
ஆனாய நாயனார் சிவபக்தி
ஆனாய நாயனார் நீர் வளம், நில வளம் பொருந்திய சோழ நாட்டில் ஆயர் குலத்தில் தோன்றியவர். இறைவனிடத்தில் எல்லை இல்லாக் காதல் கொண்டு வாழ்ந்தவர். ஊரில் உள்ள கன்று காலிகளை ஓட்டிக் கொண்டு போய்த் தினந்தோறும் முல்லை நிலம் சென்று மேய்த்து வருவார். ஒவ்வொரு நாளும் அவர் மாடுகளை மேய்க்க அழைத்துச் செல்லும்போது அவ்விடத்தில் புல்லாங்குழல் ஊதுவார். மாடுகள் காலார நடந்து மேய்ந்து கொண்டிருக்கும். அவர் தம் கையில் உள்ள புல்லாங்குழலை எடுத்துப் பஞ்சாட்சர மந்திரத்தை அதில் ஊதுவார். அவருடைய இன்னிசை காற்றில் பரவி அமுதம் புகுந்தது போல மக்கள் காதில் புகும். உயிர்க் கூட்டங்களின் காதில் புகுந்து அவற்றை வசம் ஆக்கும்.
அவர் மாடுகளை மேய்த்த காட்டில் பிறரை வருத்துகின்ற கொடிய விலங்குகள் இருந்தன. அவற்றால் துன்புறும் எளிய பிராணிகளும் இருந்தன. பாம்புகள் இருந்தன; பாம்பைக் கொத்தும் மயில்கள் இருந்தன. யானைகள் இருந்தன; யானைகளை அடித்துக் கொல்லும் சிங்கங்களும் இருந்தன. மான்கள் இருந்தன; மான்களைத் தின்னும் புலிகளும் இருந்தன.
ஆனாய நாயனார் புல்லாங்குழலில் இருந்து வெளிப்படும் அந்த அமுத கீதநாதத்தைக் கேட்டு அவை யாவும் தம்முடைய இயல்பு மாறி ஒன்றுபட்டு நின்றன என்று சேக்கிழார் பாடுகிறார். அந்த விலங்கினங்களின் காதும் கருத்தும் கானத்திலே ஒன்றுபட்டதனால் அவற்றின் இயல்பான பகை உணர்ச்சி மாய்ந்து போயிற்றாம்.
“நலிவாரும் மெலிவாரும் உணர்வொன்றா நயத்தலினால் மலிவாய்வெள்ளெயிற்றரவம் மயின்மீது மருண்டுவிழும்.”
வருத்துகின்ற வலியவர்களும், அவரால் துன்பத்தை அடை கின்ற எளியவர்களும் ஆனாயநாயனாரின் குழல் இசையைக் கேட்டு வேற்றுமை இல்லாமல் மனம் ஒருமைப்பட்டு லயித்துவிட்டார்கள். அதனால் பாம்புகள் மயில்மீது மயங்கி விழுந்தன.
“சலியாத நிலையரியுந் தடங்கரியுமுடன் சாரும்”
கெடாத வலிமையுடைய சிங்கங்களும், பெரிய யானைகளும் பகையுணர்ச்சி இல்லாமல் ஒன்றுபட்டுச் சேர்ந்து இருக்கும்.
“புலிவாயின் மருங்கணையும் புல்வாய புல்வாயும்.”
புல்லை வாயில் வைத்துக் கொண்டிருக்கும் மான் அதனை நுகராமல் அப்படியே மயங்கி நிற்கும். அதன் அருகில் வாயைத் திறந்து கொண்டிருக்கும் புலி அந்தக் கீத நாதத்தில் தன்னை மறந்து நிற்கும். மான் புலி வாயில் போகாமல் அதன் பக்கத்தில் நிற்கும். புல் மான் வாயில் போகாமல் அதன் வாயில் தொங்கும். மானுக்கும் புலிக்கும் உயிர் இல்லை என்று சொல்லலாமா? உயிர் இருந்தது. ஆனால் விலங்குணர்ச்சி இல்லை. அவற்றின் செவி வழியாகப் புகுந்த பஞ்சாட்சர கானம் மானின் கோழைத் தன்மையை மாற்றியது; புலியைக் கண்டு அஞ்சாமல் அதன் பக்கத்தில் நிற்கும்படி செய்தது. அப்படியே புலியினிடம் இருந்த புலித்தன்மையும் மாறிவிட்டது; அது, மானைக் கொன்று தின்னவேண்டுமென்ற உணர்ச்சி இல்லாமல் திறந்த வாயை மூடாமல் நின்றது.
இறைவனுடைய திருவருள் இருக்கும் இடத்தில் பகையாக இருக்கும் பொருள்கள் எல்லாம் பகை நீங்கி ஒன்றுபட்டு வாழ்கின்றன. உலகில் எல்லா உயிர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்றால் எம்பெருமானுடைய திருவருள் நினைவு வேண்டும். புலியும், மானும் பகை யுணர்ச்சி நீங்கி ஓர் இடத்தில் நீர் குடிக்கின்றன என்று நல்ல மன்னர்களுடைய ஆட்சிக்கு ஓர் அடையாளம் சொல்வார்கள்.
ஆண்டவன் திருவருளைப் பலமாகக் கொண்ட மன்னர்கள் அறத்தை வளர்த்தார்கள். அந்த ஆட்சியிலே விலங்கினங்களும் பகை தீர்ந்து வாழ்ந்தன.
புலி போன்ற உருவத்தையும், மான் போன்ற உருவத்தையும் பக்கத்தில் வைத்தால் புலியும் மானும் ஓர் இடத்தில் இருப்பது போலத் தோன்றும். அல்லது உயிர் அற்ற மானும், உயிர் அற்ற புலியும் ஓர் இடத்தில் இருக்கலாம். உயிரோடு இருக்கும் போது அவை இரண்டும் பக் கத்தில் பக்கத்தில் எப்படி நிற்கும்?”என்று ஒரு கேள்வி எழலாம். பகைத் தன்மை உடைய விலங்குகள் பகை நீங்கி இருக்கின்ற செவ்வி பல உண்டு. இறைவனுடைய அருளிலேயே ஈடுபட்ட ஆனாய நாயனார் என்னும் பெரியவர் அத்தகைய அற்புதத்தைச் செய்தார். இது பெரிய புராணத்தில் வருகிறது.
ஓம் நமசிவாய ஓம்


