அடியார்க்கு நல்ல பெருமாள்
கி. வா.ஜகந்நாதன்

இரண்டு ஆறுகள்

முன் பாட்டிலே அருணை முனிவர் புத்தித் தரங்கம் தெளிவதற்குப் பக்தித் துறை இழிந்து ஆனந்தவாரி படியவேண்டும் என்றார். ஒரு பொருளைச் சொன்னால் அதைச் சார்ந்துள்ள பொருள்களின் நினைவும் உடன் வரும். அதைப் போலவே முன் பாட்டில் ஆனந்தவாரியைச் சொன்னவர் அடுத்த பாட்டில் இரண்டு ஆறுகளைப் பற்றிச் சொல்கிறார். ஒன்று நம்முடைய வாழ்க்கையாகிய ஆறு; மற்றொன்று காவிரியாறு.

மனிதன் தன் வாழ்நாளில் காமத்தினால் அடைகின்ற துன்பம் கொஞ்ச நஞ்சம் அல்ல. உலகத்து மக்கள் எல்லாம் பெரும்பாலும் காமத்திற்கும், செல்வத்திற்கும் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். மக்கள் இறைவன் திருவருளைப் பெறாமல் இருப்பதற்குத் தடையாக உள்ளவை அவை இரண்டும். காமினீ காஞ்சனம் என்று அடிக்கடி சொல்வார் இராமகிருஷ்ண பரமஹம்சர். ‘அவை இரண்டுமே உலகத்தை இருள் உலகம் ஆக்குபவை. இந்த காமினீ காஞ்சனம் ஆகிய இரண்டையும் யார் வென்று விடுகிறார்களோ அவர்களுக்கு ஆண்டவன் திருவருள் கைமேல் கிடைக்கும்” என்பதற்குப் பலவகையான உதாரணங்களை எடுத்துக் காட்டியிருக்கிறார்.

செல்வப் பற்று

மனிதனுக்குப் பருவத்திலே துன்பம் தருவது காமம். எல்லாப் பருவத்திலும் மக்களை மாயையின் பிரதிநிதியாக இருந்து ஆட்டி வைப்பது செல்வம். செல்வத்தினிடம் மக்களுக்கு அவ்வளவு பற்று இருப்பதற்குக் காரணம் என்ன? இந்திரியங்களால் பெறுகின்ற இன்பங்களுக்குக் காரணமாகிய பண்டங்களை மிகுதியாக ஒருவன் சேர்த்து வைத்துக்கொள்ள முடியாது. பாதாம் ஹல்வாவும் இட்டிலியும் நாக்குக்குச் சுவையாக இருக்கின்றன என்று ஓர் ஆண்டிற்கோ, ஒரு மாதத்திற்கோ வேண்டிய அளவு யாராவது சேர்த்து வைத்துக் கொள்ள முடியுமா? மூக்குக்கு நல்ல மணத்தைத் தருகின்றது மலர் என்று கொண்டு வந்து சேர்த்து வைத்துக் கொண்டால் எவ்வளவு நாளைக்கு வாடாமல் இருக்கும்? இந்திரியங்களின் நுகர்ச்சிக்கு உரிய பண்டங்களை வேண்டும் போது வேண்டிய அளவில் பெறுவதற்கு உரிய கருவியாக இருப்பது செல்வம். செல்வம் இருந்தால் எந்தக் காலத்திலும் இந்திரிய நுகர்ச்சிக்கு உரிய பொருளாக அதை மாற்றிக் கொள்ளலாம். எந்தச் சமயத்திலும் எந்தப் பொருளையும் வாங்கிக் கொள்ளலாம். அதனால் தான் செல்வத்தைச் சேர்ப்பதில் அத்தனை ஆர்வம் மக்களுக்கு இருக்கிறது.

மனிதன் தனக்கு வேண்டிய அத்தனை பண்டங்களையும் பணத்தாலே பெற்றுவிடலாம். பழங்காலத்தில் பெண்மை நலம் போன்ற சிலவற்றைப் பணத்தால் பெற முடியாது. நினைத்த பெண்களை நினைத்தபொழுது பணத்தால் மணக்க முடியாது. ஆண்டவனிடத்தில் அடிமை செய்கிற மனசைப் பணத்தால் மாற்ற முடியாது. அந்தக் காலத்திலேயே செல்வத்திற்கு எத்தனையோ ஆற்றல் இருந்தது என்று சொல்கிறார்கள். எல்லாவற்றையும் பணத்திற்கு விற்றுவிடும் காலம் இது. ‘நமக்கு என்று ஒரு கொள்கை இல்லாமல், ஒரு கட்டுப்பாடு இல்லாமல் பணத்தால் யாரும் எதையும் சாதித்துவிடலாம். பணம் இருந்தால் போதும்; இந்திரியங்களின் நுகர்ச்சிக்குத் தேவையான எல்லாப் பொருளையும் பெற்றுவிடலாம்’ என்ற செருக்கேறியிருக்கிற காலம் இது.

அருளிலார்க் கவ்வுலகம் இல்லை பொருளிலார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு

என்று வள்ளுவர் சொல்கிறார். நிச்சயமாகச் செல்வந்தான் இவ் வுலகத்தை ஆளுகிறது. ஆகவே மலை மலையாகக் குவிக்க வேண்டுமென்ற வேட்கையினாலே பலர் பொருளை ஈட்டுகிறார்கள். அருளை அடைய இறைவனை வழிபட வேண்டுமானாலும், இறைவனுக்கு உற்சவங்கள் செய்வதானாலும் பணம் இல்லை என்றால் முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டு வருகிறது. இறைவனுக்கு அருச்சனை செய்ய வேண்டும்; நம் வீட்டுத் தோட்டத்திலே பூச்செடிகள் வைக்கவில்லை; கடைக்குச் சென்று காசு கொடுத்துப் பூ வாங்கி வரவேண்டி இருக்கிறது. இறைவனுக்குப் பால் அபிஷேகம் செய்ய வேண்டும்; நம் வீட்டிலே பசுமாடு வைத்திருக்கவில்லை; மாட்டுக்காரனிடம் பணம் கொடுத்துப் பால் வாங்கி அபிஷேகம் செய்கிறோம். இப்படி விலை கொடுத்து எல்லாப் பொருளையும் வாங்குகிற உலகத்தில் நினைத்தால் பொம்மை வாங்கலாம்; பெண்களை வாங்கலாம்; கோயிலை வாங்கலாம்; கடவுளையும் வாங்கிவிடலாம் என்கிற செருக்கு ஏறிக்கொண்டிருக்கிறது.

முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்

என்று மாணிக்கவாசகர் பாடுகிறார்.

அருளியல் வியாபாரம்

அந்தக் காலத்தில் கடவுளை வாங்கிய மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் தம்மைக் கடவுளுக்கு விற்றுவிட்டுக் கடவுளைத் தாம் பெற்றார்கள்.

தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னை

என்று இந்த வியாபாரத்தைப்பற்றி மாணிக்கவாசகர் சொல்வார்.

சகாதேவன் கடவுளை வாங்கினான்; பிரகலாதன் வாங்கினான்; அப்பர் சுவாமிகள் வாங்கினார்.

அவர்கள் செய்த வியாபாரம் எத்தகையது? இந்த உலக இயலிலே ஒரு பண்டத்தைக் காசு வாங்கிக் கொண்டு ஒருவனுக்கு விற்றுவிட்டால் இவனிடம் காசுதான் இருக்கும். பண்டம் வாங்கினவனிடத்தில் போய்ச் சேர்ந்துவிடும். ஒருவனிடம் ஒரு டார்ச்சு விளக்கு இருக்கிறது. இருளில் போய்க் கொண்டிருக் கிறான். எதிரே வருகிறவன் ஒருவனிடம் இருந்த டார்ச் எரியவில்லை. “அப்பா! உன் விளக்கைக் கொடு” என்று இவனிடம் இருப்பதை அவன் வாங்கிப் போய் விட்டால் இவனிடம் வேறு விளக்கு இல்லாமல் இவன் இருளில் தடுமாறவேண்டியதுதான். உலகியல் வியாபாரம் இதைப் போன்றது. அருளியல் வியாபாரம் இத்தகையதன்று; அது உலகியலுக்கு மாறானது.

