ஒளவையின் சுருக்கப் பேச்சு

ஒரு சமயத்தில் ஒளவைப் பாட்டியைச் சில புலவர்கள் வணங்கி, “பாட்டி, நூல்கள் யாவும் தர்மார்த்த காம மோக்ஷம் என்ற நான்கையும் சொல்கின்றன. ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகப் பேசுகின்றன. அந்த நூல்களை எல்லாம் தெரிந்துகொள்வதற்கு வாழ்நாள் போதாது. சுருக்கமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப் படுகிறோம். நீங்கள் சுருக்கிச் சொல்வதில் வல்லவர்கள் அல்லவா?” என்று கேட்டார்கள்.

சோழனுக்கு முடிசூட்டு வைபவம் நடந்தது. பெரிய புலவர்கள் எல்லாம் – ஒளவைப் பாட்டியும் கூட -வந்திருந்தார்கள். சோழனை வாழ்த்தி அப்புலவர்கள் பல பாட்டுக்களை எழுதி வந்திருந்தார்கள்; ஆனால் ஔவைப் பாட்டி எதையும் எழுதி வரவில்லை. எப்படியும் அவள் வாழ்த்துவாள் என்று யாவரும் எதிர்பார்த்தார்கள். நினைத்தால் வேகமாகப் பாடக்கூடிய வன்மை உடையவள். ஆகையால் திடீரென்று பல பாடல்களைப் பாடக்கூடும் என்று நினைத் தார்கள். அவரவர்கள் தங்கள் பாட்டை வாசித்தார்கள். ஆனால் பாட்டியோ, “வரப்புயர” என்று சொல்லி நிறுத்தினாள். இந்தக் காலமாக இருந்தால் பாட்டிக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லியிருப்பார்கள். பழங்காலத்தில் பெரியவர் யாரேனும் ஒன்று சொன்னால் அதை மறுத்துக் கேள்வி கேட்கும் வழக்கம் இல்லை. பெரியவர்களைப் பெரியவர்கள் என்று தெரிந்துகொண்ட பிற்பாடு அவர்கள் சொல்வதில் நம்பிக்கை வைத்து அன்போடு கேட்பார்கள்.

ஆகவே புலவர்கள் பாட்டியிடம் சென்று, “பாட்டி, இன்று தான் எங்கள் அறியாமை வெளிப்பட்டது” என்று சொன்னார்கள்.

“எதற்காக இப்படிச் சொல்கிறீர்கள்?” என்று அந்தப் புலவர்களைப் பாட்டி கேட்டாள்.

“நீங்கள் அரசவையில் வரப்புயர என்று சொன்னீர்கள். முடிசூட்டு வைபவத்தில் இப்படிச் சொல்வதற்குக் காரணம் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு விளங்கவில்லை” என்கிறார்கள்.

பாட்டி புன்னகை பூத்தாள்.

”நீங்கள் சொன்ன தொடருக்குப் பொருளை விளக்க வேண்டும்” என்று புலவர்கள் கேட்டுக் கொண்டார்கள். பாட்டி விளக்கத் தொடங்கினாள்.

“வரப்புயர என்று நான் சொன்னேன். வரப்பு வயல்களில் இருக்கும். வயல்களில் வரப்பு அமைப்பது நடப்பதற்காக அன்று. நீர் தேங்கி நிற்பதற்கு வரப்பு அமைக்கிறார்கள். ஆகவே வரப்பு உயர்ந்தால் நீர் உயர்ந்து தேங்கும். நீர் உயர்ந்தால் வயல்களில் பயிர் செழித்து உயரும். பயிர்கள் செழித்தால் நல்ல விளைச்சல் ஏற்படும். நல்ல விளைச்சலினால் குடிமக்கள் பசியின்றி உண்டு வாழ்வார்கள்; மேலும் வளங்களைச் சேர்த்துக் கொள்வார்கள். குடிகள் உயர்ந்தால் கோன் ஆகிய அரசன் உயர்வான். அரசனுடைய உயர்வுக்கு மற்ற மற்றக் காரணங்கள் இருந்தாலும் அடிப்படையான காரணம் நீர்வளமும் நில வளமும் மிகுதியாவதுதான்.”

இத்தனை கருத்தை வைத்து வரப்புயர என்று சொன்னாள் பாட்டி.

அவள் சொல்லாத ஒரு பொருளும் உண்டு. வரப்பு என்பது வரம்பு என்பதன் விகாரம்.

மனிதனுடைய லட்சிய வரம்பு உயரவேண்டு மென்பதையும் பாட்டி அந்த ஓர் அடியில் குறிப்பிட்டாள். மனிதனுடைய லட்சியம் உயர உயர அவனது வாழ்க்கை அநுபவங்கள் உயரும். அவனும் உயர்ந்து வருவான். வயல்களில் உள்ள வரப்பு உயர வேண்டும் என்பதோடு கூட மனிதனுடைய வாழ்க்கையின் லட்சிய வரம்பும் உயரவேண்டுமென்று ஒளவை வாழ்த்தியதாகக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *