அடியார்க்கு நல்ல பெருமாள்
கி. வா.ஜகந்நாதன்
இரண்டு கரைகள்
வாழ்க்கையாகிய ஜீவநதிக்கு ஆண்டவன் இன்பம் துன்பம் என்ற இரண்டு கரைகளை வைத்திருக்கிறான். இந்தக் கரைகளை மீதூர்ந்து வருவது செல்வம் என்ற பெருக்கு. இந்தப் பெருக் கானது கரைகளை மோதினால் வாழ்க்கை அலங்கோலமாகிவிடும். இந்த வெள்ளப் பெருக்கைப் பார்த்து மயங்காது, பக்கத்திலுள்ள கரைகளைப் பார்த்துத் தேங்கிக் கிடக்காது, இவற்றை எல்லாம் கழித்து ஓடவிட்டால் ஆண்டவனாகிய கருணைக்கடலோடு கலக்கலாம்.
சுழித்தோடும் ஆற்றில் பெருக்கா
னதுசெல்வம்; துன்பம்இன்பம்
கழித்தோடு கின்றது எக்காலம் நெஞ்சே?
அருணை முனிவர் தம் நெஞ்சைப் பார்த்து உபதேசம் செய்கிறார். ஆயினும் நம் நெஞ்சங்களுக்குச் செய்த உபதேசம் அது.
கருணைக்கடல்
செல்வத்தைக் கண்டு மயங்கலாகாது. அது இன்று வரும்; நாளை மறையும். ஆற்றில் சுழித்தோடும் வெள்ளப் பெருக்கு வருவதுபோல வரும்; வெள்ளம் வடிவதுபோல வடிந்தும் விடும். இந்த ஆற்றுக்கு இன்பம்,துன்பம் ஆகிய இரு கரைகள் உண்டு. இந்த இரண்டையும் கழித்துவிட்டு வேகமாக நேரே போகவேண்டும். கடலில் கலக்கும்போது ஆறு கரைகளினின்றும் இழிந்துபோய்க் கலக்கும். கரை இல்லையே என்று அப்போது நினைக்கக் கூடாது. இங்கே கரைகள் இருக்கின்றனவே என்றும் நினைக்கக் கூடாது. இந்தக் கரைகளுக்கு அடங்கி, இவற்றை மோதாமல் போனால் கரையற்ற கருணைக்கடலில் கலந்து விடலாம்.
வேகமாக எங்கும் நிற்காமல் நேராகப் போவதற்குத்தான் ஆறு என்று பெயர். தேங்கி இருந்தால் குட்டை. அதில் பாசி படரும். ஓடும் ஆற்றில் பாசி படியாது. அதைப்போல வாழ்க்கை யாகிய ஆறு செல்வப் பெருக்கால் குலையாமல் இன்ப துன்ப மாகிய கரைகளை மோதிக் கொண்டு தேங்காமல் அவற்றை எல்லாம் கழித்துவிட்டு நேராகச் சென்றால் அதில் பாசம் தங்காது. அந்த ஆறு எங்கே ஓடிப்போய்ச் சேரவேண்டுமென்பதைப் பின்னே பாடுகிறார்.
காவிரிச் செங்கோடன்
அவரைப் பார்த்து, ‘செல்வத்தைக் கண்டு மயங்காமல், இன்ப துன்பங்களைக் கண்டு அஞ்சாமல் என்ன செய்யவேண்டும்? எங்கே போகவேண்டும்? கொஞ்சம் சொல்லுங்கள் சுவாமி!” என நாம் கேட்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் சொல்கிறார்.
கரிக் கோட்டுமுத்தைக்
கொழித்தோடு காவிரிச் செங்கோடன்
என்கிலை.
“நமக்கு இன்ப துன்பமற்ற நிலையைக் கொடுத்து ரட்சிக்கின்ற தந்தை ஒருவர் இருக்கிறார். அவர் எங்கே இருக்கிறார் தெரியுமா? ஓர் ஆற்றின் கரையில்தான் இருக்கிறார். காவிரி ஆற்றின் கரையில் திருச்செங்கோட்டில் இருக்கிறார்” என்று ஆரம்பிக்கிறார். ‘மனமே! நீ திருச்செங்கோட்டில் உள்ளவன் என்று தியானிக்கவில்லையே!” என்று சொல்கிறார்.
காவேரிக்கும் திருச்செங்கோட்டுக்கும் பத்து மைல் தூரம் உண்டு. இந்தக் காலத்தவர்கள், “திருச்செங்கோடு காவேரி ஆற்றின் கரையில் இருக்கிறதா? அருணகிரியார் அந்த ஊருக்கே போகாமல் இந்தப் பாட்டை எழுதியிருக்கிறார் போலிருக்கிறது” என்று சொல்வார்கள். ஆனால் அந்தக் காலத்தில் யாரும் கால்நடைக்கு அஞ்சினவர்கள் அல்ல. அருணகிரிநாத சுவாமி கால்நடையாகவே பல தலங்களுக்குச் சென்றிருக்கிறார். அவருக்குத் திருச்செங்கோட்டு வேலனிடத்தில் அதிக ஈடுபாடு உண்டு. அக்காலத்துப் பெரியவர்கள் நடையில் சிறந்தவர்கள்; அவர்கள் நாள்தோறும் காலையில் காவிரியில் நீராடிவிட்டு ஆறெழுத்தைச் சொல்லிக்கொண்டே பத்து மைலையும் கால் நடையாகவே கடந்து வந்து, திருச்செங்கோட்டு வேலவனைத் தரிசிப்பார்கள். நமக்கு ஆண்டவன் காவிரியிலிருந்து பத்து மைல் தூரத்தில் இருப்பவனாகத் தோன்றுவான். ஆனால் முயற்சி உள்ளவருக்கு, பக்தி உள்ளவருக்கு, கால் பலத்தைப் பெற்றவருக்கு, அவன் காவிரியிலிருந்து காலடியில் தான் இருக்கிறான். ஆகையால் காவிரிச் செங்கோடன் என்றார்.
காவிரியின் பெருமை
அந்தக் காவிரி எப்படி வருகிறது? நாம் போகின்ற வழியில் ஒரு சின்ன பொத்தான் கிடந்தால் அதை எடுத்துப் பைக்குள் போட்டுக் கொள்கிறோம். அது தங்கப் பொத்தானும் அல்ல; தந்தப் பொத்தானும் இல்லை; பிளாஸ்டிக் பொத்தான். காவிரி யிலோ தந்தம், முத்து முதலியன வருகின்றன. அவற்றை எடுத்துப் பெட்டிக்குள் போட்டு வைத்துக்கொள்ள அது நிற்கின்றதா? இல்லை. தான் சென்று சேரவேண்டிய லட்சியத்தைக் குறிக் கொண்டு போய்க்கொண்டே இருக்கிறது.
காவிரியின் பெருமை கங்கைக்குக்கூட வராது என்று சொல்லலாம். அதனால் கங்கை தாழ்ந்தது என்று பொருள் அன்று. காவிரிக்கு அடியார்களுடைய சம்பந்தம் அதிகம். காவிரி ஆற்றின் இரு மருங்கிலும் எங்கே பார்த்தாலும் தலங்கள். கங்கைக் கரையில் காசி முதலிய சில தலங்களே இருக்கின்றன. ஆனால் காவிரி பிறக்கும் இடம் முதற்கொண்டு கடலில் புகுகின்ற புகார் நகரம் வரையிலும் பல பல புண்ணிய தலங்கள் இருக்கின்றன. அந்தத் தலங்களுக்கு அடியார்கள் வருவார்கள். அவர்கள் நாள்தோறும் கும்பிடுவதனால் தலங்களுக்குப் பெருமை உண்டாகிறது. காவிரி நதியில் பல பல அடியார்களும்,முனிவர்களும், சமயாசாரியர்களும் வந்து வந்து நீராடி இறைவனை வழிப்பட்டிருக்கிறார்கள். அந்நீரெடுத்துச் சென்று இறைவனுக்கு அபிஷேகம் செய்திருக்கிறார்கள். ஆண்டவன் சம்பந்தமும், அடியார்களின் சம்பந்தமும் எப்போதும் இருப்பதனால் காவிரி மிகவும் சிறப்புடையது. அந்தக் காவிரி பெருமித நடை போட்டுக் கொண்டு வருகிறது.
காவிரியின் இயல்பு
கரிக்கோட்டு முத்தைக் கொழித்தோடு காவிரி.
