுகிறது. “காமத்திற்குக் கண் இல்லை” என்ற பழமொழி அதைத்தான் குறிக்கிறது. காமத்தினால் பெண்களோடு கலந்து இன்பம் நுகர்கிறான் மனிதன். அதனால் மயக்கத்தை அடைகிறான். மயக்கம் அடைகிற காரணத்தினால் காமத்திற்குக் கள்ளை உவமையாகச் சொல்வது உண்டு.
கள்ளால் உண்டாகும் மயக்கம்
கள்ளைக் குடித்தால் அது மூளையைப் போய்த் தாக்குகிறது. மூளைக்கும் கண்களுக்கும் தொடர்பாக உள்ள நரம்பைப் போய்த் தாக்குகிறது. அதனால் கள் குடித்தவனுடைய கண்கள் திறந்திருந் தாலும் வாந்தல் கம்பம் அவனுக்கு மனிதனைப் போலத் தோன்றுகிறது. மனிதனைக் கண்டால் மாடு என்று வெருண்டோடுகிறான். தன் மனத்தின் அடித்தளத்தில் மறைந்திருக்கிற விஷயங்களை வெளிப்படுத்துகிறான். மானம்,மதிப்பு, கௌரவம், அந்தஸ்து என்று இதுவரையிலும் எண்ணியிருந்தவற்றைத் துறந்து மனம் போனபடி திரிகிறான்.ஒருபுறம் பார்த்தால் உள்ளொன்று வைத்துப் புறம்பு ஒன்று பேசும் மனிதனைப் போல் அல்லாமல் உள்ளத்தில் இருப்பவற்றைப் புறத்தில் கொட்டிவிடுகிறான்.
இன்ப நாட்டம்
கள்ளை உண்பவன் அதனாலே இன்பத்தை நாடுகிறான். ”உலகமெல்லாம் பழி கூறுகிறதே! மனத்தில் வைத்துள்ள விஷயங்களை வெளியிட்டு விடுகிறோமே!” என்று அவனுக்குத் தெரியாமல் இருக்குமா? கள் குடித்த மயக்கம் போய்த் தெளிவு பிறந்தவுடன் இவைகள் எல்லாம் தெரிந்து விடுகின்றன. தேள் கொட்டுமென்று ஒருவனுக்குத் தெரியாது. அவன் விளையாட்டாகக் கொடுக்கில் கை வைத்தான்; கொட்டிவிட்டது. மறு படியும் அவன் தேளைக் கண்டால் கை வைப்பானா? ஒன்றால் ஒருவன் துன்பத்தை அடைந்தால் மீட்டும் அதை நாட மாட்டான். ஒரு முறை கள்ளைக் குடித்துவிட்டு ஆடியவன் அதனால் தனக்கு உண்டான பழியையும், அவமானத்தையும் நன்றாக உணர்ந்த பின்பும், குடிக்கக் கூடாதென்ற சட்டம் இருந்தும், திருட்டுத் தனமாக மீண்டும் மீண்டும் குடிக்கிறான் என்றால் அதற்கு ஏதேனும் தக்க காரணம் இருக்க வேண்டும். மானம் மரியாதை பாவம் பழி ஆகியவற்றை எல்லாம் மிஞ்சுகிற இன்பம் அதில் இருக்கிறது. அந்த இன்பம் இல்லாவிட்டால் கள்ளை அவன் நாடமாட்டான். அதனிடம் அவன் பெறும்படியான இன்பம் ஏதோ ஒன்று இருக்கிறது. அந்த இன்பம் எது?
தன்னை மறத்தல்
கள்ளைக் குடித்தவன் தன்னை மறந்து பேசுகிறான்; தான் இன்ன இன்ன காரியங்கள் செய்ய வேண்டும். இன்னாரிடத்தில் இன்ன மாதிரியாகப் பேசவேண்டும் என்று முன்பு திட்டங்கள் போட்டிருந்தால், அந்தத் திட்டங்களை எல்லாம் மறந்த நிலையை அடைகிறான்.
