
சிவலிங்கத் தத்துவம்
சிவலிங்கத் தத்துவத்தைப் பற்றி இப்போது பலர் பலவிதமாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். மேல் நாட்டினர் அதற்கு அருவருப்பான பொருள் சொல்கிறார்கள். அதைக் கண்டு நம் மிடையேயும் சிலர் அப்படியே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி இங்கே சற்று ஆராயலாம் என்று நினைக்கிறேன்.
நாம் பார்க்கின்ற சிவலிங்கம் அருவுருவம் என்று சொல்கிறார்கள். கண்ணில் தெரிகிற எல்லாமே உருவந்தானே? உருவம், வடிவம் என்று இரண்டு உண்டு. உருவம் என்பது ஃபார்ம் (Form); வடிவம் என்பதனை ஷேப் (Shape) என்பர். சிவலிங்கத்திற்கு ‘ஷேப்’ இல்லையே தவிர, ‘ஃபார்ம்’ உண்டு. ஆயினும் அதை உருவமற்றது என்று சொல்கிறார்கள், அப்படிச் சொல்வது பொருத்தமாக இராது. கண்ணில் காணுகிற எல்லாமே உருவந்தான்.
நாம் இப்போது கோயிலிலுள்ள நடராஜரைப் பார்க்கிறோம். அந்த நடராஜர் சாட்சாத் நடராஜர் அல்ல; அதாவது பதஞ்சலி. வியாக்கிரபாதருக்குக் கோலம் காட்ட எழுந்தருளிய மூர்த்தி அல்ல. அந்தப் பெருமானின் அறிகுறியே அந்த வடிவம். சிவ பெருமான் நடராஜராகத் தாண்டவமாடிய கோலத்தைக் காட்டும் பிம்பம் அது. அதே போல் நாம் காணுகிற சிவலிங்கம் அருவுருவத்தைக் காட்டுகின்ற பிம்பம். மூலமாக உள்ள அருவுருவத்தைக் காட்டுவது கோயிலிலுள்ள சிவலிங்கம். இந்த லிங்கத்தையே அரு உருவம் என்று சொல்லக் கூடாது. அது அருவுருவத்தைக் குறிக்கும் அடையாளம்.
தட்சிணாமூர்த்தி கோயிலில் எழுந்தருளியிருக்கிறார். தென் முகமாக இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் பண்ணின மோன ஞானத் தவக் கோலத்தைக் காட்டுகின்ற வடிவம் அது. மூலப் பொருள்களாகிய தட்சிணாமூர்த்தியின் பிரதிபிம்பமாக அது இருக்கிறது. அதேபோல் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிற சிவ லிங்கங்கள் எல்லாம் அரு உருவம் ஆகா; மூலமான அருவுருவத்தை நினைப்பூட்டுகிற சின்னம் அவை.
அப்படியானால் மூலமாகிய அருவுருவம் எது? நடராஜரின் திருவடிவைப் பார்க்கும் போது பதஞ்சலி, வியாக்கிரபாதருக்கு நடனம் காட்டிய மூலத் திருவுருவத்தை நினைத்துக் கொள்கிறோம். அதனை அறிகுறியாகக் காட்டுகின்றது இந்த வடிவம். அதுபோல இந்தச் சிவலிங்கம் எந்த மூலப்பொருளை நமக்குக் காட்டுகிறது.
திருமூலர் அந்த உண்மையை விளக்குகிறார்.
நாம் ஒரு மாடியின் மேலே படுத்துக் கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வானம் முழுவதும் வளைந்து அரை வட்டமாகப் பூமியில் கவிழ்த்து வைக்கப்பட்ட மரக்காலைப் போல இருக்கிறது. சுற்றிலும் வான விளிம்பு தோன்றுகிறது. இந்த அரை வட்டமே லிங்கம். அதைத் திருமூலர் அண்டலிங்கம் என்று சொல்கிறார். அதற்குப் பீடமாகிய பூமியே ஆவுடையார். அண்ட லிங்கத்தைத் தாங்குகிற சக்தியாக இந்தப் பூமி இருக்கிறது.
இந்த அண்டலிங்கத்திற்கு யார் பூசை பண்ணுவது? அபிஷேகம் செய்பவர் யார்? மழைதான் இந்த அண்டலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கிறது. திருமஞ்சன நீர் வைத்திருக்கிற இடம் கடல். அங்கிருந்து மேகங்கள் நீரை மொண்டு வந்து மழையாக அபிஷேகம் செய்கின்றன. பூமியாகிய ஆவுடையாரின் மேல் உள்ள வானமாகிய அண்ட லிங்கத்திற்கு அதன் திருமேனியில் சாத்திய மலர்களைப் போல வானத்தில் பளிச்சிடுகின்ற நட்சத்திரங்களின் வரிசைகள் தோன்று கின்றன. இதனைத் திருமூலர் சொல்கிறார்,
“தரைஉற்ற சக்தி; தனிலிங்கம் விண்ணாம்;
திரைபொரு நீரது மஞ்சன சாலை;
வரைதவழ் மஞ்சுநீர்; வான்உடு மாலை;
கரைஅற்ற நந்தி கலையும் திக்குஆமே.”
(திருமந்திரம்)
(சக்தி – ஆவுடையார். திரைபொரு நீர் – கடல். மஞ்சு – மேகம். உடு – நட்சத்திரம். நந்தி – சிவன். கலை – ஆடை.)
இந்தப் பூமியே சக்தியாகிய ஆவுடையார்; மேலே தோன்றுகிற அரை வட்டமாகிய வானம் அண்டலிங்கம். அலைகள் மோதுகின்ற கடலே திருமஞ்சன நீரைத் தேக்கி வைத்திருக்கும் இடம். மேகத்திலிருந்து பெய்யும் மழையே திருமஞ்சனம். வானத்தில் தோன்றுகிற உடுக்களே மாலை. இதனைச் சுற்றியிருக்கிற எட்டுத் திக்குகளே ஆடை.
இப்படி இங்கே திருமூலர் காட்டுகின்ற அண்டலிங்கந்தான் அருவுருவம். அது பார்ப்பதற்கு லிங்கம் போலத் தோன்றினாலும், “உருவமாக இருக்கிறதே, அதனைத் தொட்டுப் பார்க்கலாம்” என்று போனால் போகப் போக அது போய்க் கொண்டே இருக்கும். அது வெறும் தோற்றமே யொழிய உருவம் அன்று. கண்ணுக்கு ஒரு வகையாகப் புலப்படுவதனால் அருவம் என்று சொல்ல முடி யாது. அது தொடுவதற்குரியது அன்று, ஆகையால் உருவம் என்றும் சொல்ல முடியாது. தோற்றமளிப்பதால் உருவமாகவும், உண்மையில் இல்லாமையால் அருவமாகவும் கொள்ளலாம். அதுவே அரு உருவம். இந்த அண்டலிங்கத்திற்குள் அடங்காத பொருள் இல்லை. எங்கிருந்து பார்த்தாலும் அவரவர்களுடைய கண்ணுக்குத் தோன்றுகிற எல்லாப் பொருள்களுமே இந்த அண்டலிங்கத்திற்குள் அடங்கி யிருப்பதைப் பார்க்கலாம். இப்படிப் பிரபஞ்சம் முழுவதும் அண்ட லிங்கத்திற்குள் அடக்கமாக இருக்கிறது.
இத்தகைய அற்புதமான தோற்றத்திலிருந்து சிவலிங்கம் என்ற அமைப்புத் தோன்றுகிறது. அண்டத்தில் தோன்றியதைப் பிண்டத்தில் காட்டினார்கள். ஆகையால் சிவலிங்கம் என்பது கண்ணுக்குக் காணுவது போல இருந்தாலும், தனக்கென்று உருவம் இல்லாததாயும் எல்லாப் பொருள்களையும் தனக்குள்ளே அடக்கிக் கொள்வதாயும் இயற்கையில் அமைந்த விசுவரூபமாயும் இருப்பதுதான். அதன் அடையாளமே நாம் கோவிலில் லிங்கத்தை வைத்து வழிபடுகிறோம்.
இந்த லிங்கம் என்ற கற்பனை எவ்வளவு சிறந்தது! அகண்ட மானதாய் எல்லாவற்றையும் தனக்குள் அடக்கி வைத்திருப்பது. இதைத்தான் உருவமும் இல்லாமல், அருவமும் இல்லாமல் உள்ள பொருள் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.
கச்சியப்ப சிவாசாரியார்,
“அருவந் தனையும் உருவத்தையு மன்றி நின்றான்”
என்று சிவபெருமானுடைய வாழ்த்திலே இதைக் குறிக்கிறார்.
ஓம் நமசிவாய ஓம்