ஒருவனிடம் எரிந்து கொண்டிருக்கும் அகல் விளக்கு இருக்கிறது. எத்தனை விளக்கைக் கொண்டுவந்து வேண்டுமானாலும் அந்த அகல் விளக்கில் ஏற்றிக் கொள்ளலாம். அதே சமயம் இங்கேயும் விளக்கு இருக்கும். மற்றவர்களிடத்திலும் இந்த விளக்கிலே ஏற்றிய விளக்குகள் இருக்கும். அதைப் போலவே அருளியல் உலகில் வியாபாரம் செய்கிறவர்கள் தங்களிடத்தி லுள்ள பொருளைத் தங்களிடத்தில் இருக்கும்போதே பிறருக்கும் கொடுப்பார்கள். இது மிக அற்புதமான வியாபாரம். வியாபாரி தம்மிடத்தில் உள்ள பொருளைச் செலவழிக்காமலேயே அதை விற்று லாபம் அடைவதென்றால் ஆச்சரியமாக இல்லையா? பிர பஞ்சத்திலே இதைப்போன்ற வியாபாரம் வேறு எதுவும் இல்லை. இத்தகைய அருள் வியாபாரிகள் கூட்டத்தைச் சேர்ந்தவர் அருண கிரியார். அவர்களுக்குப் பொருளினிடம் மோகம் இல்லை.

காந்தியடிகளின் பெருமை

வாழ்க்கையின் ரூபாய், அணா, பைசாதான் எல்லாம் என்று நாம் நினைக்கிறோம். பணம் இல்லாவிட்டால் வாழ்வே இல்லை, மதிப்பே இல்லை என எண்ணிப் பணத்திற்காகவே பேயாகப் பறக்கிறோம். இது பொய் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். மகாத்மா காந்தி இறக்கும்போது அவரிடம் ஆறு ஏழு சாமான் களே சொந்தமாக இருந்தன என்பதை நாம் பார்த்தோம். அவர் செல்வத்தை வைத்துக்கொண்டு வாழவில்லை. ஆனால் செல்வம் அவர் காலடியில் வந்து விழுந்து கிடந்தது. அவர் பரமேசுவரனைப் போல வாழ்ந்தார். பரமேசுவரன் கையில் கபாலம் ஏந்தி, இடை யில் புலித்தோல் உடுத்து, மேனியெல்லாம் சுடலைப் பொடி பூசி ஆண்டியாகத் திரிகிறான். அவனுடைய நண்பன் குபேரன். எத்தனை பணம் வேண்டுமானாலும் பரமேசுவரனுக்குக் கொண்டு போய்க் கொட்ட ஆயத்தமாகத் தன் கருவூலத்தைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறான். யாராவது குபேரனுக்குப் பரமேசுவரன் நண்பன் என்று சொல்கிறார்களா? குபேரனால் பரமேசுவரனுக்குப் பெருமை உண்டா? இல்லை. குபேரன் தன்னைப் பரமேசு வரனுடைய நண்பன் எனச் சொல்லிப் பெருமைப்படுகிறான்.

நம்முடைய வாழ்நாளில் பிர்லா என்ற குபேரனைப் பார்த்தோம்; காந்தியடிகள் என்ற பரமேசுவரனையும் பார்த்தோம். யாராவது பிர்லாவுக்குக் காந்தியடிகள் நண்பர் என்று சொன்னது உண்டா? பிர்லாவைச் சொல்லும் போது காந்தியடிகளின் சிஷ்யர் என்று சொன்னார்கள். செல்வம் மதிப்பை உண்டாக்காது என்பதை நமக்குப் பிரத்தியட்சமாகக் காட்டியவர் காந்தியடிகள். அதை நாம் பார்த்த பிறகாவது நமக்குச் செல்வத்தினிடத்தில் மதிப்பு இல்லா மல் இருக்கிறதா?

செல்வத்தை அவமதிக்க வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. அதை அளவுக்கு மிஞ்சி மதிக்கக் கூடாது. மதிப்பு வைப்பதற்குரிய பிற பொருள் இருக்கும்போது அதை மறந்து செல்வத்தையே மதித்து வாழ்கிறோம். அவ்வாறு மதிப்பதற்கும் ஓர் அளவு இருக்க வேண்டாமா? அந்த அளவை மீறும்போது தீங்கு உண்டாகிறது.