அடியார்க்கு நல்ல பெருமாள்
கி. வா.ஜகந்நாதன்

ஞானசம்பந்தர்

ஞானசம்பந்தப் பெருமான் ஞான கலையுடையவர்.

உவமையிலாக் கலைஞானம் ஓதரிய மெய்ஞ்ஞானம்

ஆகியவற்றைப் பெற்றார் ஞானசம்பந்தர் என்று சொல்கிறார் சேக்கிழார். எம்பெருமாட்டி குழைத்துக் கொடுத்த சிவஞானப் பாலை உண்டவர் அவர். பாலைக் குடித்த உடனே ஞானம் வெள்ளமாகப் பொங்கியது. அது வெறும் ஞானம் அல்ல; கலை ஞானத்தோடு கலந்த மெய்ஞ்ஞானம். சம்பந்தப் பெருமானுக்கு ஞான கலை கிடைத்ததனாலே அவர் தம் அளவில் இன்பத்தை அநுபவிப்பதோடு நில்லாமல் பிறருக்கும் அதை அளித்தார்; ஞானா சிரியராகத் திகழ்ந்தார். வழிவழியாக வந்துகொண்டே இருக்கும் மனித சமுதாயம் தம் காலத்திற்குப் பிறகும் படித்துப் பயனுற்று ஞானம் எய்துவதற்குத் தக்க தேவாரத் திருப்பதிகங்களைத் தமிழில் வெள்ளமாகப் பொழியும் ஆற்றலும் அவருக்கு உண்டாயிற்று. கலை ஞானம் பெற்றவர் ஆதலால் அது உண்டாயிற்று.

மூன்று வயசு முதலே எம்பெருமான்மீது பல பல திருப் பதிகங்களைப் பாடிக்கொண்டு ஒவ்வொரு தலமாகச் சுற்றிவர ஆரம்பித்தார் சம்பந்தர். அவருக்கு வயசு பதினாறு ஆயிற்று.

அந்தக் காலத்தில் மயிலாப்பூரில் சிவநேசர் என்ற பெயருடைய ஒரு செட்டியார் இருந்தார். சிவபெருமானிடத்தில் உண்மையான அன்பு பூண்டு சிவனடியார்களிடத்தில் மிக்க அன்பு உடையவராக இருந்தார். அவர் ஆளுடைய பிள்ளையாரின் வரலாற்றைக் கேள்வி யுற்று அவரைக் காணவேண்டும், அவருக்குத் தம்முடைய பெண்ணாகிய பூம்பாவையை மணம் செய்து கொடுக்க வேண்டுமென்ற ஆசை உடையவராக இருந்தார்.

மூன்று வயசிலே புறப்பட்ட சம்பந்தப் பெருமான் ஒவ்வொரு தலமாகச் சென்றுவிட்டுப் பதினாறு ஆண்டு நிரம்பப் பெறும் போது தொண்டை நாட்டுக்கு வந்தார்.

அதற்குள் இங்கே சிவநேசச் செட்டியாரின் புதல்வி பூம்பாவை ஒருநாள் பூக்கொய்யும்போது அரவம் தீண்டியதால் மாண்டு விட்டாள். “சீகாழிப் பிள்ளையாருக்கு இவளைக் கொடுக்க வேண்டும் என்று நான் முடிவு செய்திருக்க, இப்படி இறந்து போய்விட்டாளே! ஞான சம்பந்தப் பெருமானுக்கு உரிய பொருளை நான் இப்பொழுது எவ்வாறு ஒப்படைப்பேன்!” என்று செட்டியார் மிகவும் வருந்தினார். “நாம் ஒன்று நினைக்க இறைவன் திருவருள் வேறாக இருக்கிறது. ஆனாலும் நினைத்த காரியத்தைச் செய்யவேண்டும். நாம் பெற்றெடுத்த இந்த உடம்பில் எஞ்சி இருப்பது எலும்பு. அதையாவது அப்பெருமானிடம் ஒப்படைக்கத்தான் வேண்டும்” என்று எண்ணித் தகனம் ஆன மறுநாள் பொறுக்கிய எலும்புகளை எல்லாம் ஒரு பானையில் போட்டு வைத்திருந்தார்.

