அடியார்க்கு நல்ல பெருமாள்
கி. வா.ஜகந்நாதன்
கருத்தில் செல்வம்
எந்தப் பொருளை எந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறோமோ அதற்கு ஏற்பத்தான் அதற்கு மதிப்பு. நமது கருத்தில் வைக்க வேண்டிய பொருளைக் கையில் வைத்துக் கொள்கிறோம். கையில் இருக்கவேண்டிய பொருளைக் கருத்துப் பொருளாக்கிக் கொண்டு திண்டாடுகிறோம். இதனால் ஏற்படும் துன்பந்தான் உலக வாழ்க்கை யில் மிக அதிகம்.
கப்பல் போகும்போது கடல் கொந்தளிக்கிறது. அலை எத்தனை தான் நான்கு தென்னை மரம் உயரம் எழும்பிக் கொந்தளித்தாலும் கப்பலில் ஓட்டை இல்லாத வரைக்கும் பயம் இல்லை. ஆனால் கடல் மிக அமைதியாக இருக்கிறது என்றாலும் கப்பலில் சிறிய ஓட்டை இருக்குமானால் கடல் நீர் உள்ளே வந்துவிடும். தண்ணீர் வெளியே எத்தனைதான் கொந்தளித்துக் கொண்டிரந்தாலும் கவலை இல்லை. தண்ணீர் கப்பலுக்குள் வரத் தொடங்கினால் கப்பலுக்கே ஆபத்து.
வாழ்க்கைக்குத் தேவையானது செல்வம். செல்வம் நம் கையில் இருக்கிற வரைக்கும் ஆபத்து இல்லை. செல்வம் கை அளவிலே இருப்பதோடன்றி, உள்ளே கருத்திலே புகுந்துவிட்டால் கப்பலுக்குள் தண்ணீர் புகுந்ததுபோலத்தான். கைப்பொருளாக வைக்க வேண்டி யதைக் கருத்துப் பொருளாக வைக்கக் கூடாது. கருத்துப் பொருளாக ஏறிவிட்டால் அது கருத்திற்குரிய மற்றப் பொருளை எல்லாம் அழித்துவிடும். ஆகவே அதைச் செய்யக் கூடாது என்று நமக்குச் சொல்ல வருகிறார் அருணை முனிவர். அதை அலங்காரமாகச் சொல்கிறார்.
வாழ்க்கையாறு
நமது வாழ்க்கை ஒரு பேராறு. இது சென்று கொண்டே இருக்கும்பொழுது மரணம் என்கின்ற பெரிய ஏரிகளில் புகுந்து புகுந்து மறுபடி வெளிப்பட்டு வந்து கொண்டே இருக்கும்.
பெரும்பாலும் காட்டாறுகள் வறண்டு கிடக்கும். வெள்ளம் வந்தால் மேடு பள்ளமாகிவிடும். கரைகளை உடைத்துக் கொண்டு பல ஊர்களையே அழித்துவிடும். வயல்கள் மணல் மேடாகி விடும். இப்படிக் காட்டாற்றில் வெள்ளம் வருவது போலவே செல்வம் வருகிறது. எவ்வளவுதான் பொருளாதாரத் தத்துவம் படித்தாலும் யாராலும் நினைத்தபொழுது நினைத்த அளவு செல்வத்தைப் பெற முடிவதில்லை. திடீரென்று வெள்ளத்தைப் போலவே அது வருகிறது. வந்த இடம் தெரியாமல் வடிந்தும் போகிறது. ‘செல்வம்’ என்ற சொல்லுக்கே, ‘போவோம்’ என்று பொருள்.
“நிறைசெல்வம், நீரில் சுருட்டும் நெடுந்திரைகள்”
என்று குமரகுருபர முனிவர் சொல்கிறார். அவர் பாடுவதற்கு முன்பே பாடியிருக்கிறார் அருணகிரியார்.
“சுழித்தோடும் ஆற்றில் பெருக்கா னதுசெல்வம்.”
