கனகதாசரின் பக்தி

கனகதாசர் என்ற பெரியவர் கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் இளமையில் ஒரு குருநாதரை அணுகித் தமக்கு உபதேசம் பண்ண வேண்டுமென்று கேட்டார். அந்தக் குருநாதர் கனக தாசரின் தகுதியை உணர்வதற்காக அவருடைய கையில் ஒரு கனியைக் கொடுத்து, “இதை யாரும் இல்லாத இடத்தில் நீ போய்ச் சாப்பிடு” என்று சொன்னார்.

அதை வாங்கிக் கொண்ட கனகதாசர் இரண்டு நாள் வரையில் அதைத் தம் கையிலே வைத்திருந்தார். பிறகு அதைக் கொண்டு வந்து குருநாதரின் திருவடியிலே வைத்து, “இதை என்னால் சாப்பிட முடியவில்லையே! தேவரீர் நான் இதை யாரும் இல்லாத இடத் தில் உண்ண வேண்டுமென்று கட்டளையிட்டீர்கள். அப்படி ஓர் இடம் எதுவும் எனக்குக் கிடைக்கவில்லையே!” என்றார்.

“”யாரும் இல்லாத இடமே உனக்குக் கிடைக்கவில்லையா? ஏதேனும் ஓர் அறைக்குள் தனியாகச் சென்று உண்ணக் கூடாதா? என்று கேட்டார் குருநாதர்.

“எங்கும் ஒருவன் இருக்கிறானே; அவன் இல்லாத இடம் எதுவும் இல்லை. யாரும் இல்லாத இடத்தில் அல்லவா நான் இதை உண்ண வேண்டும் என்றீர்கள்? அவன் ஒருவன் இல்லாத இடமே இல்லாத போது உங்கள் கட்டளைப்படி நான் எப்படி நடப்பது?” என்று சொன்னாராம் கனகதாசர்.

அதனைக் கேட்டுப் புன்னகை பூத்து, “அப்பா, உனக்கு இந்தப் பழம் வேண்டாம். ஞானப் பழம் தருகிறேன்” என்று உடனே அவனுக்கு உபதேசம் செய்தாராம் குருநாதர். கனகதாசருக்கு இறைவன் எங்கும் இருக்கிறான் என்ற உணர்வு இருந்தது. நமக்கு அந்த உணர்வு இல்லையே!

இறைவனை நாம் கோவிலில் கும்பிடுகிறோம். எங்கும் இறைவன் எழுந்தருளி இருக்கிறான். அவன் இல்லாத இடம் இல்லை. எள்ளுள் எண்ணெயைப் போலச் சர்வாந்தர்யாமியாக அவன் விளங்குகிறான். பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்றவன். ‘அப்படி இருக்க அவனுக்கு என்று தனியே ஒரு கோவில் வைத்து அங்கே போய் நாம் கும்பிட வேண்டுமா?’ என்று சிலர் எண்ணுவது உண்டு. உண்மையில் ஆண்டவன் எங்கும் இருக்கிறான் என்ற உணர்வு எல்லோருக்கும் இருப்பதில்லை. மிகப் பெரியவர்களே உணர்ச்சிபூர்வமாக அதை உணர்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *