அடியார்க்கு நல்ல பெருமாள்
கி. வா.ஜகந்நாதன்
அடியார்க்கு நல்ல பெருமாள்
கோயில் என்றும் குளம் என்றும் அலைந்து, ருத்திராட்சம் என்றும் திருநீறு என்றும் அணிந்து, பஞ்சாட்சரம் என்றும் ஷடாட்சரம் என்றும் ஜபம் செய்து பக்தி பண்ணி வாழும் மக்களைப் பார்த்து எள்ளி நகையாடும் அறிவாளிகள் பலர் இப்பொழுது மலிந்து விட்டார்கள். கலைஞர்களாக இருந்தவர்கள் மாறித் தொழிலாளர்களாகி வருகிறார்கள். கலைஞன் தான் செய்யும் காரியத்தில் ஈடுபட்டு, தன்னை மறந்து, அக்காரியத்தால் கிடைக்கும் கூலியை வேலை செய்யும் போது மறந்து நிற்கிறான். தொழிலாளி தன் தொழிலைச் செய்யும்போது பின்பு அதனால் கிடைக்கின்ற பயனில் எப்போதும் நினைவு வைத்தே ஈடுபடுகிறான். இந்தத் தொழிலாளி மனப்பான்மை வளர்ந்து விட்டதனால் நாம் செய்யும் காரியங்கள் எல்லாம் அப்போதைக்கப்போது பலன் தரக்கூடியனவாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறோம்.
வையமும் வானமும்
தெய்வம் இருக்கிறதென்று யாராவது சொன்னால் அதை நம்ப மாட்டோம் என்று சொல்கிறோம். “அது கைமேல் பலன் தருகிறது அல்லவே!” என்று நினைப்பு. மாணவர்கள் இந்த முறையில் பேசக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். “வையத்தைப் பாராமல் வானத்தைப் பார்க்கிறீர்களே!” என்று பக்தர்களைப் பார்த்துச் சொல்ல அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் பெரு மக்களும் இருக்கிறார்கள். ஆண்டவனை நினைக்கிறவர்கள், “வையம் இன்னது, வானம் இன்னது” என்று தெரியாமல் வாழ்பவர்களென்று இவர்கள் நையாண்டி செய்கிறார்கள். வையத்தையும் வானத்தையும் ஒருங்கே நினைக்கின்ற சமயம் நம்முடையது என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள். வையத்தை நன்றாக உணர்ந்து கொண்டு வானத்தையும் எட்டிப் பிடிக்க முயன்றவர்கள் நம் நாட்டுப் பெருமக்கள். வையம் இன்னது என்றே தெரியாமல், வையத்தில் வாழ்வது எப்படி என்பதும் தெரியாமல் வாழ்கின்ற இக்கால மக்களுக்கு வானத்தைப் பற்றி எங்கே நினைப்பு வரும்?
வையத்தில் வாழும் வகை இன்னது என்றே தெரியாமல் இவர்கள் என்ன என்னவோ காரியங்களைச் செய்து துன்பப்படுகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கட்சி; ஒவ்வொரு நாளும் ஒரு கட்சி; ஓர் ஊரில் நூறு கட்சிகள்! பிளவும் வேற்றுமையும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. எந்த கொள்கையை யும் பத்து ஆண்டுக்குச் சேர்ந்தால் போலக் கடைப்பிடித்த அரசியல் தலைவர்கள் மிக அருமை. அரசியல் உணர்வு மலிந்து வருகின்ற இக்காலத்தில் சமயநெறிக் கொள்கைகளைப் பலர் எள்ளுகிறார்கள். வான வாழ்வை நினைப்பவர்கள் வைய வாழ்வைத் தாழ்வாகக் கருதுகிறார்களென்றும், வான வாழ்வை மறந்தவனே வையத்தில் நன்றாக வாழ முடியுமென்றும் எண்ணும் தவறான மனப்பான்மை அதிகமாக இருக்கிறது.