இரண்டு ஆறுகள். ஒன்று நாம் காணாத ஆறு. ஆனால் அந்த ஆற்றில்தான் நாம் அமிழ்ந்திருக்கிறோம். அதுதான் நமது வாழ்க்கை ஆறு. நல்ல ஆறு என்பது இரண்டு கரையும் சரியாக இருந்து, எந்த இடத்திலும் தங்காமல், குழம்பித் தேங்கி நிற்காமல் நேராகச் சென்று கடலில் போய் விழும். அப்படி இல்லாவிட்டால் கொந்தளிப்பு நிரம்பிய கடலில் போய் விழுவதற்குள் தனக்குள் பலரை விழப்பண்ணும். நமது வாழ்க்கையாகிய ஆறு பெரிய காட்டாறாக இருக்கிறது அதில் திடீர் திடீரென்று செல்வமாகிய வெள்ளம் வருவதும், வந்த சுவடு தெரியாமல் வடிவதுமாக இருக்கிறது.
‘எனக்கு அவனைத் தெரியும் அப்பா! எங்கள் தகப்பனா ரிடத்தில் கடன் வாங்கி அந்தக் கடையைத் திறந்தான். இன்று லட்சாதிபதி ஆகிவிட்டான்” என்று ஒருவனுடைய வாழ்க்கை யாற்றில் வெள்ளம் வந்ததைப் பற்றிப் பேசுவதைக் கேட்கிறோம்.
“அடேயப்பா! உட்கார்ந்து சாப்பிட்டாலும் மூன்று தலைமுறை களுக்குச் சாப்பிடலாமே! அத்தனை சொத்து அல்லவா அவனிடம் இருந்தது? எப்படி அவன் இந்தக் கதிக்கு வந்தான்? மாட மாளிகையில் வாழ்ந்தவன் நடுச்சந்தியில் நிற்கிறானே!” என்று ஒருவனுடைய வாழ்க்கை ஆற்றில் வெள்ளம் வடிந்ததைப் பற்றிப் பேசுவதையும் கேட்கிறோம்.
கடலில் சேரும் ஆறு
செல்வம் என்பது திடீரென்று வருகின்ற பெருக்கு. பெருக்கு வரும்போது செருக்கும் வருகின்றது. வாழ்க்கையாற்றில் அந்தப் பெருக்கு வருகிறது. அந்த ஆற்றுக்கு இன்பம் துன்பம் என்று இரண்டு கரைகள். ஆற்றிலே போகின்ற வெள்ளம் கரைகளை நோக்கிப் பாய்ந்தால் அவை உடைத்துக் கொள்ளும். கரைகளை அடுத்துள்ள கிராமங்கள் அழிந்துவிடும். ஆனால் நல்ல ஆறு, எத்தனை வெள்ளம் வந்தாலும் கரைகளைப் பார்க்காமல் தான் போய்ச் சேரவேண்டிய கடலையே பார்க்கும். வாழ்க்கையாகிய ஆற்றிலே செல்வமாகிய வெள்ளம் வரும்போது இன்பம், துன்ப மாகிய இரு கரைகளையும் பார்க்காமல், சென்று சேருகின்ற கடலைப் பார்த்து, லட்சியத்தைப் பார்த்துச் சென்றால் அந்த ஆறு நிச்சயமாகக் கடலைப் போய்ச் சேரும். அது நல்ல ஆறு ஆகும்.
வாழ்க்கையாறு கடவுள் என்ற கருணைக் கடலைப் போய்ச் சேரவேண்டும். கடலைப் போய்ச் சேருகின்ற ஆற்றிலே எத்தனை வெள்ளம் வந்தாலும் பயம் இல்லை. அலை மோதினாலும் பய மில்லை. கடலைப் போய்ச் சேரவேண்டுமென்ற நினைப்பு இல்லாத ஆறு வெள்ளம் வரும்போது கரைகளைத் தாக்கி உடைத்துக் கொண்டு பல விதமான நாசத்தை உண்டாக்குகிறது. வாழ்க்கை என்னும் பெரிய காட்டாற்றில் செல்வம் என்ற வெள்ளம் வரும் போது அது இன்பம் என்ற கரையையும், துன்பம் என்ற மற்றொரு கரையையும் மோதுகிறது.
முன்னை வினைப்பயன்
ஒரே நிலையில் இருக்கின்ற இரண்டு பேரைப் பாருங்கள். ”இன்பத்தை அடைவதற்குக் காரணமான செயல் ஒன்றும் அவன் செய்யவில்லையே! இருந்தாலும் அவன் இன்பத்தை அநுபவிக் கிறானே! நான் துன்பத்தை அடைவதற்கு உரிய காரியம் எதையும் செய்யவில்லையே! நான் துன்பப்படுகிறேனே!” என்று சொல் பவர்கள் உண்டு. துன்பத்தை அடைவதற்குரிய காரியங்கள் எதையும் அவன் இப்பொழுது செய்யவில்லை என்பது உண்மை. முற்பிறவியில் செய்திருக்கிறான். செய்யும்போது நாம் தீய செயல்களைச் செய்கிறோம் என்று எண்ணுவதில்லை. செய்ததைச் செய்துவிட்டு அடுத்த பிறவியில் அதன் பயனை அனுபவிக்கும் போது அழுகிறோம். முன் செய்த வினை என்று உணர்ந்து, இப்போதாவது நல்லது செய்வோம் என்று இருப்பதில்லை.
பட்டினத்தார் வரலாறு
பட்டினத்தார் கதையில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. அவர் கப்பல் கப்பலாகச் செல்வத்தை ஈட்டி வாழ்ந்தவர். அவரிடம் இருந்த செல்வம் அவ்வூர் அரசனிடம் இருந்ததில்லை. சில சமயங்களில் கடன் வேண்டுமானால் அவ்வரசன் பட்டினத்துப் பிள்ளையை நாடுவான். அத்தனை செல்வத்தையும் உடையவராகிய பட்டினத்தார், “சுழித்தோடும் ஆற்றில் பெருக்கானது செல்வம்” என்பதை உணர்ந்து அதை விட்டவர். எல்லாச் செல்வத்தையும் விட்டுவிட்டு அவர் மரத்தடியில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அவர் துறவியானது தெரிந்து வருந்திய அரசன் அவரை அழைத்து வரும்படி ஒருவனை அனுப்பினான். “செட்டியார் ஐயாவைக் கூப்பிட்டு வரச் சொல்கிறார் அரசர்” என்று சொல்லிக் கொண்டு அரண்மனை சேவகன் வந்தான். அவன் கூறியது எதுவும் தியானத்தில் இருந்த அவர் காதில் விழவில்லை. அடுத்தாற்போல ஓர் அதிகாரியை அனுப்பி வைத்தான் அரசன். பின்பு அமைச்சர் ஓடிவந்தார். பட்டினத்தார் எழுந்திருக்கவில்லை. அவர் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
பிறகு அரசனே வந்துவிட்டான். அவர் பக்கத்தில் மெல்லச் சென்று நின்றான். அவருடைய தியானம் கலைந்த நேரத்தில், “தாங்கள் இந்தக் கோலம் கொண்டுவிட்டீர்களே! இதில் என்ன லாபத்தைக் கண்டீர்கள்?” என்று கேட்டான். அவர் உடனே, ”நாம் இருக்க, நீர் நிற்க” என்றாராம். அரசன் அவரிடம் கடனாகப் பொருளை வாங்கினாலும் அவர் அவனுக்குப் பணிந்து நின்றார் முன்பு. இப்போது அரசன் அருகில் நிற்க, அவர் எழாமல் கால் மேல் கால் போட்டுக்கொண்டு வீற்றிருந்தார்.
அவருக்கு உண்மையான பகுத்தறிவு இருந்தது. யார் கடவுளை நிச்சயமாக நம்புகிறானோ, யார் இன்ப துன்பத்திற்கு மூலகாரணம் உண்டென்று நம்புகிறானே அவன்தான் பகுத்தறிவாளி. பட்டினத்தடிகள் வாழ்க்கையில் எவ்விதத் தவறும் செய்யவில்லை. ஒரு முறை அவர்மேல் திருட்டுக் குற்றம் சாற்றித் தூக்கிலிடக் கொண்டு போனார்கள். தூக்கு மேடைக்கு முன்னால் நின்றார். அவர் செய்யாத திருட்டுக்கு அவருக்குத் தண்டனை கொடுக்கத் தூக்கு மரம் நின்றது. தம் வாழ்க்கை ஏட்டைப் புரட்டிப் பார்த்தார். அந்தத் துன்பத்தை அநுபவிப்பதற்குரிய காரியம் எதையும் அவர் செய்ததாகத் தெரியவில்லை. தமக்குத் தெரியாத பழங் கணக்கில் இதற்குக் காரணமான வினை இருக்கவேண்டும் என்று தெளிந்தார்.
