அடியார்க்கு நல்ல பெருமாள்
கி. வா.ஜகந்நாதன்

ஆராய்ச்சி

‘இந்த உலகத்தில் எல்லாப் பொருளும் இரட்டையாக அல்லவா இருக்கின்றன? பள்ளம் என்றால் மேடு இல்லாமல் இராது. இருள் என்றால் ஒளி இல்லாமல் இராது. முள் என்றால் மலர் இல்லாமல் இராது. தளிர் என்றால் சருகு இல்லாமல் இராது. ஆகவே உப்புக் கடல் என்றால் உப்பு இல்லாத நன்னீர்க் கடலும் இருக்கத்தான் வேண்டும். பிறவிப் பெருங்கடல் என்று சொன்னால் அல்லாத ஆனந்தக் கடலும் இருக்கத்தான் வேண்டும்’ என்று நினைத்தான்.

இப்படி நினைத்தவுடனேயே அவனுக்குப் பல உண்மைகள் விளங்கின. ‘பிறவிக் கடல் எப்படிக் கரை இல்லாமல் எல்லை யின்றி விரிந்து கிடக்கிறதோ, அதைப் போலவே ஆனந்தக் கடலும் இருக்க வேண்டும். பிறவிக் கடல் அழுக்கு நீர் உடையது என்றால் ஆனந்தக் கடல் தூய நன்னீர் உடையதாக இருக்க வேண்டும். பிறவிக் கடலுக்குப் பல துறைகள் இருப்பது போலவே ஆனந்தக் கடலுக்கும் பல துறைகள் இருக்க வேண்டும்’ என்று தன் அறிவினால் ஆராய்ந்து தெளிந்தான்.

‘நாம் சென்று சேரவேண்டிய லட்சியக் கடல் இருப்பது தெரிந்தும் இன்னும் அங்கே போய்ச் சேராது இருக்கிறோமே!’ என்று ஆற்றை உடையவன் தவிக்க ஆரம்பித்துவிட்டான். “பிறவி யாகிய அழுக்குக் கடலோடு காமம், மோகம் போன்ற பலவிதமான அழுக்குகள் படிந்துள்ள என் அறிவாகிய ஆறு கலப்பதனால் பயன் இல்லை. என்னுடைய சொந்த முயற்சியினாலே ஆற்றை வடிகட்டியோ, தெளியவைத்தோ சுத்த நீராக்கலாம் என்றாலும் அந்த முயற்சி பலிக்காது. ஆற்றில் அழுக்கு நீர் ஓடிக்கொண்டு இருக்கும்போதே இதைத் தெளியவைக்க வேண்டும். அதற்கு என்ன வழி?” என்று அவன் ஏங்கிக் கொண்டிருக்கும்போதுதான் பெரியவர் அவனுக்கு ஒரு நுட்பத்தைச் சொல்லிக் கொடுத்தார்.

தெளிவு பெற வழி

“அலை ஓய்ந்த பின் கடலில் நீராடலாம் என்றால் அலையும் ஓயாது. நீயும் நீராட முடியாது. உன் அறிவாகிய ஆறு தெளிந்தபின்தான் ஆனந்தவாரியோடு கலக்க வேண்டும் என்று நீ எண்ணிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. இப்படியே போய்க் கலக்க வேண்டியதுதான். ஆனந்தவாரியோடு கலக்கப் பல துறைகள் இருக்கின்றன. என்றாலும் ஞானமாகிய பாலை வனத் துறை வழியே செல்லும்போது அறிவாகிய ஆறு சுவறி விடக் கூடும். கர்மமாகிய மேட்டு நிலத் துறையின் வழியாகப் போக வேண்டுமென்றால் பள்ளத்திலிருந்து மேட்டுக்கு ஏறக் கூடிய சக்தி உன் புத்தியாகிய ஆற்றுக்கு இல்லாமற் போனாலும் போகலாம். அவ்வெல்லாத் துறைகளையும் விட மிக எளிய துறை பக்தி. அதன் வழியாக உன் சிற்றாற்றை விட்டுவிடலாம்” என்று சொன்னார். “பக்தித் துறை வழியே சென்றால் முன்னால் நன்னீர்க் கடல் தெரியும். அதுவே ஆனந்த வாரி” என்றும் உணர்த்தினார்.

அவனுக்கு மறுபடியும் ஒரு சந்தேகம் பிறந்தது. “அந்த நல்ல கடலோடு என்னுடைய புத்தியாகிய அழுக்கு ஆற்றை எப்படிக் கலக்கச் செய்வது? அதனால் அந்த ஆனந்தவாரி அசுத்தமாகி விடாதா? தெளிந்த நீர் ஓடுகின்ற ஆறானால் கலப்பதனால் ஒன்றும் கெடுதி இல்லை. ஆனந்த வாரியோடு கலப்பதற்கு ஏற்ற வகையில் என்னுடைய புத்தியாகிய சிறிய ஆற்று நீரை நான் தெளிய வைத்துக் கொள்ள வேண்டாமா?” என்று கேட்டான்.

“அதைத்தானே நான் இவ்வளவு நேரமும் சொன்னேன்? அந்த ஆனந்தவாரியோடு கலப்பதனாலேயே உன் அறிவாகிய சிற்றாறு சுத்தமாகிவிடும்” என்று சொல்லி அதைப் பின்னும் விளக்கினார்.