வேற்றுமையில் ஒற்றுமை
வையகம் என்பது ஒரு தனி மனிதன் மாத்திரம் வாழும் இடம் அன்று. ஒரு தனி மனுதனுடைய வள வாழ்வு உலகத்தின் வள வாழ்வு என்று கருத முடியாது. தனி மனிதனும் உடம்பை வைத்துக் கொண்டுதான் வாழ்கிறான். அந்த உடம்பிலும் பல உறுப்புக்கள் இருக்கின்றன. பூமியை நோக்கியிருக்கின்ற காலும், வானை நோக்கி இருக்கின்ற தலையும், பின்னோக்கி இருக்கின்ற முதுகும், முன்நோக்கி இருக்கின்ற மார்பும் அவன் உடம்பிலேயே உள்ளன. ஒவ்வோர் உறுப்பும் ஒவ்வொரு காரியத்தைச் செய்வதாகவும், ஒவ்வொரு திசையை நோக்குவதாகவும் இருக்கின்றன.”எல்லாக் காரியத்தையும் நான்தானே செய்கிறேன்?” என்று கை, அவன் உடம்பிலுள்ள காலை ஒடித்துவிட்டால் அவன் நன்றாக வாழ்வானா? உலகத்தில் பல கோடி மக்கள் இருக்கிறார்கள். அவரவர்களுடைய செயல்கள் வேறுபடுகின்றன. வைய வாழ்வு நன்றாக இருக்க வேண்டுமென்றால் அத்தனை கோடி மக்களின் வாழ்வும் நன்றாக இருக்க வேண்டும். ஒரு சமுதாயத்தில் பத்திரிகை ஆசிரியன் இருக்கிறான்; பள்ளி ஆசிரியன் இருக்கிறான்; தொழிலாளி இருக்கிறான்; முதலாளி இருக்கிறான்; பலவகைப்பட்ட தொழில், பலவகைப்பட்ட ஆசாரங்கள், பலவகைப் பட்ட பழக்கங்கள் உடைய மக்கள் சேர்ந்ததே சமுதாயம். உடம்பிலுள்ள உறுப்புக்கள் ஒன்றுக்கொன்று வேறுபாடாக இருக்கின்றன என்றாலும், அவை அவை அவ்வவற்றுக்குரிய செயலைத் திறம்படச் செய்து நன்றாக இருந்தால்தான் அவ்வுறுப்புக்களை உடைய மனிதன் நன்றாக வாழ்வான். அதைப்போல ஒருவருக் கொருவர் வேறுபடும் மக்கள் ஒரு சமுதாயத்தில் இருந்தாலும், அந்தச் சமுதாயம் நன்றாக வாழ அவரவர்கள் அவரவர்களுக்கு உரிய காரியங்களைத் திறம்படச் செய்ய வேண்டும். ‘வேற்றுமை யில் ஒற்றுமை” (Unity in diversity) என்பது இதுதான். வேறுபட்டவர்கள் எல்லோருடைய காரியங்களிலும் கட்டுப்பாடும் ஒற்றுமையும் நிலவினால்தான் சமுதாயம் நன்றாக இருக்கும்; வைய வாழ்வு இனிக்கும்.
வைய வாழ்வு நன்றாக அமைய வேண்டுமானால் நம் உடம்பு நன்றாக இருப்பது போதுமா? நம்மைச் சார்ந்தவர்களும் நன்றாக இருக்கவேண்டும். “குழந்தைக்கு உடம்பு சரியில்லை; மனைவிக்கு நோய் வந்திருக்கிறது” என்றால் நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியாது. ஆகவே நம்மைச் சுற்றிச் சூழ இருக்கிறவர்களும் நன்றாக வாழ்ந்தால் தான் நாமும் இன்பமாக இருக்க முடியும். இதுவரையில் நாம் ஒருவாறு உணர்கிறோம். இந்த முறையில் மேலும் அன்புடன் சிந்திப்போமானால் நாம் வாழ்கின்ற ஊர் நன்றாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பிறகு அந்த ஊர் உள்ள நாடு, அந்த நாடு திகழ்கின்ற தேசம், அந்தத் தேசம் அடங்கிய உலகம் எல்லாம் நன்றாக வாழவேண்டுமென்ற எண்ணம் வரும்; இவ்வுலகத்தில் வசிக்கும் உயிர்கள் எல்லாம் நன்றாக வாழவேண்டுமென்ற எண்ணமும் வரும். இப்படித் தன்னில் இருந்து ஆரம்பித்து, விரிந்து பரந்த உலகம் முழுவதும் நன்றாக வாழ வேண்டுமென்ற எண்ணம் வரவேண்டுமானால், நம்மைக் காத்துக்கொள்ள வேண்டுமென்று முதலில் தோன்றிய அன்பு வளர்ந்து வளர்ந்து முதிரவேண்டும்.
வேறுபாடற்ற காட்சி
அகன்ற உலகத்தை ஒரே சமுதாயமாக, வேறுபாடு இல்லாத சமுதாயமாகக் கண்ட ஞானிகள் பலர் இருந்திருக்கிறார்கள் நம் நாட்டில். “பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூர ணானந்தமே” என்று அன்பினால் குழைந்து பாடியிருக்கிறார் தாயுமானவர். அவருக்கு எல்லாம் இறை மயமாகத் தோன்றின.
“காக்கை குருவி எங்கள் சாதி –நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெ லாம்நாம் அன்றி – வேறில்லை
நோக்க நோக்கக்களி யாட்டம்“
என்று பாடுகிறார் பாரதியார். பாரதியார் கண்ட வேறுபாடற்ற சமுதாயத்தில் காக்கை குருவி ஆகிய சிற்றுயிர்கள் மாத்திரம் இடம் பெறவில்லை. உயிர் அற்ற ஜடப் பொருள்களான மலை யும், கடலும் கூட அவரது கூட்டத்தோடு சேர்ந்து விடுகின்றன. ஒன்றுக்கு ஒன்று வேறுபடுத்திப் பார்த்துத் துன்புறுத்தி, தாமும் துன்புற்று வாழ்கின்ற மக்களுக்கு அத்தகைய மனப்பான்மை வரவேண்டுமானால் கடவுள் உணர்வு வரவேண்டும்.