
அருளாளன்
கொட்டு மேள ஒலி இனியதாகக் கேட்கிறது. நாயனத்தின் ஒலியும் நெடுந்தூரம் வரைக்கும் கேட்கிறது. பெரிய ஆரவாரம்; ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கிழவர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரே ஆரவாரம் செய்கிறார்கள். இது ஏதோ ஒரு கல்யாண ஊர்வலம் போல இருக்கிறது. ஆம்! கல்யாண ஊர்வலந்தான்! பேரழகர், சிறந்த காளை, திருநாவலூரராகிய நம்பியாரூரர் தம் கல்யாணத்தின் பொருட்டு ஊர்வலம் சென்று கொண்டிருக்கிறார். அவர் குதிரையின்மேல் செல்கிறார்.
மாப்பிள்ளை அழைப்பு மிகவும் சிறப்பாக நடக்கிறது. ஊர்வலம் புத்தூர் என்ற ஊரை அணுகிவிட்டது.
அப்பொழுதுதான் அந்தக் கிழவர் எதிர்ப்பட்டார். “என்ன கல்யாணம்?” என்று கேட்டார்.
”இந்த ஊர்க் குருக்களையாவின் பிள்ளைக்குக் கல்யாணம்; நம்பி ஆரூரருக்குக் கல்யாணம்” என்று சொன்னார்கள்.
”அப்படியா? நம்முடைய ஆரூரனுக்கா?” என்று கேட்டார்.
.”ஆமாம். அதே பிள்ளைக்குத்தான்” என்று அவர்கள் சொன்னார்கள்.
”எங்கே, எந்த ஊரில் நடக்கிறது கல்யாணம்?”
”இந்த ஊரிலே சடங்கவி சிவாசாரியாருடைய பெண்ணுக்கும் நம்முடைய நாவலூர் நம்பிக்கும் கல்யாணம் நடக்கப் போகிறது” என்று அவர்கள் சொன்னார்கள்.
அதைக் கேட்டாரோ இல்லையோ, அந்தக் கிழவனாருக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது.
“அது எப்படி நடக்கலாம்? அவன் என்னுடைய அடிமை அல்லவா? இதோ நான் போய்க் கல்யாணத்தை நிறுத்தி விடுகிறேன். எனக்குக் கல்யாணப் பத்திரிகை கிடையாது. என்னுடைய வார்த்தையைக் கேட்காமல் என்னுடைய அடிமைக்கு எப்படிக் கல்யாணம் பண்ணலாம்?” என்று அவர் மிகவும் சினந்து கூட்டத்துக்கு நடுவிலே எப்படியோ புகுந்துவிட்டார். புகுந்து நேராக அந்த ஒற்றைப் பிராம்மணர் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு முன்னாலே எதிர்ப்பட்டார். “நில். நமக்கும் உனக்கும் ஒரு வழக்கு இருக்கிறது” என்று சொன்னார். யாரோ ஒரு கிழவர் இப்படிக் கல்யாண ஊர்வலத்தை வந்து கெடுக்கிறாரே என்று நம்பி ஆரூரருக்குக் கோபந்தான் வந்தது.
‘“என்ன வழக்கு? அதைச் சொல்லும். அதைத் தீர்த்துவிட்டு மேலே செல்கிறேன்” என்றார்.
“நீ என்னுடைய அடிமை. என்னுடைய உத்தரவு இல்லாமல் எப்படி நீ மணம் செய்து கொள்ளலாம்?” என்று கிழவர் கேட்டார்.
“இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? அந்தணனுக்கு அந்தணன் அடிமையாவது! இந்த உலகத்தில் கேளாத செய்தியாக இருக்கிறதே! நீர் பித்தரோ?” என்று சுந்தரர் சிரித்தார்.
“ஆம். நீ சிரிக்கத்தான் சிரிப்பாய். உன்னுடைய தாத்தா காலம் முதலே அடிமைத்தனம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது” என்றார் கிழவர்.
“அதற்கு என்ன ஆதாரம்?” என்று கேட்டார் ஆரூரர்.
“உன் பாட்டனார் எழுதி அளித்த ஓலை இருக்கிறது. வெறும் பேச்சுப் பேச வேண்டாம். எனக்குப் பணி செய்ய வேண்டும்.”
அவருடைய வடிவத்தைக் கண்டபோது சுந்தரருடைய உள்ளம் உருகியது. ஆனால் அவர் வார்த்தையைக் கேட்ட போது சினம் மூண்டது. “எங்கே, அந்த ஓலையைக் காட்டும்; பார்க்கலாம்” என்றார்.
“உனக்கு நான் ஓலை காட்டவேண்டுமோ? சபையினர் முன் காட்டி உன்னை வேலை செய்யச் செய்கிறேன்” என்று அந்தணர் மிடுக்காகப் பேசினார்.
அப்போது நாவலாரூரர் வெகுண்டு வேகமாக அம் முதியவரைப் பற்றச் சென்றார். அவர் மணப் பந்தலுக்குள்ளே ஓட, சுந்தரர் அவரை விரைந்து சென்று பற்றி அவர் கையில் இருந்த ஓலையைப் பிடுங்கி, “அந்தணர் அடிமை வேலை செய்வதாம்!” என்று அதைக் கிழித்து விட்டார்.
அது கண்டு அருகில் உள்ளவர்களைப் பார்த்து அந்தணர் முறையிட்டார். அப்போது அயலில் நின்றவர்கள் சுந்தரரை விலக்கி, “புதியதாக உலகில் இல்லாத செய்தியைச் சொல்லும் அந்தணரே, நீர் எங்கே இருக்கிறவர்? சொல்லும்” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், “நான் இதோ அணிமையில்தான் இருக்கிறேன். வெண்ணெய் நல்லூர்தான் என் இருப்பிடம். அது கிடக்கட்டும் ஐயா; இவன் அக்கிரமமாக என் கையில் இருந்த ஓலையை வாங்கிக் கிழித்துவிட்டான். இதுவே இவன் எனக்கு அடிமை என்பதைக் காட்டவில்லையா? ஓலை இருந்தால் உண்மை தெரிந்துவிடும் என்று அதைக் கிழித்து விட்டான்” என்றார்.
அப்போது ஆரூரர், “உமக்கு வெண்யெய் நல்லூர் சொந்த ஊரானால், அந்த ஊரிலுள்ள சபையினரிடம் போய் இந்த வழக்கைப் பேசலாம், வாரும்” என்றார்.
‘நல்ல காரியம்! வெண்ணெய் நல்லூருக்கு வா. அங்குள்ள வேதியர்களின் முன் மூல ஓலையைக் காட்டி நீ எனக்கு அடிமை என்பதைச் சாதிக்கிறேன். நல்ல வேளை! நீ கிழித்தது படி ஓலைதான்” என்று தம் கைத் தடியைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டார் வேதியர்.
அவரைத் தொடர்ந்து சுந்தரரும் அவருடைய சுற்றத்தாரும் ஏனையோரும் சென்றார்கள். திருவெண்ணெய் நல்லூர்ச் சபைக்குச் சென்று அவையிலிருந்த அந்தணர்களிடம் தம் வழக்கை முறையிட்டார் முதிய வேதியர்.
சுந்தரரோ, “எல்லாச் சாத்திரங்களையும் தேர்ந்த பெரியவர்கள் நீங்கள். நான் ஆதி சைவ அந்தணன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த அந்தணர் என்னைத் தம் அடிமை என்று சொல்கிறார். இது முறையாகுமா?” என்று கேட்டார்.
“இவர் உமக்கு அடிமை என்று வல்வழக்கு இடுகிறீரே! அதற்கு ஏதேனும் அநுபோக பாத்தியம் உண்டா? ஆவண ஓலை உண்டா? அல்லது வேறு சாட்சி உண்டா? இந்த மூன்றில் ஒன்றேனும் காட்ட முடியுமா?” என்று அவையோர்கள் வேதியரைக் கேட்டார்கள்.
“இதோ மூல ஓலை வைத்திருக்கிறேன்.”
“எங்கே காட்டும்.”
“இவன் அதையும் கிழித்துவிட்டால்-?”
“நீர் அஞ்ச வேண்டாம். உமக்கும் உம்முடைய ஓலைக்கும் ஒரு தீங்கும் வரவொட்டோம்.”
அதன் பின், அடிமை கொண்ட ஐயர் ஓலையை எடுத்துக் கொடுக்க ஊர்க்கரணத்தான் வாங்கிப் படிக்கத் தொடங்கினான்.
”திருநாவலூர் ஆதி சைவனாகிய ஆரூரன் எழுதியது. திருவெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு யானும் என்னுடைய பரம்பரையில் வருகிறவர்களும் அடிமை. இதற்கு இவ்வோலை எழுதினேன். இது என் எழுத்து.”
ஓலையிலுள்ள வாசகத்தைக் கேட்டு, அதில் சாட்சிக் கையெழுத்திட்டவர்கள் பெயர்களையும் யாவரும் கேட்டனர். அப்பால் அந்த எழுத்து, சுந்தரருடைய பாட்டனாருடையது தானா என்ற ஆராய்ச்சி பிறந்தது. ஆவணக்களரியிலிருந்து அவர் எழுதிய பழைய ஓலை ஒன்றை வருவித்து ஒப்பு நோக்கினார்கள். எழுத்து இரண்டும் ஒத்திருந்தன.
வெண்ணெய்நல்லூர்க் கிழவர் கூறுவது உண்மையே என்று தீர்ப்புச் செய்தனர் அவையிலுள்ள பெரியோர். இந்த நிகழ்ச்சியைக் கண்டு அங்கிருந்த யாவரும் வியப்படைந்தனர். அந்தணர்கள் அவரை நோக்கி, “நீர் இவ்வூர் என்று சொல்கிறீர். இங்கே நீர் இருக்கும் வீடு எது? எப்படி வாழ்க்கை நடத்துகிறீர்?” என்று கேட்டார்கள்.
“என்னை உங்களுக்குத் தெரியாதா? அப்படியானால் வாருங்கள்; என் இருப்பிடத்தைக் காட்டுகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டார் அந்தணர். அவரைத் தொடர்ந்து நம்பி ஆரூரரும் மற்றவர்களும் சென்றார்கள். அவர் திருக்கோயிலுக்குள் சென்று மறைந்தார்.
ஆரூரர் கோயிலுக்குள் புகுந்து, ‘எம்பிரான் கோயிலுக்குள் இவர் வந்தது எதற்காக?’ என்று சுற்றும் முற்றும் பார்த்தபோது, இறைவன் உமாதேவியாரோடு விடையின்மேல் அமர்ந்த திருக்கோலத்தைக் காட்டியருளினான். “முன்பு நீ நமக்குத் தொண்டன். பின்பு நம்முடைய ஏவலால் பூவுலகில் பிறந்தாய். நாம் தடுத்தாட்கொள்வதாகச் சொன்னபடி இப்போது ஆட்கொண்டோம்'” என்று ஒரு தெய்வக் குரல் கேட்டது.
அந்த வாக்கைக் கேட்ட ஆரூரருக்கு உடம்பெல்லாம் புளகம் போர்த்தது. கீழே விழுந்து பணிந்து எழுந்து நின்றார். கண்ணீர் ஆறாய்ப் பெருகிறது. “எளியேனை ஆட்கொள்ளும் பொருட்டுத் தேவரீரோ எழுந்தருளியது? இதனை அறியாத அசடனாகி விட்டேனே!” என்று ஆராமை மீதூரக் கதறினார்.
“நீ நம்மை வன்மையாகப் பேசினாய்; ஆதலால் உனக்கு வன்றொண்டன் என்னும் பெயர் வழங்குவதாகுக! நீ மலரால் நம்முடைய திருமேனி தீண்டி அருச்சிக்கும் குலத்திற் பிறந்தாய். ஆயினும் நமக்கு மிக்க விருப்பமான அருச்சனை பாட்டேயாகும். ஆதலால் நம்மை நீ செந்தமிழ்ப் பாடலால் பாடுவாயாக” என்று இறைவன் திருவாய் மலர்ந்தருளினான்.
“அந்தணத் திருக்கோலம் பூண்டு வழக்குப் பேசி வந்து உண்மையறியாத இந்தப் பேதையை ஆட்கொண்ட பெருமானே, தேவரீருடைய பெருங் கருணையை அறியாமல் நான் முரடனாக இருந்தேனே! தேவரீர் பெருமையை உணராத இந்த ஏழை எப்படிப் பாடுவேன்! தேவரீருடைய குணம் கடலைப் போன்றது. அதை எப்படி அறிந்து பாடப் போகிறேன்!”
”அப்பா, நீ என்னைப் பித்தன் என்று சொன்னாய் அல்லவா? அந்தச் சொல்லையே வைத்துப் பாடு. நீ என்னை முதல்முதலாக அறிந்த வகை அதுதானே? அப்படியே பாடு.”
இவ்வாறு இறைவன் கட்டளையிடவே, வன்றொண்டர் பாடலானார்.
பித்தாபிறை சூடிபெருமானே அரு ளாளா!
என்று பாடத் தொடங்கிவிட்டார். அதுமுதல் அவர் செந்தமிழ்த் தேவாரத் திருப் பாடல்களைப் பாடி இறைவனுக்குச் சொல் மலரால் அருச்சனை புரிந்து இன்புற்றார். இறைவனுடைய திருவருள் வழிகாட்ட, தமக்குள்ள இயற்கையான புலமையும் துணை செய்ய அழகிய தேவாரப் பதிகங்களைப் பாடலானார்.
ஓம் நமசிவாய ஓம்