யமுனையும் சாக்கடையும்

‘யமுனை நெடுந்தூரம் ஓடிக் கங்கையோடு கலந்து விடுகிறது. கங்கையோடு கலக்கும் இடம் வரையில் அது யமுனையாகத் தான் இருக்கிறது. கங்கையோடு கலந்த மாத்திரத்திலே அது யமுனை என்ற பெயரையும் இழந்து கங்கையாகவே ஆகிவிடுகிறது. இந்தக் காலமாக இருந்தால் எப்படியோ? திருவாங்கூரோடு கொச்சி ராஜ்யம் சேர்ந்த பொழுது திருவாங்கூர்-கொச்சி என்று பெயர் வைத்தார்கள். அதைப்போல யமுனை கங்கையோடு கலந்த வுடன் ‘யமுனா – கங்கா’ எனப் பெயர் வைத்தாலும் வைக்கலாம். ஆனால் பழங்காலத்தில் அப்படி இல்லை. யமுனை கங்கையோடு கலந்தபின் யமுனை என்ற பெயர் மறைந்து அது கங்கையாகவே ஆகிவிடுகிறது. யமுனையின் தூய நீர் கங்கையோடு கலக்கும் போதும் கங்கை கங்கையாகவே இருக்கிறது. அதன் புனிதத் தன்மை யமுனையினால் அதிகமாகவில்லை. காசி நகரத்துச் சாக்கடைகள் கங்கையோடு போய்த்தானே கலக்கின்றன? ஊரினது கழுநீர் எல்லாம் கங்கையோடு போய்க் கலந்தாலும் கங்கையின் பெயர் மாறவில்லை. அதன் புனிதத் தன்மையும் மாசுபடவில்லை. கங்கை கங்கையாகவே தூய நன்னீருடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

“கங்கையின் யமுனை போய்ச் சேருவதனால் கங்கை மாசு படவில்லை என்பதில் ஆச்சரியம் இல்லை; இனம் இனத்தோடு கலந்தது எனச் சொல்லலாம். தூய நீர் தூய நீரோடு கலக்கும் போது மாறுதல் எதுவும் ஏற்படுவதற்கு வழி இல்லை. கங்கை யோடு அதற்கு மாறான சாக்கடைகள் போய்க் கலப்பதனாலும் கங்கை மாறவில்லையே! அதுதான் கங்கையின் பெருமை

ஊர்அங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பெரிதாகித் தீர்த்தமாம்

என்பது நாலடி. சாக்கடை என்ற பெயர் மாறித் தீர்த்தம் என்ற பெயர் வந்துவிடுகிறதாம்.

“எல்லா அழுக்கையும் போக்கி, தான் எப்போதும் தெளிந்த நிலையிலேயே இருக்கிறது கங்கை. கங்கையோடு நல்ல நீர்தான் கலக்கவேண்டும், அசுத்தமான அழுக்கு நிரம்பிய நீர் கலந்தால் அதன் புனிதத்தன்மை கெட்டுவிடும் என்பது இல்லை. அதைப் போலவே உன்னுடைய அறிவாகிய ஆறு அழுக்கு நீர் உடையதாக இருக்கிறதே என்று கலங்க வேண்டாம். அது கலப்பதனால் ஆனந்தவாரி கெட்டுப் போகாது.”

ஆனந்தவாரியில் கலத்தல்

அழுக்கு நிரம்பிய அறிவு நீர் கொஞ்சமாக இருப்பதனால் அலை மோதுகிறது; கொந்தளிக்கிறது. அது பக்தித்துறை வழியாக ஆனந்தவாரியில் படிந்துவிட்டால் ஆனந்தவாரி கலங்காது. புத்தித் தரங்கம் தெளியும். கங்கை சாக்கடை ஆகாமல் சாக்கடைகள் கங்கை ஆவது போல, ஆனந்தவாரி கலங்காமல் உன் புத்தித் தரங்கம் ஆனந்தவாரியாகிவிடும். அழுக்கு நிரம்பிய உன்னுடைய புத்தித் தரங்கம் தெளியப் பக்தித் துறையிழிந்து, ஆனந்த வாரியோடு கலந்துவிடு. பக்தித் துறை அல்லாமல் வேறு பல துறைகளும் இருக்கின்றனவாயினும் அவற்றின் வழியே புகுவதற்கு நெடுங்காலம் பிடிக்கும். நிச்சயமாகப் போக முடியுமோ என்னவோ தெரியாது. ஆகவே அங்கே போய்ச் சேருவதற்கு மிக எளிதானதும் பக்கத்தில் உள்ளதும் பக்தித் துறைதான். அதன் வழியே சென்றால் மிக எளிதில் ஆனந்தவாரியோடு சிற்றாறு கலந்துவிடும். அப்புறம் அங்கே அறிவாகிய சிற்றாறே இராது. முன்னாலே இருந்த அடையாளம் கொஞ்சங்கூட இல்லாமல் ஆனந்த வாரியாகவே அது ஆகிவிடும். உன் புத்தித் தரங்கத்தின் நாற்றம் இராது. இப்போது அந்தப் புத்தித்தரங்கத்தில் களவு,விபசாரம், கோபம் போன்ற பல பல வாசனைகள் படிந்திருக்கலாம். ஆனால் ஆனந்தவாரியோடு கலந்துவிட்டால் இவ்வெல்லா வாசனையும் போய்விடும். உன்னுடைய ஆற்றைப் போலவே எத்தனையோ ஆறுகள் முன்பே அதில் ஆனந்தவாரியாகவே ஆகியிருக்கின்றன. அதைப் போலவே உன்னுடைய ஆறும் ஆகும். ஆனந்தவாரி யோடு கலந்தவுடனே ஆனந்தவாரியின் மணந்தான் அடிக்கும்.

ஆகவே, ஆனந்தவாரியைச் சென்று சேர்வதற்குப் பக்தித் துறை யிழிந்து செல் அப்பா!’ என்று அப்பெரியவர் சொன்னார்.

மேலே சொன்ன கதையையும், அருணகிரி நாதர் கூறும் பாட்டையும் சேர்த்துப் பார்க்கலாம்.