ஐந்து பசுக்கள்

ஒரு பார்ப்பான், தான் வசிக்கும் ஒரு கொட்டிலை, “என்னுடைய அகம்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். அந்தப் பார்ப்பான் அகத்திலே அவனைத் தவிர ஐந்து பசுக்கள் இருக்கின்றன. பசுவின் பால் மிகவும் நல்லதாயிற்றே என்று எண்ணி அப் பசுக்களிடத்தில் அவன் பால் கறக்கப் போனால் அவை சீறுகின்றன. அவற்றைச் சரியாக அடக்கி மேய்க்கின்ற ஒருவன் இல்லாததனாலே அவை வெறித்துத் திரிகின்றன. தட்டிக் கொடுத்து அடக்கலாமென்று நெருங்கினால் கொம்புகளால் முட்டுகின்றன. வெறித்துக் கிடக்கின்ற கொண்டி மாடுகள் ஐந்தை வீட்டிலே வைத்துக் கொண்டு அரை ஆழாக்குப்பால் காசுக்கு வாங்கி ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்கிறான். பசுமாடுகள் ஒன்றுக்கு ஐந்தாக அவன் அகத்திலே இருந்தும் என்ன பயன்?

நல்ல மனிதர் ஒருவர் வந்து சேர்ந்தார். “ஐந்து மாடுகளை வைத்துக் கொண்டு எதற்காகச் சுவாமி பால் வாங்குகிறீர்?”என்று கேட்டார். “ஐயையோ! அவை கொண்டி மாடுகள். அவற்றினிடம் போகவே நான் பயப்படுகிறேன். அருகிலே போனாலே முட்டுகின்றன; உதைக்கின்றன. நான் எப்படிப் பால் கறப்பேன்?”என்று பார்ப்பான் அழுதான். வந்த மனிதர் சிரித்தார்.

சிரித்தார். “ஐயா, பசுமாடுகள் இயல்பாகச் சாதுவானவை. உங்களுக்கு அவற்றை அடக்கத் தெரியவில்லை. எப்படி அடக்குகிறது என்று நான் சொல்லித் தருகிறேன், பாருங்கள். அப்புறம் அவை எவ்வளவு பால் கறக்கும் தெரியுமா?”என்று சொல்லி அவற்றை அடக்கும் உபாயத்தைச் சொல்லிக் கொடுத்தார். “மெள்ளத் தடவிக் கொடுங்கள். தேங்காயும் வெல்லமும் சேர்த்துக் கொடுங்கள். அப்புறம் மாடுகள் உங்கள் பின்னாலேயே வருகின்றனவா, இல்லையா, பாருங்கள். எதற்கும் ஓர் ஆளையும் போட்டுக் கொள்ளுங்கள்” என்று தந்திரம் சொல்லிக் கொடுத்தார். அவன் அப்படியே செய்தான். மாடுகளின் வெறி அடங்கிவிட்டது. மேய்க்கிற ஆளும் கிடைத்தான். இந்தப் பார்ப்பான் குடத்தை எடுத்துக் கொண்டு மாடுகளுக்கு அடியில் போய் உட்கார வேண்டியதுதான். சுத்தமான பாலை, தண்ணீர் கலப்பில்லாத பாலைத் தாமே உவந்து உவந்து அவை சொரிந்தன.

“பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ச் சொரியுமே”

என்கிறார் திருமூலர். பார்ப்பான் யார்? அகத்திலே கண் கொண்டு பார்க்கின்றவன் பார்ப்பான். அவனுடைய உடம்பிலே பஞ்சேந்திரியங்களாகிய ஐந்து பசுக்கள் இருக்கின்றன. மேய்ப்பார் இல்லாமையினால் அவை வெறித்துத் திரிகின்றன. அவற்றை மேய்ப்பவனாகிய ஞானம் கிடைத்துவிட்டால் பார்ப்பானுடைய பசுக்கள் ஐந்தும் வெறி அடங்கிச் சாந்தமென்னும் பாலைச் சொரியும்.

அடங்காமல் திரிகிற ஐந்து மாடுகள் வாழும் கொட்டில் இந்த உடம்பு, நாற்றத்தில், கொசுக்கடியில் எத்தனை காலம் வாழ்வது? மாமிசம் நிரம்பிய இந்தக் கொட்டிலை விட்டுப் போகவேண்டும். எங்கே போவது? முத்தியாகிய வீட்டுக்குப் போக வேண்டும்.

ஐந்து பசுமாடுகளுக்கு மத்தியிலே நிணத்தினால் கட்டப்பட்டுள்ள கொட்டிலில் ஆத்மாவுக்கு என்ன இன்பம் இருக்கும்? இதை ஞானிகள் உணர்ந்து, உடம்பினிடத்தில் அருவருப்புக் கொண்டார்கள்.

”ஊற்றைச் சரீரத்தை ஆபாசக் கொட்டிலை ஊன்பொதிந்த
பீற்றல் துருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய
காற்றில் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல்செய்தே
ஏற்றுத் திரிந்துவிட் டேன் இறை வாகச்சி ஏகம்பனே”

என்று பட்டினத்தடிகளார் பாடினார்.

உடம்பாகிய கொட்டிலை விட்டு, முத்தியாகிய வீட்டு இன்பத்தைப் பெற வேண்டுமென்று முயன்றார்கள் ஞானிகள். அதற்கு வேண்டிய அருளைச் செய்தான் முருகன் என்கிறார் அருணகிரி நாதர்.

ஒம் சரவணபவ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *