அடியார்க்கு நல்ல பெருமாள்
கி. வா.ஜகந்நாதன்

உள்ளமும் உலகமும்

இப்படி இந்த உலகமாகிய கண்ணாடியைப் பார்க்கிறவர்களில் சிலருக்கு, ”உலகம் முழுவதும் இன்பமாகக் காட்சி அளிக்கிறது” என்றால் அவர்களே இன்பத்தின் வடிவாக இருக்கிறார்கள். சிலர், ”உலகம் முழுவதும் துன்பம் நிரம்பி இருக்கிறது” என்றால் அவர்களே துன்பத்தின் சின்னமாக இருக்கிறார்கள். “உலகில் நல்லவர்களே இல்லை; திருடர்களும், நயவஞ்சகர்களும் நிரம்பியிருக்கிறார்கள்” என்பவர்களே திருடர்கள், நய வஞ்சகர்கள். அதனால்தான் உலகத்திலுள்ளவர்கள் எல்லாரும் அவர்களுக்கு அப்படித் தோற்றுகிறார்கள். ”உலகிலுள்ளவர்கள் எல்லோரும் நல்லவர்கள்; ஆண்டவன் குழந்தைகள்” என்று பார்க்கின்ற மக்கள் இல்லையா? இப்படிப் பல வழியாகக் கூர்ந்து பார்த்தால் அவரவர்களின் உள்ளத்தின் பண்பே உலகத்தில் பிரதிபலிப்பதை உணரலாம்.

ஆகவே, துன்பம் இன்பம் என்பவை அவரவர்களுடைய மனத்தின் பண்பையும், திண்மையையும் பொறுத்து இருக்கின்றன. ஒருவன் மலைபோல இருக்கிற பொருளைப் பொடியைப் போல் இருக்கக் காண்கிறான். அணு அணுவான திவலைகளைக்கூட ஒருவன் மலைபோல எண்ணி மலைத்து நிற்கிறான். எல்லா விதமான இன்ப போகங்களும் நிரம்பப் பெற்ற மாளிகையில் இருப்பவன் நரகத்தில் வாழ்பவனைப் போல அவதியுறுவதும் உண்டு. வறிய நிலையில் இருப்பவனோ வள வாழ்வு நிரம்பப் பெற்ற மாளிகையில் இருப்பதாக மகிழ்வதும் உண்டு. நரகத்தையே நல்லதாகப் பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். மாணிக்கவாசகர் அத்தகையவர். ”இறைவனே! உன் திருவருள் துணை எனக்கு இருந்தால் நரகமானாலும் சரி, அங்கே சென்று வாழ்வேன்” என்று சொல்கிறார்.

“……….நரகம்புகினும் எள்ளேன் திருவரு ளாலே இருக்கப் பெறின்இறைவா!”

இறைவன் திருவருள் இல்லாவிட்டால் இன்பலோகம் நரக லோகமாகத் தோற்றுகிறது. ஒரு சிறு துரும்பும் கட்டாரியாக இருக்கிறது. இறைவனது நம்பிக்கையோடு வாழ்பவர்களுக்கு நரகம் சுவர்க்கமாக இருக்கிறது. உலகில் உள்ளவர்கள் எல்லாரும் நல்லவர்களாக இருக்கிறார்கள். பெண்டு பிள்ளைகள் எல்லாரும் சொன்னதைக் கேட்பவர்களாக இருக்கிறார்கள்.

கோழைகளின் இயல்பு

“வாழ்விலே எவ்விதத் துன்பமும் இன்றி இவர்களைப் படைத்துவிட்டு என்னை எல்லாவிதமான துன்பங்களையும் அநு பவிக்கும்படியாக இறைவன் செய்து விட்டானே” என அலறுகின்ற மக்கள் யார்? அவர்கள் இறைவன் திருவருள் துணை இல்லாதவர்கள்.பொழுது விடிந்து பொழுது சாய்வதற்குள் அவர்கள் படுகின்ற வேதனை, அஞ்சுகின்ற அச்சம், கொஞ்ச நஞ்சமா? தொட்டவதற்கு எல்லாம் பயம். எல்லோரிடமும் சண்டை. சிறிய சிறிய துன்பங்கள்கூட அவர்களுக்கு மலை மலையாக இருக்கின்றன. இறைவன் திருவருள் இல்லாத இத்தகைய கோழைகளுக்கு எந்தக் காரியத்தைச் செய்வதற்கும் நேரம் இராது; ஆற்றல் இராது; மனத் திண்மை இராது. “எனக்குச் சுதந்தரம் இருந்தால் அப்படிச் செய்வேன், இப்படிச் செய்வேன். அந்தப் பாவிதான் என்னை எதுவும் செய்யவிடாமல் அடிக்கிறானே!” என்று பழியைப் பிறர்மேல் சுமத்தி ஏமாந்தும் உலகை ஏமாற்றியும் வருபவர்கள் இந்தக் கோழைகள். இக்கோழைகளுக்கு மலை மலையாகத் தோன்றும் துன்பங்கள் இறைவன் திருவருளால் ஞானம் பெற்ற வீரர்களுக்குப் பொடிப் பொடியாகப் போகின்றன.

இந்த இரண்டையும் பிணைத்து அருணகிரியார் ஒரு பாட்டைச் சொல்கிறார்.

பொட்டாக வெற்பைப் பொருதகந்
தா! தப்பிப் போனதுஒன்றற்கு
எட்டாத ஞான கலைதரு
வாய்;இரும் காமவிடாய்ப்
பட்டார் உயிரைத் திருகிப்
பருகிப் பசிதணிக்கும்
கட்டாரி வேல்விழி யார்வலைக்
கேமனம் கட்டுண்டதே.

நுட்பமான பொருளைப் பெரிதாகக் கருதி அஞ்சுகின்றவர் ஒரு சாரார்.பெரிய பொருளை அடியோடு பொடியாக்குகின்றவர் ஒரு சாரார்.

மலையைப் பொடியாக்கியது

மனிதனுக்கு இன்பம் வந்தாலும், துன்பம் வந்தாலும் அதற்கு உவமையாக மலையைச் சொல்வது வழக்கம். “மலை மலையாகச் செல்வம் அவனிடத்தில் சேருகிறது” என்பார்கள். அதேபோல, “மலை போலத் துன்பம் வந்துவிட்டதே!” என்று தலையின்மேல் கை வைத்துக் கொள்கிறவர் எத்தனை பேர்!

ஞானத்தையே வேலாக உடைய முருகன் தேவர்களுக்கு மலை மலையாக வந்த துன்பங்களை அழிந்து போகும்படி செய்தான். அவர்களுக்குத் துன்பம் அளித்து வந்த அசுர மலைகள் எல்லாம் பொடிப் பொடியாகும்படி செய்தான். தேவர்களை அழிக்க வந்த பெரிய மலை ஒன்று இருந்தது. அதற்குக் கிரவுஞ்சம் என்று பெயர். அதைக் கண்டு முதலில் மலைத்தார்கள் தேவர்கள். இறைவன் அதைப் பொடிப் பொடியாக்கினான். மலைபோல வந்தது பனி போலப் போயிற்று என்பார்களே, அப்படி ஆகிவிட்டது.

கலையும் வலையும்

ஞானத்தையே வேலாக உடைய பெருமானிடத்தில் ஞான கலையைப் பெறவேண்டும். அதனால் மலையையும் பொடிப்படுத்தி விடலாம். அதனைப் பெறாதவர்கள் துன்புறுகிறார்கள். அவர்கள் அகங்காரத்தால் அவன் திருவடி சேராது தலை திரும்பி நிற்பவர்கள். முன்னவர்களுக்கு விளைவது ஞானம். பின்னவர்களுக்கு விளைவது மையல். ஞானம் உடையவர்கள் மலையையும் பொடி யாக்குவார்கள்.ஞானம் இல்லாதவர்களோ, ஒன்றும் இல்லாத சிறியதையும் பெரிய மலையென்று அஞ்சுவார்கள். ஓரிடத்தில் ஞான கலை இருக்கிறது; மற்றோர் இடத்தில் காம விடாயினால் உண்டாகின்ற மையல் வலை இருக்கிறது. ஞான கலையைத் தரும் தலைவன் கந்தன். மையல் வலையை வீசுபவர்கள் கட்டாரி வேல் விழியார். இரண்டு பேர்களிடமும் வேல் ஆயுதமாக இருக்கிறது. அவன் வேலாயுதன். இவர்கள் வேல் விழியார்கள்.

வேலாயுதன் செய்ததை அருணகிரியார் சொல்கிறார்.

வெற்பைப் பொருத்து

பொட்டாக வெற்பைப் பொருத கந்தா!

சாதாரண மலையைக் கண்டாலே நாம் மயங்குகிறோம். நிற்கின்ற மலைகள் இவை. கந்தன் பொடியாக்கியதோ பறந்த மலை; ஆகாயத்தில் பறந்து சென்று எங்கே ஜன நெரிசல் அதிகமாக இருக்கிறதோ அங்கே அப்படியே உட்கார்ந்து எல்லாச் சீவராசிகளையும் சங்காரம் செய்த மலை. அந்த மலையை அப்படியே கண்களுக்குத் தெரியாதபடி பொட்டுப் பொட்டாக ஆக்கினான் கந்தன். பூச்சி, பொட்டு என்று சொல்வது மரபு. பூச்சி கண்ணுக்குத் தெரிவது; கண்ணுக்கே தெரியாதது பொட்டு.

வெற்பு – மலை. மலை என்ற சொல்லிலிருந்து மலைப்பு என்ற சொல் உண்டாகிறது. மலைப்பை உண்டாக்குவது மலை பின்னாலே இருக்கும் பொருளை மறைத்து, முன்னால் இருக்கிறவனுக்கு மலைப்பை, அச்சத்தை உண்டு பண்ணும் மலையைக் கண்ணுக்குத் தெரியாத பொட்டுப் பொட்டாகப் போகும்படி பொருதான் கந்தன். அவனுடைய அருள் பெற்றவர்களும் அவனைப்போல இருப்பார்கள். “அரசன் எப்படி, குடிகளும் அப்படி” என்பது வழக்கு. அவன் திருவருளைப் பெற்றவர்கள், மலை போல் இருக்கும் துன்பங்களைக் கண்ணுக்குத் தெரியாத பொட்டாக ஆக்குகின்ற ஆற்றல் அடைவார்கள். நமக்கு அந்த ஆற்றல் வரவில்லை. அதற்குக் காரணம் இன்னதென்பதை அருணகிரியார் சொல்கிறார்.