அடியார்க்கு நல்ல பெருமாள்
கி. வா.ஜகந்நாதன்

தப்பிப் போன மனம்

தப்பிப் போனது ஒன்றற்கு
எட்டாத ஞான கலைதருவாய்.

“என் கைக்குள் ஒன்று அகப்படாததனாலே மலையைப் பொட்டாக்கும் ஆற்றல் எனக்கு இல்லை. அதைப் பிடித்து என் ஆணைக்கு அடங்க வைத்து, ஞான கலையை வாங்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அது எனக்கு அகப் பட்டால் அல்லவா ஞானத்தை வாங்க முடியும்?”

தப்பிப் போனது ஒன்று.

“அந்த ஒன்று மனம். மனத்தை என் பிடிக்குள் அகப்படுத்தி, உன் திருவடியிலே விழச் செய்து அதற்குக் கொஞ்சம் ஞானம் ஊட்டலாம் என்று எண்ணினேன். அப்படிச் செய்திருந்தால் மலை மலையாக வரும் துன்பங்களைப் பொட்டுப் பொட்டாக ஆக்கியிருப்பேன். ஆனால் அந்த மனம் பிடிக்கு அகப்படாமல் தப்பிப் போய்விட்டதே! அதற்கு எட்டாத ஞான கலையை வழங்க வேண்டும் அப்பா. என் ஆற்றல் பலிக்கவில்லை. ஆகவே உன்னை வேண்டிக் கொள்கிறேன்” என்கிறார் அருணகிரியார்.

தாழம்பூவும் மனமும்

தாழம்பூவைப் பார்த்திருக்கிறோம். தனியாக இலை வேறு, பூ வேறு என்று இல்லாமல் இலையே பூவாக இருப்பது தாழம்பூ. இரண்டு இலைக்கும் வேறுபாடு உண்டு. இலையில் முள் இருக்கும்; பூவில் முள் இராது. இலை பச்சையாக இருக்கும்; பூ மஞ்சளாக இருக்கும். இலைக்கு மணம் இல்லை; பூவுக்கு மணம் உண்டு. ஆனால் இலையின் நுனிப் பகுதியே பூ. மேலேயுள்ள பச்சையான மணமற்ற முள் இலைகளை ஒவ்வொன்றாகக் கழித்து விட்டால் கடைசியில் மஞ்சள் நிறமான முள் இல்லாத இலை கிடைக்கும். அதற்கு மணம் உண்டாதலால் அது பூவாகிறது.

அதைப் போலவே மனம் இருக்கிறது. மனத்தைச் சுற்றியுள்ள முரட்டுத்தனம், சோம்பேறித்தனம் ஆகிய படலங்களை அகற்றி விட்டால் குழைவு, சுறுசுறுப்பு ஆகிய முள் இல்லாத படலங்கள் வெளிப்படுகின்றன. அது மாத்திரம் அல்ல. அன்பாகிய நறுமணம் அதில் கமழும். நம் மனம் தாழம்பூ ஆக வேண்டுமானால் மனத்தைச் சுற்றியுள்ள வாசனை அற்ற முள் இலைகளைக் கழிக்க வேண்டும். அது நம் கைக்குள் அகப்படாமல் தப்பிப் போய்விடுகிறது.

கட்டுப்பாடு

நமக்கு நாமே கட்டுப்படுவது இன்பம். பிறருக்குக் கட்டுப் படுவது துன்பம். நாமே நம் வீட்டுக்குள்ளே நுழைந்து கொண்டு தாழ்ப்பாள் போட்டுக்கொள்வது பாதுகாப்பு. நம்மை உள்ளே தள்ளிப் பிறர் வெளியே பூட்டிடுவது சிறை. இரண்டு இடங்களுக்கும் வேறுபாடு பொதுவாகப் பார்த்தால் ஒன்றும் இல்லை. நான்கு பக்கமும் இரண்டு இடங்களிலும் சுவர்கள் உள்ளன. கதவு இருக் கிறது. பூட்டு இருக்கிறது. ஆனால் இங்கே போட்ட பூட்டு, பிறர் போட்டது. அங்கே போட்ட பூட்டு நாமே போட்டுக் கொண்டது. நாமே பூட்டுப் போட்டுக் கொண்டது வெளியில் இருந்து பகைவர்கள் உள்ளே வராமல் இருப்பதற்காக. பிறர் போட்ட பூட்டு நாம் வெளியே தப்பிப் போய்விடாமல் இருப்பதற்காக. ஆகவே முன்னால் நாம் இருக்கும் இடம் பாதுகாப்பான இடம்.

பின்னால் நாம் உள்ள இடம் சிறை. பாதுகாப்பான இடத்தில் இன்பம் உண்டாகிறது. சிறையில் துன்பம் அநுபவிக்கிறோம்.

அதைப் போல மனம் நமக்குக் கட்டுப்பட்டிருந்தால் இன்பம் பெற்றிருக்கும். நம் கைக்குள் அகப்படாமல் தப்பிப் போய்ப் பிறருக்குக் கட்டுப்பட்டுச் சிறைப்படுகிறது. அதனாலே அதற்கு வருகின்றது துன்பம்.

வலைப்பட்ட மனம்

மனத்தை நாமே கட்டலாம், கட்டி முருகனிடத்திலிருந்து ஞான கலை கொஞ்சம் வாங்கி ஊட்டலாம் என்று நாம் நினைக்க, அது நம் பிடிக்கு அகப்படாமல் தப்பிப் போகிறது. தப்பிப் போனது ஒன்று யாருக்கும் கட்டுப்படாமல் இருந்தால் மறுபடியும் அதைக் கட்ட நாம் முயற்சி செய்யலாம். ஆனால் அதுவோ வேறு ஒருவரிடத்தில் கட்டுப்படுகிறது. நமக்குக் கட்டுப்பட்டிருந்தால் ஞான கலையை எட்டிப் பிடித்திருக்கும். தப்பிப் போனதனால் அதற்குக் கலைஞானம் எட்டாது போய்விட்டது. வேல்விழியாருக்குக் கட்டுப்பட்டதனால் கிடைத்தது என்ன? மையல் வலை. அவ் வலையை விரித்து நம் பிடிக்குத் தப்பிப்போன மனத்தைச் சிக்க வைத்துச் சிறைப்படுத்திவிட்டனர் கட்டாரி வேல்விழியார்.

இரும்காமவிடாய்ப்
பட்டார் உயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்கும்
கட்டாரி வேல்விழியார்.

இரும் – பெரிய, பரந்த. காம விடாய் -காமத்தினால் எழுகின்ற தாகம். காமம் என்பது மனத்திலே தோற்றுகின்ற உணர்ச்சி. இந்த உணர்ச்சி வசப்பட்டுக் கட்டாரி வேல் விழியார் வலையில் சிக்குண்டு தடுமாறின உயிர்கள் ஒன்றா இரண்டா? சரித்திரங்களும், புராணங்களும் கதைகதையாகச் சொல்கின்றன. காமவிடாய்ப் பட்டாருடைய உயிரைக் கட்டாரி வேல்விழியார் என்ன பாடு படுத்தி விடுகிறார்கள் தெரியுமா?

திருகிப் பருகிப் பசி தணிக்கும்.

உயிரைத் திருகுவதாவது அது போகிற போக்கில் செல்ல விடாமல் தனக்குள் அடக்குவது. காமவிடாய்ப் பட்டாருடைய உயிரை அது போகிற போக்கில் போக விடாமல் தனக்குள் அடக்கிப் பசி தணிகிறது விழி. உலகில் உள்ள எல்லோரையுமே வேல்விழியார் அப்படிச் செய்ய முடியுமா?

உலகில் காமவிடாய்ப்பட்டவர்களும் இருக்கிறார்கள்; ஞான கலை உடையவரும் இருக்கிறார்கள். ஞான கலை உடையவரிடத்தில் கட்டாரி வேல்விழியாரின் ஜபம் ஒன்றும் சாய்வதில்லை. காமவிடாய்ப்பட்டாருடைய உயிரைத்தான் திருகிப் பருகிப் பசி தணியும். காமவிடாய்ப்பட்டவன் கலாசாலையில் படிப்பவனாய் ருந்தால் படிப்பில் அவன் மனம் ஓடாது. உத்தியோகசாலையில் இருந்தால் வேலையில் மனம் ஓடுகிறது இல்லை. அவன் தன் கடமைகளைச் செய்யும் இடங்களிலெல்லாம் குறுக்கிட்டு வழியை மாற்றி, கடமையைச் செய்யவொட்டாமல் முறித்து, வேல் விழி யாரின் நினைவாகவே எப்போதும் இருக்கும்படி செய்து விடு கிறது. வாழ வேண்டுமென்று அவன் எண்ணினாலும் கொஞ்சங்கூட வாழவொட்டாமல் சிதைத்துவிடுகிறது காமவிடாய்.

கட்டாரி வேல்விழி யார்வலைக்
கேமனம் கட்டுண்டதே.

“என் கைக்குள் அகப்படாமல் தப்பிப்போன மனம் கட்டாரியைப் போலவும், வேலைப் போலவும் இருக்கும் விழியாருடைய வலைக்குள் கட்டுண்டுவிட்டது” என்கிறார் அருணகிரியார்.

கண் சிறிய உறுப்பு. இருந்தாலும் காமவிடாய்ப் பட்டாருக்கோ அது பெரிய கட்டாரியைப் போலவும், வேலைப் போலவும் இருக்கிறது. மகளிருடைய கண்கள் பசியோடிருக்கின்றன. யாரைக் குத்தி வலையில் அகப்படுத்தலாம் என்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. ஆள் அகப்பட்டால் உயிரைத் திருகிப் பருகிப் பசி தணித்துக் கொள்கின்றன.

ஞானமும் வேலும்

பின்னால் இருக்கும் பொருள்களை எல்லாம் மறைத்து, முன்னால் இருப்பவர்களுக்கு மலைப்பை உண்டாக்கிய பெரிய மலையை ஆண்டவன் பொட்டுப் பொட்டாக ஆக்கினான்.

அவன் திருவருளால் ஞான கலை பெற்றவர்களும் அப்படிச் செய்கிறார்கள்.

மையல் வலைக்குக் கட்டுப்படாமல் இருப்பது ஞான கலை உள்ள மனம். யார் ஞான பண்டித சாமியோ, யார் ஞான கலாநாதனோ அவனிடத்திலிருந்து ஞான கலை வர வேண்டும். ஞானமென்னும் கலையையே ஒளி வீசும் கூர்மை உடைய வேலாகத் தன் திருக்கரத்தில் அவன் வைத்திருக்கிறான். அது மலையைப் பொட்டுப் பொட்டாக்கிய வரலாறு நமக்குத் தெரியும். அவன் அருளால் நமக்கும் அவனிடத்திலிருந்து கொஞ்சம் ஞான கலை கிடைத்தால் மலை மலையாக நமக்கு வருகின்ற துன்பங் களைப் பொட்டுப் பொட்டாக ஆக்க முடியும்.

ஞானிகளும் கலைஞர்களும்

ஞானிகளுக்கும், கலைஞர்களுக்கும் வேற்றுமை அதிகம் இல்லை. வால்மீகி முனிவரைப் போன்ற மகாஞானி யாராவது இருக்க முடியுமா? அவரைப்போன்ற கலைஞனும் இல்லை. ஞானி தன் அளவில் அநுபவத்தைப் பெற்றிருக்கிறான். கலைஞன் தான் பெற்ற அறிவைப் பிறருக்கும் பயன்படச் செய்கிறான். ஒரு சாலை வழியே போகும் போது சப்பாத்திப் புதரைப் பார்த்தால் நாம் வெறுக்கிறோம்; ரோஜாச் செடியைக் கண்டால் மகிழ்கிறோம். ஞானிகளுக்கு ரோஜாச் செடியைப் பார்க்கும் போதும், சப்பாத்தி முள்ளைப் பார்க்கும்போது வெறுப்போ மகிழ்வோ உண்டாவதில்லை. கலைஞன் ரோஜாச் செடியையும் மகிழ்வோடு பார்க்கிறான்; சப்பாத்தியையும் மகிழ்வோடு பார்க்கிறான். இரண் டையும் சித்திரமாக எழுதுகிறான். ஆகவே, ஞானியும் கலைஞனும் ஒரே நிலையில் இருந்து எதையும் பார்க்கிறார்கள். ஞானி விருப்பு வெறுப்பு இல்லாத நிலையில் இருந்து பார்த்தால், கலைஞன் மகிழ்ச்சி என்ற நிலையில் இருந்து பார்க்கிறான்.