அடியார்க்கு நல்ல பெருமாள்
கி. வா.ஜகந்நாதன்
அருணகிரியார் பிரார்த்தனை
இதை உணர்ந்து நமக்கு உணர்த்துபவர் போல அருணகிரியார் இப்பாட்டில் பாடுகிறார். “பெரிய மலையைப் பொட்டுப் பொட்டாக ஆக்கிய கந்தனே! நான் என் மனத்தைத் கட்டலாம் என்று எண்ணினேன். அது எனக்குத் தப்பிப் போய்விட்டது. தப்பிப் போனது மாத்திரம் அல்ல. காமவிடாய்ப் பட்டாருடைய உயிரைத் திருகிப் பருகிப் பசி தணிக்கும் கட்டாரி வேல்விழியார் வலையில் சிக்குண்டு விட்டது. இப்பொழுது நான் என்ன செய்வேன்! ஞானகலை உடையவனாய் இருந்தால் மலை மலையாகத் துன்பம் வந்தாலும் உன்னைப் போல் பொட்டுப் பொட்டாக ஆக்கிவிடுவேனே! இல்லாததனால் அல்லவா காமவிடாய்ப்பட்டேன்? மாதர்களுடைய சிறிய உறுப்பாகிய கண் என் உயிரைத் திருகிப் பருகிப் பசி தணிக்கும் கட்டாரியாகவும், வேலாகவும் இருக் கிறது. என் கைக்குள் அகப்படாமல் தப்பிப்போன மனமாகிய ஒன்றிற்கு எட்டாத ஞானகலையைத் தருவாய் அப்பா!” என்று பிரார்த்தித்துக் கொள்கிறார்.
பொட்டாக வெற்பைப் பொருதகந்
தா! தப்பிப் போனதுஒன்றறற்கு
எட்டாத ஞான கலைதரு
வாய்; இரும் காமவிடாய்ப்
பட்டார் உயிரைத் திருகிப்
பருகிப் பசிதணிக்கும்
கட்டாரி வேல்விழி யார்வலைக்
கேமனம் கட்டுண்டதே!
[கண்ணுக்குத் தெரியாத பொடி ஆகும்படி கிரெளஞ்ச மலையோடு போர் செய்து அழித்த கந்தனே! என் ஆற்றலுக்கு அகப்படாமல் மீறிப் போனதாகிய மனத்துக்கு எட்டாமலிருக்கும் ஞானமென்னும் கலையை நீ எனக்கு வழங்க வேண்டும்; பெரிய காமதாகத்தில் அகப்பட்டவர்களின் உயிரை அதன் போக்கிலே விடாமல் திருகிச் செயலிழக்கும்படி பருகித் தம் பசியைத் தணித்துக் கொள்வனவும் கட்டாரி போலவும் வேல் போலவும் இருப்பனவுமாகிய விழிகளைப் படைத்த தீய மங்கையர்களின் மயலாகிய வலையில் என் மனம் கட்டுப்பட்டுவிட்டதே! இனி என் செய வல்லேன்!
பொட்டு – கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய வடிவுள்ள பொருள். வெற்பை கிரௌஞ்ச மலையை. பொருத போர் செய்து அழித்த. தப்பிப் போனது – என் பிடிக்குள் அகப்படாமற் போனது. ஒன்று என்றது மனத்தை. விடாய் – தாகம். கட்டாரி -குத்தீட்டிவலைக்கே – வலையில்.]