“என்செய லாவது யாதொன்றும் இல்லை இனித்தெய்வமே
உன்செய லேயென்று உணரப்பெற் றேன்இந்த
ஊன்எடுத்த பின்செய்த தீவினை யாதொன்றும் இல்லை;
பிறப்பதற்கு முன்செய்த தீவினை யேஇங்ங னேவந்து மூண்டதுவே.”
”இறைவனே! எனக்கென்று செயல் ஒன்று இருப்பதாக இப்போது எண்ணவில்லை. எல்லாம் உன் செயல் என்று உணர்கிறேன். இந்த உடம்பை எடுத்த பிற்பாடு நான் செய்த தீவினை ஒன்றும் இல்லையே.நான் முன் பிறவியில் செய்த தீவினை இப்படி வந்து மூண்டதுபோலும்” என்று பாடினார். உடனே தூக்குமரம் எரிந்துவிட்டது என்று கதை சொல்வார்கள்.
இன்பமும் துன்பமும்
இன்பம் துன்பம் ஆகிய இரண்டு விளைவுகளும் இப் பொழுது செய்கின்ற காரியங்களின் பலன் அல்ல. முந்திய பிறவிகளில் செய்திருக்கும் செயல்களின் பயன். அப்படி விளையும் இன்ப துன்பம் ஆகிய இரண்டு கரைகளுக்கும் உட்பட்டு வாழ்க்கை யென்றும் ஆறு செல்லும்போது இவ்விரண்டு கரை களையும் லட்சியம் செய்யாமல் இவற்றோடு மோதாமல் நேராகச் சென்றால் இறைவனாகிய கருணைக் கடலுடன் எளிதில் கலந்துவிடலாம்.
மிச்ர கர்மங்களின் பயனாக மனிதப் பிறவி வருகிறது. பாவத்தை மாத்திரம் செய்தவனாக இருந்தால் விலங்காகப் பிறப்பான்.
புண்ணியத்தை மாத்திரம் செய்தவனாக இருந்தால் தேவனாகப் பிறப்பான். புண்ணியம், பாவம் ஆகிய இரண்டையும் கலந்து கலந்து செய்ததனால் மனிதனாகப் பிறந்து, ஒரு பக்கம் இன்பம், ஒரு பக்கம் துன்பம் ஆகிய கரைகளை உடைய வாழ்க்கை ஆற்றில் செல்கிறான். இரண்டு பக்கமும் கரை உடையதுதான் ஆறு.
இன்பம் அடையும்போது நம்முடைய பெருமையால் இதனை அடைந்தோம் என்று செருக்கு அடைவதும், துன்பம் வரும்போது அதற்குக் காரணம் பிறரென்று எண்ணிக் கோபம் கொள்வதும் மனிதன் இயல்பு. இரண்டு நிலைகளிலும் முன்னை ஊழ்வினையே காரணம் என்று உணர்ந்து இறைவனை நினைக்க வேண்டும். இறைவன் தன்னை நினைப்பதற்காகவே துன்பத்தைக் கொடுக்கிறா னென்று பெரியவர்கள் எண்ணுவார்கள். துன்பம் வரும்போது, துன்பத்தைத் தந்த ஆண்டவனை மனத்தில் நினைக்கிறவனுக்குக் கோபம் வராது.
துன்பத்திற்கு உண்மையான காரணம் யாரோ, அவனைக் கோபிக்கலாம். துன்பத்திற்குக் காரணம் யார்? ஆண்டவன் அல்ல. வலக்கை இடக்கையை அடித்தது. வலக்கை முன் பிறவி; இடக்ககை அடி வாங்குகிற இந்தப் பிறவி. முன் பிறவியில் நாம் செய்த தீவினைகளே இப்பிறவியில் நமக்குத் துன்பமாக விளை கின்றன என்பதை உணர்ந்தால் நம்மை நாமே கோபித்துக் கொள்ளவேண்டும்.