கரிக்கோடு – யானையின் தந்தம். முதிர்ந்த யானைத் தந்தத்திலே முத்து விளையும் என்பார்கள். காவிரி நதி உற்பத்தி யாகின்ற மலைக் காடுகளில் யானைகள் பிறந்து வாழ்ந்து இறந்து படுகின்றன. அவற்றின் தந்தங்கள் இந்த ஆற்றிலே உருண்டு உருண்டு வருகின்றன. அதனால் அவை உடைந்து அவற்றில் இருக்கும் முத்துக்கள் அவ்வாற்றிலே சிதறுகின்றன. யானைத் தந்தத்திலே பிறக்கும் முத்துக்களைக் கொழித்து அரித்துக் கொண்டே காவிரி ஆறு போய்க்கொண்டிருக்கிறது. அம்முத்துக்களை அது சேமித்து வைப்பதில்லை.
அப்பர் செய்தது
அப்பர் சுவாமிகள் உலகத்து ஆசைகளைத் துறந்து உழவாரத் திருப்பணி செய்து கொண்டிருந்தார். அவருக்கு எந்தப் பொருளின் மேலும் ஆசை இல்லை என்பது இறைவனுக்குத் தெரியும். இருந் தாலும் உலகத்தாருக்குத் தெரிய வேண்டாமா? அதற்காக ஒரு பரீட்சை நடத்தினான். கல்லையும், முள்ளையும் செதுக்கி அடியார்கள் நடக்கும் பாதையைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார்
அப்பர் சுவாமிகள். அவர் வெட்டுகின்ற இடங்களில் பொன்னும் மணியும் கிடக்கும்படி செய்தான் இறைவன். ‘இது மணி யாயிற்றே; இது பொன் ஆயிற்றே’ என்று அப்பர் சுவாமிகள் எண்ணி அவற்றை வாரித் திரட்டிக் கொள்ளவில்லை. அடியார்கள் நடக்கும் இடத்தில் வெறும் கல் குத்துவது போலத்தானே மாணிக்கக் கல்லும் பொன் கட்டியும் குத்தும் என்று எண்ணிக் கல்லோடும் மண்ணோடும் சேர்த்து அவற்றையும் ஒன்றாகவே குவித்து அப்பால் கொண்டு போய்க் கொட்டினார். இப்படித்தான் அடியார்கள் இன்பத்தையும் துன்பத்தையும், செல்வத்தையும் கழித்துக் கொண்டே இருப்பார்கள்.
காவிரி கடலாகிய தன் தலைவனோடு கலப்பதற்காக நில்லாமல் வெகு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கரிக்கோட்டு முத்தை நின்று எடுக்காமல், அவற்றை அப்படியே கொழித்துக்கொண்டு ஓடுகிறது. மலரையும், தந்தத்தையும், முத்தையும், மணியையும் லட்சியம் செய்யாமல் ஓடுகிறது. அந்த ஆற்றின் கரையில் இருக்கிறான் நம்முடைய தலைவன். தான் இருக்கும் இடம் எல்லோருக்கும் தெரிவதற்காகத் திருச்செங்கோட்டு மலைமேல் இருக்கிறான்.
வேல்
செங்கோட்டில் இருப்பவன் யார்? செங்கோட்டு வேலன். எம்பெருமான் திருவுருவத்தில் வேலும் இருப்பதனால் செங் கோட்டு வேலன் என்றே சிறப்பாகச் சொல்வார்கள். “நாகாசல வேலன்” என்றும்,
“தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவனே“
என்றும் அருணகிரியார் கூறுவர்.
செங்கோட்டைப் பார்த்தால் போதாது.செங்கோடனிடத்தில் புகுகின்ற துறை ஒன்று இருக்கிறது. காவிரி ஆறு கடலோடு சங்கமம் ஆகும் துறை ஒன்று இருப்பது போலச் செங்கோடன் என்ற கருணைக்கடலோடு நம் உள்ளம் சங்கமம் ஆவதற்கு இங்கேயும் ஒரு துறை இருக்கிறது. அதுவே நம்முடைய அவித்தை யாகிய இருளைப் போக்கி ஞான ஒளியைக் கொடுக்கக் கூடிய வேல். அந்த வேலை அவன் தன் திருக்கரத்தில் வைத்திருக் கிறான். செங்கோடனைத் தியானம் பண்ண அந்த வேல் உதவியாக இருக்கும். வேலின் பெருமை என்ன?
குன்றம் எட்டும் கிழித்தோடு வேல்.
சூரபன்மன் அரசாட்சிக் காலத்தில் அவனுக்கு எல்லைக் கற்களாக நின்ற அஷ்ட குலாசலங்களையும் அந்த வேல் கிழித் தோடிற்று; பொடி பொடியாக்கியது.
வாழ்க்கையாகிய ஆற்றில் மூழ்கிக் கிடக்கும் நாம் காவிரி ஆற்றை நினைக்க வேண்டும். அது ஒரு கணம்கூட எங்கேயும் நிற்பது இல்லை. எந்தப் பள்ளத்திலும் தேங்கிக் கிடப்பது இல்லை. யானைத் தந்தத்தின் முத்துக் கிடைத்தாலும், பொன் கிடைத்தாலும் அவற்றை அது லட்சியம் செய்வதே இல்லை. அவற்றைக் கொழித்துக்கொண்டு வேகமாகக் கடலோடு சேரப் போய்க் கொண்டே இருக்கிறது. அதைப் பார்க்கும் போதாவது நாம் சென்று சேரவேண்டிய கருணைக்கடலாகிய செங்கோடன் நினைவு வருகிறதா? அவனோடு சங்கமம் ஆவதற்கு உரிய துறையாகிய வேல் நினைவுக்கு வருகிறதா?
“வாழ்க்கையாகிய சுழித்தோடும் ஆற்றில் பெருக்குப் போல வருகின்ற செல்வத்தை மதித்து மயங்கி நிற்கக் கூடாது. அவ்வாற்றின் கரைகள் போலுள்ள இன்ப துன்பத்தைக் கண்டு அஞ்சி நிற்கலாகாது. நடுவிலே தேங்கினால் பாசியாகிய பாசம் பிடிக்கும். வேகமாக ஓடுகின்ற ஆற்றில் பாசி படராது. பெருக் காகிய செல்வத்தையும், இன்ப துன்பமாகிய கரைகளையும் கழித்துவிட்டுக் கொண்டு நேராகச் செங்கோடனாகிய கடலோடு கலக்க அவன் திருக்கை வேலாகிய துறையைச் சென்று அடை வது எக்காலம்? செங்கோடனை நினையாமல், அவன் திருக்கை வேலை நினையாமல், செல்வத்தில் மயங்கி, இன்ப துன்பக் கரைகளை மோதிக்கொண்டு வாழ்க்கையில் பாசம் படரத் தேங்கிக் கிடக்கிறாயே! நமக்கு முத்தி எப்படிக் கிட்டும் மனமே!” என்று அருணகிரியார் இப்பாட்டில் பாடுகிறார்.
சுழித்தோடும் ஆற்றில் பெருக்கா
னதுசெல்வம்; துன்பம்இன்பம்
கழித்தோடு கின்றதுஎக் காலம்?நெஞ்
சே!கரிக் கோட்டுமுத்தைக்
கொழித்தோடு காவிரிச் செங்கோடன்
என்கிலை; குன்றம்எட்டும்
கிழித்தோடு வேல்என் கிலை;எங்ங
னேமுத்தி கிட்டுவதே?
[சுழிகளைச் சுழித்து ஓடுகின்ற வாழ்க்கை ஆற்றிலே வெள்ளம் போல் வந்து போவது செல்வம்; அந்த ஆற்றின் கரைகளைப் போன்ற துன்பம் இன்பம் என்னும் இரண்டையும் கடந்து ஓடுகிறது எந்தக் காலம்? நெஞ்சமே! யானையின் கொம்பிலே விளைந்த முத்துக்களை அரித்துக் கொண்டு ஓடும் காவிரியாற்றுக்கு அருகில் உள்ள திருச்செங்கோட்டில் வாழும் முருகன் என்று சொல்லவும் எண்ணவும் இல்லை; எட்டுக் குன்றுகளையும் கிழித்து ஓடிய வேல் என்று சொல்லவில்லை. நமக்கு முத்தி எவ்வாறு கிட்டும்?
பெருக்கு – வெள்ளம். கரிக்கோடு – யானையின் கொம்பு. என்கிலை – என்று எண்ணவில்லை; என்று துதிக்கவில்லை.]