அடியார்க்கு நல்ல பெருமாள்
கி. வா.ஜகந்நாதன்
2
ஆறறிவுடைய மனிதன்
மனிதன் உலகத்தில் வாழ்கிறான். விலங்கினங்களும் வாழ்கின்றன. விலங்கினங்களைவிட மனிதன் உயர்ந்தவன். விலங்கினங்களுக்கு இல்லாத சிறப்பு மனிதனிடத்தில் என்ன இருக்கிறது? “மனிதனுக்கு மனம் இருக்கிறது; விலங்கினங் களுக்கு அது இல்லை” என்று சொல்லலாமா? தம் எசமானன் யார் என்பது அவற்றுக்குத் தெரிகின்றது.எசமானன் அடிக்க வருகிறான்,தடவிக்கொடுக்க வருகிறான், உணவு போட வருகிறான், தன்னுடைய குட்டிக்குப் பால் கொடுக்க வேண்டும், என்ற எண்ணங்கள் அவற்றுக்கும் இருக்கும்போது அவற்றுக்கு மனம் இல்லை என்று சொல்லக் கூடாது. ஆனால் புத்திக்கூர்மை, அறிவு நுட்பம் இல்லை என்று சொல்லலாம். இதைச் செய்ய வேண்டும், இன்னதை ஒழிக்க வேண்டும் என்று பகுத்துப் பார்க்கின்ற நுண்ணறிவு, அறிவின் கொழுந்து, அவற்றினிடம் காணப்படவில்லை. மனிதனும் ஆராய்ந்து பார்க்கின்ற அறிவை விட்டுவிட்டால் விலங்காகத்தான் ஆகிறான்.
“தக்க இன்ன தகாதன இன்னவென்
றொக்க உன்னல ராயின் உயர்ந்துள
மக்களும் விலங்கே“
என்பர் கம்பர்.
விலங்கைக் காட்டிலும் மனிதன் உயர்ந்தவன் என்று சொல் வதற்குக் காரணம், பிராணிகளிடம் இருக்கும் ஐந்து அறிவையும் விடச் சிறந்த ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு அவனிடத்தில் இருக்கிறது.
கலங்கிய புத்தி
புத்தியில் எப்போதும் அலை அடித்துக்கொண்டிருக்கிறது. பல தரங்கங்களை உடையது புத்தி. இது நல்லது, இது கெட்டது என்று எண்ணி எண்ணித் திண்மையில்லாமல் ஐயம் அடைகிறது. அதனால் பிறவிக்குக் காரணமான பல இயல்புகளை மேற்கொண்டு பிறந்து இன்ப துன்ப வாழ்க்கையில் அல்லற்படச் செய்கிறது. எப்போதும் நிரதிசய ஆனந்தமுள்ள வேறோர் இடம் உண்டு. அதுதான் ஆனந்தவாரி. அதைச் சேர்ந்தால் பிறவி இல்லை. இன்ப துன்பம் இல்லை. இன்ப துன்பத்திற்கு அப்பாற்பட்டிருக் கிறது எதுவோ அதைத்தான் ஆனந்தம் என்று சொல்வார்கள். பிறந்து வாழ்ந்தாலும் இந்தப் பிறவிப் பிணியைப் போக்கும் ஆண்டவனது திருவருளைப் புணையாகக் கொண்டு, யார் பக்தித் துறையிழிந்து செல்கிறார்களோ அவர்கள் ஆனந்தவாரியை அடை வார்கள். அதற்கும் துணையாக இருப்பது புத்தி.பிறவிக் கடலைச் சேர்வதற்கு உரிய காரியங்களைச் செய்யத் தூண்டுகின்ற அறிவு எதுவோ, அதுவே பிறவியைத் தொலைத்து, இன்ப துன்பம் அற்ற ஆனந்த நிலையை எய்துவதற்குத் துணையாகவும் இருக்கிறது. சரியான தண்டவாளத்தின் மேல் தடம் புரளாது செல்கின்ற ரெயில்தான் பல்லாயிரக்கணக்கான மக்களை ஓரிடத்திலிருந்து பல மைல்கள் தாண்டிச் சென்று இறங்கப் பண்ணுகிறது. ரெயில் என்னவோ ஒன்றுதான். அலை மோதுகின்ற புத்தி எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால் அது செல்கின்ற துறை வேறுபடுவதனால் பிறவி உண்டாகிறது.
