பக்தித் துறை

முன் பாட்டில் அருணகிரியார், மனம் இறைவனது திரு வருளில் ஈடுபடாமல் மங்கையர் கண்ணாகிய வலையில் மாட்டிக் கொண்டு அல்லல்படுவதைச் சொன்னார். அடுத்த பாட்டில் வேறு வகையில் நம் அறிவு தெளிவுபட வேண்டுமென்பது பற்றிச் சொல்கிறார்.

இரண்டு கடல்

உலக வாழ்க்கையில் மக்கள் கூட்டத்தில் இரண்டே இரண்டு கட்சிகள் இருக்கின்றன. ஒரு கட்சி ஒளியை நோக்கிப் போகின்ற கூட்டம்; மற்றொன்று இருளை நோக்கிப் போகின்ற கூட்டம். ஓரிடத்தில் கரை காண முடியாத எல்லை கடந்த இன்பக் கடல் பொங்கிக் கொண்டிருக்கிறது; அதற்கு நேர் எதிர்த் திசையில் பிறவிப் பெருங்கடல் இருக்கிறது. இரண்டுக்கும் எல்லை காண முடியாது. இரண்டாவது கடலில் சென்று சேர்ந்து அதனால் உண்டாகிற துன்பத்தை அனுபவிக்கிறது இருட் கூட்டம். பிறவியாகிய பெருங்கடல் சேர்ந்து மூழ்குகிறவர் களுக்குத் துன்பந்தான் உண்டு என்பதை நாம் நம் வாழ்க்கையில் அறிகிறோம். ”பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம்” என்பது மணிமேகலை. அதற்கு நேர் எதிர்த் திசையில் இருக்கிற கடல் இன்னது என்று நாம் அறிய மாட்டோம். இறைவன் திருவருளி னால் இன்ப அனுபவம் பெற்ற பெரியவர்கள் அதனை அறிந்திருக் கிறார்கள். பிறவிப் பெருங் கடலுக்கு நேர் எதிர்த்தட்டில் ஆனந்த வாரி இருக்கிறதென்று சொல்லியிருக்கிறார்கள்.

பிறவிப் பெருங்கடலுக்கும், ஆனந்தக் கடலுக்கும் நடுவிலே வாழ்க்கை என்ற மேட்டில் நாம் இருக்கிறோம். இந்த மேடு ஒரே சீரான மேடு அல்ல. பல வகையான குண்டுகுழிகளோடு அமைந்த மேடு; எங்கே பார்த்தாலும் அழுக்கு நிரம்பியிருக்கிறது.

புத்தியென்னும் சிற்றாறு

நம்முடைய புத்தி வேகமாக வேலை செய்கிறது. எதைச் சார்ந்திருக்கிறதோ அதிலுள்ள அழுக்கு அதன் மேல் ஒட்டிக் கொள்கிறது. அறிவு என்பது ஒரு சிற்றாறு. அது மேட்டிலும் பள்ளத்திலும் ஏறி இறங்கிப் போய்க் கொண்டிருக்கிறது. போகிற இடங்களில் உள்ள மலங்களை வாரிக் கொள்கிறது. உயிர்களிடம் மூன்று மலங்கள் இருக்கின்றன. ஆன்மா மலத்தைச் சார்ந்திருப் பதனால்தான் பிறவி வருகிறது. மனிதப் பிறவியில் உடம்பிலும், உடையிலும் ஒட்டிக்கொள்கிற அழுக்குப்போல உள்ளத்தில் ஒட்டிக் கொள்ளும் அழுக்கு எதுவோ அது உயிரைச் சார்ந்திருக் கிறது.மனம் இறந்து போய்விட்டால் மலமும் இறந்து போகும். அப்படிச் சொல்வதைக் காட்டிலும் மலம் என்பது போகுமட்டும் மனம் இருக்கும் என்று சொல்லலாம். மனம் இருப்பதனால்தான் மனிதன் எல்லாக் காரியங்களையும் செய்கிறான்.

அந்தக்கரணம்

மனத்தின் கொழுந்து எதுவோ அதைப் புத்தி என்று சொல் வார்கள். மேல் நாட்டார் மனத்தின் நிலைகள் இன்னவை என்று வகுத்திருக்கிறார்கள். அவற்றையே நம் நாட்டில் மனத்தின் பகுதிகளாகிய அந்தக்கரணங்கள் என்பர். வாழ்வதற்கு உரிய கருவிகள் இரண்டு வகை. கை கால்கள் முதலிய உறுப்புக்கள் புறத்தில் உள்ள கரணங்கள். மனம் உள்ளே இருக்கிற கரணம். அந்தக்கரணம் என்றால் உள்ளே இருக்கும் கருவி என்று பொருள். அந்தக் கரணம் நான்கு பகுதிகளாகப் பயன்படுகிறது. ஏதேனும் ஒரு பொருளைப் பற்றிச் சிந்திக்கும் போது அதனிடத்தில் ஈடுபட்டுக் கிடக்கிறோம்; அப்படிச் சிந்திப்பது சித்தம். அப்பொருளை எவ்வாறு பெறுவது என்ற அவாவினால் தவிக்கிறோம்; அப்படித் தவிப்பது மனம். ஒன்றைப் பார்த்தால் அது நல்லதா கெட்டதா என்று ஆராய்கிறோம்; அந்த ஆராய்ச்சி பிறக்கும் இடம் புத்தி. நாம் இன்னார், இன்ன ஆசாமி என்பதை எப்பொழுதும் நினைந்து கொண்டிருக்கிறோம்; தூக்கத்தில் தட்டி எழுப்பினாலும் எழுந் திருக்கும்போது நாம் இன்னார் என்ற நினைவோடு எழுந்திருக் கிறோம்; அந்த நினைவுள்ள பகுதி அகங்காரம். இப்படி மனம், புத்தி,சித்தம், அகங்காரம் என்று நான்கு பகுதியாக அந்தக்கரணம் இயங்குகிறது.

புத்தியினால் இது நல்லது, இது பொல்லாதது என்று தெரிந்து கொள்கிறோம். மனம் என்னும் பகுதி பலவற்றைப் பற்றிப் பற்றித் தாவிக்கொண்டிருக்கும். அது பொல்லாதது. அதனால் பலவகைத் துன்பங்கள் உண்டாகின்றன. புத்தியால் நல்லது எது என்று தெரிந்துகொண்ட பிறகு அதனிடம் ஒற்றுமைப்பட்டு நிற்கத் தீர்மானிப்பது சித்தம். புத்தியானது கூர்மையாக ஒரு விஷயத்தின் தன்மையை நன்கு ஆராய்ந்து உணர்ந்தால்தான் அதைப் பற்றி நிற்கச் சித்தம் முந்தும்.

அழுக்கைப் போக்கும் வழி

பிறவியாகிய அழுக்குக் கடல் ஒரு பக்கம் இருக்கிறது. அதற்கு நேர் எதிரே ஆனந்தம் என்ற பெரிய வாரி இருக்கிறது. இந்த இரண்டுக்கும் நடுவிலே வளைந்து வளைந்து செல்கிறது புத்தியாகிய சிற்றாறு. அது தான் போகிற வழியில் பல அழுக்குகளை மேலும் மேலும் திரட்டிக் கொண்டே போகிறது.

இந்தப் புத்தியாகிய அழுக்கு நீரை உடைய சிற்றாற்றை உடையவனிடம் ஒரு பெரியவர் வந்தார்.”என்ன அப்பா! இந்த அழகான சிற்றாற்றை உனக்குப் பயன்படாதவாறு ஒரே அழுக்கு நீர் ஓடும்படி வைத்துக்கொண்டிருக்கிறாயே; இப்படி இருக்கலாமே?” என்று கேட்டார்.

அவனுக்கும் அந்த ஆற்று நீர் ஒரே அழுக்காக இருக்கிறது தெரியும். ஆனால் அதை எப்படிச் சுத்தம் செய்வது என்றுதான் தெரியவில்லை. ஆகவே அப்பெரியவரிடமே, “இந்த ஆற்றை எப்படிச் சுவாமி சுத்தம் செய்வது? அழுக்குக் கொஞ்சமும் இல்லாமல் செய்ய வேண்டுமானால் என்ன பண்ணுவது?” என்று கேட்டான்.

“அழுக்கு நீரை வடிகட்டிச் சுத்தம் பண்ணலாம் என்றால் அது உன்னால் முடியாது. அதைத் தெளிய வைத்துச் சுத்தம் செய்யும் பெரிய கடல் ஒன்று இருக்கிறது. அதிலே போய்க் கலக்கச் செய்துவிட்டால் சுத்தமாகி விடும்” என்று அவர் சொல்லிச் சென்று விட்டார்.

அவன் தன்னுடைய புத்தியாகிய சிறிய ஆற்றைப் பெரிய வாரியோடு கலக்கச் செய்யலாம் என்று எண்ணி, துறை எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டு கிளம்பினான். பிறவியாகிய பெரிய அழுக்குக் கடலோடு கலக்கின்ற பல அழுக்குத் துறைகள் அவனுக்குத் தெரிந்தன. காமமாகிய துறை ஒரு பக்கம் இருக்கிறது.மோகமாகிய துறை ஒரு பக்கம். இவற்றைப் போல மதம், மாச்சரியம் முதலான துறைகள் பிறவியாகிய அசுத்தக் கடலில் இருப்பது தெரிந்தது.

சென்னையில் உள்ள கூவம் நதியில் எத்தனை சாக்கடைகள் போய்ச் சேருகின்றன! அதனால் மேலும் அது அழுக்கு நிரம்பிய தாகிறதே தவிரத் தெளியக் காணோம். அது போல நமது அறிவாகிய சிறிய ஆற்றைக் கொண்டுபோய்ப் பிறவியாகிய பெரிய அழுக்குக் கடலோடு சேர்ப்பதனால் அது எப்படித் தெளியும் என்னும் சந்தேகம் அந்த ஆற்றை உடையவனுக்கு வந்துவிட்டது.

புத்தித் தரங்கம் தெளியும் துறை அவனுக்குத் தெரியவில்லை. பிறவியாகிய அழுக்குக் கடலோடு சங்கமம் ஆகும் காமம், மோகம் முதலாகிய துறைகளே அவனுக்குத் தெரிந்தன. தன்னுடைய புத்தி யாகிய சிறிய ஆறு, தெளிய வைக்கும் கடலோடு போய்க் கலக்கக் கூடாதா என்று அப்பெரியவர் சொன்னாரே. அந்த வாரியோடு கலக்கும் துறை தெரியவில்லையே என்று அவன் ஏங்கிக் கொண் டிருக்கும் பொழுது அப்பெரியவர் மறுபடியும் வந்தார். வந்தவுடனே, ”சுவாமி! நீர் என் புத்தித் தரங்கம் தெளிய ஆனந்த வாரியின் துறை தேடிப் போகச் சொன்னீர்களே! அதற்குத் துறை எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லையே! பிறவிப் பெருங்கடலோடு கலக்கும் துறைகள்தாமே எனக்குத் தெரிகின்றன? ஆனந்த வாரி யோடு கலப்பதற்கும் பல துறைகள் உண்டா?” என்று கேட்டான்.