தன்னை மறப்பது இன்பம். ‘நன்றாகத் தூங்கினேன்’ என்று ஒருவன் சொல்கிறான். தூங்கும்போது ஆசாபாசங்களை மறந்து, கவலையை மறந்து, கடமையை மறந்து கட்டை போலக் கிடப்பதால் இன்பத்தை அடைகிறான். கள்ளைக் குடிப்பவனும் கட்டுக்களை உடைத்து எறிந்து விட்டுக் கவலைகளை எல்லாம் மறந்து, தன்னையும் மறந்து விருப்பப்படி பேசுவதனால் இன்பத்தை அடைகிறான்.
கவலைகளை மறந்து, உலகத்திலுள்ள பற்றுக்களை விட்டு விட்டு நிற்பதுதான் இன்பம். ஞானிகள் அப்படி இருக்கிறார்கள். அவர்கள் கிணறு முழுவதையும் தாண்டியவர்கள். கள்ளைக் குடித்தவன் பாதிக் கிணற்றைத் தாண்டியவன். அதனால்தான் அதைக் குடித்திருக்கும் நேரத்தில் தன்னை மறந்து நின்றாலும் திரும்பத் தெளிவு ஏற்பட்டவுடன் அந்த இன்பம் போய்விடுகிறது. “உலகம் நம்மைக் கண்டு பழிக்கிறதே! சிரிக்கிறதே!” என்று தெளிவுள்ள சமயத்தில் நினைத்துத் துன்பப்படுகிறான். முதலில் உண்டான போலி இன்பம் நிலைகொள்வது இல்லை. மெய்ஞ் ஞானிகள் தம்மை எப்பொழுதும் மறந்து இருக்கிறார்கள். கள்ளைக் குடிப்பவன் சில நேரத்திற்கு ஒருவாறு தன்னை மறந்து இருக்கிறான். அவன் பெறுவது உண்மையான இன்பம் அன்று.
உணர்ச்சி மிகுந்தால்
காமம் மாத்திரம் அன்று. உள்ளத்தில் எந்த உணர்ச்சி மிகுந்து இருந்தாலும் உலகத்தைப் பாராத நிலை உண்டாகும். பக்தர்களுக்கு அத்தகைய நிலை வருவது உண்டு. மாணிக்க வாசகப்பெருமாள் அரசன் பணத்தை வாங்கிக் கொண்டு குதிரை வாங்கப் போனார். போனவர் அப்பணத்தைக் கொண்டு சிவ பெருமானுக்குக் கோயில் எழுப்பினார். இது கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிற மாதிரிதான். அரசன் ஏதோ ஒரு காரியத்துக்காகப் பணம் கொடுக்க, அவர் அந்தக் காரியத்தைச் செய்யாமல் பிறிதொரு வகையில் செலவிட்டார். அது தவறுதான். ஆனால் நாம் மாணிக்கவாசகரைக் கொண்டாடுகிறோம். அதற்குத் தக்க காரணம் இருக்க வேண்டும். அவர் கொண்டு போன பணத்திற்குக் குதிரை வாங்கியிருந்தால் குதிரைகளின் உதவி கொண்டு போரை நடத்தலாம். அதனால் பல்லாயிரக் கணக்கான பேர்கள் இறந்து போவார்கள். அவரோ எல்லா மக்களும் இறைவன் அருளைப் பெறுவதற்குத் தக்கபடி செய்தார். அதனால் அவரைக் கொண்டாடுகிறோம். செய்த தொழிலின் பெருமை அதன் பயனால் தெரிய வருகிறது. அரசன் கொடுத்த பணத்தை வேறு யாராக இருந்தாலும் கோயில் கட்டத் தைரியம் கொள்ளமாட்டார்கள். மாணிக்கவாசகரின் உள்ளத்தில் பக்தி உணர்ச்சி மீதூர்ந்து இருந்தது. அதனால் உலகத்தார் என்ன சொல்வார்களோ என்று அஞ்சாமல், பற்றுக்களையும் கடமை களையும் மறந்த நிலையில் அந்தக் காரியத்தைச் செய்தார்.
அவர் பக்திப் பித்துப் பிடித்தவர். பக்திப் பித்துக் கொண்ட பக்தர்கள் உலகம் தம்மைப் பழிக்கிறதே என்று நினைக்க மாட்டார்கள்.