நீருக்கு நிறம் இல்லை; சுவை இல்லை என்று சொல்வார்கள். ஆனால் கரிசல் மண்ணில் ஊறுகின்ற நீர் கருமையாகவும், உவர்ப்பு மண்ணில் ஊறுகின்ற நீர் உப்புச் சுவையுடையதாகவும் ஆகின்றன. புத்தியாகிய ஆறு பிறவிக் கடலைச் சேர்வதற்கான துறைகளின் வழியே செல்வதனால்தான் காமம், மோகம், மதம், மாற்சரியம் முதலியவற்றினால் கலங்கி நாற்ற மெடுக்கிறது. பிறவித் துன்பத்தை மாற்ற வேண்டுமானால் புத்தித்தரங்கம் பக்தித் துறை வழியே செல்லும்படி செய்ய வேண்டும்.
நம்முடைய அறிவினால் துன்பம் வருவதால் நமக்கு அறிவே வேண்டாம் என்று சொல்ல முடியுமா? ‘ரெயிலில் சென்றதனால் தான் அரியலூர் விபத்துக்கு உள்ளாகும்படி நேரிட்டது; இனி ரெயிலிலேயே ஏறக்கூடாது’ என்று யாராவது சொல்வார்களா? அறிவு தவறான வழியில் செல்லும்போதுதான் துன்பம் ஏற்படுகிறது. நேரான வழியில் சென்றால் நன்மை உண்டாகும்.
கற்றல் முதலிய நான்கு
கற்றலை விடக் கேட்டல் சிறந்தது என்று சொல்வார்கள். பேசுகின்றது ஒரு பங்கு என்றால் கேட்பது இரண்டு பங்காக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆண்டவன் பேசுவதற்கு ஒரு வாயைக் கொடுத்துவிட்டுக் கேட்பதற்கு இரண்டு செவிகளை வைத்திருக்கிறான் போலும்! கேட்டதைச் சிந்தித்துப் பயன் அடைகிறவர்களுக்குக் கேள்வி சிறந்தது. மாடு நன்றாக மேய்ந்துவிட்டுத் தனிமையான ஓர் இடத்தில் போய்ப் படுத்து அசை போடுவது போல, நல்ல பொருள்களைக் கேட்டுவிட்டுப் பின்பு எல்லாவற்றையும் ஒன்றாகத் தொகுத்துச் சிந்தித்துப் பார்க்கும்போதுதான் பயன் உண்டாகிறது. அதைச் சிந்தனை என்று சொல்வர். முதலில் கேட்டல்; கேட்ட பிறகு கேட்டதை எல்லாம் ஒன்றாகத் தொகுத்துச் சிந்தித்தல். கடை வியாபாரி பகலில் கடையில் வியாபாரம் செய்துவிட்டு இரவில் பணத்தை வீட்டில் வைத்துக்கொண்டு நூறு ரூபாய் நோட்டுகளை எல்லாம் தனியாகவும், சில்லறைகளைத் தனியாகவும், செல்லாக் காசுகளைத் தனியாகவும் வைத்துவிடுவது போல, கருத்துக்கு ஒவ்வாதன வற்றை ஒதுக்கிவிடுவார்கள் அறிவாளிகள்.
காதினாலே கேட்டவற்றை எல்லாம் ஒன்றாகத் தொகுத்துச் சிந்தித்தால் போதுமா? சிந்திப்பதனால் தெளிவு ஏற்பட வேண்டும். இப்படிக் கற்றல், கேட்டல், சிந்தித்தல், தெளிதல் என்று நான்கு படிகள் சொல்வார்கள். கேட்டபோதே தெளிவு பிறவாது. கேட்டதை நன்றாகச் சிந்திக்கும்போதுதான் பிறக்கும். அந்தத் தெளிவு ஏற்படா விட்டால் கற்பதாலும் கேட்பதாலும் எவ்விதப் பயனும் இல்லை.
தெளிவு ஏற்பட்ட பிறகு மேற்கொள்வது நிஷ்டை. சத்தியத்தை அடைவதற்குரிய சாதனங்கள் எல்லாமே நிஷ்டை. இறைவன் திருவருளைப் பெறுவதற்கு உரிய முயற்சி அது. தெளிவு வந்த பிறகே அத்தகைய முயற்சியில் ஈடுபட முடியும். கற்றல், கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஷ்டை, அநுபவம் என்ற வரிசை கற்றலிவிருந்து தொடங்குகிறது. கேட்பதனால் சிந்தனை ஏற்பட்டு, அதனால் தெளிவு ஏற்பட்டு, நிஷ்டை கூடிய பிறகு அநுபவம் சித்திக்கிறது. புத்தி தெளியாமல் இருந்தால் முயற்சி பயன் பெறாது. ஒரு நிமிஷம் ஞானம் தோன்றும். அடுத்த விநாடியே, ‘கடவுளாவது! மண்ணாவது! அப்படி ஒன்றும் இல்லை. வயிற்றுப் பிழைப்பை எண்ணிப் பலர் அப்படிப் பேசி வருகிறார்கள்” என்று சொல்லத் தோன்றும்.
இதற்குக் காரணம் என்ன? புத்தி என்ற ஆறு அத்தனை கலக்கம் உடையதாய் இருக்கிறது. புத்தித் தரங்கம் தெளிந்தால்தான் பிற்பாடு அநுபவம் சித்திக்க வழி ஏற்படும். எப்படித் தெளிவு பெறுவது? ஞானவிசாரத்தாலே பெறலாமா, கர்ம யோகத்தாலே பெறலாமா என்று தவிக்கின்ற மக்களுக்கு, எளிமையான வகையில் தெளிவை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று அருணகிரியார் சொல்கிறார். பக்தித் துறையை அறிந்து அதன் வழியே சென்றால் ஆனந்தவாரியில் கலக்கலாம். அப்போது புத்தித் தரங்கம் தெளிந்து விடும். கலங்கி இருக்கும் புத்தி தெளிவதற்கு மிகச் சுலபமான வழி அதுதான்.
கண்ணப்பனும் சிவகோசரியாரும்
பக்தித் துறை இழிந்தால் பக்தன் ஆகிவிடுகிறான். பக்தியின் முடிவு ஆனந்தவாரியைச் சேர்வது. அதை அடைந்தபிறகு வேறு பாடு இல்லை. அந்தணராகப் பிறந்து வேதம் ஓதி இறைவனை வழிபட்ட சிவகோசரியாரும் இறைவனை அடைந்தார்; வேடு வனாகிய கண்ணப்பனும் அடைந்தான்.
கண்ணப்பன் ஆவதற்கு முன்னாலே திண்ணனாக இருந் தான். குழந்தைப் பருவத்தில் காட்டுக்கு விளையாடப் போனான். புலிக்குட்டியைக் கொன்று தோளில் போட்டு வந்தான். அது அவனுக்கு விளையாட்டு. பிராயம் முதிர்ந்தவுடன் வேட்டைத் தொழிலை மேற்கொண்டான். பல விலங்குகளைக் கொன்றான். கொல்வதே விளையாட்டாகவும் தொழிலாகவும் அவனுக்கு இருந்தது. அவன் கண்ணில் காளத்திநாதன் பட்டவுடனே அவனுக்குப் பெருமான்பால் அன்பு உண்டாகிவிட்டது. அவனை அருச்சித்து வழிபடும் எண்ணமும் அவனுக்கு உண்டாகியது.
ஆண்டவனுக்கு அருச்சனை செய்யக் குளித்துவிட்டு நந்த வனத்திற்குச் சென்று வாயை மூடிக்கொண்டு தூய்மையோடு வண்டு கிண்டி இதழ்கள் விரிவதற்கு முன்னே மலரைக் கொய்து கூடையில் எடுத்து வருவார்கள். ஆனால் திண்ணன் காளத்தி நாதனுக்கு எப்படி மலர் எடுத்து வந்தான்? மலரைப் பறித்துத் தன் கொண்டை மயிரையே குடலையாக வைத்துக் கொண்டு வந்தான்.
ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்யச் சிவகோசரியார் சுத்தமான நீரைத் தூய பாத்திரத்திலே எடுத்து வந்து, ருத்திரம், சமகம் முதலியவைகளைச் சொல்லி அபிஷேகம் செய்வது வழக்கம். திண்ணனோ அபிஷேகம் செய்யும் நீரைத் தன் வாயிலே எடுத்து வந்தான். ஆண்டவனுக்கு நிவேதனம் செய்யப் பன்றி மாமிசத்தைக் கொணர்ந்தான். அதையும் கடித்துப் பார்த்துச் சுவைமிக்க பகுதியாக எடுத்து வந்தான். அபிஷேகத்திற்கு எடுத்து வந்த மலர் அழுக்கு. நிவேதனத்திற்கு எடுத்து வந்த பன்றி மாமிசம் ஒரே அழுக்கு. இருந்தாலும் அவை எல்லாம் பக்தித் துறை வழியாகப் புகுந்தன. இறைவனாகிய ஆனந்தவாரியோடு சங்கமம் ஆயின.
ஒரு புலவர் பாடுகிறார்:
“தருமம் தவஞ்சற் றறியாத வேடுவன் தன்செருப்பு
மருமுந்து வேணிக் கணிமா மலர், அவன் வாய்உதகம்
திருமஞ் சனப்புனல், பல்லால் அவன்மென்று தின்றதசை அருமந்த போனகம் அன்றோநம் காளத்தி அப்பனுக்கே.”
சிவகோசரியாரும், கண்ணப்பனும் பக்தித் துறையில் இழிந்து ஆனந்தவாரி படிந்தவர்கள். அந்தத் துறையில் இழிவதற்கு முன் அவர்கள் இயல்பிலும் பழக்க வழக்கங்களிலும் வேறுபாடு இருந்தாலும் அதன்பின் அவர்களுள் வேறுபாடு இல்லை.
அறிவு கலங்கியிருக்கிறதே இது தெளிவடைந்த பின் பக்தி செய்ய லாம் என்று இராமல், புத்தித்தரங்கம் தெளியாமல் இருந்தாலும் அத்துறையில் இறங்கினால் ஆனந்த வாரியோடு கலக்கலாம். அக்கணமே தெளிவு உண்டாகும். “நான் இந்தத் தெளிவை அடைவது எப்போது?” என்று வேசாறுகிறார் அருணகிரியார்.
பத்தித் துறைஇழிந் தானந்த வாரி படிவதனால்
புத்தித் தரங்கம் தெளிவதென்றோ?
சூர சங்காரம்
இந்தக் கேள்வியை முருகனைப் பார்த்துக் கேட்கிறார்.
பொங்கு வெங்குருதி
மெத்திக் குதிகொள்ள, வெஞ்சூ ரனைவிட்ட சுட்டியிலே குத்தித் தரம்கொண்டு அமரா வதிகொண்ட கொற்றவனே
முருகன் சுட்டி என்ற ஆயுதத்தை ஒரு முறை விட்டான். அது சூரனைக் குத்தியது. வெம்மையான குருதி பொங்கியது; அது வெள்ளமாக மிக்குக் குதிகொண்டது. இப்படி மேன்மையை அடைந்தான் முருகன்; சுட்டி என்பது குத்தீட்டிக்குப் பெயர்.
இந்திரனுக்குச் சொந்தமாக இருந்த தேவலோகத்தைச் சூரபன்மன் கைக்கொண்டு ஆண்டான். அவனைச் சங்காரம் செய்து அமராவதியைக் கைப்பற்றினான் முருகன். தாம் இழந்த நாட்டைச் சூரனோடு பொருது மீட்கும் வழி தெரியாமல் திண்டாடினர் தேவர். இந்திரன் தன் சிங்காதனத்தையும் இராசதானியையும் இழந்து தவித்தான். முருகனிடம் யாவரும் சரண் அடைந்தனர். அப்பெருமான் அவர்களுக்காகச் சூரனை அழித்து அமராவதியாகிய இந்திரனது இராசதானியை மீட்டான். இந்திரனுக்கு வழங்குவதற்காகவே அதைக் கைக்கொண்டான். அசுரராட்சிக்குட் பட்ட அமராவதியை மீட்டும் சுரர் ஆட்சிக்கு உட்படுத்தினான். அவன் அழுக்குக் கடலிலே கலக்கச் செல்கிற புத்தியை ஆனந்த வாரியில் கலக்க வழி காட்டுவான் என்ற நம்பிக்கையோடு இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கிறார்.
பத்தித் துறைஇழிந்து ஆனந்த
வாரி படிவதனால்
புத்தித் தரங்கம் தெளிவதுஎன்
றோ? பொங்கு வெங்குருதி
மெத்திக் குதிகொள்ள வெஞ்சூ
ரனைவிட்ட சுட்டியிலே
குத்தித் தரங்கொண்டு அமரா
வதிகொண்ட கொற்றவனே!
[பொங்கிய வெம்மையான இரத்தம் மிகுதியாகக் குதிக்க, வெவ்விய சூரனை, தான் ஏவிய சுட்டியென்னும் படைக்கலத்தால் குத்தி, அதனால் உண்டான சிறப்பை மேற்கொண்டு அமராவதியைக் கைக்கொண்ட வெற்றி மிடுக்குடைய பெருமானே! பத்தி என்னும் துறையில் இறங்கி ஆனந்தமென்னும் கடலில் படியும் முறையினால் என்னுடைய புத்தியாகிய சிற்றாற்றிலுள்ள அலைகள் தெளிவது என்றைக்கோ?
இழிந்து – இறங்கி.வாரி – கடல். தரங்கம் – அலை. மெத்தி மிகுதியாகி. சுட்டி – குத்தீட்டி. தரம் மேன்மை; சிறப்பு. அமராவதி இந்திரனது இராசதானி. கொற்றம் – வெற்றி. கொற்றவன் – வெற்றியை உடையவன்]