பூம்பாவை எழுதல்

ஞானசம்பந்தப் பெருமான் திருவொற்றியூர் வந்தார். வந்த வுடனேயே சிவநேசர் அப்பெருமானை எதிர் சென்று மயிலைக்கு அழைத்து வந்து, நடந்த வரலாறுகளைச் சொல்லிப் பூம்பாவையின் எலும்புகளை வைத்திருக்கும் பானையை அவர் முன் கொண்டு வந்து வைத்து, அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று இறைஞ்சினார். சிவநேசச் செட்டியாரின் அன்பு தம் உள்ளத்தைத் தொட்டு விட்டதால், ஞானசம்பந்தர் அதை ஏற்றுக்கொண்டார். பலரும் அப்பானையைக் காணுமாறு கோயிலுக்குப் புறம்பே ஓரிடத்தில் வைத்து, உள்ளம் உருக, “மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலை” என்ற பதிகத்தைத் தொடங்கி, “போதியோ பூம்பாவாய்” என்று ஒவ்வொரு பாட்டும் முடியும்படி பாடினார். அப்பாட்டைக் கேட்ட பூம்பாவையின் எலும்புகள் ஒன்றுகூடி அழகான பெண் உருவாயின. திருமயிலையிலே ஆண்டுதோறும் முழங்கை வழியே நெய் வார அடியார்களுக்கு அன்னமிட்டுக் கொண்டாடும் விழாக்கள் பல நடந்தன. “அவ்விழாக்களை எல்லாம் கண்டுகளிக்காமல் நீ போகிறாயோ பூம்பாவையே!” என்று ஞான சம்பந்தப் பெருமான் தம் பாட்டில் பாடியிருந்தார்.

ஞானசம்பந்தர் இறைவனை விளித்துப் பாடியிருக்கிறார். மக்களை நோக்கிப் பொதுவாகப் பாடியதுண்டு. தம் நெஞ்சைப் பார்த்தும் பாடியுள்ளார். தனிப்பட்டவர்களைப் பார்த்துப் பாடிய தில்லை. ஆனால் இரண்டு பெண்களின் பெயரைச் சொல்லி அழைத்துப் பாடியிருக்கிறார். சம்பந்தர் பாட்டில் விளித்துப் பாடும் பாக்கியம் பெற்றவர்கள் மங்கையர்க்கரசியாரும் பூம்பாவையுமாவர். ஒவ்வொரு பாட்டிலும் பூம்பாவாய் என்று அவளை விளிக்கிறார்.

அவர் பாடினவுடனே அந்தப் பருவத்திற்கு ஏற்ற வளர்ச்சி யோடு முட்டையிலிருந்து குஞ்சு வெளிவருவது போல ஞான சம்பந்தப் பெருமான் முன் நின்றாள் பூம்பாவை. அவளைக் கண்டவுடனே சிவநேசருக்கு ஆனந்தம் பொங்கிற்று. “இறந்து போன என் பெண் தங்களுடைய திருவருளினால் உயிர்பெற்று மீண்டும் எழுந்து விட்டாள். இவளைத் தாங்களே திருமணம் செய்து கொண்டருளவேண்டும்” என்று ஞானசம்பந்தப் பெரு மானுடைய திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சினார்.

”நீ பெற்ற பெண் அப்பொழுதே பாம்பு கடித்து இறந்து விட்டாள். இந்தப் பெண்ணை நான் இப்பொழுது பெற்றேன். இவளுக்கு நான் தந்தை அல்லவா? நான் எவ்வாறு இவளை மணம் செய்துகொள்ள முடியும்?” என்று சொன்னார் ஞான சம்பந்தர். அவருக்கு வயசு அப்போது பதினாறு. நல்ல காளைப் பருவம். திருமணம் செய்துகொள்வதற்கு உரிய பருவத்தினர். இந்தக் காலத்தில் இத்தகைய வயசும், புகழும் உடைய எவனாவது நல்ல அழகான பெண்ணைப் பார்த்தால் மணம் வேண்டாம் என்று சொல்வானா? எம்பெருமாட்டியின் திருவருளாலே ஞான கலை பெற்ற பெருமான் அவர். ஆதலால் அழகுப் பிழம்பாய்த் தம் முன் நின்ற பூம்பாவையின் எழில் வண்ணத்தை அவர் காணவில்லை. அவளைக் கண்டபோது காமம் உண்டாகவில்லை. தம் பெண்ணாகக் கண்டார். இதைச் சேக்கிழார் சொல்கிறார்.

பிரமனும் சம்பந்தரும்

எங்கே ஞானசம்பந்தப் பெருமான் பூம்பாவையைப் படைத்தார். எண்ணிலாத ஆண்டுகளாகப் படைப்பதையே தன் தொழிலாகக் கொண்ட முதியவனும் வேதம் உணர்ந்தவனுமாகிய பிரமதேவனும் ஒரு பெண்ணைப் படைத்தான். ஞானசம்பந்தப் பெருமான் பூம் பாவையை உருவாக்கி எழுப்பினார். பிரமதேவன் கலைமகளைப் படைத்தான். படைத்தவுடனே, அவளது எழிலின் வண்ணம் கண் டான். “அழகாக இருக்கிறாளே; இவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டுவிட வேண்டும்” என்று அவன் எண்ணினான். தன்னுடைய பெண் என்று அவன் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் மணந் திருப்பானா? பார்ப்பதற்கு அவனுக்குக் கண் இல்லையா? எட்டுக் கண்கள் உடையவன்; தன்னுடைய நான்கு முகங்களாலும் பார்த்தான். அவனுக்கு வயசு என்ன கொஞ்சமா? பல்லாயிரம் ஆண்டுகள் சென்ற கிழவன்; பிதாமகன். அதோடு வேதம் சொல் கிறவன். உலகமே அவனை வேதா என்று கொண்டாடுகிறது. அவன் என்ன செய்தான்?

“எண்ணிலாண்டு எய்தும் வேதாப் படைத்தவள் எழிலின்
வண்ணம் நண்ணும்நான் முகத்தால் கண்டான்.”

தான் படைத்த படைப்பைத் தன்னுடைய பெண்ணாகப் பார்க்கும் ஞானம் அவனுக்கு இல்லை. அவள் எழிலின் வண்ணம் கண்டு மணந்தான்.

அவன் பல ஆண்டு சென்ற கிழவன். ஆனால் ஞான சம்பந்தரோ பதினாறு வயசு நிரம்பப்பெற்ற காளை. இவரது படைப்புப் பூம்பாவை. பிரமன் தன் படைப்பை எப்படிக் கண்டான், கலை ஞானம் உண்ட ஞானசம்பந்தர் தமது கட்டிளங் காளைப் பருவத் தில் தம் படைப்பை எப்படிக் கண்டார் என்ற இரண்டையும் இணைத்துச் சேக்கிழார் சுவாமிகள் சொல்கிறார்.

எண்ணிலாண்டு எய்தும் வேதாப்
படைத்தவள் எழிலின் வண்ணம்
நண்ணுநான் முகத்தால் கண்டான்;
அவளினும் நல்லாள் தன்பால்
புண்ணியப் பதினா றாண்டு
பேர்பெறும் புகலி வேந்தர்
கண்ணுதல் கருணை வெள்ளம்
ஆயிரம் முகத்தால் கண்டார்.”

எண்ணில் அடங்காத வயசான பிதாமகன், தான் படைத்த சரஸ்வதி தேவியின் எழிலின் வண்ணத்தைக் கண்டான்; தான் படைத்தவளை அழகுப் பிழம்பாகப் பார்த்தான். காமம் உண்டா யிற்று; மணந்து கொண்டான்.ஆனால் ஞானசம்பந்தப் பெருமான் பூம்பாவையைப் படைத்தார்.