“நாடவர் நம்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப“
என்று பாடுகிறார். “ஏதோ பைத்தியம்” என்று அவரைப் பார்த்து எல்லாரும் கூறினார்கள். அவரோ, ‘உலகத்திலுள்ள பைத்தியம் எல்லாம் நம்மைப் பார்த்துக் கை தட்டி ஆரவாரிக்கின்றன; நாம் அவர்களைப் பார்த்து கைதட்டி ஆரவாரிக்கிறோம்” என்றார். அவரைப் பார்த்து யார் யார் கைதட்டி நகைத்தார்களோ அவர்களே அவரைப் பின்பு கையெடுத்துக் கும்பிட்டார்கள்.
இப்படியே, உள்ளத்தில் கோபமோ துக்கமோ மிகுந்து, குறிப்பிட்ட ஓர் எல்லையைக் கடக்கும் போது மற்றவைகள் எல்லாம் கீழே தாழும். இரண்டு பேர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஒருவனை மற்றவன் கத்தியால் குத்தப் போகிறான். அவ்வழியில் செல்லும் யாரோ ஒருவன் அவர்களுக்குள் சமாதானம் செய்து வைக்க இடையே புகுந்தால் அவனைக் குத்தி விடுகிறான். அவனா எதிரி? இவன் கோபம் தடுத்தவனைப் போய்ச் சாரக் காரணம் என்ன? கோபம் என்ற உணர்ச்சி மீதூர்ந்து நிற்கும்போது கடமை,தர்மம்,ஞாபகம்,ஞானம் ஆகிய எல்லாமே அழிந்து விடுகின்றன. அதுபோலவே காமம் என்னும் உணர்ச்சி மிகும் போது எல்லாம் கீழே போய்விடுகின்றன.
அருணகிரியார், ‘நான் காமத்தினால் கலவி என்னும் கள்ளை உண்ணுகிறேன்” என்று சொன்னார். ஆனால் அப்படி உண் டாலும் அவர் முற்றும் மயங்கவில்லை. அவருடைய மயக்கத்தில் ஒரு விஷயத்தில் மாத்திரம் நினைவு போகவில்லையாம்.
நிதானம் தவறாமை
ஆங்கிலேயர் அரசாட்சி செய்த காலத்தில் கள்ளின் தீமை பற்றிச் சொல்ல ஒரு சபை இருந்தது. அதில் இருந்தவர்கள் ‘குடிக்காதே’ என்று பிரசாரம் செய்வது இல்லை. “மிதமாய்க் குடி” என்று உபதேசம் செய்தார்கள். அந்தச் சபைக்கு மிதக்குடிப் பிரசார சங்கம் (Temperance League) என்று பெயர். மிதமாகக் குடிக்க வேண்டுமென்பதற்கு என்ன கணக்குச் சொல்வது? இரண்டு கிண்ணமா, ஐந்து கிண்ணமா? ஒரு புட்டியா, இரண்டு புட்டியா? “உன்னை மறக்காத நிலை வரைக்கும் சாப்பிடு. அதாவது, காபி சாப்பிடுகிறது போல உற்சாகம் வருவதற்குச் சாப்பிடு. புத்தி பேதலிக்கும்படி சாப்பிடாதே” என்று அந்தச் சங்கத்தார் சொன்னார்கள். ஆனால் சாப்பிடுகிறவன் அப்படி ஒரு திட்டத்தோடு நிற்பானா? நிதானம் இழந்துவிடுகிற வரைக்கும் குடிப்பான்.
லாகிரி வஸ்துக்களை உபயோகிக்கிறவர்களில் சிலர் பெருமை யாகப் பேசிக்கொள்வார்கள். “கள் சாப்பிட்டாலும் அதை ஒரு நிதானத்தில் வைத்திருக்கிறேன்” என்று சொல்வார்கள். சிலரைப் பற்றி, “அவன் குடித்திருந்தாலும் நிதானம் இழப்பதில்லை. மரியாதை தவறிப் பேசுவதில்லை” என்று சொல்வதை நாம் கேட்கின்றோம். அப்படிச் சொல்வதைப்போல அருணகிரியார் இந்தப் பாட்டில் பேசுகிறார்.