
அறிவற்ற பிராணியும் இறைவனை வழிபட்டால்
திருச்சிக்கு அருகில் திருஎறும்பூர் என்ற தலம் இருக்கிறது. இப்போது அதைத் திருவரம்பூர் என்று வழங்குகிறார்கள். திருச்சியில் இருந்து தஞ்சைக்கு வரும் வழியில் அந்தத் தலம் இருக்கிறது. சிறிய குன்று. அங்கே எறும்பு ஆண்டவனைப் பூசை பண்ணிப் பேறு பெற்றதாம். திருவானைக்காவல் என்ற தலத்தைப் பற்றிக் கேட்டிருப்பீர்கள். அங்கே யானை பூசை பண்ணியதாம். சிலந்தி பூசை பண்ணியதாம். ஒரு நாவல் மரத்தின் அடியில் சிவ பெருமான் லிங்க உருவத்துடன் தோன்றினான். ஒரு சிலந்திக்கு அந்தப் பெருமானிடத்தில் பக்தி உண்டாயிற்று. ‘பெருமான் வெயிலில் காய்கிறானே’ என்று மனம் வருந்திய சிலந்தி லிங்கத்தின் மேல் பந்தல் போட்டது போல வலை பின்னியது. ஆண்டவனுக்கு இந்த வழியிலாவது தொண்டு செய்யலாம் என்ற அறிவு அதற்கு இருந்தது. தன்னுடைய இயல்புக்கு ஏற்றபடி விதானம் போலக் கூடு கட்டித் தொண்டு செய்தது.
அந்தப் பெருமானிடத்தில் ஒரு யானைக்கும் பற்று உண்டாயிற்று. அது தன்னுடைய இயல்புக்கு ஏற்பப் பூசை செய்யத் தொடங்கியது. காவிரி ஆற்றுக்குச் சென்று தன் துதிக்கையில் தண்ணீர் எடுத்து வந்து சிவலிங்கப் பெருமானுக்கு அபிஷேகம் செய்தது. லிங்கத்தின் மேலே சிலந்திக் கூடு இருப்பதைப் பார்த்து அதைக் குலைத்து விட்டது. யானை போன பிறகு சிலந்தி வந்தது. தான் கட்டிய கூடு குலைந்துவிட்டதே என்ற கோபம் அதற்கு வரவில்லை. எம்பெருமான் வெயிலில் காய்கிறானே என்று மனம் இரங்கி வருந்தியது. மறுபடியும் ஒரு நாழிகையில் வலை பின்னிக் கூடு கட்டிவிட்டது. மறுநாள் அந்த யானை கூட்டைப் பார்த்து மறுபடியும் கலைத்துவிட்டது. யானை கலைப்பதும், சிலந்தி மீட்டும் கூடு கட்டுவதுமாக நடந்து வந்தது.
ஒருநாள் சிலந்தி, “இதை யார் செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்” என்று நினைத்தது. வலை கட்டின பிறகு அங்கே தங்கிக் கவனித்தது. அப்போது துதிக்கை நிறையத் தண்ணீரை முகந்து வந்து யானை அபிஷேகம் செய்தது. சிலந்திக் கூட்டையும் துதிக்கையினாலே குலைத்தது. அந்தச் சமயம் பார்த்துச் சிலந்தி யானையின் துதிக்கையினுள் புகுந்து குடைய ஆரம்பித்தது. யானையோ வலி தாங்க முடியாமல் துதிக்கையை நீட்டித் தரையில் அறைந்தது. அதனால் சிலந்தியும் இறந்து போயிற்று; யானையும் இறந்துவிட்டது. அந்த யானை சிவ கணங்களில் ஒருவராக ஆகிவிட்டது. சிலந்தி என்ன பதவி பெற்றது தெரியுமா? பெரிய அரசனாகப் பிறந்தது.
கோச்செங்கட் சோழன்
சோழச் சக்கரவர்த்திகளுக்குள் கோச்செங்கட்சோழன் என்று ஓர் அரசன் இருந்தான். அவனை, திருவானைக்காவில் ஆண்டவனை வழிபட்ட சிலந்தியின் மறுபிறவி என்று சொல்வார்கள்.
“சிலந்தியும் ஆனைக் காவில் திருநிழற் பந்தர் செய்து
உலந்தவன் இறந்த போதே கோச்செங்க ணானு மாகக்
கலந்தநீர்க் காவிரி சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கைவீ ரட்ட னாரே”
என்று அப்பர் சுவாமிகள் இந்த வரலாற்றைக் குறிக்கிறார்.
கோச்செங்கட் சோழன் என்பவன் சங்ககாலத்தில் இருந்த ஓர் அரசன். அவன் பிறந்த கதையே மிகச் சுவை பொருந்தியது. அவனை அவன் தாய் கருவுற்றிருந்தாள். அவன் எந்த நேரத்தில் பிறந்தால் மிக்க புகழ் உடையவனாக விளங்குவான் என்று சோதிடர்கள் எல்லாம் சேர்ந்து ஆராய்ந்தார்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறந்தால் அவன் சிறந்த அரசனாக ஆட்சி புரிந்து விளங்குவான் என்று சோதிடர்கள் சொன்னார்கள். குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கச் செய்வது என்பது நம்மால் இயலுகிறது அல்லவே! ஆனாலும் மருத்துவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு காரியம் செய்தார்கள். இன்னும் ஒரு முகூர்த்தம் சென்று பிறந்தால் அவன் சிறந்தவனாக இருப்பான் என்று தெரிந்து, அதற்கு என்ன வழி என்று ஆராய்ந்தார்கள். கரு உற்றிருந்த அரசியைத் தலையைச் சற்றுத் தாழ்த்தியும், கால் மேலாக இருக்கும் படியும் படுக்க வைத்தார்கள். இப்படி,பிறக்க வேண்டிய நேரம் கழிந்து, உரிய வேளையில் பிறப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள். தாய் வயிற்றில் சற்று நேரம் கடந்து இருந்தமையினால் அவன் பிறந்தபோதே இரு கண்களும் இரத்தம் குழம்பிச் சிவந்திருந்தது. அதனால் அவனுக்குக் கோச்செங்கட் சோழன் என்ற பெயர் வந்தது. இவ்வாறு ஒரு வரலாறு வழங்கி வருகிறது.
சிலந்தியாக இருந்தவனே இறைவனை வழிபட்ட புண்ணியப் பேற்றால் கோச்செங்கட் சோழனாகப் பிறந்தான் என்று திரு வானைக்காப் புராணம், தேவாரம் முதலிய நூல்கள் சொல்கின்றன. கோச்செங்கட் சோழன் சிவபெருமானுக்குப் பல கோயில்களைக் கட்டினான். திருமாலையும் வழிபட்டான். அவன் கட்டிய கோயில்கள் தனிச் சிறப்புடையவை. மாடக் கோயில்களைக் கட்டினான். போன பிறவியில் யானையினால் தான் கட்டிய வலை சிதைந்தமையினால் இந்தப் பிறவியில் யானை ஏற முடியாத கோயில்களைக் கட்டினான் என்று சொல்வது உண்டு. அவன் எழுபத்திரண்டு கோயில்களைச் சிவபெருமானுக்கு எடுப்பித்தான் என்பதைத் திருமங்கையாழ்வாரே சொல்லியிருக்கிறார்.
“இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற்கு
எழில்மாட மெழுபதுசெய் துலக மாண்ட திருக்குலத்து
வளச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.”
முன் பிறவியில் சிலந்தியாக இருந்து வழிபட்ட பெருமை யினால் கோச்செங்கட் சோழனாகப் பிறந்து உலகத்தை ஆண்டு சிறந்திருந்தான் என்ற இந்தக் கதையை ஆராய்ச்சிக் கண் கொண்டு பார்ப்பதில் பயன் இல்லை. அந்தக் கதையின் கருத்து, அறிவற்ற பிராணியும் இறைவனை வழிபட்டால் நல்ல பயன் பெறும் என்பதே.
சிலந்தி பூசை பண்ணின மற்றொரு தலம் உண்டு. அது காளஹஸ்தி. கழுதையும் பூசை பண்ணின இடம் உண்டு. திருக்கர புரத்தில் கழுதை வழிபட்டு நலம் பெற்றது. யானை பூசை பண்ணின இடம் திருவானைக்கா மட்டும் அல்ல; திருக்காளத்தியிலும் பூசை பண்ணியது. பாம்பு பலவிடங்களில் பூசை பண்ணிப் பேறு பெற்றதாகக் கதை உண்டு.
இப்படிக் குரங்கு வழிபட்ட இடம், பசு வழிபட்ட தலம், வண்டு வழிபட்ட தலம், மான் வழிபட்ட தலம் என்று பல தலங்கள் உண்டு; தலபுராணங்களைப் பார்த்தால் தெரியவரும். அவற்றையெல்லாம் பார்க்கும்போது ‘அவைகளே பூசை பண்ணிப் பேறு பெற்றிருக்கின்றனவே; பெறுதற்கு மிகவும் அரிய பிறவியாகிய மனிதப் பிறவியை எடுத்திருக்கும் நாம் சும்மா இருக்க லாமா?’ என்ற இரக்கம் நமக்குத் தோன்ற வேண்டும். இது தான் புராணங்களைப் படிப்பதன் பயன்.
ஓம் நமசிவாய ஓம்