ஞானத்துறை

அந்தப் பெரியவர் சொன்னார். ‘அதற்கும் பல துறைகள் உண்டு. முக்கியமாக மூன்று துறைகள் இருக்கின்றன. ஞானம் என்பது ஒரு துறை. அழுக்கு நீர் மணல் நிரம்பிய பாலை வனத்தின் வழியாகப் போகும்போது இயல்பிலேயே அந்நீரின் அழுக்கைப் பாலைவனத்திலுள்ள மணற் பரப்பு வடிகட்டிவிடும். அந்தப் பாலைவனப் பாதையைப் போன்றது ஞானத்துறை. அதன் வழியாக உன்னுடைய புத்தியாகிய சிறிய ஆறு போனால் வாரியோடு சங்கமம் ஆவதற்குள் அது தெளிந்துவிடும். ஆனால் ஒன்று” என்று நிறுத்தினார் அப்பெரியவர்.

“ஆனால் ஒன்று என நிறுத்திவிட்டீர்களே சுவாமி! அது என்ன?” என்று கேட்டான் இவன்.

“பாலைவனத்தின் வழியாகப் போகும்போது ஆற்றில் புதுத் தண்ணீர் வந்து கொண்டே இருந்தால்தான் கடலோடு சங்கமம் ஆகும் வரையில் ஆற்றில் ஓட்டம் இருக்கும். புதுத் தண்ணீர் மேலும் மேலும் வராமல் போனால் ஆற்றின் நீர் அப்பாலை வனத்திடையே சுவறிவிடக் கூடும். ஆனந்தவாரியை அடைய உன் னுடைய புத்தியாகிய ஆறு ஞானமாகிய துறை வழியே போகும் போது ஞான விசாரமாகிய அப்பாலை வனத்திடையே சுவறி விட்டால் ஆனந்தவாரியை நீ போய்ச் சேரமுடியாதே!” என்றார்.

ஆற்றை உடையவனுக்குப் பயம் உண்டாகிவிட்டது. “அது மிகவும் கடினமான துறை போலிருக்கிறதே! அது நமக்குப் பலிக்காது. வேறு துறை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்” என்றான்.

கர்மத்துறை

“ஞானமாகிய துறை உனக்குப் பயன்படாது என்று எனக்குத் தெரியும். அதற்குப் பக்கத்திலேயே கர்மம் என்ற ஒரு துறையும் இருக்கிறது. அந்தத் துறையும் உனக்குக் கொஞ்சம் கடினந்தான். ஆறு பெரிய மேட்டிலே ஏறிச் செல்லவேண்டும். பள்ளத்திலிருந்து மேட்டில் ஏற வேண்டுமென்றால் சாதாரண மான காரியமா?” என்று அப்பெரியவர் சொல்வதற்குள், “என்ன சுவாமி, இந்தத் துறையும் எனக்குப் பயன்படாதுபோல் இருக்கிறதே. எனக்குப் பயன்படக்கூடிய வேறு ஏதாவது எளிய துறை யாக இருந்தால் சொல்லக் கூடாதா?” என்று கெஞ்சினான்.

பக்தித்துறை

“உன்னால் ஞானமாகிய துறை வழியாகவோ, கர்மம் என்ற துறை வழியாகவோ போக முடியாது என்றால் அதைப் பற்றிக் கவலை வேண்டாம். வேறு ஒரு துறை இருக்கிறது. அதற்குப் பக்தி என்று பெயர். பக்தித் துறையின் வழியாக எளிதிலே சென்று ஆனந்தவாரியோடு கலந்து புத்தித் தரங்கம் தெளியும் படியாகச் செய்து கொள்ளலாம்” என்று அந்த உபகாரி சொல்லி விட்டுப் போனார்.

அவனுக்கு ஆனந்தவாரியோடு கலக்கும் பக்தித் துறை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. “ஆனந்தவாரி என்று பலர் சொல்கிறார்களே, அது இருக்கிறதா?” என்ற சந்தேகமே அவனுக்குத் தெளியாமல் இருந்தது. தன் கண் எதிரே விரிந்து கிடக்கின்ற உப்புக் கடல் அவனுக்கு நன்றாகத் தெரிந்தது; பிறவிப் பெருங் கடல் தெரிந்தது. இருந்தாலும் யோசித்துப் பார்த்தான்.