பூம்பாவை சரஸ்வதியைக் காட்டிலும் நல்லாள்.எப்படி நல்லவள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டுமானால் தமிழ் நூல்களைப் பார்க்க வேண்டும். தன்னைப் பார்க்கிறவர்களுக்குத் தீய எண்ணம் உண்டாகாமல் தோன்றுபவள் நல்லவள்.கலைமகள் மற்றத் திறத்தில் நல்லவளே. ஆனால் அவள் உருவம் பிரம தேவன் கண்ணிலே பட்ட மாத்திரத்தில் அவளை மணக்க வேண்டு மென்ற ஆசை அவனுக்கு மூண்டது. பூம்பாவையின் உருவமோ ஞான சம்பந்தப் பெருமான் உள்ளத்தில் காம எழுச்சியை உண்டாக்கவில்லை. பிறர் நெஞ்சு புகாத கற்பு என்று இதைச் சொல்வார்கள். பூம்பாவை எழுந்தாள். அவள் அழகு ஞான சம்பந்தப்பெருமான் உள்ளத்தில் கலக்கத்தை உண்டாக்கவில்லை.

அது மட்டுமா? சரஸ்வதியைப் படைத்தவன் பிரமன். இங்கே ஞானசம்பந்தப் பெருமான் பூம்பாவையைச் சிவபெருமானின் அருளினால் படைத்தார். ஆகவே இது மூலப் படைப்பு. பிரமன் படைப்பாகிய கலைமகளைவிடச் சிவபெருமான் அருளால் படைக்கப்பெற்ற பூம்பாவை பின்னும் நல்லவள் என்பதில் தவறு என்ன?

அவளைப் புண்ணியப் பதினாறு ஆண்டு பேர்பெறும் புகலி வேந்தர் ஆகிய ஞானசம்பந்தர் கண்டார். அவளைப் பார்க்கும் போது அவருக்கு இரண்டு விதமான உணர்ச்சி ஏற்பட்டிருக்கலாம். அவள் எழிலைப் பார்ப்பதனாலே காமம் உண்டாகியிருக்கலாம்; அல்லது நாம் படைத்தோம் என்ற நினைப்பினாலே அகங்காரம் முளைத்திருக்கலாம். எம்பெருமாட்டியின் திருக்கரத்தால் கலை ஞானம் ஊட்டப் பெற்றவர் ஞானசம்பந்தர். ஆகவே தம்முன் நின்ற பெருமாட்டியின் எழிலை அவர் காணவில்லை. தாம் படைத்த படைப்பின் ஆற்றலையும் அவர் காணவில்லை. காமமும் இல்லை; ஆணவமும் இல்லை. பின் எதைக் கண்டார்?

கண்ணுதல் கருணை வெள்ளம்
ஆயிரம் முகத்தால் கண்டார்.”

ஆண்டவனுடைய கருணையினால் எல்லோரும் மகிழும்படியாகப் பூம்பாவை உயிர் பெற்றாள் என்று இன்புற்றார். ஆண்டவன் கண்ணுதல்; ஞானக் கண்ணை நெற்றியில் பெற்றவன். அவன் அருளில் காமத்துக்கு இடம் இல்லை. அந்த நெற்றிக்கண் காமனை எரித்ததல்லவா? ஞானம் காமத்தையும் அகங்காரத்தை யும் தோன்றாமல் செய்து விட்டது. புறக்கோலத்தைப் பாராமல் ஞானக் கண்ணால் இறைவன் திருவருளைப் பூம்பாவையின் வடிவத்தில் கண்டார் சம்பந்தர். தன் எட்டுப்புறக் கண்களால் பிரமன் பார்த்துக் காமத்தினாலே மனச் சலிப்புக் கொண்டான். ஆனால் கலை ஞானம் உடைய சம்பந்தரோ ஒரு முகம் உடையவர்தாம் என்றாலும் தமது ஞான உள்ளத்திலே முளைத்த ஆயிரம் முகம் கொண்டு கண்டார். “அவள் என் மகள்” என்று கூறி அப்பெண்ணை மணக்க மறுத்தார்.

ஞான கலை படைத்தவர்களின் கண்களில் படுகின்ற கட்டாரி வேல்விழியார் அவர்களை என்ன செய்ய முடியும்? பெண்களைக் காண்பதால் காமவிடாய்ப் படுகிறவர்கள் ஞானம் இல்லாதவர்கள். அப்பெண்களின் விழி அவர்களது உயிரைத் திருகிப் பருகிப் பசி தணிக்கும். ஞான கலை பெற்ற ஞானிகளோ அவர்களைத் தங்கள் சேய் போலப் பார்த்துவிடுகிறார்கள். காமம் உண்டாக வழி ஏது?